Published:Updated:

குளத்திலே குடியிருப்பு... ஏரியிலே போலீஸ் ஸ்டேஷன்!

போலீஸ் ஸ்டேஷன்
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் ஸ்டேஷன்

சி.எம்.டி.ஏ மீது சீறும் சமூக ஆர்வலர்கள்

குளத்திலே குடியிருப்பு... ஏரியிலே போலீஸ் ஸ்டேஷன்!

சி.எம்.டி.ஏ மீது சீறும் சமூக ஆர்வலர்கள்

Published:Updated:
போலீஸ் ஸ்டேஷன்
பிரீமியம் ஸ்டோரி
போலீஸ் ஸ்டேஷன்

டிசம்பர் மாதம் பிறந்துவிட்டாலே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நடுக்கம் வந்துவிடுகிறது. இது குளிரால் வரும் நடுக்கமல்ல, பெருமழையால் பெற்ற அனுபவம். நீர்நிலைகளைப் பாதுகாக்காத அரசால் 2015 டிசம்பரில் இந்த மூன்று மாவட்ட மக்களும் பட்டப் பாடு என்றும் மறக்காது. இதற்குப் பிறகும் அரசு எந்தப் பாடத்தையும் கற்கவில்லை. எந்த ஆக்கிரமிப்பையும் அகற்றவில்லை. நீதிமன்றம் கொட்டு வைத்தும் திருந்தவில்லை. அநியாயம் என்னவென்றால், மீதம் இருக்கும் நீர்நிலைகளையும் அழிக்க அரசு உதவுவதுதான். இதற்கு அடுத்தடுத்த உதாரணமாய் பல சம்பவங்கள் நிகழ்ந்துவருகின்றன.

பல்லாவரம் தாலுகாவில் உள்ள மூன்றாம் கட்டளை கிராமத்தில் சர்வே எண்: 16/1-ல் நீர்நிலைப்பகுதி உள்ளது. அந்த சர்வே எண்ணில் உள்ள 1.80 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கட்ட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் சி.எம்.டி.ஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடம் நீர்நிலைப்பகுதி என்றே சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெரிந்தே சி.எம்.டி.ஏ அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ) ஆளுகையின்கீழ், 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகொண்ட நிலம் இருக்கிறது. நகர ஊரமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சி.எம்.டி.ஏ-வின் மாஸ்டர் பிளான்படி, பல்வேறு நில வகைப்பாட்டின்கீழ் தனியார் நிலங்கள் வருகின்றன. நீர்நிலைகளை, தனிநபரோ தனியார் நிறுவனங்களோ வைத்திருக்க முடியாது. ஆனால், சி.எம்.டி.ஏ எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் கட்டுப்பாட்டின்கீழ் பல்வேறு நீர்நிலைகள் உள்ளன. அவற்றில், விதிகளை மீறி கட்டடம் கட்டுவதும் அதிகரித்துவருகிறது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் இதுபோன்று ஏழு விண்ணப்பங்களை சி.எம்.டி.ஏ பரிசீலித்து அனுமதி வழங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

CMDA
CMDA

நீர்நிலைகளில் உள்ள நிலங்களுக்கு முறைகேடான வகையில் பட்டா பெறுகிறார்கள். பிறகு, அதை வைத்துக்கொண்டே அந்த நீர்நிலையை சொத்துகளாக மாற்ற முயல்கின்றனர். இவ்வாறு நிலப் பயன்பாட்டை மாற்றுவதற்கு வருவாய்த் துறை, நகர ஊரமைப்புத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு பெரும்தொகை லஞ்சமாகத் தரப்படுகிறது. ‘நீர்நிலைகளில் கட்டடம் கட்ட அனுமதிக்கக் கூடாது. இருக்கும் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்’ என்ற நீதிமன்ற உத்தரவு, காகிதத்திலேயே இருக்கிறது.

தற்போது சோழிங்கநல்லூர் தாமரைக்கேணி ஏரியில், சி.எம்.டி.ஏ அனுமதியுடன் காவல்நிலையம் கட்டப்பட்டுவருகிறது. அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி சி.எம்.டி.ஏ, சென்னை மாநகராட்சி, காவல்துறை ஆகிய மூன்று தரப்புகளின் ஒத்துழைப்போடு, நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் காவல்நிலையத்தை சட்டவிரோதமாகக் கட்டிவருகிறார்கள். 60 ஹெக்டேர் பரப்பளவுகொண்ட ஏரியை கட்டடங்களாக மாற்ற முயற்சி நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவருகிறது.

அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் இதுகுறித்துப் பேசினோம். ‘‘நீர்நிலைகள் காணாமல்போவதற்கு முக்கிய காரணமே ஆக்கிரமிப்புகள்தான். நில வகைகளை மாற்றுவதற்கு எந்த அரசுக்கும் உரிமையில்லை. தாமரைக்கேணி ஏரியில் நில வகைப்பாட்டை மாற்றி காவல்நிலையம் கட்டிவருகிறார்கள். ரெட்ஹில்ஸ் பகுதியில் நீர்நிலைகளில் சிட்கோ தொழில்பூங்கா கொண்டுவருவதாகச் சொல்லி யிருக்கிறார்கள். அதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம்.

போலீஸ் ஸ்டேஷன்
போலீஸ் ஸ்டேஷன்

`நான்கு பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்திருக் கிறார்கள்’ என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எங்களுக்கு பதில் கொடுத்துள்ளார்கள். நீர்நிலைகளை நில வகையாக மாற்றம் செய்ய அரசுக்கு உரிமையில்லை எனும்போது, மக்களிடம் அரசு கருத்து கேட்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. தாமரைக்கேணி ஏரியில் காவல்நிலையம் கட்டுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தாமரைக்குளம் ஏரியையே `ஒட்டுமொத்த மேய்க்கால்தாங்கல் சாலை’ என்று சட்டவிரோதமாக மாற்றி வகைப்படுத்தியிருக்கிறார்கள். நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசே முறைகேடு செய்கிறது’’ என்கிறார்.

குளத்திலே குடியிருப்பு... ஏரியிலே போலீஸ் ஸ்டேஷன்!

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், “அடையாறு, கூவம் போன்று அரசாங்கத்தால் பராமரிக்கக் கூடிய நீர்நிலைகள் உள்ளன. இதைத்தான் அரசாங்கம் பராமரிக்கும். மாஸ்டர் பிளான் போடும்போது தனியார் இடத்தில் நீர் தேங்கி இருந்தால், அதைக்கூட சில நேரங்களில் `நீர்நிலைகள்’ என்றே வரையறை செய்திருக் கலாம். அதற்காக அந்த நில உரிமையாளர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். அதிகாரிகள் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுப்பார் கள்’’ என்றார்.

ஆகமொத்தத்தில் நீர்நிலை களைக் காப்பாற்றுவதைவிட, அவற்றை ஆக்கிரமிக்கும் தனிநபர்களைக் காப்பாற்று வதிலேயே அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாகத் தெரிகிறது.

இயற்கை எத்தனை முறை எச்சரித்தாலும் இவர்கள் திருந்தவேமாட்டார்களோ!