Published:Updated:

அடங்க மறு! - 3 - குலை நடுங்கவைக்கும் சூனிய வேட்டை படுகொலைகள்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

அடங்க மறு! - 3 - குலை நடுங்கவைக்கும் சூனிய வேட்டை படுகொலைகள்!

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

Published:Updated:
அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
அடங்க மறு
கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி, ஓவியம்: ஜீவா

இரவு நேரம்... அந்த 65 வயது தாயும், அவருடைய 35 வயது மகளும் வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். திடீரென அவர்களுடைய வீட்டுக்கதவு படபடவென தட்டப்படுகிறது. அதிர்ச்சியுற்ற இருவரும் கதவைத் திறந்து பார்த்தால், வெளியே ஊரே திரண்டிருந்தது. ‘வெளியே வாங்கடி சூனியக் காரிகளா... நீங்க ரெண்டு பேரும் சூனியம் வைச்சதாலதான் நோய் வந்து ஊர்ல பல பேர் செத்துட்டாங்க. உங்களைக் கொல்லாம விட மாட்டோம்’ என்கிற கிராமத்தினரின் கூச்சலையும் மிரட்டலையும் கேட்ட தாயும் மகளும் அச்சத்தில் நடுங்கி விட்டார்கள்.

‘`நாங்க எந்தக் குத்தமும் செய்யலைன்னு பலமுறை எடுத்துச் சொல்லியும், எங்க கிராமத் தினர் அதை ஏத்துக்கவே இல்ல. எங்களை இடுகாட்டுக்கு இழுத்துட்டுப் போனாங்க. கீழே தள்ளி எங்க வாயில சிறுநீர் கழிச்சாங்க. நாங்க அதைத் துப்பினோம். அடிச்சுக் குடிக்க வெச்சாங்க. சிலர் மலங்கழிச்சு எங்களை விழுங்கச் சொன்னாங்க. எங்க ரெண்டு பேரோட தலையையும் மொட்டையடிச்சு, நிர்வாணமாக்கி, அத்தனை பேரும் எங்க மேல காறித்துப்பி, கிராமத்தைச் சுத்தி வரச் சொன்னாங்க. அவமானத்துல கூனிக்குறுகின எங்களை சூனியக் காரிங்கன்னு முத்திரை குத்தி ஊரை விட்டே விரட்டிட்டாங்க’’ - கல்லும் கரைய அழுகிறார்கள் அந்தப் பெண்கள்.

இந்தக் கொடுமை நடந்தது நம் முடைய இந்தியத் திருநாட்டில் தான். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன போதிலும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடுமைகள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அடித்தே கொல்லப்படுவதும், உயிரோடு எரிக்கப் படுவதும், சாட்டையால் விளாசப்படுவதும் ‘சூனிய வேட்டை’ எனும் மனித உரிமை மீறலின் கொடுமையான பக்கங்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைதான். பிரிட்டி ஷாருக்கு எதிரான போரில் பிரான்சின் வெற்றிக்குக் காரணமான `ஜோன் ஆஃப் ஆர்க்'கை (Joan of Arc) சூனியக்காரி என்று குற்றம்சாட்டி எரித்துக் கொன்றனர் பிரான்ஸ் மக்கள். இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத், சூனியக்காரிகளை ஒழிக்க மூன்று சட்டங்களைக் கொண்டு வந்ததாகவும், மிகப் பிரபலமான ‘செம்ஸ் ஃபோர்ட் சூனியக்காரிகள் வழக்கு’ விசாரணையையடுத்து ‘ஆக்னஸ் வாட்டர் ஹவுஸ்’ (Agnes Waterhouse) எனும் பெண்ணுக்கு முதன்முதலாக மரண தண்டனை வழங்கியதாகவும் அறிகிறோம். ஐரோப்பாவில் 1581 - 1593 வரையிலான காலகட்டத்தில், 368 பேரை சூனியக்காரர்கள் - சூனியக்காரிகள் என்று கொன்றழித்த சம்ப வமே, சூனியக்கார வேட்டையில் இதுவரை உலகில் நடந்த அதிகபட்ச உயிரிழப்பாகக் கருதப்படுகிறது.

இந்தியாவில் சூனியக்காரிகள் வேட்டை எப்போது தொடங்கியது என்பது குறித்த விவரங்களில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அஸ்ஸாம் மாநிலத்தின் மோரிகாவன் (Morigaon) மாவட்டம், சூனியக் காரிகள் வேட்டையில் இந்தியாவின் தலைநகராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஹரியானா, குஜராத் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ‘சூனிய வேட்டை’ என்ற பெயரில் பலியாகும் நபர்களில் 80% பெண்களே.

சூனிய வேட்டைக்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, சூனியக்காரிகள் மந்திர சக்தி படைத்தவர்கள். அதைப் பயன்படுத்தி ஊரில் கொள்ளை நோயை ஏற்படுத்திவிடுவார்கள்; பயிர்களை அழித்துவிடுவார்கள்; மனிதர்கள் மீது சூனியத்தை ஏவி அவர்களை முடமாக்கி விடுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள் என்கிற மூடநம்பிக்கை. இரண்டாவது காரணம், சம்பந்தப்பட்ட பெண்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பறிப்பதற்காக.

அடங்க மறு! - 3 - குலை நடுங்கவைக்கும் சூனிய வேட்டை படுகொலைகள்!

குஜராத்தைச் சேர்ந்த சுசீலாபென், மது பென் ஆகிய இருவரும் தங்களது நிலத்தில் காய்கறிகளைப் பயிரிட்டு வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். நல்ல விளைச்சல் தருகிற அந்த நிலம் நான்கு பாதைகள் சந்திக்கிற முக்கியமான இடத்திலிருந்தது. அந்த நிலத்தின் மீது கண்வைத்த சில ஆண்கள், வேண்டுமென்றே அந்த நிலத்தில் மலம் கழித்திருக்கின்றனர். ‘காய்கறி பாத்தியில் வந்து மலம் கழிக்கிறீர்களே; நாங்கள் எப்படி இந்தக் காய்கறிகளைச் சாப்பிடு வது... இங்கு வராதீர்கள்’ என்று அவர்களை விரட்டி விட்டார்கள் சுசீலாவும் மதுவும். அவ்வளவு தான், அந்த ஊரில் நோய்வாய்ப் பட்டு இறந்துபோன இரண்டு இளைஞர்களின் மரணத்துக்கு காரணம் இந்தச் சகோதரிகள் சூனியம் வைத்ததுதான். இறந்து போன இளைஞர்களின் ஆவி களை உண்டுவாழும் இந்த சூனியக்காரிகளை ஊருக்குள் விட்டு வைத்தால், நம்மூரிலிருக்கிற ஆண்களைக் கொன்றுவிடு வார்கள் என்று பொய்ப் பிரசாரம் செய்தார்கள். ஊரும் அதை நம்பியது. விளைவு, அந்தப் பெண்கள் அவமானப்படுத்தப் பட்டு ஊரை விட்டே விரட்டி யடிக்கப்பட்டார்கள். அதன் பிறகு, அந்தப் பெண்களுடைய நிலத்தை அபகரித்துக் கொண்டார்கள், திட்டமிட்டு பொய்ப்பிரசாரம் செய்த அந்த ஆண்கள்.

இந்தச் சகோதரிகளைப் போல பாதிக்கப் பட்டு வீடிழந்து, பொருளிழந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கிற பெண்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டி வருகிறது ‘ஆனந்தி’ என்கிற அமைப்பு. சூனிய வேட்டையால் உயிரிழந்த பெண்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கி, இக்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு. இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட தாய்க்கும் மகளுக்கும் பாதுகாப்பு வேண்டியும் அவர்கள் மீது மனித உரிமை மீறல் புரிந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ‘பெண்களின் உலகப் பேரணி’ எனும் இயக்கத்தைச் சேர்ந்த சஷிசெயில் (Shashi Sail) என்னும் செயற் பாட்டாளர் தொடர்ச்சியான போராட்டங் களை நடத்தி வருகிறார். இவரைப் போன்ற இன்னும் சில செயற்பாட்டாளர்கள் சூனிய வேட்டையால் பாதிக்கப்பட்ட பெண் களுடைய புகார்களைப் பதிவு செய்யக் காவல் நிலையத்தின் முன்பு போராடுவது, நீதி மன்றத்தில் வழக்கு நடத்துவது என்று ஓயாது பணிபுரிந்து வருகின்றனர். தவிர, `ஆக்‌ஷன் எய்டு' (ActionAid), சமூக நீதிக்கான மையம் போன்ற பல அமைப்புகள் பாதிக்கப்படும் பெண்களுக்கான போராட்டங் களை முன்னெடுத்துச் செல் கின்றன.

மூடநம்பிக்கைகளாலும், மதச் சடங்குகளைச் செய்யும் நபர் களின் பொய்யான அவதூறு களாலும், நில அபகரிப்பாளர் களாலும் சூனிய வேட்டைகள் நடப்பது இந்தியாவின் சில மாநிலங்களில் அன்றாட நிகழ் வாகிவிட்டது. அடித்து, வெட்டி, எரித்துக் கொல்வது; மனிதக் கழிவுகளை உண்ணச் செய்வது; நிர்வாணப்படுத்தி ஊரின் நடு வில் உள்ள மரத்தில் கட்டி வைத்துத் துன்புறுத்திக் கொல்வது போன்றவை அதிகமாக நடக் கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலம் இந்த வகை கொலைகளில் நாட்டி லேயே முதல் இடம் பிடித்திருக் கிறது. 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 220 சூனிய வேட்டைக் கொலைகள் இம் மாநிலத்தில் நடந்திருக்கின்றன. 2014 முதல் 2016 வரை 98 கொலைகளும் 1,857 குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன. இந்த மாநிலத்தைச் சேர்ந்த ‘மங்கிரி முண்டா’ என்ற பழங்குடியினப் பெண்ணும் அவனின் நான்கு குழந்தைகளும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர். அவர்களுடைய உடல்கள் அவர்கள் வீட்டருகே இருந்த கிணற்றில் தூக்கிப் போடப்பட்டன. 2019-ம் ஆண்டு ஜனவரி யில் நடைபெற்ற இந்தப் படுகொலைக்குச் சொல்லப்பட்ட காரணம், அதே ஊரைச் சேர்ந்த இன்னொரு நபரின் மீது சூனியத்தை ஏவிவிட்டு அவரை தீராத நோயாளியாக்கி விட்டார் என்பதே.

பீகாரில், 2015 முதல் 2017 வரை 150 பெண்கள் சூனிய வேட்டைக்கு பலியாகியிருக்கிறார்கள். ராஞ்சியில் ரமாதேவி என்ற பெண் சூனியக்காரி என்று குற்றம்சாட்டப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டாள். இக்கொடுமை நிகழ்ந்தது 2017-ல். அதே குற்றச்சாட்டுக்கு ஆளான பூல்குமாரி தேவி என்னும் பெண்ணின் கூறுபோடப்பட்ட உடல், ரயில் தண்டவாளத்தில் கிடந்தது. இதுபோன்ற மூடநம்பிக்கைகள் அடிப்படையிலான கொலைகளைத் தடுத்து நிறுத்த, இடையறாது போராடிய மகாராஷ்டிராவின் சமூகச் செயற் பாட்டாளரான நரேந்திர தபோல்கர் (Narendra Dabholkar) 2013-ல் சுட்டுக்கொல்லப்பட்டார். தேசிய குற்ற ஆவணப் பதிவகம் 2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை சூனிய வேட்டை காரணமாக 2,500 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறது. மூடநம்பிக்கையால் ஆரம்பிக்கப்பட்ட சூனிய வேட்டை கொலைகள்... தற்போது கணவரை இழந்தவர்கள், ஆண் துணையின்றி வாழும் பெண்கள் ஆகியோருடைய பயிரிடும் நிலம் அல்லது வாழும் வீடு ஆகியவற்றைக் குறி வைத்து நடத்தப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 12 மாநிலங்களில் தொடரும் இக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட பெரும் போராட்டங்கள் நடந்தன. அதன் பின்னரே சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், சூனிய வேட்டைக்கு எதிராக மத்திய அரசு சட்டம் கொண்டு வராதது பெரும் குறையே.

தமிழ்நாட்டில் ‘சூனிய வேட்டை’ கொலைகள் நடைபெற வில்லை என்றாலும், மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்களை ‘பேய் பிடித்திருக்கிறது’ என்று சொல்லி சாட்டையால் அடிக்கிற பூசாரிகள் இன்றைக்கும் நம் கிராமங்களில் இருக்கிறார்கள். அலகு குத்துதல், மண்சோறு சாப்பிடுதல், தலையில் தேங்காய் உடைத்தல் போன்றவை குறித்த விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்தாலும் அவை அனைத்தும் தனிநபரின் மத நம்பிக்கை அடிப்படையி லானவை என்றே பார்க்கப்படுகின்றன. மூடநம்பிக்கைகளை விதைத்து அவற்றில் அறுவடை செய்ய நினைக்கும் எத்தர்களிடமிருந்து அப்பாவிப் பெண்களைக் காப்பாற்ற இன்னும் எத்தனை பெரியார்கள் வர வேண்டுமோ?

- போர் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism