Published:Updated:

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

அக்னிபத்
பிரீமியம் ஸ்டோரி
அக்னிபத்

போர்க்கொடித் தூக்கிய இளைஞர்கள்... பலன்களை விளக்கும் மத்திய அரசு...

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

போர்க்கொடித் தூக்கிய இளைஞர்கள்... பலன்களை விளக்கும் மத்திய அரசு...

Published:Updated:
அக்னிபத்
பிரீமியம் ஸ்டோரி
அக்னிபத்

மத்திய அரசு அறிவித்திருக்கும் `அக்னிபத்’ திட்டத்தால், வட மாநிலங்கள் முழுவதும் அக்னிக்காடாகக் காட்சியளிக்கின்றன. பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் சாலை, ரயில்மறியல் போராட்டங்களில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். சில இடங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன. பீகாரில் துணை முதல்வர் உட்பட பல பா.ஜ.க நிர்வாகிகளின் வீடுகளும் கார்களும் தாக்கப்பட்டிருக்கின்றன.

‘அக்னிபத்’ திட்டம் சொல்வது என்ன... அதற்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

அக்னிபத் திட்டம்!

இந்திய ராணுவத்தில் ஜவான்களைச் சேர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டமே இந்த அக்னிபத். தற்போதைய நடைமுறைப்படி, இந்திய ராணுவத்துக்குத் தேர்வாகும் ஜவான்கள் 15 முதல் 17 ஆண்டுகள் வரை பணியிலிருப்பார்கள். இதில், பதவி உயர்வு பெற்றவர்கள் பணிஓய்வு பெறும் வரை பதவியிலிருப்பார்கள். இவர்கள் அனைவருக்குமே ஓய்வூதியம், ஓய்வுக்குப் பிறகான பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.

‘அக்னிபத்’ திட்டத்தின்படி 17.5 முதல் 21 வயது (21- ஆக அறிவிக்கப்பட்டு, பின்னர் இந்த ஆண்டு மட்டும் 23-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது) வரை உள்ள ஆண், பெண் என இருபாலரும் முப்படைகளிலும் சேரலாம். நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இவர்கள் பணியாற்றுவார்கள். இதில் முதல் ஆறு மாதங்கள் மட்டுமே பயிற்சி. நான்கு ஆண்டு பணி நிறைவுக்குப் பிறகு, நிரந்தரப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், அதில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரப் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவிகிதம் பேர் சேவா நிதியைப் பெற்றுக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். பணிக்காலம் முடிந்ததும், `அக்னி வீரர்’ என்ற பட்டமும், பணி அனுபவச் சான்றிதழும் வழங்கப்படும்.

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

சம்பளமும் சேவா நிதியும்!

‘அக்னிபத்’ திட்டத்தின்கீழ் சேர்பவர்களுக்கு முதல் ஆண்டு ரூ.30,000, இரண்டாம் ஆண்டு ரூ.33,000, மூன்றாம் ஆண்டு ரூ.36,500, நான்காம் ஆண்டு ரூ.40,000 என்று மாதாந்தர ஊதியம் வழங்கப்படும். இதர படிகளும் உண்டு. மாத ஊதியத்தில் 30 சதவிகிதம், பங்களிப்புத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படும். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், பிடித்தம் செய்த தொகையையும் சேர்த்து சேவா நிதியாக 11.71 லட்சம் ரூபாய் வழங்கப்படும். முக்கியமான விஷயம் இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது. பணியின்போது உயிரிழப்பு அல்லது காயமடைந்தால் அதற்கான இழப்பீட்டுத் தொகை மட்டும் வழங்கப்படும். நிரந்தரப் பணிக்குத் தேர்வாகும் 25 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ஓய்வூதியமும், ஓய்வுக்குப் பிறகான பலன்களும் கிடைக்கும்.

`ஜூலை 2023-க்குள் முதல் அக்னி வீரர்கள் அணி தேர்வு செய்யப்பட்டுவிடும்’ என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த முதல் அணியில் 46,000 வீரர்கள் சேர்க்கப்படவிருக்கின்றனர். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``அக்னிபத் திட்டம், இந்திய ராணுவத்துக்கான நவீன உருமாற்ற நடவடிக்கை. இதன் மூலம் ராணுவத்தில் பணியாற்ற இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும். பாதுகாப்பை பலப்படுத்தவும், நமது இளைஞர்களுக்கு ராணுவ சேவை வாய்ப்பை வழங்கவும்தான் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். ராணுவத்தில் பெற்ற அனுபவங்கள், திறன்கள் மூலம் பல்வேறு துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும்’’ என்றிருக்கிறார்.

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

நாடு முழுவதும் வெடித்த போராட்டங்கள்!

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டத்திலிருந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. தமிழ்நாட்டிலும் பல இடங்களில், இளைஞர்கள் போராடிவருகிறார்கள். ``கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டி ருந்தது. இப்போது திடீரென்று இப்படி ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. சிறு வயதிலிருந்து ராணுவத்தில் சேர வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்த எங்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றம். நிரந்தரப் பணியில் நீண்டகாலம் ராணுவ சேவையாற்றி ஓய்வுபெறும் வீரர்களுக்கே, அங்கிருந்து வெளியேறிய பின்னர் செக்யூரிட்டி வேலைதான் கிடைக்கிறது. நான்கு ஆண்டுகள் மட்டும் சேவையாற்றி வெளியேறினால், எங்களுக்கு என்ன கிடைக்கும்... எங்கள் எதிர்காலம் என்னவாகும்... வருங்காலத்தில் ஒட்டுமொத்தமாக ராணுவத்துக்கே ஓய்வூதியம் இல்லாமல் ஆக்கிவிட்டால் என்னாவது... இந்தத் திட்டத்தைத் திரும்பப்பெறும் வரை போராடுவோம்’’ என்று கொதிக்கிறார்கள் இளைஞர்கள்.

போராடும் இளைஞர் குழுவில் சில, ஜூன் 20-ம் தேதி பாரத் பந்துக்கு அழைப்புவிடுத்திருந்தன. போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக வடமாநிலங்களின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் போடப்பட்டிருந்தது.

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு!

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ``சிறிது காலம் ராணுவத்தில் வேலை பார்த்துவிட்டு, ஆயுதப் பயிற்சிபெற்ற பெரும் பகுதியினர் 22 வயதில் வேலையிழப்புக்கு ஆளாவார்கள். இது நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ``பாகிஸ்தான், சீனா என இரண்டு முனைகளிலிருந்தும் அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொள்ளும்போது, அக்னிபத் திட்டம் நமது ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனைக் குறைக்கும். நமது படைகளின் வீரம், மரபு, ஒழுக்கம், கண்ணியம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை பா.ஜ.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சிக்கும் சிலர், ``ராணுவத்தில் சேரும் ஒருவர், வீரராக மாறுவதற்குக் குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகும். ஆனால், இந்தத் திட்டம் என்பது நான்கு ஆண்டுகளில் முடிந்துவிடும். அப்படியிருக்கையில், எப்படி ஒருவர் தேர்ந்த வீரராக மாற முடியும்... போர்ச்சூழல் ஏற்பட்டால், இந்திய ராணுவம் பலவீனமாகத் தெரியும். ஆயுதப்படையில் அனுபவமில்லாத வீரர்களைச் சேர்ப்பதால், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் மாதச் சம்பளமும், 11.71 லட்சம் ரூபாய் சேவா நிதியும் வழங்கப்படுவதால், பணத்தின் மீதான ஆசையில் மட்டும் சிலபேர் இதில் சேரக்கூடும். அவர்களால் இந்திய ராணுவம் பலவீனமடைய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள்.

‘அக்னிபத்’ விவகாரத்தில் நடப்பது என்ன?

ராணுவ அதிகாரிகளின் கருத்து என்ன?

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங், ``இந்திய ராணுவத்தின் சம்பளம், ஓய்வூதியத்தைக் குறைப்பதுதான் மத்திய அரசின் நோக்கம். பா.ஜ.க., விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படியொரு முடிவெடுத்திருக்கிறது. இந்தியாவில் போரோ, கிளர்ச்சியோ ஏற்பட்டால் அதைச் சமாளிக்க மனதளவில் முதிர்ச்சியடைந்த வீரர்களே தேவை. ஆனால், இந்தத் திட்டம் அதற்கு வழிவகுக்காது’’ என்கிறார்.

“2022-23-க்கான மத்திய பட்ஜெட்டில், ராணுவத்துக்காக ரூ.5.25 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், ஓய்வூதி யத்துக்கு ரூ.1.19 லட்சம் கோடியும், ஊதியம், பராமரிப்புச் செலவுகளுக்கு ரூ.2.33 லட்சம் கோடியும் செலவிடப்படுகிறது. மீதமுள்ள தொகையில்தான், தளவாடங்கள் வாங்குவது உள்ளிட்ட இதர ராணுவச் செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2012-ம் ஆண்டு முதல் ஆண்டுக்காண்டு ராணுவத்துக்கான செலவினங்கள் சுமார் 33 சதவிகிதம் அதிகரித்துக்கொண்டேவந்தது. இந்தச் செலவினங்களைக் குறைக்கத்தான் அக்னிபத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஷியோனன் சிங்
ஷியோனன் சிங்

இத்திட்டம் குறித்து பாசிட்டிவ்வாகப் பேசும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஆஸ்தானா, ``அக்னிபத் மூலம் இந்திய ராணுவத்தில் சிறந்த வீரர்களாகத் திகழும் 25 சதவிகிதம் பேரைத் தேர்ந்தெடுக்க முடியும். இப்போதுள்ள நடைமுறைப்படி திறமை குறைவாக இருக்கும் ஒரு ஜவானை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆனால், இந்தத் திட்டம் அதை எளிதாக்குகிறது’’ என்கிறார்.

பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் மத்திய அரசு சில விளக்கங்களை அளித்திருக் கிறது. ``குறுகியகால ராணுவப் பணி என்பது பல வெளிநாடுகளிலும் செயல்பாட்டிலிருக்கும் ஒரு திட்டம்தான். இது ராணுவத்துக்கு நல்ல பலன் தரும் சிறந்த முறை. பணிக்காலம் முடிந்து வெளியேறுபவர்கள் சமூக விரோதி களாக மாறக்கூடும் என்று சிலர் கூறுவது, ராணு வத்தை அவமதிக்கும் செயல். ராணுவத்துக்கு நன்கு சோதிக்கப்பட்ட வீரர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். நான்கு ஆண்டுகள் ராணுவச் சீருடை அணிபவர்கள், நாட்டுக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். தற்போதைய இந்திய ராணுவத்தில், ஜவான்களின் சராசரி வயது 32 ஆக இருக்கிறது. இந்தத் திட்டத்துக்குப் பிறகு, சராசரி வயது 26 ஆகக் குறையும். இது இந்திய ராணுவத்துக்குப் புது ரத்தம் பாய்ச்சும். இந்தத் திட்டத்தின் முடிவில் சேவா நிதி வழங்கப்படுவது, இளைஞர்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு உதவும். மேலும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்கிறது மத்திய அரசு.

ஆஸ்தானா
ஆஸ்தானா

மத்திய அரசு விளக்கமளித்த பின்னரும், போராடும் இளைஞர்களின் வீரியம் குறையவில்லை. பா.ஜ.க அரசும் இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறத் தயாராக இல்லை. எப்படிப் பார்த்தாலும், ‘எல்லையில் ராணுவ வீரர்கள்...’ என்று முழங்கியவர்களின் ஆட்சிக்கு இந்தப் போராட்டம் நிச்சயம் ஒரு கரும்புள்ளிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism