Published:Updated:

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை
பிரீமியம் ஸ்டோரி
விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை

800

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

800

Published:Updated:
விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை
பிரீமியம் ஸ்டோரி
விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப்படமான ‘800’ போஸ்டர் வெளியானதிலிருந்து சர்ச்சைகள் வெடித்து, விஜய்சேதுபதி அந்தப் படத்திலிருந்து விலகியதில் முடிந்திருக்கிறது.

முத்தையா முரளிதரன் திறமையான கிரிக்கெட் வீரர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணிக்குள் ஒரு தமிழர் பந்துவீச்சில் இலங்கை வீரர்களைக் கடந்து கோலோச்சுவதே பெரும் சாதனை. முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் இன்னும் யாரும் அவரின் சாதனையை முறியடிக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்துவரும் சூழலில் இனி அதற்கான சாத்தியக்கூறுகள் அரிதிலும் அரிது. 44,039 பந்துகள், 2.47 எக்கானமி, 800 விக்கெட்டுகள் ஆகியவை முத்தையா முரளிதரனின் சாதனைகள். ஒரு விளையாட்டு வீரராக வாழ்க்கை வரலாற்றுப்படமெடுக்கத் தகுதியானவர்தான் முத்தையா. ஆனால் ‘800’ படத்துக்கான எதிர்ப்புக்கு வேறுபல காரணங்கள் இருந்தன.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

முரளிதரன் ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் நிலைப்பாடுகள் மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இத்தனைக்கும் முரளிதரனின் தந்தை, சிங்கள வெறியர்களால் தாக்கப்பட்டவர். இலங்கை அரசின் நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த முரளிதரன் நேரடியாக இலங்கை அரசை எதிர்க்கவோ ஈழப்போராட்டத்தை ஆதரிக்கவோ முடியாது என்பது புரிந்துகொள்ளக்கூடிய உண்மைதான். ஆனால் ‘அவர் வெறுமனே அமைதியாக இருக்கவில்லை, இலங்கை அரசை ஆதரித்தார்’ என்பதே எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ராஜபக்‌சேவுடன் அவருக்கிருந்த நெருக்கமான உறவைச் சுட்டிக்காட்டும் எதிர்ப்பாளர்கள், ‘விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட ஆண்டே எனக்கு மகிழ்ச்சியளித்த ஆண்டு’ என்று முரளிதரன் சொன்னதாகவும் விமர்சித்தனர். ஆனால் 30 ஆண்டுக்காலம் போரைச் சந்தித்த ஒரு தேசத்தில் போர் இல்லாத ஆண்டையே தான் மகிழ்ச்சியான ஆண்டு என்று குறிப்பிட்டதாக முரளிதரன் விளக்கமளித்தார்.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

இன்னொருபுறம் மலையகத்தமிழர் என்னும் அடையாளத்தின் அடிப்படையில் முரளிதரன் பிரச்னையை அணுகுபவர்களும் இருக்கிறார்கள். இலங்கை அரசுக்கு எதிராக ஈழத்தமிழர்கள் போராடியபோதும் மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்குமான இடைவெளி எப்போதுமே இருந்துவந்திருக்கிறது என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

விஜய்சேதுபதி நடிக்காவிட்டாலும் வேறு யாரையாவது நடிக்கவைத்துக்கூட ‘800’ படம் வெளியிடப்படலாம். ஆனால், ஏழு தமிழர் விடுதலை, நீட், தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு என்று சமூகப்பிரச்னைகளில் தன் கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவருபவர் என்றமுறையில் ‘விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்கக்கூடாது’ என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது. எதிர்ப்பாளர்களில் சிலர் வேண்டுகோள் விடுத்தார்கள் என்றால், சிலர் மிரட்டலே விடுத்தார்கள். எப்படியோ ‘800’ படத்திலிருந்து விலகியதன் மூலம் முத்தையா முரளிதரன் சர்ச்சை அடங்கியது.

சினிமா சர்ச்சைகளின் பரிணாம வளர்ச்சி!

கலைப்படைப்புகளைத் தணிக்கை செய்வதும் தடை விதிப்பதும் இந்திய சுதந்திரத்துக்கு முன்பே தமிழகத்தில் தொடங்கிவிட்டது. 1936-ல் சுதந்திரப் போராட்ட உணர்வைப் பேசிய ‘தியாக பூமி’ திரைப்படம், 1944-ல் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. விடுதலைப்போராட்ட காலத்தில் தேசிய உணர்வூட்டிய பல நாடகங்கள் தடைசெய்யப்பட்டு, கலைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

எந்த காங்கிரஸ்காரர்கள் பிரிட்டிஷ் காரர்களால் ஒடுக்கப்பட்டார்களோ அதே காங்கிரஸ்காரர்கள் சுதந்திரத்துக்குப் பின், ஆட்சியில் அமர்ந்து மாற்றுக்கருத்துகளைச் சொல்லும் கலைப் படைப்புகளை ஒடுக்கினார்கள். குறிப்பாகத் திராவிட இயக்கத்தவரின் நாடகங்கள், சினிமாக்கள், புத்தகங்கள்மீது கண்காணிப்பு அதிகமானது.

1952-ல் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் தங்கள் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் அந்தத் திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டுமென்றும் ஏராளமான புகார் மனுக்கள் அப்போதைய சென்னை மாகாண அரசுக்கு அனுப்பப்பட்டும் ‘பராசக்தி’ தடையிலிருந்து தப்பியது. ஆனால் அதே கருணாநிதி வசனத்தில் அதே சிவாஜிகணேசன் நடித்த ‘திரும்பிப்பார்’ படத்தில் ‘’கொள்கை முழக்கம் செய்வதற்காக, கோபுரம் ஏறி நிற்கும் தலைவர்களே, அந்தக் கொள்கையிலிருந்து எத்தனை முறை வழுக்கி விழுந்திருக்கிறீர்கள் என்று ஒருமுறை திரும்பிப் பாருங்கள்” என்ற வசனத்தைத் தணிக்கைத்துறை அதிகாரிகள் நீக்கினார்கள். கருணாநிதி காரணம் கேட்டதற்கு, ‘`ஒருகாலத்தில் இராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்திலே ஏறி நின்று சில கேள்விகளைக் கேட்டார். அவரைத்தான் நீங்கள் இந்த வசனத்தின் மூலம் கிண்டல் செய்கிறீர்கள்” என்று பதில் வந்தது.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

சினிமாவுக்கான தணிக்கையைக்கூடப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாடகத்துக்கான தணிக்கை, எம்.ஆர்.ராதா என்ற ஒரே ஒரு கலைஞனுக்காகக் கொண்டுவரப்பட்டது. ‘ராமாயணம்’ என்ற நாடகத்தைத் தடை செய்தால் அதே நாடகத்தை ‘கீமாயணம்’ என்ற பெயரில் நடத்துவார் எம்.ஆர்.ராதா. பலமுறை தடை, பலமுறை கைது. ‘நாடகத்தின் ஸ்கிரிப்டை அரசு அதிகாரிகளிடம் கொடுத்து ஒப்புதல் பெற்றபிறகுதான் நாடகம் நடத்த வேண்டும்’ என்ற நாடகத் தடைச்சட்டம் எம்.ஆர்.ராதாவுக்காகவே கொண்டுவரப்பட்டது.

இப்படித் தடையாலும் தணிக்கையாலும் பாதிக்கப்பட்ட திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளிலும் தடைகள் தொடர்ந்தன. இட ஒதுக்கீட்டை எதிர்த்தும் ஆதிக்கச்சாதியினரை பாதிக்கப்பட்டவர்களாகச் சித்திரித்தும் வெளியான ‘ஒரே ஒரு கிராமத்திலே’ திரைப்படத்தை 1989-ல் தடை செய்தது தமிழக அரசு. நீதிமன்றத்துக்குச் சென்று தடை நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான அந்தப் படத்துக்கு மத்திய அரசு விருதும் கொடுத்தது. அப்போது எட்டு தேசிய விருதுகள் தமிழ்ப்படங்களுக்குக் கிடைத்ததை ஒட்டி நடந்த பாராட்டுவிழாவில் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ படத்துக்கு மட்டும் விருது தர மறுத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

