Published:Updated:

உயிரா... மானமா? - காவு கேட்கும் கந்துவட்டி

உயிரா... மானமா?
பிரீமியம் ஸ்டோரி
உயிரா... மானமா?

`அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்குபெற்றவர்’ என்று கூறப்படும் நாசர், வட்டி வசூல் செய்வதற்கே போலீஸ் வாகனத்தில் வருவாராம்.

உயிரா... மானமா? - காவு கேட்கும் கந்துவட்டி

`அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்குபெற்றவர்’ என்று கூறப்படும் நாசர், வட்டி வசூல் செய்வதற்கே போலீஸ் வாகனத்தில் வருவாராம்.

Published:Updated:
உயிரா... மானமா?
பிரீமியம் ஸ்டோரி
உயிரா... மானமா?

“சத்தம் போடாம அமைதியா படுத்திருங்க... கொஞ்ச நேரத்துல உசுரு போயிடும்!” - ஆகஸ்ட் 30-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், கந்துவட்டி கொடூரத்தால் தற்கொலை செய்துகொண்ட தம்பதியர் குறித்த கட்டுரையின் தலைப்பு இது. கட்டுரை வெளியானதும், ஏராளமான வாசகர்கள் நமது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு கண்ணீர்விட்டு அழுதார்கள். தாங்கள் அனுபவித்த, அக்கம்பக்கத்தில் பார்த்த கந்துவட்டிக் கொடுமைகளைச் சொல்லிப் புலம்பினார்கள். மனதை கனக்கச் செய்யும் கண்ணீர்க் கதைகள் அவை. உயிருக்கும் மானத்துக்குமான ஊசலாட்டத்தில் சிலர் உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் சொத்துகளை இழந்து, தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார்கள். இன்னும் சிலரோ வாங்கிய கடனுக்காகக் குடும்பப் பெண்களையே கந்துவட்டிக் கும்பலிடம் ‘இழந்து’ தவிக்கிறார்கள். சிலரோ கந்துவட்டிக் கும்பலின் சித்ரவதைகளுக்கு நடுவே அன்றாடம் நரகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

எந்தெந்த மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமை தாண்டவமாடுகிறது, எப்படியெல்லாம் கடனை வசூலிக்கிறார்கள், என்னென்ன வன்முறைகள், வக்கிரங்கள் அங்கே அரங்கேறுகின்றன... விவரம் அறிய களமிறங்கியது ஜூ.வி படை. கிடைத்த தகவல்களெல்லாம் குலைநடுங்கச் செய்யும் `பகீர்’ கதைகள்!

நாசம் செய்யும் நாசர்!

தருமபுரி ஜெட்டி அள்ளிப் பகுதியைச் சேர்ந்த யூனுஸின் மகன் நாசர். இவருக்கு வயது சுமார் 50 இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் சாலையில் ஸ்டார் ஃபைனான்ஸ் நிறுவனத்தை நடத்திவருகிறார். `அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினரிடம் செல்வாக்குபெற்றவர்’ என்று கூறப்படும் நாசர், வட்டி வசூல் செய்வதற்கே போலீஸ் வாகனத்தில் வருவாராம். நாசரிடம் கந்துவட்டிக்குக் கடன் வாங்கிச் சிக்கிக்கொண்டவர்களின் கதைகளைக் கேட்டால் அடிவயிறு பற்றி எரிகிறது.

உயிரா... மானமா? - காவு கேட்கும் கந்துவட்டி

தினமும் பணக்கணக்கு... தவறினால் புதுக்கணக்கு!

நாசரிடம் கந்துவட்டி வாங்கியவர்களில் ஒருவர் திருவேங்கடமூர்த்தி. “நான் தருமபுரி, ஓசூர், பெங்களூர், பாண்டிச்சேரி உட்பட 11 இடங்களில் பியூட்டி பார்லர்கள் வைத்திருந்தேன். தொழிலை விரிவுபடுத்த 2018, மார்ச் மாதம் நாசரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். 100 நாள்களுக்கு தினமும் 15,000 வீதம் 15 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். ஒரு நாள் கட்டத் தவறினால்கூட மீண்டும் புதுக்கணக்குத் தொடங்க வேண்டும். 81-வது நாளன்று என்னால் பணம் கட்ட முடியவில்லை. `ஒரு மணி நேரம் அவகாசம் கொடுங்கள்’ என்று நான் காலில் விழுந்து கதறியும் மனமிரங்கவில்லை நாசர்.

அன்றே கணக்கை குளோஸ் செய்துவிட்டு, புதுக்கணக்கு தொடங்கினார் நாசர். அதில் 30 லட்சம் ரூபாய் கொடுப்பதாக எழுதிக்கொண்டு பழைய நிலுவை, புதிய பிடி பணம் எல்லாம் கழிந்ததுபோக 22.80 லட்சம் ரூபாய் கொடுத்தார். அதற்கு 100 நாள்களுக்கு தினமும் 30,000 வீதம் 30 லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இப்படி 25 முறை புதுக்கணக்குகள் தொடங்கி, ஒரு நாளைக்கு 75 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவரிடம் மொத்தம் 38.50 லட்சம் ரூபாய் வாங்கியதற்கு 3.96 கோடி ரூபாய் வட்டி மட்டுமே கட்டியிருக்கிறேன்.

வட்டி கட்ட முடியாதபோது, உடல் உறுப்புகளை விற்றாவது பணம் கட்டச் சொல்லி மிரட்டினார். ஒருமுறை குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றோம். ஒரு நண்பரின் முயற்சியால் உயிர்பிழைத்தோம். டி.ஜி.பி வரை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றோம், காப்பாற்றிவிட்டார்கள். நாசருக்கு காவல்துறையில் செல்வாக்கு இருப்பதால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை’’ என்றார் கண்கலங்கியபடி.

தன்மானம் காக்க தலைமறைவு வாழ்க்கை!

நாசரிடம் கந்துவட்டி வாங்கிவிட்டு, தலைமறைவாக வசிக்கிறார்கள் பன்னீர்செல்வம் - விஜயா தம்பதியர். “நாங்கள் நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தருமபுரியில் நாசரின் ஃபைனான்ஸ் கம்பெனி அருகில் இருபது வருடங்களாக சலூன் நடத்திவந்தேன். விசேஷ நாள்களில் நாதஸ்வரம் வாசிக்கச் செல்வேன். 2013-ம் ஆண்டு குழந்தைகளின் கல்விச் செலவுக்காக நாசரிடம் இருபதாயிரம் ரூபாய் கந்துவட்டிக்கு வாங்கினேன். தினமும் 200 ரூபாய் கட்டவேண்டும். 51-வது நாள் கட்ட முடியவில்லை. எவ்வளவு கெஞ்சியும் கேட்காமல் அந்தக் கடனை குளோஸ் செய்துவிட்டு புதுக்கணக்கைத் தொடங்கினார் நாசர். அதில் இருபதாயிரம் ரூபாய் கொடுப்பதாக எழுதிக்கொண்டு, பிடிபணம், நிலுவைபோக கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார். அதுவும் ஒருநாளில் கட்ட முடியாமல் போனது. திரும்பவும் புதுக்கணக்கு.

இப்படி, பத்து முறைக்கு மேல் புதுக்கணக்குகள் தொடங்கி, 80,000 ரூபாய் கடனுக்கு ஐந்தே கால் லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டியிருக்கிறேன். இன்னும் ஐந்து லட்சம் ரூபாய் கட்டச் சொல்கிறார். இவரது டார்ச்சர் தாங்க முடியாமல் 2017-ம் ஆண்டு என் மகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டான். அதனால், குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டோம். நாசரால் நான் குலதெய்வமாக மதிக்கும் நாதஸ்வரத்தையும், 1,800 சதுர அடிகொண்ட வீட்டுமனையையும் இழந்திருக்கிறேன். என் மகன், மகள்களுக்குத் திருமண வயதாகியும் இன்னும் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறேன்’’ என்று கண்ணீர் வடித்தார்கள்.

வயது முதிர்ந்த பெண்மணியான தைபாமாவின் கதை இன்னும் பரிதாபம். தருமபுரியில் பிரபலமான காலணி ஷோ-ரூமை நடத்தி, கெளரவமாக வசித்துவந்தது இவரின் குடும்பம். கந்துவட்டிக் கொடுமையால் கோடிக்கணக்கான சொத்துகளை இழந்து, இவரின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் சந்தித்த அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இன்று தைபாமாவின் குடும்பமும் தலைமறைவு வாழ்க்கைதான் வாழ்ந்துவருகிறது. “புகைப்படம் வேண்டாம்” என்று கண்ணீர்மல்கப் பேசத் தொடங்கினார் தைபாமா.

“நாசரால் மானம், மரியாதை இழந்து, நடுரோட்டுக்கு வந்து, தலைமறைவாக வாழ்ந்து வருகிறோம். நாசருக்கு வட்டி கட்டுவதற்காகவே 80-க்கும் மேற்பட்டவர்களிடம் கடன் வாங்கி, அதற்கு வட்டிக் கட்ட முடியாமல் தவிக்கிறேன். அவரால், 700 பவுன் தங்க நகைகள், மூன்று கடைகள், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு வீடுகள், ஒரு இன்னோவா கார் என நிறைய இழந்துவிட்டோம். இனி இழப்பதற்கு எங்களிடம் எதுவுமே இல்லை. நாசர் மனசாட்சியே இல்லாத மிருகம்’’ என்று சொன்னவர், அதற்கு மேல் பேச முடியாமல் கதறியழுதார். மேற்கண்ட இரு சம்பவங்களும் சிறு உதாரணங்கள் மட்டுமே. தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் தாண்டி பெங்களூரு வரை நீள்கிறது நாசரின் நாசகர வட்டிவலை!

தருமபுரியில் ‘கந்துவட்டிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ நடத்திவருகிறார் பச்சியப்பன். ‘கந்துவட்டிக் கொடூரன் நாசர் மீது தருமபுரி காவல்துறையே நடவடிக்கை எடு’ என்று தருமபுரி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறது இவரது இயக்கம். பச்சியப்பனிடம் பேசினோம். “நாசரால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அரூர் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய பெண் ஒருவர், நாசரிடம் கடன் வாங்கி பணம் கட்ட முடியவில்லை. அவரின் மகளைப் பிணைக்கைதியாக வைத்திருக்கிறார் நாசர்” என்றார்.

இந்தப் புகார்கள் குறித்தெல்லாம் நாசரிடம் விளக்கம் கேட்டோம். “திருவேங்கடமூர்த்தி, பன்னீர்செல்வம், தைபாமா ஆகியோர் என்னிடம் பணத்தை வாங்கிவிட்டு, மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போனவர்கள். என்னிடம் மட்டுமன்றி, அவர்கள் தருமபுரியில் பலரிடமும் கடன் வாங்கி ஏமாற்றியிருக்கிறார்கள். நான் முறையாக லைசென்ஸ் வாங்கி, நேர்மையான முறையில் ஃபைனான்ஸ் செய்துவருகிறேன். நூற்றுக்கு இரண்டு ரூபாய் வட்டி வசூலிக்கிறேன். யாரையும் ஏமாற்றவில்லை. அதேபோல பெண்களைப் பிணைக்கைதிகளாக வைத்திருக்கிறேன் என்று சொல்வதும் பொய்யான குற்றச்சாட்டு’’ என்கிறார்.

இது பற்றி தருமபுரி காவல் கண்காணிப்பாளர் ராஜனிடம் கேட்டோம். “டி.சி.பி டவுன் ஸ்டேஷனில் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். விசாரணை முடிந்த பிறகு, நாசர்மீது தவறு இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மட்டும் சொன்னார்.

இப்படி, ஒரு நாசர் மட்டுமல்ல... பல கந்துவட்டி அரக்கர்கள் தமிழகம் முழுவதும் சிறிதும் பெரிதுமாக மக்களின் வாழ்க்கையை வேட்டையாடிவருகிறார்கள். கொரோனா காலத்தில் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையிலும், கந்துவட்டிக் கும்பல்கள் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. குடும்பப் பெண்களைத் தகாத வார்த்தைகளால் பேசுவது, அவர்களைப் படுக்கைக்கு அழைப்பது, நடு வீட்டில் அமர்ந்து மது அருந்துவது, நடுவீட்டில் சிறுநீர் கழிப்பது, வீட்டிலிருக்கும் பெண்களின் முன் தங்களது ஆடைகளை அவிழ்த்துக் காட்டி வக்கிரமாக நடந்துகொள்வது உட்பட அச்சிலேற்ற முடியாத அக்கிரமங்களை நடத்துகின்றன இந்தக் கந்துவட்டிக் கும்பல்கள்.

உயிரா... மானமா? - காவு கேட்கும் கந்துவட்டி

மீண்டும் மீண்டும் தீக்குளிப்பு! - மானம் காக்கப் போராடும் பெண்கள்

கந்துவட்டிக் கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2017-ம் ஆண்டு, அக்டோபர் 23-ம் தேதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான இசக்கிமுத்து, தன் குடும்பத்தினருடன் தீக்குளித்தார். இதில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரு பிஞ்சுக் குழந்தைகள் தீயில் கருகிப்போனார்கள். நாட்டையே உலுக்கியது இந்தச் சம்பவம். உயிரிழக்கும் முன்பாக வாக்குமூலம் அளித் திருந்தார் இசக்கிமுத்து. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், கந்துவட்டிக் கும்பல்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ‘தீக்குளிப்புச் சம்பவத்துக்கும் கந்துவட்டிக் கும்பலுக்கும் தொடர்பு இல்லை என்பதால் வழக்கைக் கைவிட வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் போலீஸார் மனுத்தாக்கல் செய்தார்கள். கோபமடைந்த நெல்லை மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, ‘கந்துவட்டிக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேர்மீது கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டும். மேலும், கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 9-ன்கீழ் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. ஆனாலும், போலீஸார் உருப்படியாக எதையும் செய்யவில்லை. நெல்லையில் தொடரும் கந்துவட்டிக் கொடுமைகளும் தடுக்கப்படவில்லை.

ஒரு மாதத்துக்கு முன்னர் நடந்த சம்பவம் இது. நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சிதம்பராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், தன் சகோதரர் புகழ்சேட் என்பவருடன் சேர்ந்து சோடா வியாபாரம் செய்துவந்தார். தொழிலை விரிவுபடுத்த உள்ளூரைச் சேர்ந்த இருவரிடம் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். இதற்கு வட்டியாக மட்டும் ஏழு லட்சம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒரு கட்டத்தில் இவரால் கடனைக் கட்ட முடியவில்லை. கந்துவட்டிக் கும்பலின் டார்ச்சர் தாங்க முடியாத முருகனின் மனைவி கிருஷ்ணவேணி, புகழ்சேட்டின் மனைவி பாமா ஆகியோர் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றார்கள். கடைசி நேரத்தில் அங்கிருந்தவர்கள் தடுத்ததால் விபரீதம் தடுக்கப்பட்டது.

சேலம் நகரில், காய்கறி சில்லறை வியாபாரிகளுக்கு ‘அதிகாலைக் கடன்’ ஒன்று கொடுக்கிறார்கள். பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு, முன்வட்டியாக ஆயிரம் ரூபாயைப் பிடித்துக்கொண்டு ஒன்பதாயிரம் மட்டுமே கையில் கொடுப்பார்கள். மாலைக்குள் ஆயிரம் ரூபாய் சேர்த்து பத்தாயிரமாகக் கொடுத்துவிட வேண்டும். இதில், ஒரு மணி நேரம் தாமதமானாலும் வட்டிக்கு வட்டி கட்ட வேண்டும். கடப்பாரை வட்டி இது!

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் மீட்பு
தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் மீட்பு

திருச்சி ‘டெத் சர்ட்டிஃபிக்கேட்!’

திருச்சி மாவட்டம், சிறுகாம்பூர் அருகே குருவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் டிராக்டர் வாங்குவதற்காக 1.90 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். மூன்று தவணைகளில் மொத்தம் 90,000 ரூபாயை திருப்பிச் செலுத்திவிட்டார். இடையே கொரோனா ஊரடங்கால் தவணையைச் செலுத்த முடியவில்லை. பணத்தைக் கேட்டு பல வழிகளில் டார்ச்சர் செய்த அந்த நிறுவனத்தினர், தினமும் விவசாயியின் வீட்டுக்குள் வந்து, நடு ஹாலில் அமர்ந்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து முருகானந்தத்துக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அதில், ‘கடனை முடிக்கணும்னா, நீ செத்துட்டேன்னு டெத் சர்டிஃபிக்கேட் வாங்கிக் கொடு. உன்னோட லோனை குளோஸ் பண்ணிடலாம்’ என்று தெரிவித்துள்ளனர். அவர்களின் டார்ச்சர் தாங்க முடியாமல் முருகானந்தம் வாத்தலைக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவுசெய்தாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

சொத்துகளைப் பிடுங்கும் கும்பல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவகாரமே வேறு. கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும்போதே, சொத்து வாங்குவதற்கு முன்பணம் கொடுத்தது போல பத்திரம் பதிவு செய்துவிடுகிறார்கள். பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையென்றால், அடிமாட்டு விலைக்கு மொத்தச் சொத்தையும் பிடுங்கிக்கொள்கிறார்கள். குமரி மாவட்டத்திலிருக்கும் சில போலீஸ் அதிகாரிகளே பினாமிகள் பெயரில் இதைச் செய்வதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

நாசருக்கு எதிராக போஸ்டர்
நாசருக்கு எதிராக போஸ்டர்

தற்கொலைகள் தொடரும் புதுக்கோட்டை!

சில வருடங்களுக்கு முன்னர், புதுக்கோட்டையில் பிரபல டெய்லர் ஒருவர், அங்கிருக்கும் ‘அய்யா’ பிரமுகர் கும்பலிடம் கந்துவட்டிக்குப் பணம் வாங்கியிருந்தார். அதிக வட்டி கட்ட முடியாமல் திண்டாடிய அந்த டெய்லர், தன் மனைவியுடன் திருவண்ணா மலைக்குச் சென்று அங்கிருக்கும் லாட்ஜ் ஒன்றில் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ‘அய்யா’ பிரமுகர் ‘டான்’ ஆக மாறிவிட்டார். அரசு ஊழியர்களைக் குறிவைத்து கடன் வழங்கும் அவரிடம் சுமார் 500 அரசு ஊழியர்களின் ஏ.டி.எம் கார்டுகள் உள்ளன. அரசு ஊழியர்களுக்கே இந்தக் கதி என்றால் சாமானியர்களின் நிலைமை இன்னும் மோசம்.

இதேபோல அறந்தாங்கியில் மணிகண்டன் என்பவர் மற்றொரு கந்துவட்டிக் கும்பலிடம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியிருந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தவரால் வட்டி கட்ட முடியவில்லை. வீடு தேடிவந்து ஆபாசமாகத் திட்டியது கந்துவட்டிக் கும்பல். அவமானம் தாங்காமல் பூச்சிமருந்து குடித்து வாழ்க்கையை முடித்துக்கொண்டார் மணிகண்டன். இப்போது அவரின் மனைவி வீரம்மாள் இரண்டு குழந்தைகளுடன் பிழைப்புக்கு வழியில்லாமல் தவிக்கிறார்.

உயிரா... மானமா? - காவு கேட்கும் கந்துவட்டி

வீட்டை இடித்த வட்டி!

மதுரை ஆரப்பாளையம், சிக்கப்பிடாரி கோயில் தெருவில் குமார் என்பவர், நாகராஜ் என்பவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஐந்து வருடம் வட்டி கட்டியதுடன், கடந்த டிசம்பர் மாதம் அசலைத் திருப்பிச் செலுத்தியிருக்கிறார் குமார். அதன் பிறகும் கூடுதல் வட்டி கேட்டுள்ளது நாகராஜ் தரப்பு. குமாரால் கூடுதல் வட்டி கட்ட முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜின் ஆட்கள், பட்டப்பகலில் பொக்லைன் கொண்டுவந்து குமாரின் வீட்டை இடித்துள்ளார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நாகராஜ்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பச்சியப்பன்
பச்சியப்பன்

மதுரை சோலை அழகுபுரத்தைச் சேர்ந்த ஒருவர், வெளிநாடு செல்வதற்காக 66 வயதான ரங்கசாமி என்பவரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். கொரோனா காலத்தில் இரண்டு மாதத் தவணையைக் கட்ட முடியவில்லை. இதைச் சாதகமாக்கிக்கொண்ட ரங்கசாமி, கடன் வாங்கியவரின் மனைவியைப் படுக்கைக்கு அழைத்துள்ளார். அதற்கு அந்தப் பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரின் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் ரங்கசாமி. புகாரின்பேரில் போலீசார் ரங்கசாமியை போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.

பிள்ளைகள் படிப்புக்கு, மகளின் திருமணத்துக்கு, அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்கு என சந்தர்ப்பவசத்தால் சதிவலையில் சிக்கிய பலரையும் கருணையே இல்லாமல் காவு வாங்குகிறது ‘கந்துவட்டி.’ இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக 2003-ம் ஆண்டு, நவம்பர் 14-ம் தேதி, ‘கந்துவட்டித் தடைச் சட்டம்’ ஜெயலலிதா ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது. ‘இது அம்மாவின் அரசு’ என வெற்றுக் கூப்பாடுபோடும் தற்போதைய ஆட்சியாளர்கள், அவரது திட்டங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள். இந்த நிலைமை நீடித்தால், கந்துவட்டிக் கும்பல்கள் முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்துகொண்டே வசூலைத் தொடங்கினாலும் ஆச்சர்யமில்லை!

திருவேங்கடமூர்த்தி
திருவேங்கடமூர்த்தி

“சட்டத்தில் ஓட்டைகள் ஏராளம்!”

இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர் என்.ரமேஷிடம் பேசினோம். ‘Tamilnadu Money Lenders Act - 1957’ வட்டிக்குப் பணம் கொடுப்பதை வரைமுறைப்படுத்துகிறது. அதன்படி, அரசிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் வட்டித்தொழில் செய்ய வேண்டும். எந்த விகிதத்தில் வட்டி வசூலிக்க வேண்டும் என்று அந்தச் சட்டத்தின் பிரிவு 7 சொல்கிறது. இருந்தும், கந்துவட்டி முறைகேடுகள் அதிகரித்ததால் அந்தச் சட்டத்தின் தொடர்ச்சியாக, ‘தமிழ்நாடு கந்துவட்டித் தடுப்புச் சட்டம் - 2003’ கொண்டுவரப்பட்டது. பழைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்ட விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். புதுச் சட்டத்தின் பிரிவு 3 மற்றும் 4-ன்படி, அதிக வட்டி வசூலிப்பது தவறு. அப்படி வசூலித்தால், மூன்று ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். பொதுவாக கந்துவட்டி கொடுப்போர், வாங்குவோர் இடையே ஆவணப் பரிமாற்றங்கள் முறையாக இருப்பதில்லை. புரோ நோட்டு அல்லது காசோலை அடிப்படையில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கடன் கொடுக்கும்போது, மேற்கண்ட இரண்டு சட்டங்களுமே பொருந்தாது. இப்படி இந்தச் சட்டத்தில் ஏராளமான ஓட்டைகளும் குழப்பங்களும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பயன்படுத்தித்தான் கந்துவட்டிக்காரர்கள் எளிதாகத் தப்பிவிடுகிறார்கள். எனவே, மேற்கண்ட சட்டங்களில் கடுமையான திருத்தங்களைக் கொண்டுவந்தால்தான் கந்துவட்டியை ஒழிக்க முடியும்.