Published:Updated:

``இந்தப் புள்ளைங்களுக்கு படிப்பு மறந்துடக்கூடாது!" - சென்னை வீதியில் பாடம் எடுக்கும் சாலமன்

சாலையோரம் பாடம் எடுக்கும் சாலமன்

சற்று நேரத்துக்குள் சாலமன் அங்கே வர... கூடியிருந்த மாணவர்கள், `சாலமன் அண்ணா வந்துட்டாரு... சாலமன் அண்ணா வந்துட்டாரு' என்று உற்சாகமாகின்றனர்.

``இந்தப் புள்ளைங்களுக்கு படிப்பு மறந்துடக்கூடாது!" - சென்னை வீதியில் பாடம் எடுக்கும் சாலமன்

சற்று நேரத்துக்குள் சாலமன் அங்கே வர... கூடியிருந்த மாணவர்கள், `சாலமன் அண்ணா வந்துட்டாரு... சாலமன் அண்ணா வந்துட்டாரு' என்று உற்சாகமாகின்றனர்.

Published:Updated:
சாலையோரம் பாடம் எடுக்கும் சாலமன்

மாலை 5 மணி...

சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ட்ரிங்கர் தெரு...

லோடு வண்டிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் என ஒன்றன் பின் ஒன்றாக அந்தக் குறுகிய தெருவுக்குள் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. வாகனச் சத்தம்... பாதசாரிகளால் ஏற்படும் அசெளகரியங்கள்... என ஏராளமான இடையூறுகளுக்கு மத்தியில், ஒரு சாலையோர குடிசையையொட்டி வீதியில் விரிக்கப்பட்ட தார்ப்பாயில் புத்தகங்களுடன் வந்து அமர்கின்றனர் பள்ளி மாணவர்கள் சிலர்.

எண்ணெய் இல்லாத தலை... அழுக்கேறிய உடை... என அவர்களது தோற்றமே சொல்லிவிடுகிறது அவர்களின் குடும்பச் சூழலை. சாலையோரம் வசிக்கும் அந்த எளிய குடும்பத்துப் பிள்ளைகள் காத்திருப்பது சாலமனுக்காக!

சாலையோரம் வகுப்பெடுக்கும் சாலமன்...
சாலையோரம் வகுப்பெடுக்கும் சாலமன்...

சாலமன்... 12-ம் வகுப்புக்கு மேல் படிக்க இயலாத குடும்பச் சூழலில், மூட்டைதூக்கி வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் எளிய இளைஞன். `தன்னைப் போல படிப்பைத் தொலைத்துவிட்டு தன் பகுதியைச் சேர்ந்த பிள்ளைகள் சிரமப்பட்டுவிடக் கூடாது' என்ற தவிப்பில் கடந்த சில மாதங்களாக வீதியில் டியூஷன் நடத்திக் கொண்டிருக்கிறார். 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையான 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவரிடம் பயில்கின்றனர்.

சற்று நேரத்துக்குள் சாலமன் அங்கே வர... கூடியிருந்த மாணவர்கள், `சாலமன் அண்ணா வந்துட்டாரு... சாலமன் அண்ணா வந்துட்டாரு' என்று உற்சாகமாகின்றனர். `ண்ணா நா எதப் படிக்கறது?' என ஓடி வருகிறான் ஒரு சிறுவன், `சாலமன்ணா இன்னைக்கு ஹோம் வொர்க் எழுதிட்டு வந்துட்டோம்' என்று நோட்டைத் தூக்கிக் காட்டுகின்றனர் சில சிறுமிகள், `இவ என்னை அடிச்சுட்டே இருக்காண்ணா... ன்னான்னு கேளுங்கோ' என ஒருவன் புகார் சொல்கிறான். அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது சாலமனுக்கு.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் சாலமன்...
மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் சாலமன்...

இருபதுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மொத்தமான ஓரிடத்தில் கூடியிருக்கும்போது அவர்களைச் சமாளிப்பதென்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. பொறுமையாக அதைச் செய்யும் சாலமன், ``தோ பாரே... படிக்கலைன்னா என்ன மாதிரி மூட்டை தூக்கி கஷ்டப்படணும். படிச்சா பெரிய வேலைக்குப் போயி... கார்ல பந்தாவா வரலாம்... ஒழுங்கா படிச்சுக்கோங்க" என்று உரக்கச் சொல்ல அந்த இடம் நிசப்தமாகிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் படிக்க வேண்டியதையும் எழுத வேண்டியதையும் அவர்கள் அருகில் அமர்ந்து அன்பாகச் சொல்கிறார் சாலமன். அவர்கள் அனைவரும் படிப்பில் தீவிரமாகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நான் பொறந்த வளர்ந்ததெல்லாம் ஸ்லம்லதான்ணே. சாலையோரத்துலதான் என் வீடு. அப்பா மூட்டை தூக்குற கூலித் தொழிலாளி. அம்மா வீட்ல சும்மாதான் இருக்காங்க. என் கூடப் பொறந்தது அஞ்சு அக்கா... அப்பாதான் தனி ஆளா கஷ்டப்பட்டு அக்காங்க எல்லாருக்கும் கல்யாணம் பண்ணிவெச்சார். எனக்குப் படிக்கணும்’னு ரொம்ப ஆசை. 12-வது முடிச்சிட்டு, சென்னை பிரெசிடென்சி காலேஜ்ல பி.ஏ எக்கனாமிக்ஸ் சேர்ந்தேன். எங்க குடும்பத்துல இருந்து மொதோ முறையா காலேஜ் போனது நான்தான். அதை நினைச்சு என் அப்பா அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.

சாலமன்
சாலமன்

ப்ச்... ஆனா, ஏழைங்களோட சந்தோஷம்தான் ரொம்ப நாள் நீடிக்காதே... முதல் செமஸ்டர் எக்ஸாம்கூட முடியலை திடீர்’னு அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமப் போயிருச்சு. ஃபீஸ் கட்ட முடியலை. படிப்பை விட்டுட்டு நான் வேலைக்குப் போக வேண்டிய நிலைமை. படிப்பை நிறுத்திட்டு கிடைக்கிற கூலி வேலைக்கெல்லாம் போக ஆரம்பிச்சுட்டேன். அதிகம் மூட்டை தூக்குற வேலைதான்” வெள்ளந்தியாகப் பேசும் சாலமனின் குரலை இறுக்கமாக்குகிறது கல்லூரி படிக்க முடியாத ஏக்கம்.

``ஜாலியா காலேஜ் போற பசங்களைப் பார்க்குறப்பல்லாம் லேசா பொறாமையா இருக்கும்ணா” எனச் சொல்லும்போது அவர் மனம் கலங்குகிறது. ``விதியை நொந்துகிட்டு அந்தக் கவலையைக் கடந்துட்டேன். ஆனா, என்ன மாதிரியான நிலமை வேற யாருக்கும் வந்திரக் கூடாதுன்னு கடவுளை வேண்டிகிட்டே இருப்பேன். இந்தச் சூழல்லதான் கொரோனா வந்து லாக்டெளன் போட்டாங்க. பள்ளிக் கூடங்களெல்லாம் மூடிட்டு ஆன்லைன் கிளாஸ் நடத்தினாங்க. அதனால இந்த ஸ்லம்ல வாழ்ற மொத்த புள்ளைங்களோட படிப்பும் ரொம்ப பாதிக்கப்பட்ருச்சுண்ணா. மீன்பாடி வண்டி ஓட்டுறவங்க புள்ளையும், மூட்டை தூக்குறவங்க புள்ளையும் ஒருவேளை சோத்துக்கே திண்டாடும்போது எங்கிருந்துண்ணா ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் பண்ணுவாங்க?” ஆதங்கமாக அவர் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வதனெத் தெரியவில்லை.

மீன்பாடி வண்டி ஓட்டுறவங்க புள்ளையும், மூட்டை தூக்குறவங்க புள்ளையும் ஒருவேளை சோத்துக்கே திண்டாடும்போது எங்கிருந்துன்ணா ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் பண்ணுவாங்க?”
சாலமன்

``நீங்களே நினைச்சுப் பாருங்க... இங்கே முக்கால்வாசி பேர்கிட்ட போன் கிடையாது. ஒரு சிலருகிட்ட போன் இருந்தாலும் அதை வெச்சு ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் பண்ற சூழல் இங்கே சுத்தமா கிடையாது. ரோட்டோரம் வாழ்ற புள்ளைங்களுக்கு அதெல்லாம் சாத்தியமா சொல்லுங்க. அதனால இங்குள்ள பசங்களுக்கும் படிப்புக்குமான தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா அறுந்துகிட்டே வந்துச்சு. சின்னச் சின்ன புள்ளைங்கெல்லாம் படிப்பை மறந்துட்டு அவங்க அப்பா அம்மாகூட வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க.

அதையெல்லாம் பார்க்கும்போது மனசு பதறிடுச்சுண்ணா... அவங்க கொஞ்ச நாள் படிப்பை விட்டு விலகிட்டாலும் திரும்ப படிப்புக்குள்ள கொண்டுவர்றது சாதாரண விஷயம் கிடையாது. `அவங்களை இப்படியே விட்டுவிடக் கூடாது. அவங்களும் என்னைப்போல நாளைக்கு கஷ்டப்படக் கூடாது’ன்னு என் மனசு கெடந்து அடிச்சுகிட்டே இருந்துச்சு. அந்த நேரத்துலதான், `உறவுகள் வெல்ஃபேர் டிரஸ்ட்’ல இருந்து எங்க ஏரியா பசங்களுக்கு உணவு கொடுத்து உதவ வந்தாங்க. `இங்க உள்ள பசங்களுக்கு சாப்பாடு எந்தளவுக்கு முக்கியமோ படிப்பும் அந்தளவுக்கு முக்கியம். இவங்கள இப்படியே விட்டா படிப்பை சுத்தமா மறந்துருவாங்க. காலையில வேலைக்குப் போயிட்டு வந்துட்டு ஈவ்னிங் டைம்ல எங்க ஏரியா பசங்களுக்கு டியூஷன் வெச்சு எனக்குத் தெரிஞ்சதை சொல்லித் தர்றேன். அதுக்கு நீங்க எதாவது ஹெல்ப் பண்ணுங்க’ன்னு கேட்டேன்.

ஏன்னா... தனி ஆளா வீதியில இறங்கி இதைப் பண்றது சிரமம். என்னுடைய சிச்சுவேஷனும் மோசமா இருந்ததால, அவங்க சப்போர்ட் கேட்டேன். என் ஆர்வத்தைப் பார்த்துட்டு தாராளமா பண்ணுப்பான்னு சொன்னாங்க. பாடம் எடுக்குற அளவுக்கு எனக்கு பெருசா நாலேஜ்லாம் கிடையாது. ஆனா, புத்தகத்துல உள்ளதை அப்படியே படிச்சு அவங்களுக்குத் திரும்பச் சொல்லுற அளவுக்கு நாலேஜ் இருக்கு. இப்போதைய தேவை பாடம் நடத்துறது இல்ல. இவங்களுக்கு பள்ளிக்கூட நினைப்பு மறக்காம இருக்கறதான். அதனால நமக்கு இருக்கிற நாலேஜ் போதும்னு எதையும் யோசிக்காம இந்த முயற்சில இறங்கிட்டேன். அவங்களுக்கு வாசிச்சு சொல்லிக்கொடுக்கிறதுக்காக தினமும் நான் பிராக்டீஸ் பண்ணிப் பாத்துப்பேன்.

மகேஷ்குமார் அகர்வாலிடம் சாலமன் பாராட்டு பெற்றபோது
மகேஷ்குமார் அகர்வாலிடம் சாலமன் பாராட்டு பெற்றபோது

ஆரம்பத்துல ரெண்டு மூணு பசங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சொல்லிக் கொடுத்தேன். அப்புறம், நாளாக நாளாக நிறைய பசங்க ஆரவத்தோட வர ஆரம்பிச்சுட்டாங்க. ஸ்ட்ரிங்கர் தெரு, ரத்தன் பஜார்னு இப்போ ரெண்டு இடங்கள்ல தெருவோர டியூஷன் நடத்துறேன். ஸ்ட்ரிங்கர் தெருவில் டியூஷன் எடுக்கும்போது ரத்தன் பஜார் பசங்களை ஸ்ட்ரிங்கர் தெருவுக்கும், ரத்தன் பஜாரில் டியூஷன் எடுக்கும்போது ஸ்ட்ரிங்கர் தெரு பசங்களை ரத்தன் பஜாருக்கும் அழைச்சுட்டுப் போய் சொல்லிக் கொடுக்குறேன். தினமும் 20-லிருந்து 30 பேர் வரை படிக்க வர்றாங்க.

எனக்கு இங்கிலீஷ் தெரியாதுங்கிறதால நித்தின் தாமஸ்கிறவரும் கடந்த ஒருவாரமா வந்து உதவி பண்றார். அவர், இங்குள்ள குழந்தைங்களுக்கு சின்னச் சின்ன இங்கிலீஷ் வார்த்தைகளை கத்துத்தர்றார். இதைச் செய்யறதுல மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. இதுக்காக சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சார் என்னை நேரில் கூப்பிட்டு பாராட்டினார். `உனக்கும் அந்தப் பிள்ளைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்யுறேன்’னு சொன்னார். ரோட்டோரம் டியூஷன் நடத்துறதால பசங்களோட கவனம் சிதறுது சார்... அமைதியான ஒரு இடம் ஏற்பாடு பண்ணிக்கொடுத்தா நல்லா இருக்கும்’னு அவர்கிட்ட சொன்னேன்.

சீக்கிரமே அதுக்கு ஏற்பாடு பண்ணித் தர்றேன்னு சொல்லியிருக்கார். பாராட்டையெல்லாம் எதிர்பாத்து இதைச் செய்யலைன்னாலும் அவ்வளவு பெரிய அதிகாரி என்னை நேரில் கூப்பிட்டு பாரட்டினது என் வாழ்நாள்ல மறக்க முடியாது. அதுமட்டுமல்ல படிக்க முடியலையேன்னு நாம கவலைப்பட்டுகிட்டே இருக்கிறதுக்குப் பதிலா, நமக்குத் தெரிஞ்சதையும் படிக்காததால நான் படுற கஷ்டத்தையும் நாலு பசங்களுக்கு சொல்லிக் கொடுத்து அவங்களை படிக்கத் தூண்டலாமில்லையா?” முதிர்ச்சியான வார்த்தைகளுடன் முடிக்கிறார்.

அக்‌ஷயா
அக்‌ஷயா

சாலமனிடம் டியூஷனுக்கு வரும் மாணவர்களில் ஒருவரான 5-ம் வகுப்பு படிக்கும் அக்‌ஷயாவிடம் பேசியபோது, ``எங்க அப்பா பழ வியாபாரம் பண்றார். அதுல கிடைக்கிற வருமானத்துலதான் எங்களுக்கு சாப்பாடு எல்லாமே... கொரோனா டைம்ல பள்ளிக்கூடம் மூடினப்புறம் எங்களுக்குப் படிக்கணும்ங்கிற ஆர்வமே பேயிருச்சு. சாலமன்ணா எங்க வீட்டாண்ட வந்து உட்கார்ந்து எங்களை டியூஷனுக்கு கூப்பிட்டுகிட்டே இருப்பாரு. `கூப்பிடுறாங்கள்ல படிக்கிறதுக்குப் போ...’ன்னு எங்க ஆயாவும் சொல்லும். ஆனா, நாங்க அதையெல்லாம் மதிக்காம ஓடிருவோம்.

நிறைய நாள் இப்புடிப் பண்ணிட்டு இருந்தோம். ஒருநாள் எங்களை உக்கார வெச்சு நீங்க படிச்சாதான் பெரிய ஆளா வரலாம். பெரிய அதிகாரிங்கள்லாம் உங்களைத் தேடிவருவாங்க. பேப்பர்லயெல்லாம் உங்களைப் பத்தி எழுதுவாங்க. அதனால படிங்க... படிங்க...’ன்னு சாலமன்ணா சொன்னாரு. அதுக்கு அப்புறம்தான் ஹே நாமளெல்லாம் படிக்கப் போலாம்டீன்னு சாலமன்ணாகிட்ட டியூஷனுக்கு வந்தோம். நாங்க படிச்சு நிச்சயம் பெரிய ஆளா வருவோம்” என்கிறார்.

அக்‌ஷயாவின் இந்த வார்த்தைதான் சாலமனின் வெற்றி! வாழ்த்துகள் சாலமன்.