Published:Updated:

சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

புகைப்படம்

சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

புகைப்படம்

Published:Updated:
சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

``தேர்கள் உற்சவத்துக்கான வாகனங்கள் மட்டுமல்ல... நம் பண்பாட்டு அடையாளங்கள். நம் ஆன்மிக வரலாற்றை, புராணங்களை, இதிகாசங்களைக் காட்சிகளாக்கி வைத்திருக்கிற மரப்புத்தகங்கள். கொஞ்சம் அவதானித்துப் பார்த்தால், ஒவ்வொரு தேரும் ஒரு கண்காட்சிக்கூடமாக இருக்கும். தமிழகத்தில் அழகழகான தேர்கள் பல அழிந்து வருகின்றன. அவற்றை ஆவணப்படுத்துவது காலத்தின் தேவை'' - அக்கறையாகப் பேசுகிறார் கோ.ராஜாராம்.

தென்காசி மாவட்டம், முள்ளிக்குளம் என்ற கிராமத்தில் வசிக்கும் ராஜாராம், தமிழகமெங்கும் அழிந்துகொண்டிருக்கும் தேர்களைத் தேடித் தேடிச் சென்று புகைப்படங்கள் எடுக்கிறார். அவரின் புகைப்படங்களில் தேர்தாங்கி நிற்கும் சிவத்தொண்டர்களும் பூதகணங்களும் கின்னரர்களும் நாயன்மார்களும் நாட்டியத் தாரகைகளும் உயிர்கொள்கிறார்கள். மக்கி, பூச்சிகள் அரித்து, உதிரும் நிலையிலிருக்கும் தேரில் நர்த்தனமாடும் சிவ பார்வதியின் மரச்சிற்பம் பேரழகுப் பதிவாக இருக்கிறது. யாளிகளும், காமதேனுகளும், மயில்களும், குதிரைகளும் நிலைகொண்டு சிதைந்து நிற்கும் தேர்களை இழுக்கப் போராடுகின்றன. ஒளியின் பல்வேறு பரிமாணங்கள் சிற்பங்களை விதவிதமான வெளிச்சங்களில் உயிர்ப்பிக்கின்றன.

கோ.ராஜாராம்
கோ.ராஜாராம்

புளியங்குடி முருகன் கோயில் தேரில், முகம் சிதைந்த இறையுருக்களை ராஜாராம் பதிவுசெய்திருக்கும்விதம், ஆயிரமாயிரம் பக்க புனைவுக்கான துளி.

ராஜாராம், தொழில்முறைப் புகைப்படக் கலைஞர் அல்ல. தென்மாவட்டத்தில் ஒரு மென்மொருள் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறியியல் பட்டதாரி. திரைப்படங்கள் மீதும், பயணங்கள் மீதும் தீரா ஆர்வம்கொண்டவர்.

``ஒரு சகோதரி, மூன்று சகோதரர்களுடன் பிறந்தவன் நான். இரண்டு பேர் நகரங்களில் வாழ்கிறார்கள். கிராமத்தில் விவசாய நிலம் இருந்ததால், நான் முள்ளிக்குளத்திலேயே தங்கிவிட்டேன். இப்போது அண்ணன் எங்கள் கிராமத்துக்கு அருகில் ஒரு மென்மொருள் நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். வேளாண்மை செய்துகொண்டு அதை நிர்வகிக்கிறேன்.

சிறு வயது முதலே ரசனைமிக்க நண்பர்கள் அமைந்தார்கள். இலக்கியம், சூழலியல், திரைப்படம், நுண்கலைகள் சார்ந்து விவாதிப்பதும் செயல்படுவதும் இயல்பாக வாய்த்தது. இந்தியா முழுவதும் நடக்கும் திரைப்பட விழாக்களுக்குச் செல்வோம். நாங்களே திரைப்பட விழாக்கள் நடத்துவோம். காட்சிகள், வெளிச்சம், அழகியல் குறித்தெல்லாம் நிறைய பார்வைகள் அதிலிருந்துதான் கிடைத்தன. கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தின்போது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒரு பிரசாரப் பயணம் சென்றோம். அந்தப் பயணத்தின்போது என் கையில் நிகான் எஸ்.என்.2 ஃபிலிம் கேமரா இருந்தது. அந்தப் பயணம் நிறைய அனுபவங்

களைத் தந்தது. இந்தியாவின் பல பகுதிகளை புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்பு அமைந்தது. பயணங்கள் மேல் மிகுந்த ஈடுபாடும் உருவானது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிளம்பிவிடுவேன் அல்லது நானே வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வேன். கேமராவைச் சுமந்துகொண்டு இந்தியாவில் குறுக்கு வெட்டாகப் பயணித்திருக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!
சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

நகரங்கள் என்னை எப்போதும் ஈர்த்ததில்லை. கிராமங்களில் மக்களின் பண்பாட்டை, வாழ்க்கை முறையைப் பதிவு செய்வதில் எப்போதும் எனக்கு விருப்பம் உண்டு. 2016-ல் சோனி ஆல்பா 7 மார்க் 2 கேமரா வாங்கினேன். இன்றுவரை அதுவே என் அங்கமாக இருக்கிறது. தொல்லியல் சின்னங்கள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் சமணர்களின் வாழ்விடங்கள், தொல்லியல் சின்னங்களைப் பதிவு செய்திருக்கிறேன். சமணர் காலத்திலிருந்தே தேர்கள் உற்சவத்துக்குப் பயன்படுத்தப் பட்டுள்ளன. அந்த ஒற்றைச் செய்திதான் தேர்கள் மேல் எனக்கு ஆர்வத்தை உருவாக்கியது.

என் கிராமத்திலிருந்து பள்ளி செல்லும் பாதையில் இருக்கிறது, தாருகாபுரம். அந்த கிராமத்துத் தேரை நான் சிறுவயதிலிருந்தே பார்க்கிறேன். நான் பார்த்த காலத்திலிருந்து அந்தத் தேர் ஓடவில்லை. பல நாள்கள் அதைச் சாதாரணமாகக் கடந்து சென்றிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அதிலிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் தனித்தனியாக என் பார்வைக்குப் பட்டது. அந்தத் தேரே ஓர் அரிய கலைப்பொருளாகத் தெரிந்தது. ஆனால், அது படிப்படியாகச் சிதைந்துபோனதைக் கண்டேன். பத்தாண்டுகளில் முற்றிலும் அழியும் நிலைக்கு வந்துவிட்டது. அதைப் புகைப்படங்களாகவாவது ஆவணப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்தேன். அருகில் சென்று பார்க்கப் பார்க்க பெரும் வியப்பு ஏற்பட்டது. தேரைச் செய்த கலைஞனின் கற்பனையும் ரசனையும் பிரமிப்பூட்டியது. அதன் பிறகு ஊர் ஊராகத் தேரைத் தேடி அலையத் தொடங்கினேன். வாசுதேவநல்லூர் தேரை ஆவணப்படுத்தினேன். அது 2005 வரை ஓடிக்கொண்டிருந்தது. 500 ஆண்டுக்காலத் தேர். அதைச் செப்பனிட வசதியில்லாததால் அப்படியே விட்டுவிட்டார்கள். ஒரு மரத்தடியில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறது அந்தத் தேர். வீரகேரளம்புதூர், ஆழ்வார்குறிச்சி தேர்களும் பேரழகானவை. அவற்றையும் முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறேன்.

சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!
சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

தென்மாவட்டங்களில் தைப் பொங்கலும் தேரோட்டமும்தான் முக்கியத் திருவிழாக்கள். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில், கொண்டாட்டத்தில் அங்கமாகியிருக்கிறது தேர். சமூக வரலாற்றை ஆய்வு செய்தாலும் தேர் முக்கியப் பங்கு பெறுகிறது. தேர் இழுக்க உரிமை பெறுவதில் சாதிரீதியான பிரிவினைகள் ஏற்பட்டிருக்கின்றன.

பெருபாலும் நாம் தேரை அலங்காரத்தோடுதான் பார்த்திருக்கிறோம். அசைந்தாடிகள், வாச மாலைகள், மேல் விதான ஓவியங்கள், பட்டங்கள், கொடிகள், கலம்காரி ஓவியத் துணிகளாலான வண்ண வாகனமாகத்தான் தேர் எல்லோருடைய மனதிலும் சித்திரமாகியிருக்கிறது. தேர்த்திருவிழா முடிந்ததும் அலங்காரங்களைக் களைத்து, வெறுமையாக்கி, மூடிவைத்து விடுவார்கள். அலங்காரம் நீக்கப்பட்ட தேரில்தான் சிற்பக்கலைஞனின் கலைநயத்தைப் பார்க்க முடியும். கின்னரர்கள், நாட்டியக் கலைஞர்கள், பூதகணங்கள் என அவர்களின் கற்பனையில் மரபு மாறாத இறையுருவங்கள் நிறைகின்றன.

சிதைந்துகொண்டிருக்கும் மரப்புத்தகங்கள்!

கற்சிற்பங்களுக்கு நாம் தரும் வரலாற்று முக்கியத்துவத்தை, கலைப் பெருமையை மரச் சிற்பங்களுக்குத் தருவதில்லை. பயன்படுத்தப்படாத தேர்களை அருங்காட்சியகங்களில் வைத்து அதேநிலையில் பாதுகாக்க வேண்டும். அரசுக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் அந்தக் கடமை இருக்கிறது'' என்கிறார் ராஜாராம்.