Published:Updated:

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... தடுக்கத் தவறியதா தமிழ்நாடு அரசு?

குழந்தை திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை திருமணங்கள்

குழந்தைத் திருமணத்துக்கு மிக முக்கியக் காரணம் சாதி! தன் மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவனைக் காதலித்துவிடுவாளோ என்ற அச்சத்தில்தான் பல குழந்தைத் திருமணங்கள் இங்கே நடக்கின்றன.

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... தடுக்கத் தவறியதா தமிழ்நாடு அரசு?

குழந்தைத் திருமணத்துக்கு மிக முக்கியக் காரணம் சாதி! தன் மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவனைக் காதலித்துவிடுவாளோ என்ற அச்சத்தில்தான் பல குழந்தைத் திருமணங்கள் இங்கே நடக்கின்றன.

Published:Updated:
குழந்தை திருமணங்கள்
பிரீமியம் ஸ்டோரி
குழந்தை திருமணங்கள்

கொரோனா பேரிடருக்குப் பிறகு இடைநின்ற மாணவர்களின் விவரங்கள் குறித்து, ‘சமக்ரா சிக்‌ஷா அபியான்’ (Samagra Shiksha Abhiyan) என்ற அரசுசார் அமைப்பு ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடந்த இந்த ஆய்வில், 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடைநின்றிருப்பது தெரியவந்தது. அதே ஆய்வில், தமிழ்நாட்டில் 511 பள்ளி மாணவிகளுக்குத் திருமணம் நடைபெற்றிருக்கும் அதிர்ச்சித் தகவலும் வெளியானது. இதில், 12-ம் வகுப்பு மாணவிகள் இருவர், 11-ம் வகுப்பு மாணவிகள் 417 பேர், 10-ம் வகுப்பு மாணவிகள் 45 பேர், 9-ம் வகுப்பு மாணவிகள் 37 பேர், 8-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர்! குழந்தைத் திருமணம் இந்த அளவுக்கு அதிகரித்திருப்பதற்கு, அதைத் தடுக்கவேண்டிய சமூக நலத்துறையில் நிலவும் கடுமையான ஆள் பற்றாக்குறையும் ஒரு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்று விசாரித்தோம்.

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... தடுக்கத் தவறியதா தமிழ்நாடு அரசு?

தேவை சமூக மாற்றம்...

“கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெறுவதற்கு, அந்த மக்களுக்கு போதிய கல்வியும், அவர்களின் வாழ்வாதாரமும் உறுதிசெய்யப்படாததே முக்கியக் காரணம்” என்று சொல்லும் குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன், சாதி உணர்வு மேலோங்கியுள்ள மாவட்டங்களிலும் குழந்தைத் திருமணம் அதிகம் நடைபெறுவதாகச் சொல்கிறார். அவர் மேலும் கூறுகையில், ``ஒருமுறை வேலூர் அருகில் ஒரு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கிராமத்துக்குச் சென்றிருந்தேன். தவறு செய்தவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த கிராமமும் என்னுடன் சேர்ந்து பணியாற்றியது. காஞ்சிபுரம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு 14 வயது சிறுமிக்குத் திருமணம் நடைபெறுகிறது என்றறிந்து அதைத் தடுப்பதற்காகச் சென்றபோது அந்த கிராமமே என்னை உள்ளே நுழையவிடாமல் விரட்டியடித்தது. பாலியல் வன்கொடுமையை எதிர்க்கும் இந்தச் சமூகம்தான், குழந்தைத் திருமணம் என்ற பெயரில் அதே தவற்றைத் தன் குழந்தைக்குச் செய்துகொண்டிருக்கிறது.

குழந்தைத் திருமணத்துக்கு மிக முக்கியக் காரணம் சாதி! தன் மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவனைக் காதலித்துவிடுவாளோ என்ற அச்சத்தில்தான் பல குழந்தைத் திருமணங்கள் இங்கே நடக்கின்றன. தமிழ்நாடு முதல்வர், ‘குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவோம்’ என்று பேசியிருந்தார். அதை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். ஒரு குற்றம் நடந்த பின்பு அங்கு சென்று விசாரிக்கும் அலுவலர்கள் தேவையில்லை. ஒரு குற்றம் நடக்கும் முன்பே அதைத் தடுக்கும் அலுவலர்கள்தான் தேவை. நமது பள்ளிகளில் வாழ்க்கைத்திறன் கல்வியையும், மதிப்பீடு கல்வியையும், பாலினம் சார்ந்த புரிதலையும் சொல்லிக்கொடுப்பதில்லை. வீட்டிலும் அது குறித்துப் பேசுவதில்லை. பிறகு எப்படிக் குழந்தைகளுக்கு இது குறித்த புரிதல் ஏற்படும்... அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சமூக மாற்றமும், சமூக ஒத்துழைப்பும் இல்லாமல் குழந்தைத் திருமணங்களை ஒழிப்பது ஒருபோதும் முடியாத காரியம்” என்று விரிவாகப் பேசினார்.

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... தடுக்கத் தவறியதா தமிழ்நாடு அரசு?

பெற்றோர்களே தவறு செய்கிறார்கள்!

குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு அரசு சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகரிடம் பேசினோம். ``கடந்த ஒரு வருடத்தில் மட்டும் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் மூன்று முறை ஆய்வுக்கூட்டம் நடத்தியிருக்கிறார். மிக விரைவில் குழந்தைத் திருமணங்கள் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். சமூக நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான விழிப்புணர்வு முகாம்களை நடத்தியிருக்கிறோம். 2022-ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக மொத்தம் 1,252 புகார்கள் வந்தன. இவற்றில், 844 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 408 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டு 303 பேர்மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

தேவநேயன்
தேவநேயன்

பல இடங்களில் பத்திரிகை அடிக்காமல், பந்தல் போடாமல், வெளியில் யாருக்குமே தெரியாமல் வீட்டுக்குள்ளேயே காதும் காதும் வைத்ததுபோல கல்யாணத்தை முடித்துவிடுகிறார்கள். இப்படி நடக்கும்போது, குழந்தைத் திருமணம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத காரணத்தால் வழக்கு பதிய முடியாத நிலை ஏற்படுகிறது. பெற்றோர்களே இந்தத் தவற்றைச் செய்கிறார்கள். சமூக நலத்துறையில் ஆள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பணி நியமனங்கள் நடைபெறவில்லை. ஆனால், ஆள் பற்றாக்குறை காரணமாக இதுவரை எந்தத் தடையும், எவ்வித தாமதமும் ஏற்பட்டது கிடையாது. இனியும் ஏற்படப்போவதில்லை. இந்தியாவிலேயே, குழந்தைத் திருமணம் தொடர்பான குற்றங்களில் போக்சோ வழக்கு பதிவுசெய்வது தமிழ்நாட்டில் மட்டும்தான். உங்கள் பகுதியில் குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் ‘1098’ என்ற சைல்டு-லைன் உதவி எண் சேவைக்கு உடனடியாகத் தகவல் தெரிவியுங்கள். ஏனென்றால், இந்த விவகாரத்தில் சமூகப் பங்களிப்பு மிக முக்கியம்” என்றார்.

ஷம்பு கல்லோலிகர்
ஷம்பு கல்லோலிகர்

என்னதான் அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகச் சொன்னாலும், கடத்த வருடத்தில் 511 பள்ளி மாணவிகள் உள்பட மொத்தம் 983 குழந்தைத் திருமணங்களும், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 408 குழந்தைத் திருமணங்களும் நடந்திருக்கின்றன. கிராமப்புறங்களில் அதிகமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல, சமூக நலத்துறையின் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான முன்னெடுப்புகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.

செய்யுமா அரசு?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism