Published:Updated:

காலையில ஆன்லைன் கிளாஸ்... சாயங்காலம் குருவிக்கூடு விற்பனை! - சபாஷ் சிறுமிகள்

 நந்திதா,  சௌபர்ணிகா,  சௌமியா
பிரீமியம் ஸ்டோரி
நந்திதா, சௌபர்ணிகா, சௌமியா

#Motivation

காலையில ஆன்லைன் கிளாஸ்... சாயங்காலம் குருவிக்கூடு விற்பனை! - சபாஷ் சிறுமிகள்

#Motivation

Published:Updated:
 நந்திதா,  சௌபர்ணிகா,  சௌமியா
பிரீமியம் ஸ்டோரி
நந்திதா, சௌபர்ணிகா, சௌமியா

“ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, எங்க வீட்டுக்கு சில சிட்டுக்குருவிங்க வந்துச்சுங்க. நான், என் தங்கச்சி, எங்க பெரியம்மா பொண்ணுன்னு மூணு பேரும் யூடியூப் பார்த்து, அதுகளுக்கு ஆசையா கூடு செஞ்சு வெச்சோம். அதுல குருவிங்க தங்குனப்போ, எங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். தொடர்ந்து, யூடியூப் பார்த்து விதவிதமா குருவிக்கூடுகள் செய்து விற்க ஆரம்பிச்சோம். லாக்டௌனால வருமானமில்லாம இருக்குற அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் இப்போ எங்களால பணம் சம்பாதிச்சுக் கொடுக்க முடியுது” என்று பொறுப்பாக, பெரிய மனுஷிபோல் பேசுகிறார் நந்திதா.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள மோர்பாளையத்தைச் சேர்ந்த நந்திதா, தன் தங்கை சௌபர்ணிகா, பெரியம்மா மகள் சௌமியா ஆகியோரோடு சேர்ந்து, குருவிக்கூடுகளைச் செய்து வருகிறார். தேங்காய் நார், பேக்கிங் அட்டைகள், நூல், மைதா மாவு உள்ளிட்ட பொருள்களை வைத்து, மூன்று பேரும் அழகழகாக உருவாக் கும் குருவிக்கூடுகளை, திருச்செங்கோடு டு சேலம் சாலையில் ஓரமாகக் கடைபரப்பி, அவர்களே விற்பனை செய்கிறார்கள். அந்த வழியாகச் செல்லும் இயற்கை ஆர்வலர்கள், பறவைகள் வளர்ப்பில் விருப்பம் உடையவர்கள் எல்லாம், சிறுமிகளின் முயற்சி யையும், அவர்கள் செய்த கூடுகளையும் ரசித்து வாங்கிச் செல்கிறார்கள்.

மோர்பாளையத்தில் தங்கள் வீட்டில் குருவிக்கூடுகளைச் செய்துகொண்டிருந்த சிறுமிகளைச் சந்தித்தோம். நந்திதா, குடும்பத்தின் பின்னணி சொன்னார்.

காலையில ஆன்லைன் கிளாஸ்...
சாயங்காலம் குருவிக்கூடு விற்பனை! - சபாஷ் சிறுமிகள்

“நான் எட்டாவதும், என் தங்கைகள் ஏழாவதும் படிக்கிறோம். மூணு பேருமே, ஈரோடு மாவட்டம், குறிச்சியில இருக்குற அரசுப் பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளியில தங்கிப் படிச்சுட்டு வந்தோம். கொரோனா லாக்டௌனால பள்ளிகள் மூடப்பட்டதால, இப்போ வீட்டுல இருக்கோம். எங்களுக்குச் சொந்த ஊரு, சேலம் மாவட்டத்துல உள்ள கீரிப்பட்டி. அப்பா நடராஜன், 12 வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோயிட்டார். அம்மா தீபா மில்லு வேலைக்குப் போய், கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. லாக்டௌனால வேலை யில்லாம போக, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியல. சாப்பாட்டுக்கே வழியில்லாம போக, அம்மா என்னையும், என் தங்கச்சியையும் ஒரு வருஷத்துக்கு முன்னாடி, இங்க பெரியம்மா வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்தாங்க. பெரியப்பா ராஜேந் திரனும், பெரியம்மா பரிமளாவும் எங்களை அரவணைச்சுக் கிட்டாங்க. ஆனாலும், அவங்களும் பொருளா தார கஷ்டத்துலதான் இருந்தாங்க’’ என்றவர்,

‘`இந்த நிலைமையிலதான், வீட்டுக்கு முன்னாடி கட்டியிருந்த வெட்டிவேரை கொத்தி எடுத்துட்டுப் போக சிட்டுக் குருவிகளும் பறவைகளும் தினமும் வந்ததை நானும் தங்கச்சிகளும் பார்த்தோம். எங்க வீட்டுலேயே அதுங்களுக்கு கூடு செஞ்சு வைக்க ஆசைப்பட்டு, யூடியூப்பைப் பார்த்து கூடு செஞ்சு வச்சோம். குருவிங்க அதுல தங்குனப்போ, பெருசா சாதிச்சுட்ட சந்தோஷம் எங்க மூணு பேருக்கும். இன்னொரு பக்கம் எல்லாரும், ‘ஐ கூடு சூப்பரா இருக்கே... எங்க வாங்குனீங்க?’னு கேட்க, ‘யூடியூப் பார்த்து நாமளே விதவிதமா குருவிக்கூடு செஞ்சு விப்போம்...’னு முடிவெடுத்தோம். நாலு தடவை செஞ்சு பார்த்ததுக்கு அப்புறம்தான், விற்கிறதுக்கான நேர்த்தியோட அது வந்துச்சு’’ என்று அழகாகச் சிரிக்கிறார் நந்திதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தீபா
தீபா

சிறுமி சௌமியா தொடரும் போது, ‘`கூடு செய்யத் தேவை யான தேங்காய் நாரை பக்கத்துல இருக்குற தேங்காய் மண்டியில போய் வாங்கி னோம். ‘சின்ன பிள்ளைங்க, பொறுப்பா குருவிக்கூடு செய்றீங்களே...’னு அங்குள்ள வங்க இலவசமா தேங்காய் நார் கொடுத்தாங்க. பேக்கிங் அட்டையை ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கினோம். நூல், மைதா மாவை பக்கத்துல உள்ள கடையில தேவைக்கு ஏற்ப வாங்க ஆரம்பிச்சோம்.

டிரையாங்கிள் வீடு, ஸ்லைடு வீடு, தூக்கணாங்குருவிக் கூடு, கூரை வீடு, மாடி வீடு, டபுள்டக்கர் வீடு, டபுள் மாடர்ன் வீடு, நார்மல் வீடு, காக்கா கூடு, குருவிக்கூடுனு பல வடிவங்களில் கூடுகள் செய்ய ஆரம்பிச்சோம். தூங்கணாங்குருவிக்கூடு, காக்கா, குருவிக் கூடுகளை தேங்காய் நார், நூல், பசையை வச்சு உருவாக்குவோம். வீடு அமைப்புல உள்ள கூடுகளைச் செய்ய, முதல்ல தேவையான அளவுல அட்டையை வெட்டி வடிவமைப்போம். அது மேல தேங்காய் நாரை பிசிறில்லாம சுத்துவோம். அப்புறம், நூலை இடைவெளியில்லாம சுற்றி, அது மேல காய்ச்சி வச்ச மைதா மாவு பசையைத் தடவி, காய வச்சா... கூடுகள் ரெடியாயிடும். பெரிய சைஸ் கூடு செய்ய ரெண்டு மணி நேரம் வரை ஆகும். சின்ன சைஸ் கூடு செய்ய முக்கால் மணி நேரம் போதும்’’ - தேர்ந்த தொழில்முனைவோர் போல தகவல்கள் சொல்லி ஆச்சர்யப் படுத்தினார் சௌமியா.

‘`நாங்க செய்யுற குருவிக்கூடுகளை சேலம் சாலையில ஓரமா வெச்சு விற்க ஆரம்பிச்சோம்’’ என்று ஆரம்பித்த சௌபர்ணிகா, ‘`அந்த ரோடுல வாகனங்கள்ல போற பலரும் எங்களைப் பாராட்டி, கூடுகள் வாங்கிட்டுப் போவாங்க. குறைந்தபட்சமா காக்கா, குருவிக்கூடுகளை 80 ரூபாய்க்கும், அதிகபட்சமா டபுள் டக்கர், டபுள் மாடர்ன் வீடுகளை 350 ரூபாக்கும் விற்கிறோம். ஒரு நாளைக்கு நாலு கூடுகள் வரை விற்க முடியும். எங்ககிட்ட கூடுகள் வாங்கிட்டுப் போனவங்க, மறுபடியும் அந்த வழியாக வரும்போது, ‘நீங்க கொடுத்த கூடுகளை வீட்டுல வச்சோம். அதுல பறவைங்க வந்து தங்குது...’னு சொல்லும்போது, எங்களுக்கு பெரிய சாதனை பண்ணுனமாதிரி மகிழ்ச்சியா இருக்கும்” என்றார்.

காலையில ஆன்லைன் கிளாஸ்...
சாயங்காலம் குருவிக்கூடு விற்பனை! - சபாஷ் சிறுமிகள்

‘`ஆன்லைன் கிளாஸ் அட்டண்ட் பண்ணின நேரம் போக, மீதமிருக்கிற நேரத்துல குருவிக்கூடுகளை விற்பனைக்கு எடுத்துட்டுப் போறது, குருவிக்கூடுகள் செய்றதுனு இருப்போம். எல்லா செலவும் போக, மாசம் 5,000 ரூபாய் கிடைக்குது. அதை எங்க அம்மாக்கள்கிட்ட கொடுத்தப்போ, நெகிழ்ந்து போயிட்டாங்க. எங்களைப் பத்தி கேள்விப்பட்டு, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள்ல இருந்தெல்லாம் இப்போ எங்ககிட்ட கூடுகள் கேட்கிறாங்க. அதனால, இன்னும் விதவிதமான கூடுகள் செய்யும் முயற்சியில இருக்கோம். பள்ளி திறந்த பிறகும், ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூடு செய்ய ஒதுக்கினா போதும். குருவிக் கூடுகளுக்கு வண்ணம், கடை போடுறதுனு நிறைய ஐடியாஸ் வெச்சிருக்கோம்’’ என்கிறார் சின்ன கண்களை விரித்து.

சிறுமிகளின் இந்த முயற்சி குறித்துப் பேசிய நந்திதாவின் அம்மா தீபா, “இவங்க மூணு பேரும் அழகா கூவிக் கூவி குருவிக் கூடு விற்கிறதைப் பார்க்கும்போது எனக்கும், என் அக்காவுக்கும் வயிறு குளிர்ந்து போயிரும். லாக்டௌனால முடங்கிக் கிடக்குற எங்களுக்கு, இந்தப் பெரிய மனுஷிங்க கொடுக்குற காசு ரொம்ப ஒத்தாசையா இருக்கு. குடும்பக் கஷ்டத்தை சின்ன வயசுலேயே உணர்ந்து நடக்குற இந்தப் பிள்ளைகளைப் பெத்ததுக்கு நாங்க பூரிச்சுப் போயிருக்கோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்!

மூன்று சிட்டுக் குருவிகளும், அவர்கள் விற்கும் குருவிக் கூடுகளும் அழகழகு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism