Published:Updated:

கிராமங்களின் பக்கம் கவனம் திருப்புங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கிராமங்களின் பக்கம் கவனம் திருப்புங்கள்!
கிராமங்களின் பக்கம் கவனம் திருப்புங்கள்!

அறிகுறிகளுடன் உள்ள நூறு பேருக்கு பரிசோதனை செய்தால், அவர்களில் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகிறது என்பதை ‘டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்’ எனக் குறிப்பிடுவார்கள்.

பிரீமியம் ஸ்டோரி

”என்னப்பா டல்லா இருக்கே?’’

‘`ரெண்டு நாளா உடம்பு வலி, ஜலதோஷம், ஜுரம். கொரோனாவா இருக்கும்னு நினைக்கறேன்.’’

‘`டாக்டர்கிட்ட போக வேண்டியதுதானே?’’

‘`அதெல்லாம் தேவையில்லை. ரெஸ்ட் எடுத்தாலே சரியாகிடும்!’’

- இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து கொரோனாவை நாம் இப்படித்தான் கையாள்வோம் என ‘வைரசஸ்’ இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரை சொல்கிறது. ‘தடுப்பூசி போடுவதாலும், சமூக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாலும், நம் உடல் மாற்றம் பெறும். ஜலதோஷம் போல சாதாரண நோயாக கொரோனாத் தொற்று அப்போது ஆகிவிடும்’ என்கிறார், இந்தக் கட்டுரையை எழுதியுள்ள அமெரிக்க மருத்துவர் ஃபிரெட் ஆட்லெர்.

ஆனால், இன்றைய தேதியில் கொரோனாவை நினைத்து அச்சம் கொள்ளவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். காரணம், நம் கிராமங்கள். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கை வசதிகள், உயர் சிகிச்சை தரும் வாய்ப்பு என எல்லாமே பெருநகரங்களில் குவிந்திருக்கும் நிலையில், கொரோனாத் தொற்று இப்போது கிராமங்களை ஊடுருவியிருக்கிறது. கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்து, இன்னும் பலரைப் பெருநகரங்களிலிருந்து கிராமங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். இது நிலையை இன்னும் மோசமாக்கும்.

இந்த அச்சத்துக்குக் காரணங்களை வரிசையாக அடுக்க முடியும்...

* இந்த வாரத்தில் தமிழகத்தின் தினசரி கொரோனா புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 35,000 என இருக்கிறது. மே இறுதியில் இது உச்சம் தொடும். ‘`நாம் இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் நோயாளிகள் என்ற எண்ணிக்கையை மிக வேகமாக அடைந்தோம். அதன்பின் நோய்ப் பரவல் வேகம் குறைந்திருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், கிராமப்புறங்கள்தான் கவலை அளிக்கின்றன’’ எனத் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். குறிப்பாக, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களை அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

கிராமங்களின் பக்கம் கவனம் திருப்புங்கள்!

* அறிகுறிகளுடன் உள்ள நூறு பேருக்கு பரிசோதனை செய்தால், அவர்களில் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகிறது என்பதை ‘டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்’ எனக் குறிப்பிடுவார்கள். தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இது 20-க்கும் அதிகமாக இருக்கிறது. அதாவது, நூறு பேருக்குப் பரிசோதனை செய்தால், அவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று இருக்கிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், நாகப்பட்டினம் ஆகியவை முழுக்க கிராமப்புறங்களைக் கொண்ட மாவட்டங்கள். இங்கெல்லாம் மருத்துவமனை வசதிகள் குறைவு. இருக்கும் மருத்துவமனைகளில் கட்டமைப்புகளும் குறைவு. டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் குறைவு. அதிக நோயாளிகள் கூட்டத்தைத் தாங்க முடியாது.

* கிராமப்புறங்களில் ஜுரம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால்கூட பலர் பரிசோதனை எடுத்துக்கொள்வதில்லை. மழையில் நனைந்ததால் வந்திருக்கும், வெயிலில் அலைந்துவிட்டு வந்து வியர்வையுடன் தூங்கியதால் ஜுரம் வந்திருக்கும் என நினைத்துக்கொண்டு அப்படியே விட்டு விடுகிறார்கள். நோய் முற்றியபிறகே மருத்துவமனைக்குப் போகிறார்கள். அதனால் உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று நலமடையும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

* ஒருவேளை மக்களே முன்வந்து பரிசோதனை எடுத்துக்கொண்டாலும், அதன் முடிவுகள் கிடைப்பதில் கிராமங்களில் பெரும் தாமதம் ஏற்படுகிறது. கிராமங்களில் பரிசோதனை செய்வதும் குறைவு. ஆய்வுக்கூடங்களும் குறைவு. குறிப்பாக அரியலூர், ராமநாதபுரம், தென்காசி, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் ஒரே ஒரு ஆய்வுக்கூடம் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்கிறது. ஒருவருக்குப் பரிசோதனை செய்து, அந்த முடிவு வரத் தாமதமாகும்போது, அவர் விரைவிலேயே சிகிச்சை பெறும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்.

* மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் சமீபத்தில் சொன்ன ஒரு விஷயம் கவனிக்கத்தக்கது. ‘`இந்தியாவில் அதிகம் பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்படுவதை நாம் கவலையுடன் கவனிக்கிறோம். ஆனால், நம் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது இதுவரை இரண்டு சதவிகிதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 98 சதவிகிதம் பேர் கொரோனா தொற்றும் ஆபத்தில் உள்ளனர். அந்த வைரஸ் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. எனவே, நாம் கவனத்துடன் இருக்க வேண்டும்’’ என்றார் அவர். இந்த 98 சதவிகிதம் பேரில் பலரும் கிராமங்களில்தான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. கொரோனா முதல் அலையில் கிராமங்கள் பெரும்பாலும் தப்பித்துவிட்டன. இம்முறை அது கிராமங்களைத் தாக்கும்போது பாதிப்புகள் மோசமாக இருக்கலாம்.

* கொரோனாவைத் தவிர்க்கும் வலுவான ஆயுதமாக நாம் தடுப்பூசியைக் கருதுகிறோம். ஆனால், தடுப்பூசியுமே கிராமப்புறங்களைப் போதுமான அளவில் சென்றடையவில்லை. இந்த மே மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின் படி, தமிழகத்தின் நகரங்களில் ஒரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 30.3 சதவிகிதம் பேர். கிராமங்களில் இது வெறும் 12.7 சதவிகிதம்தான். இந்தவகையிலும் கிராம மக்கள் அபாயத்தில்தான் இருக்கிறார்கள்.

* ரெம்டெசிவிர் தட்டுப்பாடு பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயல் இயக்குநர் அசோக் மதன் சொல்லும் ஒரு தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. ‘`கொரோனா ஆரம்பக்கட்ட சிகிச்சையில் அதிகம் பயன்படுத்தப்படும் அசித்ரோமைசின், ஸ்டீராய்டு மருந்துகள், ஜிங்க் மாத்திரை, வைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றுக்கே கிராமப்புறங்களில் தட்டுப்பாடு நிலவுகிறது. பலர் பயத்தில் நிறைய மருந்துகளை வாங்கிப் பதுக்கிவிட்டார்கள். உற்பத்தி ஆவதும் நகரங்களுக்கே பெருமளவு போகிறது. மருந்து உற்பத்திக்கான மூலப்பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலையும் உயர்ந்துவிட்டது. தேவை மிக அதிகமாக இருப்பதால், நாங்கள் உற்பத்தியை அதிகரித்துள்ளோம். என்றாலும், அது போதுமானதாக இல்லை’’ என்கிறார் அவர்.

* முகக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் இந்தியாவின் 25 நகரங்களில் செய்யப்பட்ட ஓர் ஆய்வின் முடிவை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. ‘50 சதவிகிதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை’ என்கிறது அந்த ஆய்வு. முகக்கவசம் அணியும் மீதிப் பேரில் வெறும் 14 சதவிகிதம் பேரே அதை சரியாக அணிகிறார்களாம். நகரங்களே இப்படி என்றால், கிராமங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

கிராமங்களின் பக்கம் கவனம் திருப்புங்கள்!

‘`கொரோனா சிகிச்சையில் நம் திட்டமிடல் எல்லாமே நகரங்களைச் சார்ந்ததாக இருக்கிறது. பெருநகர சென்னையில் ஜுரப் பரிசோதனை, தெருக்களில் முகாம்கள், முகக்கவச விழிப்புணர்வு, நோயாளிகள் தனிமைப்படுத்தல், தடுப்பூசி போடுதல், வீடு தேடிச் சென்று பரிசோதனை என எல்லாமே செய்கிறோம். இதேபோன்ற கண்காணிப்பை கிராமங்களில் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் 5,000 மக்கள்தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் இருக்கிறது. இதில் ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பணியில் இருக்கிறார். இங்கு சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, வீதி வீதியாக கொரோனாக் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். நோய் தொற்றியவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை தர வேண்டும். இதுவே அரசு மருத்துவமனைகளில் தீவிர கொரோனா நோயாளிகள் வந்து குவிவதைத் தடுக்கும். பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்யும்வரை இந்தக் கண்காணிப்பு தொடர வேண்டும். அதுவே கொரோனாவிலிருந்து நம்மை மீட்கும்’’ என்கிறார்கள் தொற்றுநோய் நிபுணர்கள்.

கொரோனா இரண்டாம் அலையின் உச்சம் தொட்டிருக்கும் நாம், கிராமங்களைக் காப்பதை முதன்மைப் பணியாக இப்போது செய்ய வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு