Published:Updated:

விந்து, வியர்வை, கைரேகை, கருவிழி சேகரிப்பு... தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?

தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?
பிரீமியம் ஸ்டோரி
தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?

போலீஸாரால் அடிக்கடி பொய் வழக்கு போடப்படும் இருளர், நாடோடிப் பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தினரும், சிறுபான்மையினரும் இந்த சட்டத்தால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது

விந்து, வியர்வை, கைரேகை, கருவிழி சேகரிப்பு... தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?

போலீஸாரால் அடிக்கடி பொய் வழக்கு போடப்படும் இருளர், நாடோடிப் பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தினரும், சிறுபான்மையினரும் இந்த சட்டத்தால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது

Published:Updated:
தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?
பிரீமியம் ஸ்டோரி
தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?

‘ஆதார் கட்டாயம்’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டபோது, `கருவிழி உள்ளிட்ட மாதிரிகளை எடுப்பது தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது’ என்று எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அதே போன்ற ஒரு பிரச்னை வெடித்துள்ளது. சிறைக் கைதிகள் உள்ளிட்ட குற்றவாளிகளிடம் கைவிரல் ரேகை, கால்விரல் ரேகை, கருவிழி, விந்து, டி.என்.ஏ உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளைச் சேகரிப்பதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ‘கைதிகள் சட்டம் - 1920’ நடைமுறையில் இருந்துவருகிறது. இந்தச் சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் மற்றும் ஓராண்டு அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கைவிரல் ரேகை, கால்விரல் ரேகை ஆகியவற்றை மட்டுமே காவல்துறையால் சேகரிக்க முடியும். இதுபோக, நீதிபதியின் உத்தரவின்பேரில் அந்த நபர்களைப் புகைப்படம் எடுக்கலாம். இந்தச் சட்ட நடைமுறையை மாற்றும் வகையில், ‘குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022’-ஐ மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, குற்றவாளிகளின் கைவிரல் ரேகை, கால்விரல் ரேகை மட்டுமல்லாமல் ரத்தம், எச்சில், விந்து, டி.என்.ஏ., வியர்வை, தலைமுடி, நகம், மாதிரிகள், கையெழுத்து ஆகியவற்றையும் சி.பி.ஐ., என்.ஐ.ஏ., காவல்துறை போன்ற விசாரணை அமைப்புகளால் சேகரிக்க முடியும்.

விந்து, வியர்வை, கைரேகை, கருவிழி சேகரிப்பு... தனிநபர் உரிமைகளை பறிக்கிறதா மத்திய அரசு?

`காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் கோரும் உயிரியல் அடையாளங்களை வழங்க மறுத்தால், அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்த குற்றமாக அது கருதப்படும்’ என்று இந்த மசோதா கூறுகிறது. `உயிரியல் மாதிரிகளை வழங்க மறுத்தால், வலுக்கட்டாயமாக மாதிரிகளைச் சேகரிக்கலாம்’ என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் உயிரியல் மாதிரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் சேமிக்கப்படும். இந்த மாதிரிகள் சேகரிக்கப்படும் நாளிலிருந்து 75 ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படும். இந்த மாதிரிகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் வழக்கு விசாரணைக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம், `முதன்முறையாகக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களிடம் சேகரிக்கப்படும் உயிரியல் மாதிரிகள், அந்த நபர்கள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படும் பட்சத்தில், அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் முடிந்த பிறகு உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்’ என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்டமாக்கப்பட்டால், தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சியினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அச்சம் தெரிவிக்கிறார்கள். இந்த மசோதாவை எதிர்த்து தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன் மக்களவையில் பேசியபோது, ‘‘சிறுபான்மையினரைக் குறிவைத்து மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக அதை மத்திய அரசு பயன்படுத்துகிறது. எனவே, இதையும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. கைதிகளின் உயிரியல் மாதிரிகளைச் சேகரிப்பதற்கு அனுமதித்தால், அதைக் காவல்துறை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா 2022, மக்களின் அடிப்படை உரிமை, தனிநபர் அந்தரங்க உரிமை ஆகியவற்றுக்கு எதிரானது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

சுரேஷ்
சுரேஷ்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணீஷ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினார்கள். அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காகத்தான் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் இத்தகைய திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், நீதிமன்றங்கள் கேட்கும் சாட்சியங்களை அளித்து, குற்றங்களை நிரூபிக்க முடியாமல் போய்விடும். இந்த மசோதாவில், தனிநபர் தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

இது பற்றி நம்மிடம் பேசிய பி.யூ.சி.எல் அமைப்பின் பொதுச் செயலாளர் சுரேஷ், “இந்தப் புதிய சட்டத்தின்படி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டவர்கள், விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர்கள், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் உயிரியல் மாதிரிகளை எடுக்க முடியும். போலீஸாரால் அடிக்கடி பொய் வழக்கு போடப்படும் இருளர், நாடோடிப் பழங்குடியினர் உள்ளிட்ட சமூகத்தினரும், சிறுபான்மையினரும் இந்த சட்டத்தால் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மிகவும் ஆபத்தான சட்டம் இது” என்று படபடத்தார்.

குமரகுரு
குமரகுரு

இந்த மசோதாமீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் குமரகுருவிடம் பேசினோம். ‘‘காலத்துக்கேற்ப நம் சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவருவது மிகவும் அவசியம். அந்த வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்தத் திருத்தங்கள் அவசியமானவை. குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு, இதுவரை அடையாள அணிவகுப்பு மட்டுமே நடைபெறுகிறது. அந்த நடைமுறையில் சில தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கைரேகை, கருவிழி போன்ற உயிரியல் மாதிரிகள் இருந்தால், குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். எதற்கெடுத்தாலும் ‘தனிநபர் உரிமைகள் மீறப்படும்’ என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுவது நல்லதல்ல... ஆதார் கொண்டுவரப்பட்டபோதும் அதைத்தான் சொன்னார்கள். அதேபோல, சிறுபான்மையினருக்கு எதிராக இதைப் பயன்படுத்துவார்கள் என்ற குற்றச்சாட்டும் ஆதாரமற்றது’’ என்றார்.

சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல அப்பாவிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதும் முக்கியமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism