Published:Updated:

தனியார் வசமாகும் ஏர் இந்தியா!

ஏர் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
ஏர் இந்தியா

கைமாறும் பின்னணி

தனியார் வசமாகும் ஏர் இந்தியா!

கைமாறும் பின்னணி

Published:Updated:
ஏர் இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
ஏர் இந்தியா

விற்பனைக்கு வருகிறது, ‘மகாராஜா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஏர் இந்தியா. இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்பதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. `ஏர் இந்தியா’, `ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ ஆகிய நிறுவனங்களின் 100% பங்குகளும் விற்கப்படவுள்ளன; ஏர் இந்தியா நிறுவனமும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திவரும் ஏர் இந்தியா சாட்ஸ் (SATS) நிறுவனத்தில், ஏர் இந்தியாவின் 50% பங்குகளும் விற்கப்படவுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் இந்த நிறுவனங்கள் சந்தித்துவரும் நஷ்டத்தைத் தாங்க முடியாமல். அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறதாம்!

தனியார் வசமாகும் ஏர் இந்தியா!

நஷ்டம் ரூ.8,000 கோடி!

கடந்த 2018-ம் ஆண்டு, ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க முடிவுசெய்து, அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு. அப்போது அவற்றை வாங்க யாரும் முன்வராத சூழலில், தற்போது விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு ஏர் இந்தியாவின் 100% பங்குகளும் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.

கடந்த ஜனவரி 27 அன்று, மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இது தொடர்பாக 220 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏர் இந்தியா நிறுவனங்கள்மீது தற்போது ஏறத்தாழ ரூ.60 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டில் ஏர் இந்தியாவுக்கு ஏறத்தாழ ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வாஜ்பாய் ஆட்சியில் விதைக்கப்பட்ட விதை

இந்தியாவின் பொதுத்துறை விமானச் சேவைகளாக ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இருந்தன. 2004-ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரி நரேஷ் சந்திரா தலைமையில் கமிட்டி ஒன்றை அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகியவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்கும்படி கூறியது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில், அந்த அறிக்கைமீது நடவடிக்கை எதுவும் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசுப் பொறுப்பில் இருப்பவர்களின் முடிவுகள்தான் தற்போதைய நஷ்டத்துக்கும், கடனுக்கும் காரணம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காங்கிரஸ் ஆட்சியில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேல், ஏர் இந்தியாவின் விமானங்களைப் புதிதாக மாற்ற உத்தரவிட்டார். ஏறத்தாழ ரூ.70 ஆயிரம் கோடி செலவில், சுமார் 100 விமானங்கள் வாங்கப்பட்டன. கடன் தொகைக்கு விமானங்கள் வாங்கி, அவை ஈட்டும் லாபத்தில் கடனை அடைக்கத் திட்டமிடப்பட்டது. எனினும், அந்தத் திட்டம் தோல்வியில் முடிந்தது.

மகாராஜா
மகாராஜா

2007-ம் ஆண்டு, மற்றொரு தவறான நடவடிக்கையை மேற்கொண்டது மன்மோகன் சிங் அரசு. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. `ஏர் இந்தியா’ என்ற பெயரின் கீழ் அவை இயங்கத் தொடங்கின. கடன் தொகையும், நஷ்டமும் ஒவ்வோர் ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ள, தற்போது முழுமையாக விற்பனை செய்யப்படுவதற்குத் தயாராகியிருக்கிறது ஏர் இந்தியா.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

நிலம் விற்பனைக்கல்ல!

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏர் இந்தியா மற்றும் அதன் நிறுவனங்கள் குறித்தும், அவற்றின் கடந்த ஆண்டு லாப நஷ்டக் கணக்குகள் குறித்தும், இந்திய விமானத்துறையின் எதிர்காலம் குறித்தும் கூறப்பட்டிருக்கின்றன.

ஏர் இந்தியாவின் லோகோ, ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான ஓவியங்கள், சிறப்புப் பொருள்கள் ஆகியவை இந்த விற்பனையின் கீழ் இடம்பெறாது எனக் கூறப்பட்டுள்ளது. மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான நிலங்களையும் இந்த விற்பனையிலிருந்து விலக்கியிருக்கிறது மத்திய அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிபந்தனைகள் பல...

ஏர் இந்தியாவை வாங்குபவரின் சொத்து மதிப்பு குறைந்தபட்சம் ரூ.3,500 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என வரையறுத்திருக்கிறது இந்த அறிக்கை. குறைந்தபட்சம் ஏர் இந்தியாவின் 10% பங்குகளை வாங்குபவர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியாவை வாங்குபவர், அதன் மொத்த கடனில் ரூ.23 ஆயிரம் கோடியை மீண்டும் செலுத்தினால் போதும் எனவும், ‘ஏர் இந்தியா’ என்ற பெயரிலேயே அதை இயக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரும் மார்ச் 17 வரை இந்த விற்பனைக்கான பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது.

ஏர் இந்தியாவை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கினால் அது வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையின்கீழ் வரும் என்றும், 49 சதவிகித முதலீட்டை மட்டுமே வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி ஹிந்துஜா, டாடா, அதானி மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவை வாங்கும் போட்டியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசின் இந்த முடிவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஒருபக்கமிருக்க, பா.ஜ.க-வினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்பது முக்கியமான விஷயம். பா.ஜ.க-வின் தொழிற் சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் இதை எதிர்த்திருக்கிறது.

ஆனால், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் விற்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏர் இந்தியாவை ஏலத்தில் வெல்பவர், அதன் பெயரைப் பயன்படுத்திக்கொள்ளலாம். விற்பனை முடிவதற்குள் ஏர் இந்தியா சொத்துகள் மேலாண்மை நிறுவனத்தின் மூலம் சம்பளம் அளிக்கப்படாத தொழிலாளர்களுக்கு நிலுவையுடன் மொத்தப் பணமும் அளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதைப்போல, ஏர் இந்தியாவை தனியார் வசம் ஒப்படைப்பதைத் தவிர்க்க முடியாது என்றாலும், ஏறத்தாழ 14 ஆயிரம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்துத்துறை தொழிலாளர் சங்கத்தின் (Aviation Industry Employees Guild) ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமாரிடம் பேசினோம்.

“ஏர் இந்தியா நமது நாட்டின் பெருமைமிகு அடையாளம். பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் பொதுத்துறை விமான நிறுவனங்கள் இருக்கின்றன.ஆனால், நம் நாட்டில் அதைத் தனியாரிடம் விற்கப்போவதாகச் சொல்கிறார்கள். தனியார் நடத்தும் விமான நிறுவனங்களில் நஷ்டம் வராது என்றால், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் நிறுவனங்கள் ஏன் மூடப்பட்டன?

தற்போது ஏர் இந்தியா தொழிலாளர்களின் பணி நேரம், வயது முதலானவை அரசுப் பரிந்துரைகளுக்கு உட்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. நிறுவனம் தனியாரிடம் செல்லும்பட்சத்தில் பணி நேரம் அதிகரிக்கும்; 35 வயதுக்குள் ஏர் ஹோஸ்டஸ் முதலான பணிகளில் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

ஏர் இந்தியா நிறுவனங்கள் சிறப்பாகவே செயல்படுகின்றன. அரசுப் பொறுப்பில் இருப்பவர்களின் முடிவுகள்தான் தற்போதைய நஷ்டத்துக்கும் கடனுக்கும் காரணம்.

தனியார் விமானங்களுக்கு நேரம், இடம் போன்றவற்றில் முன்னுரிமை தந்து, ஏர் இந்தியாவை இந்த மோசமான சூழலில் தள்ளிய மத்திய அரசு, தற்போதும் தனியாருக்கு ஆதரவான முடிவையே எடுத்திருக்கிறது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்” என்றார்.

பல எதிர்ப்புகளையும் மீறி ‘மகாராஜா’வைக் கைமாற்ற முடிவுசெய்துவிட்டது மத்திய அரசு. இனி ‘மகாராஜா’வை சொந்தமாக்கப் போகிறவர்கள் யார் என்பதை அறிய மார்ச் மாத இறுதிவரை நாம் காத்திருக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism