Published:Updated:

பொள்ளாட்சி பயங்கரம் முதல் சுபஶ்ரீ மரணம் வரை... 2019-ம் ஆண்டின் மறக்க முடியாத துயரங்கள்!

Water Scarcity
Water Scarcity ( Pandi / Vikatan )

இந்த ஆண்டு நமக்கு பல நல்ல அனுபவங்களைத் தந்திருந்தாலும், சில துன்பியல் நிகழ்வுகளையும் ரணங்களையும் உண்டாக்கிச் சென்றிருக்கிறது. அவற்றில் சில...

புத்தாண்டில் அடியெடுத்து வைக்க இன்னும் சில நாள்களே இருக்கின்றன. இந்த ஆண்டு நமக்கு பல நல்ல அனுபவங்களைத் தந்திருந்தாலும் சிறுவன் சுஜீத் மரணம், பொள்ளாட்சி பாலியல் பயங்கரம், பேனர் விழுந்து சுபஶ்ரீ மரணம்... என சில துன்பியல் நிகழ்வுகளையும் ரணங்களையும் உண்டாக்கிச் சென்றிருக்கிறது. அப்படிப்பட்ட மறக்க முடியாத, எப்போது நினைத்தாலும் உள்ளக் கீறலை உண்டாக்கக்கூடிய நிகழ்வுகளைத்தான் நாம் இந்தக் கட்டுரையில் காணப்போகிறோம்.

பொள்ளாச்சி பயங்கரம்

பொள்ளாச்சி சம்பவம்...
பொள்ளாச்சி சம்பவம்...

இந்த வருடத்தில் தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சம்பவம் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்தேறியது. காதலின் பெயரிலும் நட்பின் பெயரிலும் பல பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு அடித்துப் பணம் பறிக்கப்பட்டு எனப் பலவித துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் கதறல் சத்தத்துடன் வெளியான ஆடியோ ஒட்டு மொத்த சமூகத்தையும் ஒரு கணம் அதிர வைத்தது. பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாருக்குப் பிறகுதான் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

முதலில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரையும் கைதுசெய்தது காவல்துறை. முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட திருநாவுக்கரசு தலைமறைவானார். பின்னர் அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நான்கு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில், `தங்கள் பிள்ளைகள் மீது போடப்பட்ட குண்டாஸை ரத்து செய்யக் கோரி' திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும் ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு தமிழக மக்களுக்கு மேலும் ஏமாற்றத்தைத் தந்தது.

சுஜித் மரணம்

சுஜித்
சுஜித்

தமிழக மக்களுக்கு, ஒரு கறுப்பு விடியலாகவே இந்த வருட தீபாவளி அமைந்துபோனது. ஒட்டு மொத்த நாடும் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குத் தயாராகிக்கொண்டிருந்த நேரம் அது. அக்டோபர் 27 தீபாவளி. 25-ம் தேதி மாலை 5.30 மணியளவில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டின் அருகில் இருந்த ஆள்துளை கிணற்றில் விழுந்தான் 2 வயதுச் சிறுவன் சுஜித். சிறுவனை மீட்பதற்காக அரசின் சார்பில் இடைவிடாது மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சுஜித்தைக் காப்பாற்றப்பட வேண்டிய முயற்சிகளை களத்தில் நின்று முன்னெடுத்தனர். பல வீடுகளில், சுஜித் மேலே வந்தால்தான் தீபாவளி கொண்டாடுவோம் என சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடிய விடிய சுஜித்துக்காகக் காத்திருந்த தருணம் மிகத் தவிப்பானது. தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைக்குழு, ஓ.என்.ஜி.சி முதலான பல்வேறு குழுவினரின் 80 மணி நேர முயற்சிக்குப் பிறகு, சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். இந்த வருடத்தின் மிகத் துயரமான ஓர் இழப்பாக அது அமைந்துபோனது.

மதிக்கப்படாத சட்டங்கள்... தோல்வியில் முடிந்த முயற்சிகள்... சுஜித் கற்றுத் தந்த பாடம் என்ன?

பாத்திமா மரணம்

பாத்திமா
பாத்திமா

சென்னை ஐ.ஐ.டி-யில் எம்.ஏ படித்து வந்தவர் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாத்திமா. இவர் கடந்த நவம்பர் 9-ம் தேதி விடுதியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தன் தற்கொலைக்குக் காரணம் மூன்று பேராசிரியர்களின் அச்சுறுத்தலே என்கிற அவருடைய தற்கொலை தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Instutional murders குறித்து மிகப் பெரிய விவாதம் உருவானது. காரணம், இந்த ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனவர்களில் பாத்திமா மூன்றாவது நபர். 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 9 மாணவ - மாணவிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கிறார்கள். தற்கொலைக்குத் தூண்டியவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன் என்று பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் நீதிமன்றம் வரை சென்றார். இந்த வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகிறார்கள். ``தமிழ்நாடு பாதுகாப்பானது என்று நம்பிதானே என் மகளை அனுப்பினேன்'' எனப் பாத்திமாவின் தாயார் கதறியது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைகுனிவாக அமைந்தது.

நீட் தேர்வால் நிகழ்ந்த மரணங்கள்

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் வேண்டாம் என ஆரம்பம் முதலே பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது அனிதாவின் மரணத்துகுப் பிறகு உச்சத்தை எட்டியது. அதுவே கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைச் சிதைக்கும் வகையில் கடந்த ஆண்டும் நீட் தேர்வால் மாணவிகளின் தற்கொலைகள் தொடர்ந்தன. பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைசியா, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நிதுஸ்ரீ, பெரம்பலூரைச் சேர்ந்த கீர்த்தனா, நெல்லையைச் சேர்ந்த தனலட்சுமி என மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது ஆறாத ரணத்தை உண்டாக்கிச் சென்றது

பேனர் விபத்து

சுபஶ்ரீ
சுபஶ்ரீ

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் பேனர் கலாசாரம் வேரூன்றி வருகிறது. அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததால் சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் பெண் இன்ஜினீயர் சுபஶ்ரீ பலியானார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சில கட்டுப்பாடுகளை விதித்தது. சென்னையில் மட்டும் 3,964 பேனர்கள் அகற்றப்பட்டன. சுபஶ்ரீ மரணத்துக்குக் காரணமான அனுமதியின்றி பேனர் வைத்த அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டார். இதன் பிறகும் சில சம்பவங்கள் நிகழ்ந்தன. சாலையில் மற்றுமொரு அ.தி.மு.க பிரமுகர் வைத்திருந்த பேனரின் கம்பம் சரிந்து விழுந்ததில் கோவை பெண் அனுராதா தன் இரண்டு கால்களையும் இழந்தார். கோவை ரகு, ஊட்டி பாபு, சென்னை சுபஸ்ரீ மற்றும் கோவை அனுராதா என பேனர் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேபோகிறது.

"நீதிமன்றத்தின் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது!" - பேனர் விவகாரம் குறித்து சுபஸ்ரீ பெற்றோர் குமுறல்

மலக்குழி மரணங்கள்

மலக்குழி மரணங்கள்
மலக்குழி மரணங்கள்

கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தமிழ்நாடு இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினாலும் மலக்குழி மரணங்களிலும் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான செய்தி. தமிழ்நாடுதான் சரியான புள்ளிவிபரங்களை வைத்திருக்கிறது மற்ற மாநிலங்களில் இறப்பவர்களை சரியாகக் கணக்கிடப்படுவதில்லை, என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டாலும், இறப்புகளைத் தடுக்க இங்கே எந்த முயற்சியும் எடுப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் 26 பேர் மலக்குழி சுத்தம் செய்கையில் மரணித்துள்ளனர். இறப்பவர்கள் பலரும் 35 வயதுக்குட்பட்டவர்கள.

பல தேவைகளுக்கு இயந்திரங்கள் கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது போன்ற வேலைகளில் சக மனிதர்களை ஈடுபடுத்துவது பெரும் சோகம்தான். வருடம்தோறும் நடக்கும் இதுபோன்ற மரணங்களை வெறும் செய்தியாக மட்டுமே கடந்து செல்கின்றோம். இந்த மரணங்கள் குறித்து நாம் உரையாட வேண்டியதும் மிக அவசியம். மனிதக் கழிவுகளை மனிதனே சுத்தம் செய்வது மிகவும் தவறான ஒரு செயல் என்பதை உணர்ந்து, அரசு சார்பில் மாற்று ஏற்பாடுகளோ, பயனுள்ள நடவடிக்கைகளோ எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் மலக்குழி மரணங்களால் தங்கள் சொந்தங்களை இழந்த குடும்பத்தினரின் கோரிக்கை. அடுத்த ஆண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பது அரசின் நடவடிக்கைகள் பொறுத்தே இருக்கும்.

டெங்குவால் நிகழ்ந்த மரணங்கள்

கொசு
கொசு
Pixabay

கடந்த ஆண்டு தமிழக மக்களை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியது டெங்கு காய்ச்சல். ஒவ்வோர் ஆண்டும் டெங்குவால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஆண்டு மட்டும் 2,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே எதிர்க்கட்சி மற்றும் பொது மக்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைத்துச் சொல்லப்பட்டதாகவும் அரசின் மீது புகார்கள் வந்தன. மருத்துவ ஆய்வகங்களிலும் டெங்கு பாசிட்டிவ் என வந்தாலும் அதை நோயாளிகளிடம் கூற வேண்டாம் என அரசு நிர்பந்திப்பதாகத் தனியார் ஆய்வக உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர். டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலைக் குறைக்க முயற்சிகள் மேற்கொண்டதற்குப் பதிலாக, அதைத் தடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தால் ஆளும் அரசை மக்கள் மெச்சியிருப்பார்கள். ஆனால், அப்படி இல்லாமல் போனதுதான் இத்துணை பாதிப்புகளுக்கும் முக்கியக் காரணம்.

மருத்துவமனையின் அலட்சியம்

ரத்தம்
ரத்தம்

அலட்சியம் என்கிற வார்த்தைக்கு ஒவ்வோர் ஆண்டும் வலு சேர்க்கின்றன அரசு மருத்துவமனைகளில் நிகழும் சம்பவங்கள். சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிறகு, விஸ்வரூபம் எடுத்த இந்தப் பிரச்னை இழப்பீடு, வீடு என முடிவுக்கு வந்தது. குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் சரி செய்தது சற்று ஆறுதலைத் தந்தது.

மின்தடை காரணமாக வெண்டிலேட்டர் செயல்படாமல் போனதால் ஆக்சிஜன் கிடைக்காமல் மதுரை அரசு மருத்துவமனையில் 5 பேர் பலியான பரிதாபம் அரங்கேறியது.

கோவையில் பிறந்த குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசி உடைந்து காலில் மாட்டிக்கொண்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. குழந்தையின் அழுகைக்குக் காரணம் தெரியாமல் இருந்த குடும்பத்தினருக்கு குளிப்பாட்டும்போது காலில் இருந்த ஊசியைக் கண்டுபிடித்தனர். அலட்சியமாக நடந்துகொள்ளும் நபர்கள் மீது அரசு நடவடிக்கைககளை மேற்கொள்கிறது. மீண்டும் தவறுகள் ஏற்படாமல் இருப்பதற்காகத்னே நடவடிக்கைகள். ஆனால், மீண்டும் அதே தவறு நிகழுமென்றால் அந்த நடவடிக்கையான அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இனி வரும் ஆண்டிலாவது இது போன்ற அலட்சிய நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க வேண்டும்.

தண்ணீர் பஞ்சம் தந்த வலிகள்

தமிழக மாவட்டங்களில் தொடங்கும் குடிநீர் பஞ்சம்
தமிழக மாவட்டங்களில் தொடங்கும் குடிநீர் பஞ்சம்

கடந்த ஆண்டு அனைத்து நாடுகளையும் தமிழகத்தை உற்று நோக்க வைத்தது, சென்னையில் ஏற்பட்ட தண்ணீர்ப் பற்றாக்குறை எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், நீர்த் தேக்கங்களில் தண்ணீர் குறைந்து ஏப்ரல், மே மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தது. சென்னை மக்களின் ஒரு நாள் தண்ணீர் தேவை சுமார் 90 கோடி லிட்டர். ஆனால், சென்னை மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் மெட்ரோ நிறுவனத்தால் 50 கோடி லிட்டர் மட்டுமே விநியோகிக்க முடிந்தது. இதனால் இரண்டு நாள்களுக்கு நான்கு குடம் தண்ணீரை மட்டுமே அவர்களால் விநியோகிக்க முடிந்தது. வெறும் நான்கு குடம் தண்ணீரை வைத்து எங்களால் என்ன செய்ய முடியும் என மக்கள் கண்ணீர் வடித்தனர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நாம் நீரை சரியாக சேமிக்காமல் போனதுதான் இந்தத் தட்டுப்பாடுகளுக்குக் காரணம். மழையின் அளவு குறைவது இயற்கையானது. ஆனால், பெய்த கொஞ்சம் மழையையும் நம்மால் சேமிக்க முடியாமல் போனதற்கு யார் காரணம்? அரசாங்கம் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களைக் கைவிட்டுவிட்டு பெய்யும் மழையை சேமிப்பதற்கு சரியான நடவடிக்கைககளைக் கொண்டு வர வேண்டும். அடுத்த வருஷமாவது மக்கள் ஒரு குடம் நீருக்காகத் தெருவில் அலைவது மாற வேண்டும்.

- தனிமொழி

அடுத்த கட்டுரைக்கு