Published:Updated:

“தோப்பு வெங்கடாசலம் உன்னைக் கொல்லச் சொல்லிட்டாரு!”

மண் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
மண் கொள்ளை

மண் கொள்ளைக்கு எதிராகப் போராட்டம்... தாக்கப்பட்ட சமூக ஆர்வலர்!

“தோப்பு வெங்கடாசலம் உன்னைக் கொல்லச் சொல்லிட்டாரு!”

மண் கொள்ளைக்கு எதிராகப் போராட்டம்... தாக்கப்பட்ட சமூக ஆர்வலர்!

Published:Updated:
மண் கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
மண் கொள்ளை
ஆறு ஆண்டுக்காலப் போராட்டம், பல பொய் வழக்குகள், குண்டர் சட்டம், 54 நாள்கள் சிறைவாசம், கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி, கை கால் உடைக்கப்பட்டு ஒன்பது எலும்பு முறிவுகள், நான்கு அறுவை சிகிச்சைகள்... இவையனைத்தும் மண் கொள்ளைக்கு எதிராகக் குரலெழுப்பிய நந்தகுமார் என்ற சமூக ஆர்வலருக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இவை அத்தனைக்கும் முக்கிய காரண கர்த்தாவாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் இருக்கிறார்’ எனச் சொல்லும் நந்தகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணையைக் கேட்டு வாங்கி வழக்கைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.

 தோப்பு வெங்கடாசலம்
தோப்பு வெங்கடாசலம்

‘ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளான கருமாண்டி செல்லிபாளையம், கொங்கம்பாளையம், சென்னிமலை ஆகிய பகுதிகளில், பட்டியல் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனைப் பட்டா நிலங்களைப் பட்டா மாற்றம் செய்து, அந்த நிலங்களில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் வெட்டியெடுத்து, அரசுக்குப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’ என 2014-ம் ஆண்டு, கலெக்டரிடம் பெருந்துறையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நந்தகுமார் மனு ஒன்றைக் கொடுத்தார். இதன் அடிப்படையில், ஈரோடு ஆர்.டி.ஓ ஆய்வு நடத்தி மண் கொள்ளை நடந்திருப்பதை உறுதிசெய்ததோடு, சேனாபதி, சுப்ரமணியம் இருவரும் குற்றவாளிகள் என்று சொன்னார். அதை, அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி மறு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 2018 பிப்ரவரியில் 2,35,216 கனமீட்டர் மண் வெட்டியெடுக்கப்பட்டதை ஈரோடு ஆர்.டி.ஓ உறுதிசெய்து சேனாபதி, சுப்ரமணியம் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்து ரூ.7,99,73,100 அபராதம் விதித்தார். ‘இருவரும் பெருந்துறைத் தொகுதி எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தின் பினாமிகள்’ என்றும், ‘இந்த மண் கொள்ளைக்குப் பின்னணியில் தோப்பு வெங்கடாசலம் இருக்கிறார்’ என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பற்றி 18.3.2018 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘ரூ.100 கோடி மண் கொள்ளை... பின்னணியில் தோப்பு வெங்கடாசலம்?’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரையில், நந்தகுமார் ‘‘இந்த விவகாரத்தைக் கையிலெடுத்ததால எனக்கு மிரட்டல்கள் வருது. என்மீது பொய் வழக்கு போடுறாங்க. எனக்கு ஏதாவது நடந்துச்சுன்னா, அதுக்கு எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம்தான் காரணம்’’ என்று கூறியிருந்தார். அவர் பயந்ததுபோலவே அடுத்தடுத்து சம்பவங்கள் நடந்தன.

 நந்தகுமார்
நந்தகுமார்

தற்போது நந்தகுமாரைச் சந்தித்துப் பேசினோம், ‘‘மண் கொள்ளை விவகாரத்துல எட்டுக் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை சேனாபதியும் சுப்ரமணியமும் கொஞ்சமும் எதிர்பார்க்கலை. ரெண்டு பேரும் தோப்பு வெங்கடாசலத்தோட பினாமிகள். இந்த விவகாரத்தை நான் கையிலெடுத்ததற்காக, தோப்பு வெங்கடாசலம் தூண்டுதல்ல என்மேல ஆறு பொய் வழக்குகள் போட்டு, குண்டர் சட்டத்தையும் ஏவி சிறையில தள்ளுனாங்க. ரெண்டு மாசம் ஜெயில்ல இருந்த நான், எல்லா வழக்கும் பொய்யா போடப்பட்டதுனு நிரூபிச்சு வெளியே வந்தேன். வெளியே வந்த ஒரு வாரத்துல, அதாவது 8.8.2018 அன்னிக்கு சேனாபதியும் சுப்ரமணியமும் என்னைக் கடத்திட்டுப் போய், ‘இத்தனை லட்ச ரூவா செலவு பண்ணி உன்னை குண்டாஸ்ல போட்டோம். எப்படிடா வெளியே வந்தே?

“தோப்பு வெங்கடாசலம் உன்னைக் கொல்லச் சொல்லிட்டாரு!”

எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்துக்கு எதிரா இதுக்கு மேல நீ போனீன்னா, உன்னைக் கொல்லச் சொல்லிட்டாரு’னு கட்டையால அடிச்சு, கை காலை உடைச்சு தூக்கிப்போட்டுட்டுப் போயிட்டாங்க. உடம்புல ஒன்பது எலும்பு முறிவு. நாலு ஆபரேஷன் செஞ்சு எப்படியோ உயிர் பொழைச்சுட்டேன்’’ என விசும்பினார்.

உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வந்த நந்தகுமார் ‘போலீஸ் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகள் மீது பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி விசாரணை’ கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2019 ஜூலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், எட்டு மாதங்களுக்குப் பிறகு 2020 மார்ச்சில்தான் வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கொரோனாவால் ஆரம்பிக்கப் படாமல் இருந்த சி.பி.சி.ஐ.டி விசாரணை, சமீபத்தில்தான் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

சி.பி.சி.ஐ.டி விசாரணையில் சேனாபதி, சுப்ரமணியத்தின் ஆட்களான கோபி, தமிழரசன் (எ) அம்பி இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நந்தகுமார் தாக்கப்பட்ட சம்பவத்துக்குப் பயன்படுத்தப் பட்டதாக சேனாபதி, சுப்ரமணியத்தின் ஸ்கூட்டி மற்றும் ஜீப் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. விரைவில் சேனாபதி, சுப்ரமணியத்திடமும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை செய்யவிருக்கிறார்கள்.

‘விசாரணையை நிறுத்த, குற்றவாளிகள் என்னைக் கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டார்கள். போலீஸ் பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டும், மாவட்ட போலீஸ் நிர்வாகம் பாதுகாப்பு கொடுப்பதில்லை. என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படும் முன் போலீஸ் பாதுகாப்பு வழங்குங்கள்’ எனக் காவல்துறை ஏ.டி.ஜி.பி-க்கு புகார் கொடுத்திருக்கிறார் நந்தகுமார்.

‘‘எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் தூண்டுதலாலதான் என்மேல கொலைவெறித் தாக்குதல் நடந்தது. எந்தப் புகார்லயும் எம்.எல்.ஏ பேரை லோக்கல் போலீஸ்காரங்க சேர்க்க மாட்டேங்குறாங்க. அதனாலதான் சி.பி.சி.ஐ.டி விசாரணை வாங்கியிருக்கேன். தோப்பு வெங்கடாசலத்தை விசாரணை செய்யாம, நான் தாக்கப்பட்டதுக்கும், மண் கொள்ளை விவகாரத்துக்கும் எந்த நீதியும் கிடைக்காது. அதோட எனக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கணும்’’ என்றார் நந்தகுமார்.

 கதிரவன் - சேனாபதி - தங்கதுரை - சுப்ரமணி -
கதிரவன் - சேனாபதி - தங்கதுரை - சுப்ரமணி -

சேனாபதியிடம் பேசினோம். ‘‘நந்தகுமார் பேசுறதெல்லாம் பொய்தானுங்க. எம்.எல்.ஏ-ங்கிற முறையில அவர்கிட்ட பேசுறதுதானே தவிர, பர்சனல் தொடர்புகள் எதுவும் இல்லை. மண் கொள்ளை விவகாரத்துல மேல்முறையீடு செஞ்சிருக்கோம், விசாரணையில இருக்கு. மண் அள்ளப்பட்டதா சொல்ற நிலம் என் பேர்லயே இல்லைங்க. கண்டிப்பாக நியாயம் ஜெயிக்குமுங்க’’ என்றார். சுப்ரமணியத்திடம் விளக்கம் பெற பலமுறை முயற்சித்தும் நம்மைத் தவிர்த்துவிட்டார்.

தோப்பு வெங்கடாசலத்திடம் பேசினோம். ‘‘கட்சி சம்பந்தப்பட்டது, தொகுதி பிரச்னை ஏதாவது இருந்தா கேளுங்க. மத்தவங்க பிரச்னை எதையும் என்கிட்ட கேக்காதீங்க. நான் எந்தப் பிரச்னையிலயும் தலையிடுறது இல்லைங்க’’ என்றார்.

‘‘நீதிமன்றம் உத்தரவிட்டும் நந்தகுமாருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்காதது ஏன்?’’ என்ற கேள்வியை முன்வைத்து ஈரோடு எஸ்.பி தங்கதுரையிடம் பேசினோம். ‘‘பெருந்துறை போலீஸார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக நந்தகுமார் நினைத்திருந்தால், என்னை நேராகச் சந்தித்துப் புகார் சொல்லியிருக்கலாமே! நான் என்னவென்று விசாரித்து நடவடிக்கை எடுத்திருப்பேன். தினமும் நந்தகுமார் வீட்டுக்கு ஒரு போலீஸை அனுப்பி பார்க்கச் சொல்லியிருக் கிறோம். நந்தகுமார் வெளியே எங்கே போனாலும் தகவல் சொல்லச் சொல்லியிருக்கிறோம்.

சி.பி.சி.ஐ.டி விசாரணை முடியும் வரை கூடுதல் பாதுகாப்பு தரச் சொல்கிறேன்’’ என்றார்.

ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் பேசினோம். ‘‘இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு முறை ஆர்.டி.ஓ போட்ட ஆர்டர்களை, முந்தைய கலெக்டர் ரத்துசெய்து மறு விசாரணைக்கு உத்தர விட்டதாகச் சொன்னார்கள். இடையில் நாடாளுமன்றத் தேர்தல், கொரோனா பிரச்னையால் எதுவும் செய்ய முடியவில்லை. மற்றபடி இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. இது குறித்து விரைவில் விசாரித்து ஆர்.டி.ஓ-வை ஆர்டர் போடச் சொல்கிறேன்’’ என்றார்.

இந்த மண் கொள்ளை வழக்கு சம்பந்தமாக, பெருந்துறை வருவாய் வட்டாட்சியர், பெருந்துறை மண்டலத் துணை வட்டாட்சியர், நிலவருவாய் ஆய்வாளர்கள், மண் வெட்டியெடுக்கப்பட்ட மூன்று கிராம நிர்வாக அலுவலர்கள், வட்ட துணை ஆய்வாளர்கள், உதவி இயக்குநர் (நில அளவை) உள்ளிட்ட அனைத்து அலுவலர்களும் விரிவாக விசாரணை செய்து, மண் கொள்ளை நடந்ததை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள். சேனாபதி மற்றும் சுப்ரமணியத்தை குற்றவாளிகள் என இரண்டு முறை ஈரோடு ஆர்.டி.ஓ-வும் கூறி அபராதமும் விதித்திருக்கிறார். ஆனால், இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அபராதமும் வசூலிக்கப்படவில்லை.

தோப்பு வெங்கடாசலம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த 2012 காலகட்டத்தில்தான், நிபந்தனைப் பட்டா நிலங்கள் சேனாபதி, சுப்ரமணியம் பெயர்களுக்கு மாற்றப்பட்டு மண் கொள்ளை நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட 78,000 யூனிட் மண் வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. நந்தகுமார் புகார் கொடுப்பதற்கு முன்புவரை மாவட்ட அதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரியாமல் போனது எப்படி? மண் கொள்ளை விவகாரத்தைக் கையிலெடுத்ததற்காக நந்தகுமார் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது. இன்னும் ஏன் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை... இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என்று சொன்னால், யார் நம்புவார்?

சி.பி.சி.ஐ.டி விசாரணையாவது எந்த அழுத்தத்துக்கும் உட்படாமல் முறையாக நடக்குமா?