Published:Updated:

அழிக்கப்படும் அமேசான் காடு... எரிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்... என்ன நடக்கிறது பிரேசிலில்?

பிரேசில்
பிரீமியம் ஸ்டோரி
பிரேசில்

தனக்கெதிராகப் போராடும் பழங்குடி மக்களைக் காவல்துறையைக்கொண்டு ஒடுக்கியும், அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தும்வருகிறார்.

அழிக்கப்படும் அமேசான் காடு... எரிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்... என்ன நடக்கிறது பிரேசிலில்?

தனக்கெதிராகப் போராடும் பழங்குடி மக்களைக் காவல்துறையைக்கொண்டு ஒடுக்கியும், அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தும்வருகிறார்.

Published:Updated:
பிரேசில்
பிரீமியம் ஸ்டோரி
பிரேசில்

உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் 20% அமேசான் மழைக்காடுகளிலிருந்து கிடைக்கிறது. சுமார் 55 லட்சம் ச.கி.மீட்டருக்கு பரவிக்கிடக்கும் இந்தக் காடுகள்தான் மொத்த உலகுக்குமான நுரையீரல்! ஒன்பது நாடுகளில் அமேசான் தனது எல்லைகளைப் பரப்பிக்கொண்டிருந்தாலும், பெரும்பாலான காடுகள் பிரேசில் நாட்டில்தான் இருக்கின்றன.

பிரேசிலில் வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் சுரங்க நடவடிக்கைகள், தங்கம், பெட்ரோலியம் தோண்டியெடுக்கும் நிறுவனங்கள், கால்நடை இறைச்சிப் பண்ணைகள், விவசாய மேய்ச்சல் நில விரிவாக்கம், சட்டவிரோத நிலங்கள் விற்பனை போன்ற பல்வேறு காரணங்களால் அமேசான் அழிக்கப்பட்டுவருகிறது. 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஓராண்டில் (2020-21) மட்டும் காடழிப்பு நடவடிக்கை 22% அதிகரித்திருப்பதாகவும், கொரோனா ஊடரங்கு காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு சுமார் 13,235 ச.கி.மீ காட்டுப்பகுதி அழிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை. கடந்த 2019-ஐ விட 2020-ல் 64% அதிகமாகக் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜெய்ர் போல்சனாரோ
ஜெய்ர் போல்சனாரோ

இந்த நிலையில், அமேசானில் 40 ஆண்டுகளாக ஆய்வு நடத்திவரும் World Wildlife Fund எனும் நிறுவனத்தின் அறிக்கை, 2022, ஏப்ரல் ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1,40,000 கால்பந்து மைதானங்கள் அளவுக்குக் காடு அழிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அளவு ஆண்டுதோறும் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறது.

அழிப்பின் சூத்ரதாரியான அதிபர்!

கடந்த 2019-ம் ஆண்டு பிரேசில் அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, `நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகக் காடுகளை அழிப்பதில் தவறில்லை’ என வெளிப்படையாகவே வாதிடுபவர். அதிபராவதற்கு முன்பாகவே ஒரு பேட்டியில், ``பழங்குடிகளை ஒழித்துக்கட்டுவதில், அமெரிக்க ராணுவத்தைப்போல பிரேசில் ராணுவம் செயல்திறனோடு செயல்படவில்லை. இது அவமானம்” என்றுபேசி ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும் அதிரவைத்தார்.

இவர் பதவியேற்றது முதல், கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் காடழிப்பைத் தீவிரப்படுத்திவருகிறார். காடுகளை அழித்து சுரங்கங்கள், எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கான அனுமதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டார். ‘வெறும் 10 லட்சம் பழங்குடியினருக்காக நாட்டின் 13% நிலபரப்பைக் விட்டுக்கொடுக்க முடியாது’ எனக் கூறி, காட்டில் வசிக்கும் பழங்குடிகளை வெளியேற்றவும், அவர்களின் வாழ்விடப் பரப்பைக் குறைக்கவும் சட்டத் திருத்தங்கள் மேற்கொண்டார். நாட்டின் நிலக்கொள்கையில் மாற்றம் செய்து, சுமார் 97,979 ச.கி.மீ பரப்பளவை, பழங்குடியினப் பயன்பாடுகள் அல்லாத பிற பொருளாதார நடவடிக்கைகளுக்குத் திருப்பிவிட்டார். 1988-க்குப் பிறகு பதவிக்கு வந்த பிரேசில் அதிபர்களில் பழங்குடியினருக்கான நில ஒதுக்கீடு குறித்த ஒரு கோப்பில்கூட கையெழுத்திடாத முதல் அதிபராக போல்சனாரோ நின்றார்.

அழிக்கப்படும் அமேசான் காடு... எரிக்கப்பட்ட செயற்பாட்டாளர்கள்... என்ன நடக்கிறது பிரேசிலில்?

மேலும், தனக்கெதிராகப் போராடும் பழங்குடி மக்களைக் காவல்துறையைக்கொண்டு ஒடுக்கியும், அவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்தும்வருகிறார். இதுமட்டுமல்லாமல், அமேசான் காடழிப்பு விவகாரத்தில் பிரேசில் அரசாங்கத்துக்கு இருக்கும் பங்கை ஆதாரத்தோடு வெளியிட்டுவந்த பிரேசில் விண்வெளி அமைப்பை, நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி முடக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இவரின் இது போன்ற செயல்களால், அமேசான் காடழிப்பு தற்போது 75% அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே 20% காடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஒவ்வொரு விநாடியும் சுமார் 1.5 ஏக்கர் அளவிலான காடு அழிக்கப்பட்டுவருவதாக தங்கள் வேதனையைப் பதிவுசெய்கிறார்கள் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

டாம் பிலிப்
டாம் பிலிப்

எரிக்கப்பட்ட பழங்குடிச் செயற்பாட்டாளர்கள்!

இந்தச் சூழ்நிலையில், காடழிப்பை எதிர்த்துப் போராடும் இங்கிலாந்து பத்திரிகையாளர் டாம் பிலிப், அவருக்கு வழிகாட்டியாக இருந்த பழங்குடி ஆய்வாளர் புரூனோ பெரீரா ஆகியோர் மர்மமான முறையில் அமேசான் காட்டில் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமேசான் காடு பற்றியும், பழங்குடிகளுக்கு ஆதரவாகவும், நிறைய எழுதியவர் டாம் பிலிப்.

கடந்த ஜூன் 5-ம் தேதி, பழங்குடியினர் பற்றிய ஆய்வுக்காக அமேசானில் உள்ள ஒரு கிராமத்துக்கு படகில் பயணித்த இவர்கள் இருவரும் திடீரெனக் காணாமல்போயினர். அதிச்சியடைந்த பழங்குடியினர், காணாமல்போனவர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என அரசுக்குக் கோரிக்கைவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிபர் போல்சனாரோ, ``வேண்டாத இடங்களுக்கு அவர்களை யார் போகச் சொன்னது?” எனச் செய்தியாளர்களிடம் கோபமாகச் சொன்னார். பிரேசில் காவல்துறை மற்றும் பழங்குடிகளின் தொடர்ச்சியான தேடுதல் பணியின் முடிவில், ஜூன் 15-ம் தேதி அவர்கள் இருவரும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாக அமரில்டோ என்பவரையும், அவரின் சகோதரரையும் கைது செய்திருக்கும் காவல்துறையினர், ``அமேசான் காட்டிலுள்ள ஆற்றில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவந்த இவர்கள் இருவரையும், டாம் பிலிப்பும், புரூனோவும் எதிர்த்திருக்கிறார்கள். அதனால் இவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறி வழக்கை முடித்துவிட்டனர்.

புரூனோ
புரூனோ

ஆனால், “இது யதேச்சையான கொலையாக இருக்க வாய்ப்பில்லை, இதன் பின்னணியில் அதிபருக்குத் தொடர்பு இருக்கலாம். ஏற்கெனவே அமேசான் காடு விவகாரத்தில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவை நேருக்கு நேராக நின்று டாம் பிலிப் எதிர்த்து பேசியிருக்கிறார். போராடும் பழங்குடிக்கு ஆதரவாகவும் செயல்பட்டுவந்தார்” என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் பழங்குடி மக்கள்.

இயற்கை என்பது அடுத்த சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லவேண்டிய சொத்து. அதை அழித்து, செல்வம் சேர்க்க நினைப்பவன் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், இயற்கை அவனை விட்டுவைத்ததில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism