ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

சொர்க்கமே என்றாலும்... எங்க ஊரு சாத்திரம்பாக்கம்!

கற்திட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
கற்திட்டை

பெருங்கற்காலங்களில் இறந்தவர்களுக்காக வைக்கப்படும் நினைவுச் சின்னங்களில் ஒருவகை, கற்திட்டையாகும்

ஊர்ப்பெருமை பேசுவதில் நமக்கு ஒரு தனி சுகம் உண்டு. உங்கள் ஊரைப் பற்றிய ‘அட’ போட வைக்கும் சிறப்பு விஷயங்களை சுவாரஸ்யமாக போட்டோ மற்றும் வீடியோக்களுடன் தொகுத்து எழுதி அனுப்பலாம். உங்கள் ஊர்ப்பெருமை தேர்வு பெற்றால் ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான ஊர்ப்பெருமைக்கு தவா பரிசு என்று அறிவித்திருந்தோம். அவற்றில் சிறப்புப் பரிசு தவா பெறும் ஊர்ப்பெருமை இதோ...

செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றங்கரை யில் அமைந்துள்ள வில்லியம்பாக்கம் எங்கள் சொந்த ஊர். எங்கள் ஊரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டரில் அமைந்துள்ள ஊர்தான் சாத்திரம்பாக்கம். இந்தக் கிராமத்தில் அமைந் துள்ள சிறு மலையிலும் அதன் அடிவாரத்திலும் பரவலாக பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பரவி காணப்படுகின்றன. அது மட்டுமல்லாது... இந்தப் பகுதிகளில் வெவ்வேறு வகையான கற்கருவிகளும் மேற்பரப்பிலேயே கிடைக்கின்றன.

சமீபத்தில் எங்கள் அமைப்பின் சார்பில் கள ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தபோது மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட கிழிக்கும் கருவி மற்றும் இரண்டு வகையான கைக் கோடரிகளைக் கண்டெடுத்தோம். மேலும் பல வகையான கற்கருவிகள் முழுமை பெறாத நிலையிலும், உடைந்த கருவிகளும் இந்தப் பகுதியில் பரவலாகக் காணப்படுகின்றன. இங்கு கற்கருவிகளை உருவாக்கும் தொழிற் சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளது. கற் கருவிகள் செய்யும்போது உடையும் கற்சில்லு களும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

சொர்க்கமே என்றாலும்... எங்க ஊரு சாத்திரம்பாக்கம்!

பெருங்கற்காலங்களில் இறந்தவர்களுக்காக வைக்கப்படும் நினைவுச் சின்னங்களில் ஒருவகை, கற்திட்டையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத் தான கற்களையும், அவற்றைக் கிடைநிலையில் தாங்க பெரிய தட்டையான கற்பலகையும் கொண்டிருக்கும். பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புகள் மட்டும் இருக்க, அடைப்புகள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. இதுபோன்ற கற் திட்டைகள் இந்த மலையில் உள்ளன.

அத்துடன் ஈமச் சின்னங்களும் நிறைய காணப்படுகின்றன. இறந்தோர் நம்மை காப்பார்கள் என்ற நம்பிக்கை அந்தக் காலத்தில் இருந்தது. அதனால்தான் இறந்த உடலை மிகவும் பாதுகாப்பாக அடக்கம் செய்துள்ளனர். அதே போன்று, இறந்தோரை முதுமக்கள் தாழி எனும் பெரிய மண்பாண்டத்தில் வைத்துப் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

சொர்க்கமே என்றாலும்... எங்க ஊரு சாத்திரம்பாக்கம்!

இந்தச் சாத்திரம்பாக்கம், பாலாற்றாங்கரை நாகரிகத்தைக் கொண்டது. பாலாற்றிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில்தான் இந்தச் சாத்திரம்பாக்கம் மலை அமைந்துள்ளது. சென்னைக்கு மிக அருகிலேயே செங்கல்பட்டு உள்ளதால் தற்போது குடியிருப்புகளும் பெருகிவருகின்றன. இருப்பினும், இந்த மலையில் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுத் தடங்கள் இன்னும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் இன்னும் பல விஷயங்கள் கிடைக்கும்.

இந்த வரலாற்று பொக்கிஷத்தை, விடுமுறை தினங்களில் என் பிள்ளைகளை அழைத்துச் சென்று, ‘நம் மூதாதையர்கள் இந்த இடத்தில் இப்படித்தான் வாழ்ந்தார்கள். இந்த விதமான கருவிகளைத்தான் பயன்படுத்தினார்கள்’ என்று காட்டி விளக்குவேன்.

உறவினர்கள், நண்பர்கள் என என் வீட்டுக்கு யார் வந்தாலும் இந்த வரலாற்று பொக்கிஷங்களைப் பார்க்க அழைத்துச் செல்வேன். இந்த சிறுமலையில் வரலாற்றுத் தடங்களோடு காட்டுச் செடிகளும், முள்செடிகளும் அதிக மாக இருக்கின்றன. ஆனால், இந்த இடம் வரலாற்றைப் பேசிக்கொண்டிருக்கிறது.

- வெற்றித்தமிழன்,
வில்லியம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம்.

வாசகர்களே.... நீங்களும் எழுதி அனுப்பலாம்...
அனுப்ப வேண்டிய முகவரி:

சொர்க்கமே என்றாலும்...
அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com