சினிமா
Published:Updated:

உண்மைகளை மறைக்கலாம்; கொரோனாவை..?

மோடி
பிரீமியம் ஸ்டோரி
News
மோடி

இந்த உருமாறிய கொரோனா இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்குப் பரவியுமிருக்கிறது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையான தகவல்கள் எதையும் அரசு வெளியிடவில்லை.

ஒரு நாளில் இரண்டே முக்கால் லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள்... இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் கூடியிருக்கலாம். உலகில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகள், அமெரிக்கா மற்றும் பிரேசில். அந்த இரண்டு நாடுகளிலும் தினமும் கண்டறியப்படும் புதிய நோயாளிகளைவிட இரண்டு மடங்கு அதிகம் பேர் தினந்தோறும் இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஒன்றரை மாத இடைவெளியில், உலகிலேயே மிக மோசமாக பாதிக்கப்பட்ட தேசமாக இந்தியா மாறிவிட்டது. ஆனால், எல்லா உண்மைகளையும் மத்திய அரசு மறைக்கப் பார்ப்பதுதான், நோயைவிடத் தீவிரமான பிரச்னையாகியுள்ளது.
உண்மைகளை மறைக்கலாம்; கொரோனாவை..?

* இந்தியாவில் இரண்டாவது அலையாக கொரோனா தீவிரம் எடுத்திருப்பதற்கு, அந்த வைரஸ் இரட்டை உருமாற்றம் பெற்றதே காரணம் என்று கூறப்படுகிறது. B.1.617 என்று இந்த உருமாறிய கொரோனா வைரஸ் அடையாளப்படுத்தப்படுகிறது. பிரிட்டிஷ் வைரஸ், தென் ஆப்பிரிக்க வைரஸ் போல இது இந்திய வைரஸ். மகாராஷ்டிராவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சுமார் 61 சதவிகித மாதிரிகளில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. அசோகா பல்கலைக்கழகத்தின் வைரஸ் நிபுணரான டாக்டர் ஷாகித் ஜமீல், ‘`வூஹானில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸுக்கும் இதற்கும் 15 வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த மாற்றங்கள் அதனை எளிதில் மனித செல்களுக்குள் நுழைபவையாக மாற்றியுள்ளன. அதுவே அதிக தொற்றுக்குக் காரணம்’’ என்கிறார்.

இந்த உருமாறிய கொரோனா இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்குப் பரவியுமிருக்கிறது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையான தகவல்கள் எதையும் அரசு வெளியிடவில்லை. ‘இந்தியாவின் 18 மாநிலங்களில் கவலையளிக்கக் கூடிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது’ என்று மட்டும் சொன்னது மத்திய சுகாதாரத் துறை. வைரஸின் மரபணு இழையை சோதனை செய்து இந்த மாற்றங்களைக் கண்டறிவது வழக்கம். இந்த மாற்றங்களைச் சரியாக அறிந்தால்தான், தடுப்பூசி இதிலிருந்தும் பாதுகாப்பு அளிக்குமா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தேவைப்பட்டால், இதற்கு ஏற்றபடி தடுப்பூசியிலும் மாற்றங்கள் செய்ய முடியும். இந்தியாவில் இந்த சோதனை சரியாகச் செய்யப்படுவதில்லை.

* கொரோனா உச்சம் தொடும் இந்த நேரத்தில், இந்தியாவில் கடுமையான தடுப்பூசிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியத் தயாரிப்புத் தடுப்பூசிகளை நம் மக்களுக்குத் தருவதைவிட அதிகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததே இந்த நிலைக்குக் காரணம். தடுப்பூசிகளை மொத்தமாக மத்திய அரசே வாங்கி, மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தடுப்பூசிக்காகக் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், ‘ஸ்டாக் இல்லை’ என்ற போர்டு பல இடங்களில் தொங்குகிறது. முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பலர், ‘இரண்டாவது தவணை கிடைக்குமா’ என அச்சம் கொண்டனர். கிராமப்புறங்களில் இன்னும் நிலைமை மோசம்.

ஆனால், ‘இந்தியாவில் தடுப்பூசித் தட்டுப்பாடு இல்லை’ என முதலில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சொன்னார். அடுத்த சில நாள்களில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளித்தது மத்திய அரசு. இன்னும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் தடுப்பூசிகளைக் கேட்டிருக்கிறது. இதுதவிர, இந்தியாவில் உள்ள மூன்று பொதுத்துறை தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிதியுதவி செய்துள்ளது. இவை எல்லாம் கைக்கு வந்துசேர நீண்ட அவகாசம் பிடிக்கும். இந்த எல்லாவற்றையும் திட்டமிட்டு ஜனவரி மாதமே செய்திருந்தால், இப்போது தடுப்பூசித் தட்டுப்பாடே இருந்திருக்காது என்பதுதான் உண்மை.

* ரெம்டெசிவிர் என்ற மருந்து, தீவிர கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உதவுகிறது. இதற்கும் கடுமையான தட்டுப்பாடு இருப்பதாகப் பல மாநிலங்கள் கூறின. ஆனால், ‘`அப்படி ஒரு தட்டுப்பாடே இல்லை’’ என மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் சொன்னார். அடுத்த நாளே ரெம்டெசிவிர் தயாரிக்க ஆறு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சில நாள்களிலேயே அதன் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. என்றாலும், இன்னமும் தட்டுப்பாடு தீரவில்லை.

உண்மைகளை மறைக்கலாம்; கொரோனாவை..?

இந்த மருந்தை விற்கும் ஏழு நிறுவனங்களிடம் பேசி, இதன் விலையையும் கணிசமாகக் குறைத்தது மத்திய அரசு. ஆனால், பிளாக் மார்க்கெட்டில் அதிக விலைக்கு இது விற்கப்படுவதாகப் புகார்கள் உள்ளன. மாநில அரசுகளே இந்த மருந்து கிடைக்காமல் தவிக்கின்றன. டாக்டரின் மருந்துச்சீட்டு இருந்தால் மட்டுமே இது தரப்பட வேண்டும். குஜராத் மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாட்டீல் இதை மொத்தமாக வாங்கி மக்களுக்கு இலவச விநியோகம் செய்கிறார். மகாராஷ்டிரா மாநில அரசு ரெம்டெசிவிர் மருந்து வேண்டும் என மத்திய அரசிடம் மன்றாடுகிறது. அந்த மாநில பா.ஜ.க-வினர் நான்கே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள ரெம்டெசிவிர் மருந்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் வாங்குகின்றனர்.

* ஆக்சிஜன் விவகாரத்திலும் இதேபோன்ற குரல்தான் மத்திய அரசிடமிருந்து எழுந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிறைய மருத்துவமனைகள் நோயாளிகளை அட்மிட் செய்ய மறுத்தன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு சில மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் இறந்த துயரங்களும் நிகழ்ந்தன. ஆனால், ‘`இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை’’ என வழக்கம்போல அறிவித்தார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். அடுத்த சில நாள்களில், 50,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்வதாக அறிவிப்பு வந்தது. தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் சப்ளையைக் கட்டுப்படுத்தி, மருத்துவத் தேவைகளுக்குத் திருப்பிவிட்டது.

* மருத்துவமனைகள் நிரம்பிவழிவதால், நோயாளிகளுக்கு இடம் கிடைப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. அவருக்கு பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை. ‘`சமூகத்தில் செல்வாக்கான மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால், ஏழைகளின் நிலைமை என்ன என்று சொல்ல வேண்டியதில்லை’’ என குமாரசாமியின் வழக்கறிஞர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா முழுக்க இருக்கும் சூழலுக்கு இது ஒரு சோற்றுப் பதம். தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குவதில் கடந்த ஆண்டுபோல இம்முறையும் வேகம் காட்ட அரசுகள் தவறிவிட்டன என்பதே உண்மை.

* எல்லாப் பற்றாக்குறைகளையும் மறுத்தது போலவே மரணங்களை மறைக்கும் கொடுமையும் நிகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மைதானங்களில் சடலங்களை எரியூட்டுகிறார்கள். இதை மற்றவர்கள் கண்பார்வையிலிருந்து மறைக்க, தகரத் தடுப்புகள் வைத்திருக்கிறார்கள். குஜராத் மாநிலம், அங்கு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி வெறும் 78 மரணங்களே கொரோனாவால் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரம் தந்தது. ஆனால், குஜராத்தின் ஏழு மாநகரங்களில் மட்டுமே அன்று 689 சடலங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி எரிக்கப்பட்டன. சூரத் போன்ற பல நகரங்களின் மின்மயானங்களில் தொடர்ச்சியாக சடலங்கள் எரிக்கப்படுவதால் சூடு தாங்காமல் மயான இரும்புக்கம்பிகளே உருக்குலைந்து போயிருக்கின்றன. குஜராத் உயர்நீதிமன்றம் இதுதொடர்பான வழக்கைத் தானாகவே எடுத்து, ‘`என்ன சூழல் என்பதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். உண்மைகளைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?’’ என மாநில அரசைக் கேட்டிருக்கிறது.

உண்மைகளை மறைக்கலாம்; கொரோனாவை..?

* கொரோனாவைத் தடுக்கும் சமூகத் தடுப்பூசி, முகக்கவசமும் தனிமனித இடைவெளியும்தான். ஆனால், இந்த எதையும் பின்பற்றாமல் ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெற்றன. இதுபற்றி மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியபோது, ‘தேர்தலே நடக்காத மாநிலங்களில்தான் தொற்று அதிகம்’ என மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி புள்ளிவிவரங்களைக் காட்டினார்கள் பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவினர். தொழில்மயமான மாநிலங்களில் வெளித்தொடர்புகள் அதிகம். அதனால் தொற்று பரவவும் வாய்ப்புகள் அதிகம். தமிழகமும் குஜராத்தும் அதனால்தான் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டம் சேர்ப்பதை இதை வைத்து நியாயப்படுத்துவது சரியா?

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் கும்பமேளாவில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் இணைந்து புனித நீராடுவது குறித்தும் இதேபோல கேள்வி எழுப்பப்பட்டது. ஒவ்வொரு பக்தருக்கும் கொரோனாப் பரிசோதனை நடத்தியே அனுமதிக்கப்பட்டனர் என்று இதற்கும் பதில் வந்தது. கடைசியில் பிரதமர் மோடியே தலையிட்டுக் கேட்டுக்கொண்டபிறகு, கும்பமேளா கொண்டாட்டங்கள் முன்கூட்டியே முடிந்தன. ஆனால், அதற்குள் பெருங்கூட்டம் கூடி சேதம் விளைவித்திருந்தது. இப்போது கும்பமேளாவிலிருந்து திரும்பும் பக்தர்களைத் தனிமைப்படுத்த உத்தரவிட்டுள்ள மாநிலங்களில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் அடக்கம்.

ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் கடந்த ஆண்டு கொரோனா நாள்களிலும், ஊரடங்கு காலத்திலும் கற்றுக்கொண்டோம். ஊரடங்கு எளிய மக்களின் வாழ்வில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதையும் கண்டோம். மீண்டும் அப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை. அதிலிருந்து தவறுவதும், தங்கள் தவறுகளை மறைப்பதும் கொரோனாவை அடக்க ஒருபோதும் உதவாது.