Published:Updated:

நெல்லை குவாரி விவகாரம்... கலெக்டரை பதில் சொல்ல சொல்லுங்க... பொங்கியெழுந்த சபாநாயகர், தி.மு.க எம்.பி!

நெல்லை குவாரி
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை குவாரி

அமைச்சர் அமைதிப்படுத்தியும் சமாதானமடையாத ஞானதிரவியம் எம்.பி மீண்டும் பொங்கியெழுந்து, ஆட்சியரைப் பார்த்து ஆவேசமாகப் பேசினார்.

நெல்லை குவாரி விவகாரம்... கலெக்டரை பதில் சொல்ல சொல்லுங்க... பொங்கியெழுந்த சபாநாயகர், தி.மு.க எம்.பி!

அமைச்சர் அமைதிப்படுத்தியும் சமாதானமடையாத ஞானதிரவியம் எம்.பி மீண்டும் பொங்கியெழுந்து, ஆட்சியரைப் பார்த்து ஆவேசமாகப் பேசினார்.

Published:Updated:
நெல்லை குவாரி
பிரீமியம் ஸ்டோரி
நெல்லை குவாரி

கல்குவாரிகளில் நடந்த விதிமீறல் காரணமாக நெல்லை மாவட்டத்திலுள்ள 55 குவாரிகளும் மூடப்பட்டிருக்கின்றன. குவாரிகள் மூடிக்கிடப்பதால் கடுப்படைந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம், சபாநாயகர் அப்பாவுவுடன் சேர்ந்து அமைச்சர் முன்னிலையிலேயே ஆட்சியரிடம் எகிறிய விவகாரம் வில்லங்கமாகி யிருக்கிறது!

நெல்லை அடைமிதிப்பான்குளத்திலுள்ள கல்குவாரியில் மே 14-ம் தேதி நடந்த விபத்தில் நான்கு பணியாளர்கள் உடல் நசுங்கி பலியானார்கள். இதையடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து குவாரிகளையும் மூட உத்தரவிட்ட அதிகாரிகள், அங்கு விதிமீறல் நடந்திருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டனர். அதில், `13 குவாரிகளின் உரிமத்தை ரத்துசெய்யும் அளவுக்கு விதிமீறல் நடந்திருக்கிறது. எஞ்சிய 42 குவாரிகளில் ஒன்றைத் தவிர மற்றவற்றுக்கு சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கலாம்’ எனப் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இரண்டு மாதங்களாக மூடப்பட்டுக்கிடக்கும் குவாரிகளைத் திறக்க வேண்டுமென்பதில் தி.மு.க-வைச் சேர்ந்த வி.ஐ.பி-கள் பலரும் தீவிரம் காட்டிவருகிறார்கள்.

இந்த நிலையில், கூடங்குளத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘கல்குவாரிகள் மூடப்பட்டுக்கிடப்பதால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியிருக்கிறது. கல் மற்றும் மணல் விலையும் அதிகரித்திருக்கும். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்’ என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன், “இது தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் சொல்லி முடித்து, அடுத்த கேள்விக்குத் தயாரானார்.

நெல்லை குவாரி விவகாரம்... கலெக்டரை பதில் சொல்ல சொல்லுங்க... பொங்கியெழுந்த சபாநாயகர், தி.மு.க எம்.பி!

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘‘இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிப்பார்’’ என்றார். நழுவிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மீண்டும் சபாநாயகர் அப்பாவு, ‘‘ஆட்சியர் ஓரிரு வார்த்தைகளாவது சொல்ல வேண்டும்’’ என்று கட்டாயப்படுத்தினார். வேறு வழியில்லாமல் கலெக்டர் விஷ்ணுவும், ‘‘அரசின் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார் சமாளிப்பாக.

ஆனால், செய்தியாளர் தரப்பிலிருந்து மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டதால், அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கமளிக்கத் தொடங்கினார். அப்போது அருகில் அமர்ந்திருந்த ஞானதிரவியம் எம்.பி., “கல்குவாரிகள் மூடப்பட்டு 60 நாள்கள் ஆகின்றன. அதனால் 50,000 தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். ஆட்சியர் பதில் சொல்லட்டும்” என்று ஆவேசமானார்.

அமைச்சர் அமைதிப்படுத்தியும் சமாதானமடையாத ஞானதிரவியம் எம்.பி மீண்டும் பொங்கியெழுந்து, ஆட்சியரைப் பார்த்து ஆவேசமாகப் பேசினார். இதனால் கடுப்படைந்த அமைச்சர் சி.வி.கணேசன், ‘‘அட சும்மா இருங்கண்ணே... இது என்ன உங்க வீடா...’’ என்று அதட்டிய பிறகே அமைதியானார். செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் முன்னிலையிலேயே ஞானதிரவியம் எம்.பி அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

சி.வி.கணேசன், அப்பாவு
சி.வி.கணேசன், அப்பாவு

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை, “அடைமிதிப்பான்குளத்தில் விதிமுறையை மீறி கனிமங்கள் வெட்டியெடுக்கப்பட்டு விபத்து ஏற்பட்ட குவாரி, சபாநாயகர் அப்பாவுவின் பினாமிக்குச் சொந்தமானது. மாவட்டம் முழுவதும் தி.மு.க-வினர் நிறைய குவாரிகளை நடத்திவருகிறார்கள். அவை மூடப்பட்டதால் ஏற்பட்ட விரக்தியில் ஞானதிரவியம் பொங்கி எழுந்திருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கடைசிகட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. அதை வேகப்படுத்தி விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க ஞானதிரவியம் எந்த முயற்சியும் செய்யவில்லை. ராதாபுரம் கால்வாய்ப் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை... வள்ளியூரில் தலைமை மருத்துவமனை கொண்டுவரவோ, அருவிக்கரை துறைமுகத் திட்டத்தை நிறைவேற்றச் சொல்லியோ கோரிக்கைகூட வைக்காத ஞானதிரவியம், தன்னுடைய குவாரி தொழில் முடக்கப்பட்டுக்கிடப்பதால் சுயநலத்துக்காக இப்படி அநாகரிகமான வகையில் பொங்கி எழுந்திருக்கிறார்.

கல்குவாரி விபத்துக்குப் பின்னர் அனைத்து குவாரிகளையும் ஆய்வுசெய்ய உத்தரவிட்ட கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல்ராஜை தூக்கியடித்துவிட்டார்கள். இப்போது நேர்மையாகச் செயல்பட்டுவரும் நெல்லை மாவட்ட ஆட்சியரையும் பணியிட மாற்றம் செய்யும் நோக்கத்துடன் தி.மு.க-வினர் செயல்படுகிறார்கள். காரணம், கனிம வளச் சட்டப்படி விதிமுறைமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம்கொண்டவர் மாவட்ட ஆட்சியர் என்பதால், நேர்மையான அவரை மாற்றிவிட்டு தங்களுக்குச் சாதகமானவரைக் கொண்டுவர சபாநாயகரும், எம்.பி-யும் துடியாய்த் துடிக்கிறார்கள். அதனால்தான் சபாநாயகர் தூண்டிவிட்டதும் ஞானதிரவியம் இப்படி எகிறிக் குதித்திருக்கிறார்” என்று படபடத்தார்.

இன்பதுரை, ஞானதிரவியம், விஷ்ணு
இன்பதுரை, ஞானதிரவியம், விஷ்ணு

இது தொடர்பாக ஞானதிரவியம் எம்.பி-யிடம் பேசினோம். “60 நாள்களாக குவாரிகள் மூடிக்கிடப்பதால் கட்டுமான தேவைக்கான பொருள்கள் அனைத்தும் ஐந்து மடங்கு விலையேறிப்போய்விட்டன. அதைச் சரிசெய்ய வேண்டும். குவாரிகளை ஒன்று மூட வேண்டும்... அல்லது திறக்க வேண்டும். அப்படியில்லாமல் 60 நாள்களாக எதுவும் செய்யாமல் இருப்பதைத்தான் சுட்டிக்காட்டினேனே தவிர... ஆவேசமடையவில்லை” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

கடந்தகாலங்களில், கனிம வளக் கடத்தல் விவகாரத்தால் தி.மு.க-வுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதை கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமை. முதல்வர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!