மணிரத்னத்தின் ‘இருவர்’ படம் திராவிட இயக்க வரலாற்றையே இரண்டு நபர்களின் தனிப்பட்ட வாழ்க்கையாகச் சுருக்கிச் சித்திரித்தது. அந்தப் படத்துக்குத் தணிக்கையில் சில சிக்கல்கள் ஏற்பட்டபோதும் தி.மு.கவோ அ.தி.மு.கவோ ‘இருவர்’ படத்துக்குத் தனிப்பட்ட முறையில் சிக்கல்களை ஏற்படுத்த வில்லை.

‘தணிக்கைமுறையே கலைச் சுதந்திரத்துக்கு எதிரானது’ என்ற குரலை வலுவாக ஒலிக்கும் படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் தணிக்கைத்துறைக்கு வெளியே தடையையும் தணிக்கையையும் முன்வைக்கும் குரல்கள் 20 ஆண்டு களுக்கும் மேலாகத் தமிழகத்தில் ஒலிக்கின்றன. ‘தேவர் மகன்’ திரைப்படமும் அதில் இடம்பெற்றிருந்த பாடலும் தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கமல்ஹாசன் ‘சண்டியர்’ என்ற படத்தைத் தொடங்கியபோது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி. பிறகு ‘சண்டியர்’ தலைப்பை ‘விருமாண்டி’ என்று மாற்றினார் கமல்ஹாசன்.

விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பும் பாட்டாளி மக்கள் கட்சியும் இணைந்து ‘தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தை’ நடத்தியபோது தமிழ்ப்படங்களுக்குத் தமிழில் பெயர்கள் வைக்கவேண்டும் என்றும் ‘ஆபாசம்’ இருக்கக்கூடாது என்றும் போராட்டங்களை முன்னெடுத்தன. எஸ்.ஜே.சூர்யா தன் படத்துக்கு பி.எப் என்று பெயரிட்டு அதற்கு ‘பெஸ்ட் பிரெண்ட்’ என்று விளக்கம் கொடுத்தபோது கடும் எதிர்ப்பை முன்வைத்தார்கள் சிறுத்தைகளும் பாட்டாளிகளும். சூர்யா ‘அன்பே ஆருயிரே’ என்று பெயர் மாற்றினார். அதே எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி முடிந்தபிறகு, ‘ஆபாசத்தை விதைக்கிறது’ என்று தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தடை விதித்தது.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

‘விஸ்வரூபம்’ திரைப் படம் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிப் பதாகக் கடும் எதிர்ப்பு எழுந்தது தமிழகம் அறிந்த கதை. அதேபோல் ‘துப்பாக்கி’ படத்துக்கும் பிரச்னைகள் வந்தன. சமீபகாலமாகவே ‘இந்த வசனம் எங்களைப் புண்படுத்துகிறது’, ‘இந்தத் தலைப்பு எங்களை அவமானப்படுத்துகிறது’ என்ற எதிர்ப்புக்குரல்கள் அதிகமாகவே கேட்கின்றன.

நீண்டகாலமாகவே பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், பழங் குடிகள், பெண்கள் ஆகியோர் தமிழ் சினிமாக்களில் இழிவாகச் சித்திரிக்கப் படுவதாக ஆதங்கக்குரல்கள் எழுந்தன. இப்போது அவர்கள் அமைப்பாகத் திரண்டு எதிர்ப்புகளை முன் வைக்கின்றனர். கருத்துச் சுதந்திரத்தை வலி யுறுத்தும் அதேநேரத்தில் படைப் பாளிகளின் பொறுப் புணர்வு குறித்தும் சிந்திக்க வேண்டும்.

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் நாடுகளில்கூட திரையிடப்பட்ட ‘டாவின்சி கோட்’ திரைப்படம், கருணாநிதி ஆட்சியின்போது தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக ‘டேம் 999’, ஈழப்பிரச்னைக்காக ‘மெட்ராஸ் கபே’, ‘இனம்’ ஆகிய படங்கள் தடைகளைச் சந்தித்தன. இன்னொருபுறம் ஈழ ஆதரவுக்குரல்களை முன்வைத்த ‘காற்றுக்கென்ன வேலி’, ராஜீவ் கொலை குறித்த ‘குற்றப்பத்திரிகை’ திரைப்படங்கள் பல ஆண்டுகளாகத் தணிக்கைத்துறையால் முடக்கப்பட்டன. தணிக்கைத்துறை, தானாகவே தணிக்கையைக் கையில் எடுத்துக்கொண்ட அமைப்புகளைத் தாண்டி அரசியல் காரணங்களுக்காகத் ‘தலைவா’ படத்துக்கு நெருக்கடிகள் கொடுத்தது ஜெயலலிதா அரசு. பிறகு ‘மெர்சல்’ படம் மூலம் பா.ஜ.க-வின் எதிர்ப்புகளுக்கும் இலக்கானார் விஜய்.

விஜய்சேதுபதி முதல் குஷ்பு வரை... கருத்துச் சுதந்திரம் என்றால் என்ன?

ஒருபுறம் இந்திய சினிமாக்கள் தணிக்கைகளில் சிக்கித் தவித்தால் இன்னொருபுறம் எந்தத் தணிக்கையுமில்லாமல் பாலியல் காட்சிகளையும் அரசியல் கருத்துகளையும் வெளிப்படையாக முன்வைக்கின்றன வெப்சீரிஸ்கள். ‘பாதாள் லோக்’, ‘லீலா’, ‘பேமிலிமேன்’ போன்ற வெப்சீரிஸ்கள் தைரியமாகவே அரசியல் விமர்சனங்களை முன்வைத்தன. அவற்றுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படவில்லை. ஆனால் தமிழில் ‘காட்மேன்’ என்னும் ஒரு வெப்சீரிஸ் டிரெய்லரில் இடம்பெற்ற ஒரு வசனத்துக்காக நிர்பந்தம் கொடுக்கப்பட்டு ஜீ 5 தளம் அந்த வெப்சீரிஸை நிறுத்தியது. ஒரு டிரெய்லரில் இடம்பெற்ற ஒரு வசனத்தைக்கொண்டே வெளியாகாத ஒரு படைப்பு குறித்து முடிவுக்கு வந்து தடை விதிப்பது, கருத்துச்சுதந்திரத்துக்கு விடப்பட்ட நேரடியான மிரட்டல்.

‘உன் கருத்தில் உடன்பாடில்லை. ஆனால் கருத்தை வெளிப்படுத்தும் உன் சுதந்திரத்துக்காக நான் உயிரையும் கொடுப்பேன்’ என்ற வால்டேரின் கூற்று, கருத்துச்சுதந்திரத்துக்காகப் பலமுறை பயன்படுத்தப்பட்டாலும் அதை யாரும் முழுமையாக நிறைவேற்றுவதில்லை. ஒருசமயத்தில் கருத்துச்சுதந்திரத்தின் இந்தப்பக்கம் நிற்பவர்கள் இன்னொருசமயம் அதற்கு எதிரான திசைக்குச் சென்றுவிடுவதுதான் ‘கருத்துச்சுதந்திரம்’ என்னும் வார்த்தையையே அர்த்தமிழக்கச் செய்துவிடுகிறது.

‘திருமணத்துக்கு முன்பான உறவில் ஈடுபட நேர்ந்தால் பெண்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவேண்டும்’ என்று குஷ்பு தெரிவித்த கருத்தை, ‘ஒட்டுமொத்தமாகத் தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்திவிட்டார்’ என்று போராட்டங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள், வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது விடுதலைச்சிறுத்தைகள் குஷ்புவுக்கு எதிராக இருந்தார்கள். இப்போது மனுஸ்மிருதியில் உள்ள ஆணாதிக்கம் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துகளை, ‘ஒட்டுமொத்தமாக இந்துப்பெண்களைத் திருமாவளவன் இழிவுபடுத்திவிட்டார்’ என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். இப்போது குஷ்பு எதிர்த்தரப்பில் நின்று திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

கருத்துச்சுதந்திரம் என்பது வசதிக்கேற்ப ‘பயன்படுத்தப்படுவதற்கு’ இது ஒரு சமீபத்திய, சரியான உதாரணம்!

தனிமனிதத் தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம்!

உலகில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு ஆண்களுக்கான எளிய இலக்குகள் பெண்களும் குழந்தைகளும்தான். வசவுச் சொற்கள்கூட இன்றளவும் பெண்களை மையப்படுத்தியே மொழிகளில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இணைய உலகம் அதனை மேலும் விரிவடைய வைத்திருக்கிறது. மிகவும் எளிதாக இணையத்தில் ஒரு பெண்ணுக்கு எதிரான வசவுச்சொற்களை வீசும் வாய்ப்பினை இணையத்தின் கட்டற்ற சுதந்திரம் வழங்குகிறது. கட்சி பேதமின்றி அனைத்துப் பெண்களும் இதில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேசியப் பெண்கள் தீர்ப்பாயத் தலைவரான ரேகா ஷர்மாவே இப்படியான வசவுச்சொற்களைப் பெண்களுக்கு எதிராகப் பயன்படுத்துகிறார் என்பதுதான் துயர்மிகுந்த அநீதி.

பெண்கள்மீதான அச்சுறுத்துல்களுக்கு அடுத்தபடியாக பிரபலங்களின் குழந்தைகளைப் பாலியல் ரீதியாக அச்சுறுத்தும் கோழைத்தனம் சமீபகாலமாகப் பெருகிவருகிறது. மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்தவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப். இரண்டாம் முறையாக மோடி வென்றதும், இன்ஸ்டாகிராமில் அனுராக் மகளின் படங்களைப் பதிவிட்டுப் பாலியல் தாக்குதலை இந்துத்துவவாதிகள் தொடுத்தனர்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடாத தோனிக்குப் பாடம் புகட்ட என்று, தோனியின் ஐந்து வயதுக் குழந்தை குறித்து சமூக வலைதளங்களில் பாலியல்ரீதியில் தரக்குறைவாக எழுதியிருக்கிறார்கள் சில சமூகவிரோதிகள். சில வாரங்களுக்கு முன்னர், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தியின் மகளுக்கும் இப்படியான பாலியல் அச்சுறுத்தல்கள் நிகழ்ந்தன.

இதன் நீட்சியாக விஜய்சேதுபதி மகளின் புகைப்படத்தை வெளியிட்டு, இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் எழுதியிருந்தார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த நபர் பல பிரபலங்களுக்கு இப்படியான ட்வீட்கள் இட்டிருக்கிறார். கொரோனா காரணமாக வேலையிழந்ததால் உளவியல்ரீதியில் பாதிக்கப்பட்டு இந்தத் தவற்றைச் செய்துவிட்டதாக அந்த நபர் பேட்டியளித்திருக்கிறார். அவரின் தாயாரும் கண்ணீர்மல்க பேட்டியளித்திருக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மிரட்டல்கள், இணையத்தில் பாலியல் தொடர்பான வீடியோக்கள் அப்லோடு செய்வது போன்றவை குற்றங்கள் எனத் தெரிந்தாலும், இணையம் தரும் சுதந்திரம் அதை சோதித்துப் பார்க்க வைக்கிறது. யார் நம்மைப் பிடிக்கப்போகிறார்கள் என்னும் அசட்டுத்துணிச்சல்தான் இத்தகைய பிரச்னைகளின் ஆணிவேர். அடுத்து பெண்களை சம உயிர்களாக மதிக்காத போக்கு இதில் பெரும்பங்கு வகிக்கிறது.

ஒருவரை எதிர்ப்பதற்காக, விமர்சிப்பதற்காக அவர் குடும்பத்துப் பெண்களையும் குழந்தைகளையும் அவமானப்படுத்துவது, தாங்கள் நம்பும் அரசியலையும் உயர்வாக நினைக்கும் பண்பாட்டையும் அவமானப்படுத்துவதுதான் என்பதை இவர்கள் எப்போது உணரப்போகிறார்கள்?

- கார்த்தி