Published:Updated:

“நதிகளின் மீது அணைகளைத் திணிக்கக் கூடாது!”

மேதா பட்கர்
பிரீமியம் ஸ்டோரி
மேதா பட்கர்

நாட்டின் மாநிலங்களில் அனைத்திலும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் தீவிரமடைந்துவருகின்றன. பட்ஜெட் போல, இயற்கை வளங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன

“நதிகளின் மீது அணைகளைத் திணிக்கக் கூடாது!”

நாட்டின் மாநிலங்களில் அனைத்திலும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் தீவிரமடைந்துவருகின்றன. பட்ஜெட் போல, இயற்கை வளங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன

Published:Updated:
மேதா பட்கர்
பிரீமியம் ஸ்டோரி
மேதா பட்கர்

சமகால இந்தியாவின் முக்கியமான சமூகச் செயல்பாட்டாளரான மேதா பட்கர், எளிய மக்களின் பாதுகாப்புக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைகள் திட்டத்துக்கு எதிராக ‘நர்மதா பச்சாவோ அந்தோலன்’ என்ற அமைப்பைத் தொடங்கி, 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருப்பவர். இப்போது காவிரியில் கர்நாடகா கட்ட முயலும் மேக்கேதாட்டூ அணைக்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் முதல் குரலும் இவருடையதுதான். தொடர் பயணத்திலிருந்தவரிடம் உரையாடினேன்...

“நதிகளின் மீது அணைகளைத் திணிக்கக் கூடாது!”

“இன்று இந்தியா சந்திக்கும் முதன்மையான சுற்றுச்சூழல் பிரச்னைகள் என்னென்ன?”

“நிலம், நீர், காற்று, காடு, கனிமங்கள் என இந்தியாவின் இயற்கை வளங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டு, ஒரே இடத்தில் குவிக்கப்படுவது முதன்மைப் பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது; இது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், வளங்கள் சொத்துகள் அல்ல, அவற்றை மட்டுமே நம்பி வாழ்பவர்கள் தங்கள் வாழ்வுக்கும், வாழ்வாதாரத்துக்கும் அவற்றையே சார்ந்துள்ளனர்.

நாட்டின் மாநிலங்களில் அனைத்திலும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னைகள் தீவிரமடைந்துவருகின்றன. பட்ஜெட் போல, இயற்கை வளங்களும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அது வளர்ச்சி என்றழைக்கப்படும் போது, பலரும் அதற்கு ஆதரவளிக்கிறார்கள். இதுவே அரசியலாகிவிடுகிறது. அதனால்தான், சென்ட்ரல் விஸ்டா, புல்லட் ரயில் போன்ற திட்டங்களில் முடிவெடுக்க எந்தவித ஜனநாயக முறையும் பின்பற்றப்படாமல், மக்கள்மீது திணிக்கப்படுகின்றன.

பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெருநிறுவனங்களுடன் கூட்டுவைத்து, இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டன. அவற்றுக்கு மிகப்பெரிய அளவில் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலிருந்து அரசை விடுவிக்கும் நடவடிக்கை களாகும். எனவே, பொருளாதாரமே மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியது அவசியம். மையப் படுத்தப்பட்ட நிர்வாகத் திலிருந்து விலகி, வளங்கள் பரவலாக்கப்பட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் தொழில் நுட்பங்கள் உருவாக வேண்டும். இல்லை யென்றால், வளர்ச்சி என்பது நம்மைப் பின்னோக்கிக் கொண்டு செல்வதாகவே இருக்கும்!”

“நதிகளின் மீது அணைகளைத் திணிக்கக் கூடாது!”

“மக்களை நேரடியாக பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஏன் இத்தனை தீவிரம் காட்டுகிறது?”

“மக்கள் கையில் ஓட்டு இருந்தாலும், அவர்கள்மீது அரசியல்வாதிகளுக்கு எந்தக் கவனமும் இல்லை. மக்களை விலையாகக் கொடுத்து உருவாகும் மெகா திட்டங்களால் பயனடையும் கார்ப்பரேட் முதலீடுகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் வாக்கு வங்கிகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற நிலை வந்துவிட்டதால், அந்த மக்கள் மதிப்பிழந்து போய்விட்டனர். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, வாக்கு அரசியல் மூலம் மட்டுமல்லாமல், விவசாயிகள் போராட்டம்போல மக்களரசியல், போராட்டங்கள் மூலமாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

“மேக்கேதாட்டூ அணை விவகாரம் தீவிரமடைந்திருக்கிறது... சமீபத்தில் நீங்கள் கர்நாடகத்துக்கே சென்று அதற்கெதிரான போராட்டத்தில் பங்கெடுத்தீர்கள்!”

“ஒவ்வொரு நதியிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கான அப்பட்டமான குறியீடாக மேக்கேதாட்டூ அணை இருக்கிறது. காவிரியின் இயல்பான ஓட்டத்தை, அதன் சுற்றுச்சூழல் தன்மையைச் சிதைக்கும் இறுதி அம்சமாக இந்த அணை மாறியிருக்கிறது. நதியின் ஓட்டம் கட்டுப்படுத்தப்படும்போது, அது நதியை மட்டுமல்லாமல் நிலம், காடு, மலைகள் என அதன் ஒட்டுமொத்தப் பன்மைத்தன்மையையும் பாதிக்கிறது. மேக்கேதாட்டூ அணையில் நடக்கும் வேலை, இவ்வளவு நாள்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த காவிரியை நிச்சயம் பாதிக்கும். நர்மதை ஆற்றின் சர்தார் சரோவர் அணை இதைத்தான் நமக்குக் கற்பித்திருக்கிறது. 36 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தப் பெரிய அணையைக் கட்டி முடிக்க முடியவில்லை. எந்தவொரு நதியின் மீதும் அணையைத் திணிக்கக் கூடாது. மேக்கேதாட்டூ பிரச்னையின் மையம் என்பது, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்ற முடிந்தாலும், நதியைக் காப்பாற்ற முடியாது என்பதுதான்.

பெங்களூரில் 80, 90 ஏரிகளைப் பாதுகாக்க உத்தரவிட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், கர்நாடகாவின் ஆளுங்கட்சி அதற்கு முன்னுரிமை கொடுக்காமல் மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. இதனால், பல கோடி செலவு செய்து, பல கிலோமீட்டர் தூரத்தில் காவிரியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படவிருக்கிறது. இது மேக்கேதாட்டூ அணை மூலமாகச் செயல்படுத்தப்படும்போது, அனைத்து வகையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அணையின் சுற்றுச்சூழல், சமூகத் தாக்கம் இன்னும் முழுமையாக ஆய்வுசெய்யப்படவில்லை என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.”

“தமிழ்நாட்டில் தி.மு.க அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த அணுகுமுறை எப்படி இருக்கிறது... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் நீங்கள் வலியுறுத்தியது என்ன?”

“உடனடியாக கவனத்தைக் கோரும் கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்புப் பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முதலமைச்சர் ஸ்டாலினிடம், வலுவான நடவடிக்கைக்கு வலியுறுத்தினோம். கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக இல்லை. இது அந்தப் பகுதியைச் சுற்று வாழும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதை ஏன் நாம் தடுத்து நிறுத்தக் கூடாது? மக்கள் ஏற்கெனவே நிறைய துன்பப்பட்டுவிட்டனர். மத்திய அரசு இதைத் திணிப்பதற்கு எதிரான வலுவான நிலைப்பாட்டினைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும், ஸ்டெர்லைட் குறித்தும் பேசினோம்; மாசுபாடுதான் மக்கள் போராட்டத்துக்கான காரணம். தூத்துக்குடிக் கொலைகளை மறக்க முடியுமா?

தமிழ்நாட்டின் விவசாயிகள், தொழி லாளர்களின் பிரச்னைகளையும் கவனப்படுத்தினோம். நெல்லுக்கு மட்டுமல்லாமல், வேளாண் பொருள்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்யும் வேளாண் சட்டத்தை, இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 7-ன்படி மாநில சட்டமன்றத்தில் இயற்றக்கோரி முதலமைச்சரிடம் வலியுறுத்தினோம்.”

“நதிகளின் மீது அணைகளைத் திணிக்கக் கூடாது!”

“இடையறாமல் உங்களை இயக்குவது எது?”

“அதானி, அம்பானி போன்றவர்கள் நாட்டின் வளங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலம், நீர், கனிமங்கள் என அனைத்தும் விற்கப்பட்டுக் கைமாறிக்கொண்டிருக்கின்றன. இது கடுமையான சுற்றுச்சூழல் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் யார்? இந்தச் சுற்றுச்சூழலை நம்பியிருக்கும் பெண்கள். வேலையாட்களோ கூலித் தொழிலாளிகளாக மாறிவிட்டனர். உலகம் முழுவதும் இருக்கும் இப்படியான பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களே எங்களை இயக்குகிறார்கள். பாதிப்புக்குள்ளானவர்களின் நலன்களைப் பாதுகாத்து, அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் எண்ணமே எங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism