Published:Updated:

கொரோனா தடுப்பூசி... பூஸ்டர் டோஸ் என்பது மோசடியா?

உலகின் மிக ஏழ்மையான 100 நாடுகளில் இன்னமும் 40 சதவிகிதம் பேருக்குக்கூட முதல் தவணை தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை

பிரீமியம் ஸ்டோரி

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்து சாப்பிட்டுவிட்டு வந்து பசியில் இருப்பவர்களுக்கு போதனை செய்யும் இரக்கமற்ற காரியத்தை மேற்கு உலகம் செய்துகொண்டிருக்கிறது. இரண்டு தவணை கொரோனாத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் என்ற பெயரில் மூன்றாவது தவணை தடுப்பூசி போடும் விவகாரம்தான் அது.

இரண்டு தவணைகள் கொரோனாத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பலரும் ‘கொரோனாவை வென்றுவிட்டோம்' என நிம்மதியில் வாழ்கிறார்கள். ஆனால், நிறைய பேருக்குத் தடுப்பூசி போட்டபிறகும் பல ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத் தொற்று தாறுமாறாக அதிகரித்தது. குறிப்பாக, பிரிட்டனில் இரண்டு தவணை தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்கள் 68 சதவிகிதம் பேர். ஆனால், அங்கு கடந்த இரண்டு மாதங்களாகப் புதிய நோயாளிகள் அதிகம் கண்டறியப்படுகிறார்கள். இறப்புகளும் அதிகம். பிரான்ஸில் 76 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு முடித்துவிட்டனர். ஆனால், அங்கும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 66 சதவிகித மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி போட்டு முடித்திருக்கும் ஜெர்மனியிலும் இதே நிலை.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

இந்தச் சூழ்நிலையில்தான் பல நாடுகள் மூன்றாவது தவணை பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுவருகின்றன. இதற்கு அவர்கள் ஆதாரமாகக் காட்டுவது, புகழ்பெற்ற `லேன்செட்' மருத்துவ இதழில் வெளியான ஓர் ஆய்வு. ‘‘மூன்றாவது தவணை பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்கிறவர்களுக்கு கொரோனா தீவிரமாகும் ஆபத்து 92 சதவிகிதம் குறைகிறது. மருத்துவமனையில் சேர வேண்டிய கட்டாயமும் 93 சதவிகிதம் குறைகிறது. கொரோனா காரணமாக மரணமடையும் ஆபத்தும் 81 சதவிகிதம் குறைகிறது'' என்றது அந்த ஆய்வு.

இதைப் பார்த்துவிட்டு பல நாடுகள் பூஸ்டர் டோஸ் கொடுக்கத் தொடங்கிவிட்டன. ‘இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்களில் குறைந்துவிடுகிறது. பூஸ்டர் டோஸ் அதை மீண்டும் அதிகரிக்கிறது' என்று சொல்கின்றன இந்த நாடுகள். இன்றைய தேதியில் 36 நாடுகள் பூஸ்டர் டோஸ் போட்டு வருகின்றன. ஜெர்மனி, ஆஸ்திரியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகள்தான் இதை முதலில் ஆரம்பித்தன. கொரோனாத் தொற்றில் டாப் இடத்தில் இருக்கும் அமெரிக்காவே பூஸ்டர் டோஸ் போடுவதிலும் முன்னணியில் உள்ளது. அங்கு இதுவரை 1.24 கோடிப் பேருக்கு மூன்றாவது தவணை போடப்பட்டுவிட்டது. துருக்கி 1.19 கோடிப் பேருக்குப் போட்டிருக்கிறது. சிலி, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

கொரோனாத் தடுப்பூசி தொடர்பான பரிந்துரைகளை அதிகாரபூர்வமாகத் தர வேண்டிய அமைப்பான உலக சுகாதார நிறுவனம், ‘பூஸ்டர் டோஸ் போடுவது என்பதே ஒரு மோசடி வேலை. அதை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று எச்சரிக்கிறது.

‘‘உலகின் மிக ஏழ்மையான 100 நாடுகளில் இன்னமும் 40 சதவிகிதம் பேருக்குக்கூட முதல் தவணை தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் அதைச் செய்வதற்கே எங்களுக்கு 55 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. வறிய நாடுகளில் முதல் தவணை தடுப்பூசி போடுவதைவிட ஆறு மடங்கு அதிகமாக பூஸ்டர் டோஸை பணக்கார நாடுகள் தினம் தினம் போடுகின்றன. எத்தனை பேருக்குத் தடுப்பூசி போடுகிறோம் என்பதைவிட, யாருக்குத் தடுப்பூசி போடுகிறோம் என்பதே முக்கியம். பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை வாங்கிக் குவிக்காமல், ஏழை நாடுகளுக்கு அவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும்'' என்கிறார், உலக சுகாதார நிறுவன டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ்.

தடுப்பூசி மருந்து
தடுப்பூசி மருந்து

‘ஏழை நாடுகளுக்கு விட்டுத்தர மனமில்லை என்றாலும்கூட, தங்கள் நாட்டில் இன்னமும் ஒரு தவணை தடுப்பூசிகூடப் போட்டிருக்காத மக்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும்' என்பதே பணக்கார நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தரும் பரிந்துரை. ‘ஒரு தவணை தடுப்பூசிகூடப் போட்டிருக்காதவர்களுக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டவரைவிட கொரோனா தாக்கி மரணமடையும் ஆபத்து 32 மடங்கு அதிகம்' என்று வந்திருக்கும் ஓர் ஆய்வு முடிவை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறது உலக சுகாதார நிறுவனம்.

‘‘பூஸ்டர் டோஸ் வேண்டுமா, வேண்டாமா என்பதை போதுமான ஆய்வுகளுக்குப் பிறகே உறுதிசெய்ய முடியும். நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு குறைந்திருக்கிறது, எந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைகிறது, ஒரு பகுதியில் எந்த வகை உருமாற்ற வைரஸ் அதிகம் பரவியுள்ளது, அங்கு நோய்த்தொற்று எந்த அளவுக்கு இருக்கிறது என்று பல விஷயங்களை வைத்தே இதை முடிவு செய்ய வேண்டும். கண்மூடித்தனமாக எல்லோருக்கும் ஒரேவித பூஸ்டர் டோஸைப் பரிந்துரை செய்ய முடியாது'' என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

ஆனால், இந்தியாவிலுமே பூஸ்டர் டோஸ் குறித்து விவாதங்கள் தொடங்கிவிட்டன. இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அனைவருக்கும் தடுப்பூசி அளிக்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு பின்வாங்கிய ஆரம்ப நாள்களில், தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நெருக்கியடித்தது. இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளில் 25 சதவிகிதம் தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்படுவதால், நிறைய மருத்துவமனைகள் வாங்கிக் குவித்துவைத்தன. ஆனால், நீதிமன்றம் மற்றும் மாநில அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்குப் பணிந்து எல்லா மாநிலங்களுக்கும் இலவசத் தடுப்பூசிகளை மத்திய அரசு மீண்டும் அனுப்ப ஆரம்பித்த பிறகு தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் குறைந்துவிட்டது. கோவிஷீல்டு தடுப்பூசியின் எக்ஸ்பயரி காலம் ஒன்பது மாதங்கள்தான். கோவேக்சினுக்கு ஒரு வருடம்.

பல மருத்துவமனைகள் வாங்கி வைத்திருக்கும் தடுப்பூசிகள் காலாவதி தேதியை நெருங்கி வருகின்றன. அதனால் தள்ளுபடி கட்டணத்தில் தடுப்பூசி போடுகிறார்கள். மருத்துவமனைகளின் சமூகப் பொறுப்பு நிதியில் இலவசமாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கிறார்கள். அப்படியும் தீராததால், இந்திய மருத்துவமனைகள் சங்கத்தின் சார்பில் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு அனுமதி கேட்கிறார்கள்.

கொரோனா தடுப்பூசி... பூஸ்டர் டோஸ் என்பது மோசடியா?

இதேபோல இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலாலும் கோரிக்கை வைத்திருக்கிறார். ‘‘தடுப்பூசிக்கு இப்போது தட்டுப்பாடு இல்லை. நிறைய ஸ்டாக் இருக்கிறது. எனவே, மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்ற கொரோனாத் தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் தருவதற்கு அரசு அனுமதி தர வேண்டும்'' என்று அவர் கேட்கிறார். வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் வைரஸ் நிபுணர் ஜேக்கப் ஜான், இதே கருத்தை ஆமோதிக்கிறார். ‘‘அறிவியல்பூர்வமாகவே நமக்கு பூஸ்டர் டோஸ் தேவை. நோய் அபாயத்தில் உள்ளவர்களைக் காப்பாற்ற பூஸ்டர் டோஸ் கொடுத்தே ஆக வேண்டும். இந்த விஷயத்தில் அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்'' என்கிறார்.

மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநில அரசுகளும் இதேபோல கோரிக்கை வைத்துள்ளன. தெலங்கானாவில் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் எந்த அனுமதியும் இல்லாமல் தாங்களாகவே முன்வந்து பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்கிறார்கள். மத்திய அரசு இப்போது பூஸ்டர் டோஸ் குறித்து ஒரு கொள்கை அறிக்கையை உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. இந்நிலையில், ‘இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ளலாம்' என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா கூறியுள்ளார்.

‘‘இதை கவனத்துடன் அணுக வேண்டும்'' என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளர் டாக்டர் சௌம்யா சுவாமிநாதன். ‘‘அதிகம் தடுப்பூசி போட்ட மேற்கத்திய நாடுகளில் நோய்த்தொற்று அதிகரித்தாலும், பாதிப்பும் மரணமும் அதிகமில்லை. தடுப்பூசி போடாதவர்களே ஐ.சி.யூ வரை போக நேர்ந்தது. ரஷ்யாவில் 30 சதவிகிதம் பேரே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதனால்தான் அங்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டது. இன்னமும் தடுப்பூசி பெறாதவர்களை நாம் தேடிப் பிடிக்க வேண்டியது முக்கியம்'' என்கிறார் அவர்.

இந்தியாவில் தடுப்பூசி பெறும் வயதில் உள்ள 94 கோடிப் பேரில் 38 கோடிப் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் பெற்றுவிட்டனர். 75.5 கோடிப் பேர் ஒரு தவணை பெற்றுள்ளனர். விடுபட்டவர்களைத் தேடித் தடுப்பூசி கொடுப்பதே முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு