Published:Updated:

இதுதானா உங்கள் சமூக இடைவெளி?

சமூக இடைவெளி?
பிரீமியம் ஸ்டோரி
சமூக இடைவெளி?

நிவாரணப் பொருள்களை வாங்குவதற்காகக் கூட்டம் முண்டியடிக்க... அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது போலீஸ்.

இதுதானா உங்கள் சமூக இடைவெளி?

நிவாரணப் பொருள்களை வாங்குவதற்காகக் கூட்டம் முண்டியடிக்க... அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது போலீஸ்.

Published:Updated:
சமூக இடைவெளி?
பிரீமியம் ஸ்டோரி
சமூக இடைவெளி?

‘‘நாங்க யாருக்காக மாஸ்க் போடச் சொல்றோம்... உங்க பாதுகாப்புக்காகதானே? அதிகாரிகளைப் பார்த்தவுடனே மாஸ்க் போடுறது, சேலை முந்தானையால வாயை மூடுறதுனு பொறுப்பில்லாம இருக்கீங்க... பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காதது வருத்தமா இருக்குது...’’ - சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் வெளிப்படுத்திய வார்த்தைகள் இவை. ஆனால், அமைச்சரின் எச்சரிக்கையை அவரது கட்சியிலேயே யாராவது கடைப்பிடிக்கிறார்களா... எதிர்க் கட்சிகள் கடைப்பிடிக்கின்றனவா? அவை இருக்கட்டும்... விஜயபாஸ்கர் சொன்ன சொல்லை அவராவது மதிக் கிறாரா? விவரம் அறியக் களம் இறங்கியது ஜூ.வி டீம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேனிக்காரரை ஒன்றும் செய்யாதா கொரோனா?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடிநாயக்கனூரில் ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 1-ம் தேதி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளைப் பெற வந்திருந்த மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை; முகக்கவசம் அணியவில்லை; கடும் நெரிசல் வேறு. எதற்கும் அலட்டிக்கொள்ளாத ஓ.பி.எஸ்., ஐந்து நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

வேலுமணி செய்தியாளர் சந்திப்பின்போது...
வேலுமணி செய்தியாளர் சந்திப்பின்போது...

தொடர்ந்து போடி, மீனாட்சிபுரம் கண்மாயில் நடைபெறும் குடிமராமத்துப் பணிகளை ஆய்வு செய்தவர், இருநூற்றுக்கும் அதிகமானோர் கூடியிருந்த கூட்டத்தில் கைகூப்பியடியே புகுந்தார். இதைப் பார்த்து தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ‘‘இவ்வளவு கூட்டம் சேர யார் அனுமதியளித்தது?” என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிட்டுவிட்டுத் திரும்பினார் ஓ.பி.எஸ். துணை முதல்வருக்கு துணிச்சல் அதிகம் தான்... ‘தேனிக்காரனை கொரோனா ஒண்ணும் பண்ணாது’ என்று நினைத்துவிட்டார்போல.

பந்தாவுக்கு ஐயாயிரம் பேரா?

மே 31-ம் தேதி சென்னையில் ஏழு இடங்களில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை ஸ்டாலின் தலைமையில் நடத்தியது தி.மு.கழகம். எல்லா இடங்களிலும் 300 பேருக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட நிலையில், கே.கே.நகரில் மட்டும் ஐந்தாயிரம் பேரைக் கூட்டிவிட்டார்கள் உடன்பிறப்புகள். கே.கே.நகரில் நிகழ்ச்சி நடைபெற்ற இடம், சொத்துப் பிரச்னைக்குரிய இடம் என்பதால், `அங்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டாம், கூட்டத்தையும் அதிகமாகக் கூட்ட வேண்டாம்’ என்று ஆரம்பத்திலேயே ஐபேக் தரப்பிலிருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தனசேகரனிடம் எச்சரித்துள்ளனர். ஆனால், விருகம்பாக்கம் தொகுதியைக் குறிவைத்துள்ள அவர், ஸ்டாலினிடம் தன் பலத்தைக் காட்டியே ஆக வேண்டும் என்று ஐந்தாயிரம் பேரைக் கூட்டிவிட்டாராம்.

இவ்வளவு பேரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசமும் முழுமையாக அணியாமல் திரண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அலட்டிக்கொள்ளாமல் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தவர், ஐந்தே நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார். நிவாரணப் பொருள்களை வாங்குவதற்காகக் கூட்டம் முண்டியடிக்க... அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தது போலீஸ். தொடர்ந்து அனுமதியின்றி கூட்டத்தைக் கூட்டியதற்காக தனசேகரன்மீது வழக்குப் பதியவும் போலீஸ் மும்முரமாகியிருக்கிறது. ‘ஆள் பலத்தைக் காட்ட வேண்டிய நேரமா இது?’ என்று தி.மு.க-வினரே நொந்துகொள்கிறார்கள். ஸ்டாலின் டோட்டல் அப்செட்!

ஓ.பன்னீர்செல்வம் ஆய்வுக்கு வந்தபோது...
ஓ.பன்னீர்செல்வம் ஆய்வுக்கு வந்தபோது...

வாய்ச்சொல் வீரரடி மிஸ்டர் ஆரோக்கியம்!

மே மாதம் தன்னுடைய விராலிமலைத் தொகுதியில், சொந்தச் செலவில் அரிசி மூட்டைகளை வழங்கத் தொடங்கிவிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இது மற்ற தொகுதி மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்த நிவாரண உதவிகளை நிறுத்திவைத்திருந்தார்.

இந்த நிலையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு புதுக்கோட்டைத் தொகுதிக்கு உட்பட்ட கந்தவர்வக் கோட்டை, ஆலங்குடி ஒன்றியத்தில் மலையூர், தீதன்விடுதி, கருக்காக்குறிச்சி, வெட்டன்விடுதி உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். பெரும்பாலான நிவாரணப் பைகள் அ.தி.மு.க பிரமுகர்களின் வீடுகளிலேயே வைத்து வழங்கப்பட்டன. திபுதிபுவெனத் திரண்ட பொதுமக்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் நிவாரணப் பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கருக்காக்குறிச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிக்கவில்லை. அமைச்சர் முன்னிலையிலேயே அனைத்தும் நடந்ததுதான் கேலிக்கூத்து!

“சமூக இடைவெளியா... அது என்ன விலை?”

சிவகங்கையில் ‘சமூக இடைவெளி என்றால் என்ன?’ என்று கேட்காத குறையாக மாவட்ட அமைச்சர் ஜி.பாஸ்கரனும், அதிகாரிகளும் செயல்படுகிறார்கள். ஜூன் 3-ம் தேதி கீழச்சிவல் பட்டியில் நடைபெற்ற நிவாரணம் வழங்கும் விழாவில், தொகுதி எம்.பி-யான கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்விலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படவில்லை.

ஸ்டாலின் நிவாரணம் வழங்கியபோது...
ஸ்டாலின் நிவாரணம் வழங்கியபோது...

கரூரில் ஆளுங்கட்சியினரின் இல்லத் திருமணங்கள், கொரோனோ நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் நிகழ்வுகள், போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூட்டும் கூட்டங்களிலெல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் கும்மியடிக்கின்றன கொரோனா வைரஸ்கள்! ‘நான் மட்டும் சளைத்தவனா?’ என்று கோரஸ் பாடி செல்லுமிடமெல்லாம் கூட்டம் சேர்க்கிறார் தி.மு.க-வின் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி!

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தொடங்கிய சில நாள்களிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தவுடன் வேலுமணி, அதிகாரிகள், எம்.எல்.ஏ-க்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது தொடர்பாக சர்ச்சை வெடித்தது. அதேபோல பூசாரிபாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் வேலுமணி நிவாரணப் பொருள்கள் வழங்கிய நிகழ்வுகளிலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக, அவர்மீது கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யிடம் தி.மு.க தரப்பில் புகாரும் அளிக்கப்பட்டது.

இதுதானா உங்கள் சமூக இடைவெளி?

புகார் அளித்த தி.மு.கழகம், ‘அந்தப் புகார் சமூக அக்கறைக்காக அளிக்கப் பட்டது இல்லை, அரசியலுக்காக...’ என்று சொல்லாமல் சொல்வதுபோல நடந்துகொண்டது. ஆம், தி.மு.க கோவை மாநகர மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி கலந்து கொண்ட நிகழ்விலும் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வில்லை. இது தொடர்பாக முத்துசாமி மீது குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

நாகர்கோவில், நெல்லை, மதுரை... அங்கேயும் இதுதான் லட்சணம்!

சமீபத்தில் நாகர்கோவில் ஒழுகினசேரியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆவின் பாலகத்தைத் திறந்து வைத்தார். அதில் ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன் முகக்கவசம் அணியாமல் கலந்துகொண்டார். சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்தில் தி.முக கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவிலும் பயனாளிகள் பலரும் முகக்கவசம் அணியவில்லை.

நெல்லை மாவட்டத்தில் அரசு சேவை இல்ல மாணவிகள் மற்றும் அரசுப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கும் நிகழ்ச்சியில் இடைவெளி எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதேபோல ராமையன்பட்டி புதுக்குளத்தைத் தூர்வாரும் நிகழ்ச்சியிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷும் மாவட்ட அமைச்சர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்கள்.

மதுரையில் பெத்தானியாபுரத்தில் ஜூன் 1-ம் தேதி அமைச்சர் செல்லூர் ராஜூ நிவாரணம் வழங்கினார். கூட்டம் முண்டியடித்துக்கொண்டு திரண்டுவிட்டது. காவல்துறையினராலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அடுத்து ரேஷன் கடைக்கு டூ வீலரில் சென்று ஆக்‌ஷன் எடுத்தார்."

இதுதானா உங்கள் சமூக இடைவெளி?

ஆகக்கூடி துணை முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என உயர் பதவிகளில் உட்கார்ந்துகொண்டு ஊருக்கு உபதேசம் செய்கிறார்களே தவிர, தாங்கள் யாரும் எதையும் கடைப்பிடிப்பதே இல்லை. பொருள் கொடுக்கும் போது போட்டோவில் முகம் தெரிய வேண்டும் என்பதற்காகப் பலரும் மாஸ்க்கைக் கழற்றிவிட்டு பல்லைக் காட்டுவது இன்னும் கொடுமை.

இந்த லட்சணத்தில், ‘‘மக்கள் ஒத்துழைக்காததால் தான் கொரோனா பரவுகிறது’’ என்று குறைபட்டுக் கொள்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முதலில் நீங்கள் திருந்துங்கள் ‘போஸ்’ பாண்டிகளே!