Published:Updated:

மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!

தன் தந்தையின் கனவை உள்வாங்கி, மருத்துவம் படித்து பலநூறு குடும்பங்களின் நம்பிக்கையாக மாறினார் அந்த மகன்.

பிரீமியம் ஸ்டோரி

அது 1952. இன்று கொரோனா வதைப்பதைப் போல அன்று காசநோய் மக்களை வதைத்துக்கொண்டிருந்தது. ஆறு குழந்தைகளுக்குத் தகப்பனான, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை அரிசி வியாபாரி கருப்பனையும் காசநோய் பீடித்துக்கொண்டது. கருப்பனைப் பரிசோதித்த மருத்துவர், ‘சிகிச்சைக்கு 15,000 ரூபாய் செலவாகும்’ என்றார். என்னதான் அரிசி வியாபாரியாக இருந்தாலும் கருப்பனுக்கு இது பெருங்காசு. அங்குமிங்கும் கடன் வாங்கி அத்தனை பெரிய தொகையைத் தேற்றி சிகிச்சை பெற்று மீண்டார். அப்போது அவர் மனதில் உதித்தது அந்தக் கனவு... சிரமப்படும் மக்களுக்காகத் தன் மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற கனவு!

மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!

தன் தந்தையின் கனவை உள்வாங்கி, மருத்துவம் படித்து பலநூறு குடும்பங்களின் நம்பிக்கையாக மாறினார் அந்த மகன். அவர்தான் மருத்துவர் கே. பார்த்தசாரதி. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் தன்னைக் கரைத்துக்கொண்ட அந்த வண்ணாரப்பேட்டை ‘மக்கள் மருத்துவர்’, மே 20-ம் தேதி கொரோனாத் தொற்றுக்குள்ளாகிக் காலமானார்.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான பார்த்தசாரதி, 1938-ல் பிறந்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் சித்தாவும் அலோபதியும் இணைந்த டி.சி.ஐ.எம் படிப்பையும் செங்கல்பட்டில் ஒன்றரை ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.பி.பி.எஸ் படிப்பையும் முடித்தவர், லண்டன் சென்று எஃப்.ஆர்.சி.எஸ் அங்கீகாரம் பெற்றார். பிறகு பார்த்தசாரதி, ஏற்காட்டில் மருத்துவ அலுவலராகப் பணியைத் தொடங்கினார்.

மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!
மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!

“மாணவரா கல்லூரிக்குப் போய்க்கிட்டிருந்த காலத்திலேயே நிறைய பேர் வீட்டு முன்னாடி குவிஞ்சிருவாங்க. கல்லூரிக்குப் போறதுக்கு முன்னாடி எல்லாரையும் பார்த்து மருந்து, மாத்திரைகள் எழுதித் தந்துட்டுப் போவார். அப்பாவோட கனவு அவருக்குள்ள ஆழப் பதிஞ்சிருச்சு. ஏற்காட்டிலிருந்து சைதாப்பேட்டை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மாற்றலாகி வந்தார். அதுக்கப்புறம் அந்த வேலையை விட்டுட்டு வீட்டிலேயே சின்ன கிளினிக் ஆரம்பிச்சார். லண்டன்ல படிச்சவர்ங்கிறதால வெளியில நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. எல்லாத்தையும் மறுத்துட்டு வீட்டுல உக்காந்து வைத்தியம் பண்ண ஆரம்பிச்சார். எளிய மக்களுக்குத் தன் சேவை கிடைக்கணும்னு விரும்பினார். உதவியாளர்கூட வச்சுக்க மாட்டார்... அவரே ஊசி போடுவார்... மருந்து கலக்கிக் குடுப்பார். எல்லாரும் அவரைக் கடவுள் மாதிரி பார்த்தாங்க...” என்று கலங்குகிறார் பார்த்தசாரதியின் சகோதரர் நாகமணி.

வண்ணாரப்பேட்டையைத் தாண்டி பாண்டிச்சேரியிலிருந்தெல்லாம் அவரிடம் சிகிச்சை பெற மக்கள் வருவார்கள். யாரிடமும் இவ்வளவு கொடுங்கள் என்று கேட்கமாட்டார். பணம் தராமல் போனால் கண்டுகொள்ளமாட்டார். பள்ளிச் சீருடையில் குழந்தைகள் வந்தால் காசு கொடுத்தாலும் வாங்கமாட்டார். பல நூறு எளிய குடும்பங்களுக்குக் குடும்ப மருத்துவராக இருந்தார் பார்த்தசாரதி.

மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!
மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!
மகன் தந்தைக்காற்றிய உதவி மக்களுக்கு உழைத்தல்!

“பதற்றப்படுத்தாம அன்பா பொறுமையா எடுத்துச் சொல்வார். பெரும்பாலும் அவரே மருந்து மாத்திரைகளும் தந்திடுவார். எந்த நேரம் வேணும்னாலும் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டலாம். பணமில்லைன்னு கவலைப்படவேண்டாம். பிரச்னை முற்றியிருந்தா அவரே கைப்பட கடிதம் தந்து அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அனுப்புவார். அவர் லெட்டருக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். எப்படி இருக்கோம்னு தொடர்ந்து போன் பண்ணி விசாரிப்பார்” என்கிறார் அவரிடம் இரண்டு தலைமுறைகளாக மருத்துவம் பார்க்கும் உமா மகேஸ்வரி.

எண்பது வயதைக் கடந்தும், மருத்துவம் பார்த்துவந்த பார்த்தசாரதி, கொரோனா முதல் அலை ஊரடங்குக்காலம் வரை கிளினிக்கில் சிகிச்சையளித்துள்ளார். குடும்பத்தார் வேண்டிக் கேட்டுக்கொண்ட பிறகு இணையவழியில் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களை மட்டும் நேரில் வரச்செய்து பரிசோதித்து சிகிச்சையளித்துள்ளார். ஒரு கட்டத்தில் எப்படியோ அவரையும் தொற்றிக்கொண்டது கொரோனா.

கண்ணாடி வாகனத்தில் கொண்டு வரப்பட்ட புன்னகை மாறாத அவரது உடலைக்கண்டு வண்ணாரப் பேட்டையே கலங்கியது. எளிய மக்களின் வாதை தீர்த்த இந்த மருத்துவர் என்றைக்கும் மக்கள் மனங்களில் வாழ்வார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு