Published:Updated:

வீதியில் வீசப்படும் பச்சிளம் சிசுக்கள்... என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?

என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?

பாவத்தைப்போல அவர்கள் மறைக்க நினைக்கும் குழந்தைகளை, சட்டென போட்டுச் செல்லும் அளவுக்கு இந்தத் திட்டம் பரவலாக்கப்படவில்லை

வீதியில் வீசப்படும் பச்சிளம் சிசுக்கள்... என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?

பாவத்தைப்போல அவர்கள் மறைக்க நினைக்கும் குழந்தைகளை, சட்டென போட்டுச் செல்லும் அளவுக்கு இந்தத் திட்டம் பரவலாக்கப்படவில்லை

Published:Updated:
என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?
பிரீமியம் ஸ்டோரி
என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?

பச்சிளம் குழந்தை எறும்பு கடித்து அழுதாலே நாம் பதறிப்போய்விடுவோம். ஆனால், ஜூன் 16-ம் தேதி தெரு நாயால் கடித்துக் குதறப்பட்ட நிலையில், ஒரு குழந்தையை மீட்டனர் உசிலம்பட்டி போலீஸார். அடுத்த இரண்டாவது நாளில், தஞ்சை அருகிலுள்ள வேலிப்பட்டி பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை எறும்பு மொய்த்த நிலையில் முட்புதரிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களில் இப்படித் தமிழ்நாடு முழுவதும் பல நூறு குழந்தைகள் உயிரோடும், இறந்தநிலையிலும் மீட்கப்பட்டிருக்கிறார்கள். தொட்டில் குழந்தைத் திட்டத்தை அரசு கைவிட்டதாலேயே இப்படியான சம்பவங்கள் தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!

வீதியில் வீசப்படும் பச்சிளம் சிசுக்கள்... என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?

தொட்டில் குழந்தைத் திட்டம்

1990-களில் குடும்ப வறுமை, பெண் குழந்தைகளை வளர்க்க விருப்பமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் சிசுக்கொலைச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. அதைக் கட்டுப்படுத்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் `தொட்டில் குழந்தை திட்டத்தை’ 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். குழந்தையை வளர்க்க விருப்பமில்லாத பெற்றோர்கள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், காப்பகங்களில் வைக்கப்பட்டிருக்கும் தொட்டில்களில் குழந்தையைவிட்டுச் செல்லலாம். அந்தக் குழந்தைகள், காப்பகங்களில் சேர்க்கப்படும். அங்கிருந்து உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு சட்டபூர்வமாகத் தத்துக் கொடுக்கப்படும்.இப்போதோ பெண் குழந்தை என்றில்லாமல், விடலைக் காதல், முறை தவறிய உறவால் பிறந்த குழந்தைகளே அதிக அளவில் வீதியில் வீசப்படுவதாகச் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

பாவத்தைப்போல அவர்கள் மறைக்க நினைக்கும் குழந்தைகளை, சட்டென போட்டுச் செல்லும் அளவுக்கு இந்தத் திட்டம் பரவலாக்கப்படவில்லை. அந்தத் தொட்டில் எங்கே இருக்கிறது என்று எங்கே தேடினாலும் கிடைக்காத அளவுக்குத்தான் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

வீதியில் வீசப்படும் பச்சிளம் சிசுக்கள்... என்னவானது தொட்டில் குழந்தைத் திட்டம்?

போதிய விழிப்புணர்வு கிடையாது!

இந்த விவகாரம் குறித்து குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயனிடம் பேசினோம். ``ஒரு பக்கம் தமிழகத்தில் குழந்தைகளைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். இன்னொரு பக்கம் பச்சிளம் குழந்தைகளை வீதியில் வீசிச் செல்கிறார்கள். இதற்குச் சமூகத்தில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியதுதான் முக்கியக் காரணம். சுகாதாரத்துறைக்கும் சமூக நலத்துறைக்கும் உள்ள இடைவெளி காரணமாகவே இது போன்ற தவறுகள் நடக்கின்றன. சமீபத்தில் நடந்த உசிலம்பட்டி, தஞ்சாவூர் நிகழ்வுகளில், அந்தக் குழந்தைகளின் கர்ப்பத்தைப் பதிவுசெய்யாதது யார் தவறு... சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது... ‘குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவோம்’ என்று முதல்வர் சொல்வது செயலிலும் இருந்தால் மட்டுமே இது போன்ற தவறுகள் முற்றிலும் தடுக்கப்படும்” என்றார்.

தேவநேயன்
தேவநேயன்

இது குறித்து அரசுத் தரப்பில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகரிடம் பேசினோம். ``தமிழ்நாடு அரசு கொண்டுவந்த `தொட்டில் குழந்தைத் திட்டம்’தான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடி. அரசு சார்பில் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தகாத உறவாலும், 18 வயதுக்கு முன்பாக ஏற்படும் கர்ப்பத்தாலும்் பிறக்கிற குழந்தைகளைத்தான் சிலர் இப்படி வீசிச் செல்கிறார்கள். இது போன்ற செயல்களையும் தொடர்ந்து கண்காணித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய சமூக நலத்துறையானது, காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவத்துறை என்று பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்றிவருகிறது” என்றார்.

ஷம்பு கல்லோலிகர்
ஷம்பு கல்லோலிகர்

திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பது மக்களுக்கே தெரியும். இன்னொரு குழந்தை இப்படி வீதியில் வீசப்பட்டு, நாய் கடித்து இறக்க நேர்ந்தால் அந்தப் பாவக்கணக்கில் தன்னுடைய பெயரும் சேர்ந்துவிடும் என்ற அச்சத்தோடு அரசு அலுவலர்களும், தன்னார்வலர்களும் நடவடிக்கையில் இறங்கினால் ஒழிய இந்தச் சம்பவங்களைத் தடுக்க முடியாது!