Published:Updated:

`அப்பாவுக்குக் கொரோனா + சிறுநீரக அறுவை சிகிச்சை; ஆனாலும் நம்பிக்கையோடு மீண்டோம்!' #SpreadPositivity

ப்ரீனு
ப்ரீனு

தன் அப்பாவை கொரோனாவில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல், தான் ஒருங்கிணைப்பாளராக உள்ள அமைப்பின் மூலம் ஆயிரமாயிரம் மக்களுக்கு இந்தக் கொரோனா காலகட்டத்தில் உதவி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ப்ரீனு.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் எங்கு பார்த்தாலும் நோய் பாதிப்பு, சிகிச்சை, ஆக்சிஜன் தேவை என நம்மை வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் உயிரின் மேல் மட்டுமே அக்கறை செலுத்தும் நிலையில் உள்ளோம். எங்கு காணினும் கொரோனா குறித்தான எதிர்மறை சிந்தனைகள், பயம் என உலகமே சிக்குண்டு உள்ள வேளையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்தவர்களின் அனுபவங்கள் நமக்குப் படிப்பினையாக உள்ளன. தன் அப்பாவை கொரோனாவில் இருந்து மீட்டது மட்டுமல்லாமல், தான் ஒருங்கிணைப்பாளராக உள்ள அமைப்பின் மூலம் ஆயிரமாயிரம் மக்களுக்கு இந்தக் கொரோனா காலகட்டத்தில் உதவி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ப்ரீனு.

சமூக பணியாளர்கள்
சமூக பணியாளர்கள்

ப்ரீனு சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் சொந்தமாக, மனரீதியாகப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையம் வைத்துள்ள இவர் 2016-ம் ஆண்டு முதல் சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறார். மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியா முழுவதும் பல சமூகப் பணியாளர்கள் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழு ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் பல்வேறு பிரச்னைகளில் இருக்கும் மக்களுக்கு உதவி வந்துள்ளனர். தொடர்ந்து, பல்வேறு இன்னல்களில் உள்ள பெண்கள், பழங்குடியினர், குழந்தைகள் என இவர் சார்ந்த குழுவினரின் உதவிகள் தொடர ஆரம்பித்தது.

இவ்வாறான சூழ்நிலையில்தான் 20 பேர் கொண்ட குழுவின் மூலம், கொரோனா பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உதவ ஆரம்பித்தனர். `என்.பி.எஸ்' என்ற பெயர் கொண்ட இவர்களின் அமைப்பு, அவர்களுக்குள்ளாகவே சில குழுக்களாகப் பிரிந்து கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளான படுக்கை, ஆக்சிஜன், மருந்து, ஆம்புலன்ஸ் வசதி மட்டுமல்லாமல் மனநல ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி சேவை செய்து வருகிறது. கிட்டத்தட்ட கொரோனா வார் ரூம்போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இவர்களின் அமைப்பு.

அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான 30 வயது இளம் எனர்ஜி ப்ரீனு, அவரது கொரோனா சேவை குறித்தும், அவரின் தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோது அதிலிருந்து எவ்வாறு அவர் குடும்பம் மீண்டது என்பது குறித்தும் நம்மிடம் பேசினார்.

விதிமுறை
விதிமுறை
`அந்த நம்பிக்கையால் மட்டுமே சாத்தியமானது!' - ஆர்.ஜே-வின் 8 நாள் கொரோனா போராட்டம் #SpreadPositivity

``சிறுவயது முதலே சமூகத்துக்கு ஏதாவது செய்திட வேண்டும் என்ற இயல்பே என்னை சமூக சேவையில் முதுகலைப் பட்டம் பெற வைத்தது. வீட்டினர் எதிர்ப்பு தெரிவிக்காததால் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டு வந்தேன். ஆரம்பத்தில் குழுவாக இல்லாமல் தனியாகப் பணிக்குச் சென்றுகொண்டே சேவை செய்து வந்தேன். பின் 2016-ல் சமூக சேவை படித்தவர்களுடன் இணைந்து ஓர் அமைப்பை உருவாக்கினோம். அதன் மூலம் பல்வேறு உதவிகளைச் செய்து வந்தோம். அடுத்ததாக, பணியைத் துறந்து சொந்தமாக ஆலோசனை மையம் ஆரம்பித்தேன். இந்நிலையில்தான் கொரோனா பெருந்தொற்று மக்களிடம் பரவத் தொடங்கியது.

பரவ ஆரம்பித்த சில நாள்களிலேயே நாங்கள் 20 பேர் கொண்ட அமைப்பை கொரோனாவுக்கு என்று ஏற்படுத்தி குழுக்களாகப் பிரிந்து செயல்படத் தொடங்கினோம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொடக்கம் முதல் தற்போதுவரை, மனரீதியான பிரச்னை முதல் கொரோனா குறித்த சந்தேகங்கள், உதவிகள் எனத் தினமும் 200 பேர்வரை உதவி வருகின்றோம். இதுவரை கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வந்த பல உயிர்களைக் காப்பாற்றி உள்ளோம்.

நாங்கள் செய்வது மருத்துவ சேவை இல்லை. ஆனால், மிக முக்கியத் தேவையான படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ தேவைகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கிறோம்'' என்றார்.

கொரோனாவின் கை ப்ரீனுவின் குடும்பத்தையும் பிடிக்காமல் இல்லை. இவரின் தந்தையையும் கொரோனா தாக்கி உள்ளது. அதிலிருந்து இவரின் குடும்பம் மீண்டு வந்த கதை நமக்கு பெரிய நம்பிக்கை அளிக்கிறது. முதல் அலையும் இல்லாமல், இரண்டாம் அலையும் இல்லாமல் இடைப்பட்ட காலத்தில் (ஜனவரியில்) ப்ரீனுவின் தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதே தனியார் மருத்துவமனையில் படுக்கை இல்லை எனக் கூறியுள்ளனர். பின் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கூடவே தந்தைக்கு சிறுநீரகக் கோளாறு வேறு, சிறுநீரக அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம்.

Spread Positivity
Spread Positivity
`க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு 3 வேளை இலவச உணவு!' - சென்னை நிறுவனத்தின் முயற்சி #SpreadPositivity

முதலில் அவரை கொரோனாவிலிருந்து மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க, இன்ஜினீயர் படிக்கும் தன் தம்பியுடன் தந்தையை உடனிருந்து கவனித்து வந்துள்ளார் ப்ரீனு. நேரம் தவறாமல் சத்துள்ள உணவு, மனநல ஆலோசனை எனக் கொடுத்து சோர்ந்துபோய் விடாமல் தந்தையைக் கவனித்துள்ளனர் இருவரும். கொரோனாவில் இருந்து தந்தை குணமாக, ஒரு சிறுநீரகத்தை அகற்றிவிட்டு தந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கொரோனா என்ற ஒற்றைத் தொற்றை மட்டுமல்லாமல், சிறுநீரக செயலிழப்பு மற்றும் அறுவைசிகிச்சை என்றிருந்த நிலையையும் தான் சமாளித்ததைப் பற்றி ப்ரீனு கூறுகையில்,

``கொரோனா வந்தால் முதலில் நாம் அதைப் பார்த்து பயப்படக் கூடாது. நம் மன தைரியம்தான் நமக்கான முதல் மருந்து. அதுமட்டும் இருந்துவிட்டால் கண்டிப்பாக கொரோனாவில் இருந்து வெளிவந்து விடலாம். கூடவே ஆரோக்கியமான உணவு, ஓய்வு கண்டிப்பாகத் தேவை'' என்கிறார்.

``கொரோனாவை வெல்வது அத்துணை கடினமும் இல்லை, அதற்காக அது மிக சுலபமும் இல்லை. அனைவரும் பயமின்றி இருப்பதுடன், பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுங்கள்'' என்று முடித்தார் ப்ரீனு.

அடுத்த கட்டுரைக்கு