Published:Updated:

மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!

மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!
பிரீமியம் ஸ்டோரி
News
மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!

, ‘10 கோடி ரூபாயில் முப்பது சதவிகிதம் கமிஷனாகத் தந்தால் மட்டுமே பில் கிளியரன்ஸ் ஆகும்’ என்று ஹோட்டல் நிறுவன உரிமையாளரிடம் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார்.

சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீசியிருக்கும் குண்டு, அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டியில், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில், கொரோனா பேரிடர் காலங்களில் மருத்துவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு முதல் தங்கும் விடுதிகள் வரை அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளது” என்று வெளிப்படையாகக் குற்றம்சாட்டினார். 2020 ஏப்ரல் தொடங்கி, 2021 பிப்ரவரி மாதம் வரை கொரோனாவைக் காரணம் காட்டி பல கோடி ரூபாயை அ.தி.மு.க அரசு செலவழித்துள்ளதால், இந்தக் குற்றச்சாட்டு அரசியல் அரங்கை கிடுகிடுக்கவைத்திருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு ஏன் வந்தது... உண்மையிலேயே ஊழல் நடைபெற்றிருக்கிறதா? பின்னணி அறிய களமிறங்கினோம்.
மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

உணவில் ஆரம்பித்த கமிஷன்!

2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தமிழகத்தில் பரவத் தொடங்கியதுமே, தொற்றாளர்களை முதலில் தனிமைப்படுத்தும் வேலையைத் தீவிரமாகச் செய்தது அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு. அவர்களுக்குத் தேவையான உணவுகளும் அரசு செலவி லேயே வழங்கப்பட்டன. சரவணபவன், ஆனந்தபவன், சங்கீதா உள்ளிட்ட உயர்தர உணவகங்களிலிருந்து உணவுகள் தருவிக்கப்பட்டன. சத்தான உணவுப் பொருள்களை நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று அந்த மெனுவையும்கூட அரசே தயார்செய்தது. தொடக்கத்தில் ஒரு நபருக்கு, ஒரு நாள் முழுமைக்குமாக உணவுக்கு மட்டும் 450 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. சென்னையில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதும், உணவு சப்ளை அதிகமானது. ஹோட்டல் நிறுவனங்களுடன் பேசி உணவுக்கான தொகையை 350-ஆகக் குறைத்தனர். தொற்று எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க உணவகங்களிடம் தங்களுக்கான கமிஷனைப் பேசிக் கறார் காட்டியிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டோடு தற்போது விவகாரம் வெடித்திருக்கிறது.

இந்த விவகாரம் அரசல்புரசலாக வெளியானபோதே, 2.5.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘லஞ்சம் கேட்கும் சென்னை மாநகராட்சி! - குமுறும் ஹோட்டல் நிர்வாகம்’ என்கிற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். கொரோனா பேரிடர் காலத்தில், சென்னை மாநகராட்சிக்கு 10 கோடி ரூபாய்க்கு உணவு சப்ளை செய்த ஆர்.எஸ்.எம் ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அதற்கான தொகையை மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் இழுத்தடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரும், கடந்த ஆட்சியின் தலைமையும் நல்ல நெருக்கம் என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும், அப்போதிருந்த சென்னை மாநகராட்சி உயரதிகாரி ஒருவர், ‘10 கோடி ரூபாயில் முப்பது சதவிகிதம் கமிஷனாகத் தந்தால் மட்டுமே பில் கிளியரன்ஸ் ஆகும்’ என்று ஹோட்டல் நிறுவன உரிமையாளரிடம் ஓப்பனாகச் சொல்லியிருக்கிறார். ‘அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை இந்த கமிஷன் தொகையைப் பிரிக்க வேண்டியிருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார். கோபமான அந்த உணவக உரிமையாளர் சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புத்துறை என அனைவருக்கும் புகார்களை அனுப்ப, விவகாரம் விஸ்வரூபமானது. இதை முதலில் ஜூனியர் விகடனில் செய்தியாக்கியிருந்தோம். அந்த விவகாரங்களின் தொடர்ச்சிதான், மா.சுப்பிரமணியன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!

ஒரு நாளுக்கு ரூ.4 லட்சம் கொள்ளை... டெண்டர் எடுத்த அ.தி.மு.க எம்.எல்.ஏ!

நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சி உயரதிகாரிகள் சிலர், “கொரோனா தொற்றுக் காலத்தில் இரண்டுவிதமாகச் செலவுகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கும், மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவமனைகளுக்கும் தனித்தனியாகச் செலவுகள் செய்யப்பட்டன. இந்த இரண்டிலுமே முறைகேடுகள் நடந்துள்ளன. மாநகராட்சியின் மூலம் ஆரம்பத்தில் சில முன்னணி ஹோட்டல்களில் உணவுக்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டன. அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் கேட்டு நச்சரித்திருக்கி றார்கள். அதாவது, மாநகராட்சி கொடுக்கும் உணவு ஆர்டரில் 30 சதவிகிதம் கமிஷனாக வேண்டும் என்று ஓப்பனாகவே கேட்டுள்ளனர். ஊரடங்கால் தொழில் செய்வதே கடினமாக இருந்த நிலையில், கமிஷனைக் கொடுத்தாவது தொழிலை நடத்தலாம் என்று சில ஹோட்டல் நிர்வாகங்கள் அதற்கும் ஒப்புக்கொண்டன. ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10,000 உணவுப் பொட்டலங்கள் வரை விநியோகம் செய்யப்பட்டன. ஓர் உணவுப் பொட்டலத்துக்கு 40 ரூபாய் கமிஷனாக, ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் வரை கொள்ளைபோனது” என்று சொல்லி மலைக்கவைத்தார்கள்.

தி.மு.க ஆட்சி வந்தவுடன், இந்த விவகாரத்தை சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ககன் தீப் சிங் பேடி கையிலெடுத்திருக்கிறார். முதல் வேலையாக, குற்றச்சாட்டை எழுப்பிய ஆர்.எஸ்.எம். ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை விடுவிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மற்றொரு நிறுவனத்தைப் பற்றிய தரவுகளையும் சேகரிக்க உத்தரவிட்டிருக்கிறாராம். மாநகராட்சியின் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் நம்மிடம், “கொரோனா ஆரம்ப கட்டத்தில், சென்னை மாநகராட்சிப் பகுதியிலிருந்த நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஒரு நிறுவனம் உணவு சப்ளை செய்தது. அப்போது சென்னையில் கோலோச்சிய அ.தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர்தான் இந்த உணவு ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு எடுத்துக்கொடுத்தார். அதேபோல, தனக்கு நெருக்கமான சில உணவகங்கள் மூலம் பெருமளவில் உணவு விநியோகம் செய்தார். சமீபத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியிருப்பது அந்த எம்.எல்.ஏ-வின் ஒப்பந்த விவகாரங்களைப் பற்றித்தான்” என்று அதிரவைத்தார்.

மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!
மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!

மாட்டிக்கொண்ட அதிகாரி!

மாநகராட்சிக்குக் கொஞ்சமும் சளைக்காத வகையில், சுகாதாரத் துறையிலும் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள், அந்தத் துறையைச் சார்ந்த நேர்மையான அதிகாரிகள். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் வரும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களில் சிலர், கோடிகளில் குளித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. சென்னை மாவட்டத்துக்கு மட்டும், 2020-ம் ஆண்டு, மார்ச் முதல் 2021 ஏப்ரல் வரை 103 கோடி ரூபாய் உணவுக்காகச் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தொகையில், அதிகாரிகளுக்கும் ஆளும்தரப்புக்கும் 30 சதவிகிதம் கமிஷனாக மட்டுமே சென்றிருக்கிறதாம்.

இது குறித்து உணவகங்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, “மாநில சுகாதாரத்துறையின் கீழுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்ற நோயாளிகளுக்கு, ஒரு உணவகத்தின் மூலமே உணவு சப்ளை நடந்துள்ளது. உணவுப் பொட்டலம் ஒன்றுக்கு 40 ரூபாய் வரை கமிஷனாக வாங்கியுள்ளார்கள். அந்தத் தொகை, நேரடியாகச் சுகாதாரத்துறையின் உச்சப் புள்ளிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது” என்று கூறி அதிர்ச்சியடைய வைத்தனர். இந்தச் சூழலில்தான், சமீபத்தில் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சோமசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “சமீபத்தில், கொரோனா தொற்று சென்னையில் அதிகரிக்கவும், ஏற்கெனவே உணவு விநியோகத்தில் ஈடுபட்டுவந்த நிறுவனம் மூலமே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. ‘உணவுகள் தரமில்லாமல் விநியோகம் செய்யப்படுகின்றன’ என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன், அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சோமசுந்தரத்தை அழைத்துக்கொண்டு உணவு தயாராகும் கூடத்தை ஆய்வுசெய்தார். அப்போது, தரம் குறைந்த பொருட்களால் உணவுகள் தயார் செய்யப்படுவதை அறிந்து அதிர்ச்சியான அமைச்சர் அதுகுறித்து சோமசுந்தரத்திடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் மழுப்பலாகப் பதிலளிக்கவும், கடுப்பான அமைச்சர் விசாரணை நடத்தச்சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதன் பிறகே சோமசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்” என்றார்கள்.

மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!
மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!
மிரளவைக்கும் கொரோனா கொள்ளை!

தங்கும் இடங்களில் கமிஷன்... ஏப்பம்விட்ட அதிகாரிகள்!

உணவு விஷயத்தில்தான் இத்தனை முறைகேடுகள் என்றால், தங்குமிடங்களிலும் தகிடுதத்தங்களை அரங்கேற்றியிருக்கிறது சில அதிகாரிகள் கூட்டணி. “கடந்த ஆண்டு இறுதிவரை சென்னையில் மட்டும் 8,000 ஹோட்டல் ரூம்களை மாநகராட்சியும் சுகாதாரத்துறையும் புக் செய்துள்ளன. முன்களப் பணியாளர்களாக இருந்த டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டவர்களுக்கு உயர்தர ஹோட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டன. இதற்காக ஹோட்டல் நிர்வாகத்திடம் அதிகாரிகள் பெரும் பேரத்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு அறைக்கு வாடகையாக 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 999 ரூபாயில் முப்பது சதவிகிதப் பணத்தை கமிஷனாக அதிகாரிகள் பெற்றுக்கொண்டபோதும், பில்களில் 999 ரூபாய் என்றே குறிப்பிடச் சொல்லியிருக்கிறார்கள். கொரோனா காலத்தில் பிசினஸ் நடத்துவதே சிரமம் என்பதால், ஹோட்டல் நிர்வாகத்தினர் சிலர் கொடுப்பதை வாங்கிக்கொண்டு மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ‘மிகத் தெளிவாக’ நடைபெற்றிருக்கும் இந்த முறைகேட்டில், 8,000 அறைகளுக்கு முப்பது சதவிகிதம் என்கிற கணக்கில், ஒரு பெரும் தொகையைச் சுருட்டியிருக்கிறார்கள்” என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

இது ஒருபுறமென்றால், மற்றொருபுறம் அறைகளையே வாடகைக்கு எடுக்காமல், ஹோட்டலில் பில்களை மட்டும் வாங்கி அதன் மூலம் அரசுப் பணத்தைக் கபளீகரம் செய்துள்ளதாகவும் பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னை கோயம்பேட்டிலுள்ள ஹோட்டல் ஒன்றும், திருத்தணியிலுள்ள ஹோட்டல் ஒன்றும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ககன் தீப் சிங் பேடி
ககன் தீப் சிங் பேடி

போக்குவரத்திலும் போலி பில்!

கொரோனா பரவல் சென்னையில் உச்சத்திலிருந்தபோது, வெளிமாவட்டங் களிலிருந்து டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை உதவியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப் பட்டனர். அவர்களை தினமும் தங்கும் விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர, ஏசி வசதியுள்ள பேருந்துகள் முதல் மினி பஸ்கள் வரை அரசு பேருந்துகள் சும்மா இருந்தபோதும், அவற்றைப் பயன்படுத்தாமல் தனியார் வாகனங்களைப் பயன்படுத்தியிருக் கிறார்கள். இந்த விவகாரத்திலும் முறைகேடு நடந்துள்ளதாம். குறிப்பாக ஒரே மாதத்தில், 8 கோடி ரூபாய் வாகனக் கட்டணமாகச் செலுத்தப் பட்டதாக கணக்கு காட்டியுள்ளார்கள் சுகாதாரத்துறையினர். இதில் பல பில்கள் போலியானவை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

நம்மிடம் பேசிய சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர், “கொரோனா பாதித்த பகுதிகள் மற்றும் வீடுகளுக்குத் தகரம் அடிக்கும் வேலையை ஒரு நிறுவனம் கையிலெடுத்தது. அந்த நிறுவனம் அப்போதைய மூத்த அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான நிறுவனம். ஒரு வீட்டுக்குத் தகரம் அடிக்க 1,700 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், ஒரு வீட்டுக்கு அடிக்கும் தகரத்தைவைத்து பத்து வீடுகளுக்குக் கணக்கு காட்டியிருக்கிறது அந்நிறுவனம். தகரமடிக்கும் பணியிலும் பெரும் ஊழல் நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் இருந்த பவர்ஃபுல் அதிகாரி ஒருவரும், தற்போது பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவரும் பெரும் தொகையைச் சுருட்டியிருக்கிறார்கள்” என்றனர்.

உணவில் ஆரம்பித்து, தங்கும் விடுதிகள், வாகன ஒப்பந்தம், தகரம் அடிக்கும் பணி ஒப்பந்தம் என கொரோனாகால முறைகேடுகள் வரிசை கட்டுகின்றன. இந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சிலர் ஆதாரங்களோடு புகாரளித்துள்ளனர். இந்தப் புகார்கள்மீது தனியாக ஒரு குழு அமைத்து விசாரணையைத் தொடங்க லஞ்ச ஒழிப்புத்துறையும் முடிவெடுத்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்களில் விசாரித்தோம். “இந்த கொரோனா பேரிடர் முறைகேட்டில் பெரும் டீமே சிக்கப்போகிறது. குறிப்பாக, அப்போதைய சுகாதாரத்துறையின் முக்கியப்புள்ளிகள் இருவர், சென்னை மாநகராட்சியின் சில அதிகாரிகள் எனப் பலரும் எங்கள் ரேடாரில் வந்துள்ளனர். அவர்களைத் தேவைப்படும்போது விசாரிக்கவுள்ளோம். முறை கேட்டில் உண்மையாகத் தொடர்புள்ளவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யவும் ஆட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால், விசாரணையும் சூடுபிடித்துள்ளது” என்றனர்.

பூமிக்கடியில் புற்றுபோல சத்தமில்லாமல் கொரோனா ஊழல் எங்கும் கிளை விரித்திருக்கிறது. அதன் பின்னணி நம்மை மிரளவைக்கிறது. அரசு, தனியாக ‘ஸ்பெஷல் டீம்’ ஒன்றை நியமித்து விசாரித்தால் மட்டுமே ஊழல் பெருச்சாளிகளை அம்பலப்படுத்தவும் தண்டிக்கவும் முடியும். என்ன செய்யப்போகிறது அரசு?

****

‘‘அமைச்சரை சரிகட்டுங்க!’’

உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோமசுந்தரம் தரப்பு, சென்னை மாவட்ட அமைச்சர் ஒருவரைச் சந்தித்து, ‘‘மாதம்தோறும் கடந்தமுறை கொடுத்ததுபோலவே ஐம்பது ‘எல்’ கொடுத்துவிடுகிறோம். இப்போது உணவு சப்ளை செய்யும் நிறுவனத்துக்கே தொடர்ந்து நீங்கள் ஆதரவு கொடுங்கள்’’ என்று முதலில் பேரம் பேசியதாம். இந்தப் பேரத்தால் கடுப்பான அமைச்சர், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சோமசுந்தரம் பற்றிப் போட்டுக்கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் உணவுப் பாதுகாப்பு அதிகாரி சோமசுந்தரத்தைக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, தி.மு.க கூட்டணியிலுள்ள சிறுபான்மை சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும், தி.மு.க-வின் மூத்த எம்.பி ஒருவரும், சோமசுந்தரம் தரப்பிடம் ‘நீங்க எப்படியாவது பழைய உணவகத்துக்கே சப்ளை ஆர்டரை வாங்கிக் கொடுக்கப் பாருங்க. அமைச்சரை எப்படியாவது சரிக்கட்டுங்க’ என்று பேசியிருக்கிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அந்த அமைச்சரின் பார்வைக்குக் கொண்டுபோயிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.