கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

காலநிலை மாற்றம் என்கிற டைம்பாம்!

உலகத் தலைவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உலகத் தலைவர்கள்

- நாராயணி சுப்ரமணியன்

மனிதர்களை வீடுகளுக்குள் முடக்கிவிட்டு, வீதிகள் முழுக்க மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் இந்த நேரத்தைவிட, காலநிலை மாற்றத்தைக் குறித்து விவாதிக்கப் பொருத்தமான தருணம் ஏது?

1992-ல் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நா கூட்டமைப்பு அமைக்கப்பட்டதிலிருந்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி விவாதித்துவருகிறார்கள். 2015-ல் காலநிலை மாற்றத்துக்கான பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானபோது, உலகளாவிய சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்காமல் தடுப்பதற்கு எல்லா முயற்சிகளையும் எடுக்க உலக நாடுகள் உறுதியேற்றன.

பாரீஸ் ஒப்பந்தம் எந்த அளவுக்குத் தங்கள் நாடுகளில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்வதோடு, அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான புதிய இலக்குகளை நிர்ணயிக்கவேண்டும். அந்த வகையில், பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானபிறகு முதல் ஐந்தாண்டு ஆய்வு மாநாடு 2020-ல் நிகழ்ந்திருக்கவேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இது தள்ளிப்போனது. Conference of Parties - 26 (COP26) என்று அழைக்கப்படும் இந்தக் காலநிலை பன்னாட்டு உச்சி மாநாடு, ஸ்காட்லாந்தின் க்ளாஸ்கோ நகரில் அக்டோபர் 31 முதல் நடந்துவருகிறது.

‘சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதற்கு, உலக நாடுகள் நான்கு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்’ என்று மாநாட்டு அமைப்புக் குழு இந்த மாநாட்டிற்கு முன்னதாகக் கூறியிருந்தது. நிலக்கரிப் பயன்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுதல், காடுகளின் அழிப்பைக் குறைத்தல், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் முதலீடு செய்தல் ஆகியவையே அவை.

இதைப் பற்றி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ‘`சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்த மாநாட்டின் முக்கியப் பேசுபொருள்கள் இவைதான்: கரி, கார்கள், காசு, மரங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

காலநிலை மாற்றம் என்கிற டைம்பாம்!

இந்த மாநாட்டில் முதல் மூன்று நாள்கள் முக்கியமானவை. உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி, தங்கள் நாட்டின் சூழல் குறித்துப் பல முக்கிய விஷயங்களை முன்வைப்பார்கள். அதன்பிறகு அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகள் கூடி விவாதித்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புதின் ஆகிய இருவரும் மாநாட்டில் கலந்துகொள்ளாதது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. உலகளாவிய கரிம உமிழ்வில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. சீன அதிபர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும். 2060-ம் ஆண்டுக்குள் நிகர உமிழ்வுகளை பூஜ்யமாக்குவதாக (Net zero emissions) சீன அதிபர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் சீனா கொஞ்சம் முயற்சி செய்தால் இன்னும் வேகமாகவே நிகர உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தலாம் என்று காலநிலை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். கரிம உமிழ்வுகளின் உலகளாவிய பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவும் இதேபோன்று 2060-ம் ஆண்டு இலக்கை அறிவித்திருக்கிறது.

மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, 2070-ல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என்று உறுதி அளித்துள்ளார். ‘2030-ம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை 500 கிகா வாட்டாக இந்தியா அதிகரிக்கும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த எரிசக்தியில் 50% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் பெறப்படும். அதே ஆண்டுக்குள் கரிம உமிழ்வு 1 பில்லியன் குறைக்கப்படும். பொருளாதாரத்தில் கரிமத்தின் சார்பு 45% குறைக்கப்படும்’ என்றும் தெரிவித்துள்ளார். உலகளாவிய உமிழ்வுகளின் பட்டியலில் சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, முதல்முறையாக நிகர பூஜ்ய உமிழ்வைப் பற்றிய ஓர் இலக்கை அறிவித்துள்ளது. அதிகமாக நிலக்கரியைப் பயன்படுத்தும் நாடான இந்தியா, நிலக்கரிப் பயன்பாட்டிலிருந்து விடுபட்டு எவ்வாறு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி நகரப்போகிறது, அதற்கான திட்டங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்று உலகளாவிய ஆற்றல் நிபுணர்கள் ஏற்கெனவே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். இதில் இப்போதைக்கு சூரிய ஆற்றல் முக்கியப் பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

2050-ல் அமெரிக்கா நிகர பூஜ்ய உமிழ்வுகள் இலக்கை எட்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் பதவியில் இருந்தபோது, பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பிறகு அதிபரான ஜோ பைடன், அமெரிக்காவை மீண்டும் பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைத்தது முக்கியமான நிகழ்வாகக் கருதப்பட்டது. உலக கரிம உமிழ்வுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்கா சர்வதேச அரசியலில் அதீத செல்வாக்கு உடையது என்பதால், அதன் நிலைப்பாடு உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

2030-ம் ஆண்டுக்குள் காடு அழிப்பை முற்றிலுமாக நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 100 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. காடு அழிப்பு தொடர்பான முந்தைய ஒப்பந்தங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாத நிலையில் இந்த ஒப்பந்தம் என்ன ஆகும் என்ற சந்தேகமும் இருக்கிறது.

இந்த மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டெரஸ் நிகழ்த்திய உரை முக்கியமானது. ‘`சட்டென்று பார்த்தால் காலநிலைக்கான தீர்வு கண்டுபிடிக்கும் பாதையில் நாம் முன்னேறிக்கொண்டிருப்பதாகத் தோன்றும். ஆனால், நாம் இன்னும் நெடுந்தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. இப்போதைய சூழலில் காலநிலையை நாம் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை ஒருவிதமான மாயைதான். உண்மை நம் கண்முன் நிற்கிறது. நாம் காலநிலை மாற்றத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அது நம்மைத் தடுத்து நிறுத்திவிடும்’’ என்று அவர் பேசியிருக்கிறார். ‘`நீங்கள் நம்பிக்கையாக இருக்கமுடியாது, நீங்கள் பீதியடையவேண்டும்’’ என்று அனைவரையும் செயல்பாட்டுக்குள் இழுத்துவருகிற காலநிலைச் செயற்பாட்டாளர் க்ரெட்டா துன்பர்க்கின் உரையை இது நினைவுபடுத்தியது.

‘`250 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த க்ளாஸ்கோ நகரில்தான் ஜேம்ஸ் வாட் நிலக்கரியால் இயங்கும் நீராவி இன்ஜினைக் கண்டுபிடித்தார். இன்று இதே நகரில் எரிபொருளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்’’ என்ற பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், காலநிலை மாற்றத்தை ஒரு டைம்பாமுடன் ஒப்பிட்டிருக்கிறார்.

உலகளாவிய காலநிலை மாநாடுகளில் தீவு நாடுகளின் உரிமைக்குரல்கள் எப்போதுமே ஒலித்தபடி இருந்திருக்கின்றன. வளர்ந்த நாடுகளின் பேராசையால் தங்களது வாழ்வுரிமைகள் நசுக்கப்படுவதைத் தீவு நாடுகள் பதிவு செய்தபடியே இருக்கின்றன. இந்த மாநாட்டிலும் பல தீவு நாடுகளின் தலைவர்கள் தங்களது அவலச் சூழலைக் காத்திரமான மொழியில் முன்வைத்திருக்கிறார்கள். ‘`யார் கிளம்பலாம், யார் கைவிடப்படுவார்கள் என்ற இறுதி முடிவை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது, ஏனென்றால், ரயில் கிளம்பப்போகிறது’’ என்று கூறினார் பார்படோஸின் பிரதமர் மியா அமோர் மாட்லி.

பலாவ் தீவின் அதிபர் சுராங்கெல் விப்ஸ் ஜூனியரின் பேச்சு பலரின் மனசாட்சியை உலுக்கியிருக்கக்கூடும். ‘`காலநிலை மாற்றத்தால் நாங்கள் அழிந்துகொண்டிருக்கிறோம். மெதுவான, வலிநிறைந்த ஒரு மரணத்தில் எந்த கண்ணியமும் இல்லை. இப்படிச் செய்வதற்குப் பதிலாக ஒரு வெடிகுண்டை வீசி எங்களைக் கொன்றுவிடுங்கள்’’ என்று தனது நாட்டின் நிலையை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

காலநிலை மாற்றம் என்கிற டைம்பாம்!

கரிம உமிழ்வுகளை அதிகமாக வெளியிடும் சில நிறுவனங்களும் மாநாட்டின் அங்கமாக இருப்பது, அதிகமான கரிம உமிழ்வுகளை வெளியிடும் உணவுகள் பரிமாறப்பட்டது, பிரதிநிதிகள் பலரும் பிரைவேட் ஜெட்டில் வந்து இறங்கியது போன்ற சில விஷயங்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.

இதுபோன்ற மாநாடுகளில் ஏதாவது பேசிவிட்டுக் கலைந்து செல்வார்களே தவிர, தீர்வுகளில் யாரும் முனைப்புடன் இருப்பதில்லை என்பதே காலநிலைச் செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு. இதற்குப் பதில் சொல்கிறார்களோ இல்லையோ, குடிமக்களின் எதிர்காலத்தைக் கருதியாவது செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருக்கின்றன.

உலக நாடுகள் கூடும் மாநாடுகளில் வழக்கமாகக் காணப்படும் குறைகூறல்கள், அரசியல் புறக்கணிப்பு, குழுச்செயல்பாடு போன்ற எல்லாமே இந்த மாநாட்டிலும் காணப்பட்டன. ஆனால் அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்படவேண்டிய நேரம் இது. காலநிலை அச்சுறுத்தல் அடுத்த கட்டத்தை எட்டிவிடாமல் இருக்கவேண்டுமானால், உலகத் தலைவர்கள் ஏதாவது ஒரு ஆவணத்தில் கையெழுத்திடும் ஒவ்வொரு முறையும் காலநிலை மாற்றத்தை நினைத்துப் பார்க்கவேண்டும்.