Published:Updated:

அதிகரிக்கும் ‘பைக் ரேஸர்கள்’... அச்சத்தில் பொதுமக்கள்... தலைவலியில் சென்னை காவல்துறை!

பைக் ரேஸர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பைக் ரேஸர்கள்

பைக் வீலிங் கற்றுக்கொள்வதற்கு, சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள காலி இடங்களைத் தேர்வுசெய்து தங்கள் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்

அதிகரிக்கும் ‘பைக் ரேஸர்கள்’... அச்சத்தில் பொதுமக்கள்... தலைவலியில் சென்னை காவல்துறை!

பைக் வீலிங் கற்றுக்கொள்வதற்கு, சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள காலி இடங்களைத் தேர்வுசெய்து தங்கள் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்

Published:Updated:
பைக் ரேஸர்கள்
பிரீமியம் ஸ்டோரி
பைக் ரேஸர்கள்

தலைநகர் சென்னையில் இரவு நேரங்களில் பைக் ரேஸ், பைக் வீலிங் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பைக் சாகசங்களில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்துவருகிறது காவல்துறை. ஆனாலும் பைக் ரேஸில் ஈடுபடும் விபரீத இளைஞர்கள், சென்னை காவல்துறையினருக்குப் பெரும் தலைவலியாகவே மாறியுள்ளனர். இந்த பைக் சாகசங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். யார் இந்த ரேஸர்கள்... என்ன நடக்கிறது?

அபராதம்... சிறைத் தண்டனை... ஆனாலும், அசராத ரேஸர்கள்!

கடந்த 2016-ம் ஆண்டுவாக்கில், பைக் ரேஸ் சென்னையில் ஆங்காங்கே தீவிரமடைய ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில் பொதுமக்கள் ரொம்பவே பாதிப்புக்குள்ளானார்கள். இது சம்பந்தமான வழக்கு ஒன்றில் `சென்னையில் எங்கு பைக் ரேஸ் நடந்தாலும் அது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம். ஆனாலும், பொதுமக்களை அச்சுறுத்தும் ‘ரேஸ் இளைஞர்களின்’ எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடிதான் இருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில், பைக் சாகசங்களில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்திருக்கிறது காவல்துறை. அவர்களில் பலரும் 18 வயதுகூட நிரம்பாத மாணவர்கள்.

அதிகரிக்கும் ‘பைக் ரேஸர்கள்’... அச்சத்தில் பொதுமக்கள்... தலைவலியில் சென்னை காவல்துறை!

இதையடுத்து, சென்னை காவல்துறை சார்பில் விரிவான அறிவிப்பு ஒன்று வந்தது. அதில் ‘பைக் ரேஸில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் அல்லது சிறைத் தண்டனை வழங்கப்படும். மேலும், அவர்களிடமிருந்து 107-வது சட்டப் பிரிவின் கீழ் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கிக்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி, பைக் சாகசங்களில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் ஈடுபட்டால், அவர்களின் பெற்றோர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகும்கூட, இரவு நேர பைக் சாகசங்களில் பலர் ஈடுபட்டுவருகிறார்கள்.அவர்களில் பலரை, போலீஸார் தொடர்ந்து கைதுசெய்துவருகின்றனர். 18 வயதுக்கும் குறைந்த சிறார்களை, கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்துவருகின்றனர்.

“எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்க்க வேண்டும்!”

இந்த சாகசங்களில் ஈடுபடுபவர்கள் எப்படி ஒன்றிணைகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று அது சம்பந்தப்பட்ட சிலரிடம் ரகசியமாக விசாரித்தோம்:

``பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள், இன்ஸ்டாகிராம் மூலமாகவே ஒன்றிணைகிறார்கள். பைக் வீலிங் கற்றுக்கொள்வதற்கு, சென்னை புறநகர்ப் பகுதிகளிலுள்ள காலி இடங்களைத் தேர்வுசெய்து தங்கள் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். ரேஸுக்கு அவர்கள் தயாரானதும் கிழக்கு கடற்கரை சாலை, அண்ணா சாலை, பெரம்பூர் பாலம், மெரினா கடற்கரை சாலை போன்ற சென்னையின் பிரதான சாலைகளில் இவர்களின் சாகசங்களை அரங்கேற்றுகிறார்கள். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவுசெய்வதுதான் இவர்களின் பிரதான நோக்கம். அவர்கள் செல்லும் சாலையில் போலீஸாரின் வாகன சோதனை நடைபெற்றால், அந்தத் தகவலை உடனடியாக வாட்ஸ்அப்பிலும், சமூக வலைதளங்களிலும் பதிவுசெய்து, மற்ற குழு உறுப்பினர்களை ‘அலர்ட்’ செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்” என்றனர் அவர்கள்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்

