Published:Updated:

“கடனை உடனே திருப்பிச் செலுத்து!” - அலட்சியப்படுத்தப்படும் ஆர்.பி.ஐ சலுகை!

சுய உதவிக் குழு
பிரீமியம் ஸ்டோரி
News
சுய உதவிக் குழு

சுய உதவிக் குழுக்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். வேலையில்லாத இந்த நேரத்தில் அவர்களால் எப்படித் தவணையைத் திருப்பிச் செலுத்த இயலும்..?

கொரோனா ஊரடங்கால் மக்கள் கஷ்டப்படக் கூடாது’ என்ற நல்ல நோக்கத்தில்தான் `வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மாதத் தவணைகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு செலுத்தலாம்’ என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

இந்த உத்தரவைப் பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் முறையாக நடைமுறைப்படுத்திவரும் நிலையில் பல தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் காற்றில் பறக்கவிட்டிருப்பதாக நாடு முழுவதும், பல இடங்களிலிருந்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

“கடனை உடனே திருப்பிச் செலுத்து!” - அலட்சியப்படுத்தப்படும் ஆர்.பி.ஐ சலுகை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சலுகை அறிவிக்கப்பட்ட ஏப்ரல் மாதத்திலிருந்தே தவணைகளைச் செலுத்தச் சொல்லி செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும், வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைத் தகவல் தெரிவிக்காமல் எடுத்துவருவதும், தவணைகளைச் சரியான தேதியில் செலுத்தவில்லையென்றால் அபராதம் விதித்து வருவதுடன், கூடுதல் வட்டி சேர்த்து செலுத்த வேண்டும் என்று சொல்வதும் கடன்தாரர்களை கவலையடையச் செய்திருக்கின்றன.

இதில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுத்திருக்கும் சில தனியார் வங்கிகள், மிகவும் கஷ்டமான நிலையிலிருக்கும் கிராமப்புற சுய உதவிக்குழுக்களிடம் கடன் தவணையைச் செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியும், ரெகவரி ஆட்கள் மூலம் வீட்டுக்குச் சென்று அவமானப்படுத்தியும் வருவதாகப் புகார் வருகிறது.

மதுரை திருநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘‘இந்தப் பகுதியில இருக்கும் மக்கள் பலர் திருநகர் ஈக்விடாஸ் வங்கியில சுய உதவிக் குழு மூலமா கடன் வாங்கியிருக்கோம். கடனைச் சரியாகக் கட்டிவந்த நிலைமையில கொரோனா ஊரடங்கு வந்ததால எல்லாருக்கும் வருமானம் இல்லாமல் போச்சு. `கடன் தவணையை மூணு மாசம் கழிச்சுக் கட்டலாம்’னு அரசாங்கம் சொன்னதைக் கேள்விப்பட்டு, நாங்க கொஞ்சம் நிம்மதியா இருந்தோம். ஆனா, பேங்குக்காரங்க, ‘அதெல்லாம் தெரியாது, லோனைக் கட்டுங்க’னு அதட்டுறாங்க. குழுப் பெண்களைவெச்சு வருமானம் இல்லாத பெண்கள் வீட்டக்கு வந்து சண்டை போடவெக்கிறாங்க. ரொம்ப மரியாதைக் குறைவாப் பேசுறாங்க. இவங்க மேல அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர், மூளிப்பட்டி, வரலொட்டி, நக்கலாக்கோட்டை, வல்லிக்குளம், விருதுநகர் பகுதிகளைச் சேர்ந்த சுய உதவிக்குழுப் பெண்கள் திரண்டு வந்து, கடன் தவணையைச் செலுத்தச் சொல்லித் தங்களைத் துன்புறுத்துவதாக விருதுநகர் கலெக்டரிடம், ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மீது புகார் மனு அளித்தார்கள். ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இதுபோல் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

சுய உதவிக் குழு
சுய உதவிக் குழு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரத்திலுள்ள சுய உதவிக்குழுப் பெண்கள், கொரோனா காலத்தில் மைக்ரோ ஃபைனான்ஸ்களால் கடன் தவணை செலுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தப்படுகிறோம்’ என்று மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்திருக் கிறார்கள். இது போன்ற புகார்கள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கின்றன.

அரசுத் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் சமூக ஆர்வலர் காளமேகம் இப்படிச் சொன்னார்... ‘‘கொரோனா ஊரடங்கால் வியாபாரிகள் உட்பட நடுத்தர மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுவருகிறார்கள். இவர்களின் நிலை அறிந்துதான் ரிசர்வ் வங்கி, `கடன் தவணைகளை மூன்று மாதங்களுக்குச் செலுத்தத் தேவையில்லை’ என்று அறிவித்தது. இதைப் பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் சரியாகக் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், சில தனியார் நிதி நிறுவனங்களும், வங்கிகளும் கந்து வட்டிக்காரர்கள்போல கடன் தவணைகளைச் செலுத்தச் சொல்லி கட்டாயப் படுத்துகின்றன.

“கடனை உடனே திருப்பிச் செலுத்து!” - அலட்சியப்படுத்தப்படும் ஆர்.பி.ஐ சலுகை!

என் நண்பரிடம் தவணை செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்திய ஒரு நிறுவன மேலாளரிடம், ‘ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி இப்படி தவணை கட்டச் சொல்லி டார்ச்சர் செய்கிறீர்களே!’ என்று கேட்டதற்கு, ‘‘அவங்க உத்தரவு போடுவாங்க... அதையெல்லாம் நாங்க ஃபாலோ பண்ணணும்னு அவசியமில்லை’’ என்று அசால்ட்டாகச் சொல்லிவிட்டாராம். அந்த அளவுக்குச் சில தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் அட்டகாசம் அதிகரித்துவருகிறது. பொதுத் துறை வங்கிகளிடம் கடன் பெற்ற சுய உதவிக் குழுக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். அப்படி நிம்மதியாக இருந்த சுயஉதவிக் குழுக்கள் மத்தியில் தனியார் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் ஆசை வார்த்தை காட்டி கடன் பெறவைத்து, இப்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் தவணையைத் திருப்பிச் செலுத்தாதவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறார்கள். சுய உதவிக் குழுக்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். வேலையில்லாத இந்த நேரத்தில் அவர்களால் எப்படித் தவணையைத் திருப்பிச் செலுத்த இயலும்... ரிசர்வ் வங்கி உத்தரவை மீறிச் செயல்படும் இவர்கள்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘கடன் தவணைகளைச் செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்து கிறீர்களா?’ என்று மதுரை காமராஜர் சாலை கிளை ஈக்விடாஸ் வங்கிக் கடன் பிரிவு மேலாளர் செல்வராஜிடம் கேட்டோம். “நாங்கள் அப்படி எதையும் செய்யவில்லை. நாங்கள் ரிசர்வ் வங்கி அளித்த சலுகையை கடன் பெற்றவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். யாரையும் தவணை செலுத்தச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. லோன் ரெகவரி ஆட்கள் விடுப்பில்தான் இருக்கிறார்கள். அதே நேரம் தவணை செலுத்த வாய்ப்புள்ளவர்கள் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். மிரட்டுவதாக, மரியாதைக் குறைவாக நடத்துவதாகச் சொல்வதெல்லாம் உண்மை இல்லை. அதிலும் எங்கள் கிளையில் அப்படி ஏதும் நடக்கவில்லை’’ என்றார்.

“கடனை உடனே திருப்பிச் செலுத்து!” - அலட்சியப்படுத்தப்படும் ஆர்.பி.ஐ சலுகை!

``முதலில், `மூன்று மாதங்களுக்கு மட்டும் கடன் தவணையைச் செலுத்த வேண்டும்’ என்று சொன்னது ரிசர்வ் வங்கி. இப்போது, `ஆறு மாதங்களுக்குச் செலுத்தத் தேவையில்லை’ என்று சொல்லியிருக்கிறது. இந்த நிலையில், தனியார் வங்கிகளின் கெடுபிடி இன்னும் அதிகமாகத்தான் செய்யும்’’ என்கிறார்கள் கடன்தாரர்கள். இந்த விஷயத்தில் கடன்தாரர்களும், வங்கித் துறையினரும் இரு தரப்பினருக்கும் பாதகம் இல்லாத ஒரு முடிவை எடுக்க வேண்டியது அவசியம்!

எங்கே புகார் செய்ய வேண்டும்?

“கடனை உடனே திருப்பிச் செலுத்து!” - அலட்சியப்படுத்தப்படும் ஆர்.பி.ஐ சலுகை!

டனைத் திருப்பிச் செலுத்தக் கட்டாயப்படுத்தும் வங்கிகள்மீது எங்கே புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் சோமசுந்தரம் சொன்னார்... ‘‘வங்கிகளில் பெற்ற கடன் தொகையை அரசும், ரிசர்வ் வங்கியும் மூன்று மாதங்கள் தள்ளிச் செலுத்தலாம் என அறிவுறுத்தியும் பல வங்கிகள் கட்டாயப்படுத்துவது முறையற்ற செயல். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் குறைதீர்க்கும் அதிகாரிக்கு ஆன்லைனில் புகார் செய்தால், சில மணி நேரங்களில் குறையை நிவர்த்தி செய்வார்கள். அப்படி நடக்கவில்லையெனில், ரிசர்வ் வங்கியில் இயங்கும் பிளாக்கிங் ஆம்புட்ஸ்மேனிடம் ஆன்லைன் அல்லது தொலைபேசி அல்லது எழுத்துப்பூர்வமாக புகாரளிக்கலாம். இன்றைய சூழ்நிலையில் அனைத்து நுகர்வோரும் ஆன்லைன் கட்டணமில்லா தொலைபேசி மூலம் புகார் செய்யலாம். கட்டணமில்லா தொலைபேசி எண்கள் ரிசர்வ் வங்கியின் வெப்சைட்டில் உள்ளன.’’

-ஆகாஷ்

கடனைச் செலுத்துவதே நல்லது!

பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் முதலில் ஜூன் மாதம் வரை இ.எம்.ஐ தொகையைச் செலுத்தத் தேவையில்லை என்று சொன்ன ஆர்.பி.ஐ., தற்போது ஆகஸ்ட் வரை இந்தச் சலுகையை நீட்டித்திருக்கிறது. இந்தச் சலுகையை முடிந்த அளவு குறைவாகப் பயன்படுத்திக்கொள்வதே நல்லது என்கிறார்கள் நிதி நிபுணர்கள். காரணம், இப்போது மூன்றிலிருந்து ஆறு மாத காலம் வரை இ.எம்.ஐ பணத்தைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், கடன் தொகை செலுத்தி முடிக்கப்படும் காலத்தைத் தாண்டி பல மாதங்கள் கூடுதலாகச் செலுத்தினால்தான் கடன் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க முடியும். உதாரணமாக, ஒருவர் ரூ.50 லட்சத்தை வீட்டுக் கடனாக 8.5 சதவிகிதத்துக்கு வாங்கியிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஆர்.பி.ஐ தந்திருக்கும் சலுகையைப் பயன்படுத்தி இப்போது ஐந்து மாதங்களுக்கு இ.எம்.ஐ தொகையைச் செலுத்தாமலிருக்கிறார்; எனில், அவர் 22 மாதங்கள் அதிகமாக தவணையைச் செலுத்தித்தான் முழுக் கடனையும் அடைக்க முடியும். ``இ.எம்.ஐ தொகையைச் செலுத்தாமலிருப்பது இப்போது எளிதாக இருந்தாலும், கடன் முடியும் தறுவாயில் இது நிதிச் சுமையையே உருவாக்கும். எனவே, முடிந்தவரை இப்போதே இ.எம்.ஐ தொகையைச் செலுத்திவிடுவது நல்லது’’ என்கிறார்கள் நிபுணர்கள்.