Published:Updated:

மண் பானைகளுக்கு மறுமலர்ச்சி... பெருகி வரும் பாரம்பர்யம்!

பொங்கல் பானையுடன் கிருஷ்ணமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
பொங்கல் பானையுடன் கிருஷ்ணமூர்த்தி

பொங்கல் பானை

மண் பானைகளுக்கு மறுமலர்ச்சி... பெருகி வரும் பாரம்பர்யம்!

பொங்கல் பானை

Published:Updated:
பொங்கல் பானையுடன் கிருஷ்ணமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
பொங்கல் பானையுடன் கிருஷ்ணமூர்த்தி

பொங்கல் திருநாள் என்று சொன்னாலே, மண் பானைகளில் பொங்கல் பொங்கி வரும் காட்சி நம் கண்முன்னே விரியும். காலம் காலமாக இதுதான் பாரம்பர்ய வழக்கமாக இருந்து வந்தது. அதனால்தான் பொங்கல் வாழ்த்து அட்டைகளில் மண் பானைகள் இடம் பெற்றன. தற்போதும்கூடத் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகக்கூடிய பொங்கல் திருநாள் தொடர்பான ஓவியங்களில் மண்பானைகளே காட்சிப் படுத்தப்படுகின்றன. ஆனால், நடைமுறை எதார்த்தமோ வேறு விதமாக இருக்கிறது.

கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக நகர்ப்புறங்களில் சில்வர், பித்தளை பாத்திரங்களிலும் குக்கரிலும்தான் பொங்கல் பொங்குகிறது. நவீன யுகம், பாரம்பர்ய மண்பானைகளை விரட்டி அடித்ததால், மண்பாண்ட கலைஞர்கள் பலர், வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள்.

இந்நிலையில், சித்தமருத்துவர்கள் உள்ளிட்டோரின் பார்வை பாரம்பர்ய விஷயங்கள் மீது பட ஆரம்பித்திருப்பதும், பசுமை விகடன் உள்ளிட்ட ஊடகங்கள் அதற்கு துணை நிற்பதும் பாரம்பர்ய அம்சங்கள் ஒவ்வொன்றின் மீதும் மக்களுக்கு மரியாதையையும் ஈர்ப்பையும் அதிகரிக்கச் செய்துவருகிறது. அந்த வகையில் மண்பாண்ட பொருள்களும் மறுமலர்ச்சி காணத்தொடங்கின. குறிப்பாக, பொங்கல் திருநாளில் பொங்கலிட, மண் பானைகள் பயன்படுத்தும் பழக்கம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ‘இது நல்ல மாற்றம்’ என நெகிழ்ச்சி அடைகிறார்கள் மண்பாண்டக் கலைஞர்கள். ‘தொன்றுதொட்டு வந்த வழக்கம் வழக்கொழிந்து போய்விடுமோ எனக் கவலைப்பட்டோம். ஆனால், மக்கள் மீண்டும் விழிப்புணர்வு அடைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது’ எனச் சிலாகிக்கிறார்கள், பாரம்பர்யத்தை நேசிக்கக்கூடியவர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமம் ஒருகாலத்தில் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்புக்குப் பெயர் பெற்ற ஊர். வெளியூர்களிலிருந்து ஏராளமான மக்கள், இங்கு வந்து பொங்கல் திருநாளுக்கான மண்பானைகள் வாங்கிச் செல்வார்கள். இங்குள்ள மண்பாண்ட உற்பத்தியாளர்கள் தெருவே வெறிச்சோடி கிடக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் மட்டுமே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு, பொங்கல் பானைகள் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்த கிருஷ்ணமூர்த்தியை ஒரு பகல் பொழுதில் சந்தித்தோம். ‘‘அஞ்சு தலைமுறையா, இந்தத் தொழிலைத் தொடர்ந்து செஞ்சிக் கிட்டு இருக்கோம். 20 வருஷத்துக்கு முன்ன, இங்க முப்பது குடும்பங்கள், மண்பாண்ட தயாரிப்பு தொழில்ல இருந்தாங்க. பொங்கல் சமயத்துல மட்டும் இந்தப் பகுதியில இருந்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் பானைகள் விற்பனையாகும். அப்படி இருந்த ஊர், எவர்சில்வர் பாத்திரம், குக்கர் வருகைக்குப் பிறகு, பானை விற்பனை படிப்படியா குறைய ஆரம்பிச்சது. மண்பானை களை மக்கள் விரும்பல. பொங்கல் சமயத்துல 10,000 பானைகள் விற்பனை ஆகுறதே பெரிய விஷயம்ங்கற அளவுக்கு நிலமை ரொம்ப மோசமாயிடுச்சு. இதனால் நிறைய பேர் இந்தத் தொழிலை விட்டே போயிட்டாங்க’’ என்றவர் சிறிது நேரம் கழித்துப் பேசத் தொடங்கினார்.

பொங்கல் பானையுடன் கிருஷ்ணமூர்த்தி
பொங்கல் பானையுடன் கிருஷ்ணமூர்த்தி

‘‘இப்ப அஞ்சாறு வருஷமா மண்பானை விற்பனை மறுபடியும் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு. வருஷத்துக்கு 50,000 பொங்கல் பானைகள் விற்பனையாகுது. பொங்கல் வைக்குற அளவைப் பொறுத்து, அரைக்கிலோ, ஒரு கிலோ, ரெண்டு கிலோ, மூணு கிலோ ‘பானை’னு பல அளவுகள்ல, மக்களோட தேவைக்கு ஏத்த மாதிரி பானைகளைத் தயார் செஞ்சு விற்பனை செய்றோம்’’ என்றவர், சில பானைகளை நம் பார்வைக்கு எடுத்து வைத்தார்.

ஒரே திருகு, ஒரே அச்சு மூலமாகத்தான், பல அளவுகளிலும் பானைகள் தயார் செய்கிறார்கள். இதற்கு அளவுகோலோ, வேறு கருவிகளோ பயன்படுத்துவதில்லை என்பது ஆச்சர்யம். இது ஒரு அற்புத கலை. தாங்கள் செய்யப்போகும் பானையின் அளவை மனதுக்குள் தீர்மானித்து, அதற்கு ஏற்றவாறு, தங்களது கை பக்குவத்தால் உருவாக்குகிறார்கள். பொங்கல் பானைகள் மட்டுமல்ல, பலவிதமான அளவுகளில் மண் சட்டிகள், குழிப்பணியாரத் தட்டுகள் எனப் பலவிதமான மண்பாண்டப் பொருள்களும் ஒரே திருகில்தான் உருவாக்கப் படுகின்றன.

மண் பானைகளுக்கு மறுமலர்ச்சி... பெருகி வரும் பாரம்பர்யம்!

‘‘வெயில்தான், இந்தத் தொழிலோட உயிர்நாடினு சொல்லலாம். மழை பெய்ஞ்சா எங்க தொழில் முடங்கிடும். தை 1-ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னாடி, பொங்கல் பானை விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிக்கும். ஆனா, புரட்டாசி மாசத்துல இருந்தே இதுக்கான உற்பத்தியில இறங்கியாகணும். புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, கார்த்திகைனு நாலு மாசம் பானைகளை உற்பத்தி செஞ்சாதான், மக்களோட தேவையை முழுமையா நிவர்த்திச் செய்ய முடியும்.

விற்பனைக்கான வாய்ப்பு அமோகமா இருந்தும்கூட, இந்த வருஷம் தொடர்ச்சியா மழை பெய்ஞ்சிக்கிட்டே இருந்ததுனால, பொங்கல் பானைகள் தயாரிப்புக் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. போன வருஷம், மழை அதிகம் இல்லாததால, நான் மட்டுமே 5,000 பானைகள் உற்பத்தி செஞ்சி விற்பனை செஞ்சேன். ஆனா, இந்த வருஷம் 2,000 பானைகள் உற்பத்தி செய்றதே பெரிய காரியமா இருக்கு’’ என்று வேதனைப்பட்டவர், பொங்கல் பானை தயாரிப்பு முறை குறித்து விவரித்தார்.

பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
பானை தயார் செய்யும் முறைகள்
மண் பானைகளுக்கு மறுமலர்ச்சி... பெருகி வரும் பாரம்பர்யம்!

‘‘களிமண், வண்டல் மண், மணல்... இந்த மூணையும் கலந்துதான் பானைகள் தயார் செய்றோம். வெண்ணாற்றங்கரைப் படுகையில இருந்து, இதையெல்லாம் விலைக்கு வாங்கிக்கிட்டு வருவோம். களிமண்ணையும் வண்டல் மண்ணையும் வெயில்ல நல்லா காய வெச்சு தூளாக்குவோம். பிறகு, அதைத் தண்ணியில கரைச்சி, கொஞ்ச நேரம் ஊற வைப்போம். பிறகு, நல்லா கலக்கிவிட்டு, ஒரு சல்லடை வழியா, அந்தக் கரைசலைச் சுத்தமான இடத்துல ஊத்துவோம். கரைசல்ல ஒரு சின்னத் தூசி கூட இருக்கக் கூடாது. கரைசைல் அடுத்த சில நாள்கள்ல இறுகிடும். மணலைத் தனியா ஒரு சல்லடையில நல்லா சலிச்சு, பெரு மணலையெல்லாம் நீக்கிடுவோம். ஒரு பெரு மணல்கூட அதுல இருக்கக் கூடாது. ஒருவேளை அப்படி எதுவும் இருந்தா, நாங்க செய்யக்கூடிய பானையில ஓட்டை விழுந்துடும்.

இறுகிப்போன மண் கரைசலோட, மணலை கலந்து, காலால் மிதிச்சி மண்ணைப் பக்குவப்படுத்துவோம். அதை, திருகுல வெச்சி, பானைகளைத் தயார் செஞ்சு, வெயில்ல காய வெச்சி, கட்டையால் தட்டி, சீர்படுத்துவோம். அதுக்குப் பிறகு, சூளையில வெச்சு எரிச்சு, சூடு படுத்துவோம். நெருப்பு நல்லா தகதகனு எரிஞ்சாதான், மண்பானைகள், முழுமையாக வெந்து தரமா இருக்கும்” என்றவரிடம்,

‘தரமான மண்பானைகளை எப்படிக் கண்டு பிடிப்பது? எனக் கேட்டோம்,

‘‘கையால் தட்டிப் பார்த்தால், நல்லா ‘கணீர் கணீர்’னு சத்தம் வரணும். தரமில்லாத பானைகளா இருந்தா, மக்கள் அதைப் பயன் படுத்தும்போது, தண்ணீர்க் கசிவு ஏற்படும். அடுப்புல வெச்சு பயன்படுத்தும்போது, லேசான விரிசல் ஏற்படும். மண்ணைப் பக்குவப் படுத்துறதும், பக்குவமா சூடு படுத்துறதும் ரொம்ப முக்கியம்’’ என்று சொன்ன கிருஷ்ணமூர்த்திக்குப் பொங்கல் வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.

தொடர்புக்கு, கிருஷ்ணமூர்த்தி,

செல்போன்: 96556 81468.

தண்ணீர் விடாது!

மண்பானையில பொங்கல் செய்தால், பொங்கல் தனிச் சுவையோடும் வாசனை யோடும் இருக்கும். மறுநாளும் கெட்டியாகவே இருக்கும். தண்ணீர் விடாது. எல்லாவற்றுக்கும் மேலாக, மண்பாண்டங்களில் சமைத்துச் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது.

மலேசியாவுக்கு ஏற்றுமதி!

மண்பானைகள் பெருமை பற்றிப் பேசிய கிருஷ்ணமூர்த்தி, ‘‘மலேசியாவுல இருக்க ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு ஒவ்வொரு வருஷமும் நிறைய குழிப்பணியாரச் சட்டிகளை ஏற்றுமதி செஞ்சிகிட்டு இருக்கோம். 4 குழி, 6 குழி, 7 குழி, 9 குழி கொண்டதுனு விதவிதமா விரும்பிக் கேக்குறாங்க. தயிர் வைக்கக்கூடிய சின்னப் பானைகளும் அதிகமா விற்பனை ஆகுது’’ என்றார்.

தானிய சேமிப்புக் குதிர்கள்!

‘‘எங்ககிட்ட மண்பானைகள் வாங்க, இயற்கை விவசாயிகள் நிறைய பேர் வர்றாங்க. இடுபொருள்கள் தயார் செய்றதுக்கும், தானியங்கள சேமிச்சு வைக்கிறதுக்கும் இதைப் பயன்படுத்துறாங்க. கடந்த சில வருஷங்களா நல்ல மாற்றம் தெரியுது. மீன் குழம்புச் சட்டி, குழிப்பணியாரச் சட்டி இதையெல்லாம் டவுன் மக்கள் விரும்பி வாங்கிகிட்டுப் போறாங்க. கோயில் திருவிழாக்களுக்குச் சுடுமண் குதிரைகளும் உற்பத்தி செய்து கொடுக்கிறோம்’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

குழிப்பணியாரச் சட்டி!

‘‘பொங்கல் பண்டிகை இல்லாத மத்த நேரங்கள்ல, கோயில் கும்பாபிஷேக யாகசாலை பானைகள், கல்யாணத்துக்கு அரசாணி பானைகள், கோடைக்காலத் தண்ணீர்ப் பந்தலுக்கான பானைகளும் உற்பத்திச் செய்வோம். எங்க பகுதியில உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் புகழ்பெற்றது. ஆடி மாச முத்துப் பல்லாக்கு, ஆவணி மாச தேர் திருவிழா, புரட்டாசி மாச தெப்பத்திருவிழா மாதிரியான விஷேச நாள்கள்ல, வெளியூர் மக்கள் அதிகமா வருவாங்க. இப்ப சில வருஷங்களா, குழிப்பணியாரச் சட்டி, மீன் குழம்புச் சட்டி மாதிரியான பானைகள் விற்பனை சிறப்பா நடந்துகிட்டு இருக்கு’’ என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.