ரேஸர்களுக்கு இது போன்ற பைக்குகளை ரெடி செய்து தரும் பைக் மெக்கானிக் ஒருவரிடம் பேசினோம். “25 வருடங்களாக நான் பைக் மெக்கானிக்காக இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை சாலைகளில் பைக் வீலிங் செய்யும் இளைஞர்களின் மனநிலை சற்றும் மாறவில்லை. அவர்களின் ஒரே நோக்கம் மற்றவர்கள் அவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வேண்டும் என்பதுதான். ஆனால், பொதுமக்கள் அவர்களை ஆச்சர்யமாகப் பார்க்கவில்லை, அச்சத்துடன்தான் பார்க்கிறார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதே இல்லை. வாழ்வாதாரத்துக்காக இந்த சூப்பர் பைக்குகளை நான் ரிப்பேர் பார்த்துத் தந்தாலும், நான் அறிவுரை சொல்லாத ஆட்களே இல்லை. ஆனாலும் இந்த மாயை இவர்களிடமிருந்து விலகவில்லை” என்று வருத்தப்பட்டார்.

“ரேஸர்கள் என்றாலே குற்றவாளிகள் இல்லை!”

பைக் ரேஸை ஹாபியாக வைத்திருக்கும், ரேஸ் டிராக்குகளில் மட்டுமே பைக் ஓட்டும் பலருக்கும் இந்த ‘ரோடு ரேஸர்களால்’ கெட்ட பெயர்தான். ரேஸர் குழுக்களில் ‘49 biking’ என்றைழைக்கப்படும் ராஜேஷ் என்பவரிடம் பேசினோம். ``உண்மையான ரேஸர்கள் யாரும் சாலைகளில் சாகசம் செய்ய மாட்டார்கள். நான் 30 வருடங்களாக பைக் ரேஸில் ஈடுபட்டுவருகிறேன். நான் ஒரு நாளும் அடுத்தவர்களுக்கு இடையூறாக வாகனத்தை இயக்கியது கிடையாது. இந்தப் பிரச்னைகளைக் குறைக்க, பைக் வீலிங் மீது ஆர்வம் இருப்பவர்களுக்காக அரசு தனி மைதானம் ஒன்றை ஏற்படுத்தலாம். கேரளாவில் மட்டும் தனியார் நிறுவனம் சார்பில் வீலிங் மைதானம் உள்ளது. வேறெந்த மாநிலத்திலும் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், நம் அரசு இதைப் பரிசீலிக்கலாம்” என்றார்.

ராஜேஷ்
ராஜேஷ்

இது குறித்து சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் பேசினோம். “சாலையில் ரேஸ் சென்று, நாங்கள் பிடித்து வழக்கு பதிந்திருக்கும் எவருமே டிராக்கில் ஓட்டும் பைக் வைத்திருப்பவர்கள் அல்ல. அரசு மைதானம் ஏற்படுத்தினாலும், இவர்கள் பைக்கை அங்கே ஓட்ட அனுமதி கிடைக்காது. காரணம் இதெல்லாம் ரேஸ் பைக் அல்ல. சிசி அதிகமாக இருக்கும் நார்மல் பைக்குகளில்தான் இவர்களின் ஆபத்தான சாகசம் நடக்கிறது” என்றவரிடம், ``இதை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறீர்கள்?’’ என்று கேட்டோம், “இந்தக் குழுக்களில் 95% மேல் இன்ஸ்டாகிராம் குழுக்களில்தான் இயங்குகிறது என்பதால், எங்கள் சைபர் க்ரைம் குழு மூலம் அவர்களின் முழு டேட்டா பேஸையும் எடுத்திருக்கிறோம். குழுக்களாக அவர்களை வரவழைத்து, அவர்களுக்குத் தனி கவுன்சலிங்கும், அவர்களின் பெற்றோர்களுக்குத் தனி கவுன்சலிங்கும் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். ரேஸ் அதிகம் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கே இரவு நேரங்களில் வாகன சோதனையை அதிகப்படுத்தியிருக்கிறோம். மீறுபவர்கள்மீது வழக்கும் பதிந்துவருகிறோம். வரும் காலங்களில் நிச்சயம் இந்த ரேஸ் தொல்லை குறையும்” என்றார் நம்பிக்கையோடு.

உண்மையான சாகசம் என்றால் என்னவென்று இந்த விபரீத இளைஞர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism