Published:Updated:

விவசாயிகள் வீடு திரும்புவது எப்போது? - நடுத்தெருவில் உலகின் ஆதித் தொழில்!

இவ்வளவு நடந்தும் ஒன்றிய அரசு இந்தப் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போராடும் விவசாயிகளை `காலிஸ்தானி’, `தேசவிரோதி’ என்று அழைத்தார்கள் பா.ஜ.க தலைவர்கள்.

பிரீமியம் ஸ்டோரி

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் வரும் நவம்பர் 26-ம் தேதியுடன் ஓராண்டை நிறைவுசெய்கிறது. இந்த ஓராண்டுப் போராட்டத்தில் விவசாயிகளுக்குத் துளியும் நன்மை ஏற்படவில்லை. உலகமே உற்று கவனித்த இந்தப் போராட்டத்தை மத்திய பா.ஜ.க அரசு கவனிக்காததுதான் வேதனை. இதையடுத்து, நவம்பர் 26-ம் தேதிக்குள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், மீண்டும் டிராக்டர்களில் டெல்லி நோக்கி முன்பைவிட பெரும் திரளாகப் படையெடுத்து, முற்றுகையிட விவசாயிகள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு விவசாயப் பொருள்கள் விற்பனை, பதுக்கல், சந்தைப்படுத்துதல், ஒப்பந்த விவசாய சீர்திருத்தங்களை கையாளுதல் தொடர்பாக மூன்று அவசரச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்ட இந்த அவசரச் சட்டங்களுக்கு, நாடு முழுவதுமிருக்கும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டங்களைத் தொடங்கினர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் போராட்டங்கள் வலுப்பெற்றன. பஞ்சாப் மாநிலத்துக்குள் ஒரு மாதத்துக்கு ரயில்கள் நுழைய முடியாதபடி தீவிரமான ரயில்மறியல்கள் நடைபெற்றன.

விவசாயிகள் வீடு திரும்புவது எப்போது? - நடுத்தெருவில் உலகின் ஆதித் தொழில்!

‘டெல்லி நோக்கி வாருங்கள்’ என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்த அறைகூவலை ஏற்று நாடு முழுவதுமிருந்தும் விவசாயிகள் டெல்லி நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள். 2020, நவம்பர் 26 அன்று 96 ஆயிரம் டிராக்டர்கள், 22 ஆயிரம் லாரிகள், பல மாதங்களுக்கான உணவுப்பொருள்கள் என டெல்லியில் ஒரு கோடியே 40 லட்சம் விவசாயிகள் திரண்டார்கள். டெல்லியில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களிலும், சர்வதேச தலைநகரங்களிலும் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்றன. சமீபகாலத்தில் உலக அளவில் எந்தப் போராட்டத்திலும் இப்படியொரு அணிதிரள் நடந்ததில்லை என்று சர்வதேச ஊடகங்கள் வர்ணித்த இந்தப் போராட்டம், பல்வேறு நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.

இன்னொரு பக்கம் ஒன்றிய அரசு கொடுத்த விருதுகளைப் பலரும் திருப்பி அளித்தார்கள்... பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோர் பத்மபூஷண் விருதையும், சுற்றுச்சூழலியலாளர் பாபா சேவா சிங் பத்ம விருதையும் திருப்பி அளித்தனர். பஞ்சாப்பைச் சேர்ந்த எழுத்தாளர்கள் ஜஸ்விந்தர் சிங், ஸ்வராஜ்பீர் ஆகியோர் சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அளித்தனர். பஞ்சாப் ஹரியானாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் 35 பேர் கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகளைத் திருப்பியளிக்கக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகள் வீடு திரும்புவது எப்போது? - நடுத்தெருவில் உலகின் ஆதித் தொழில்!

இவ்வளவு நடந்தும் ஒன்றிய அரசு இந்தப் போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. போராடும் விவசாயிகளை `காலிஸ்தானி’, `தேசவிரோதி’ என்று அழைத்தார்கள் பா.ஜ.க தலைவர்கள். ஒன்றிய பா.ஜ.க அரசுடன் விவசாய சங்கப் பிரதிநிதிகள் நடத்திய பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியைத் தழுவின. ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு இந்தப் போராட்டத்தைக் கையாளும்விதத்தை கடுமையாகச் சாடியது... “அரசாங்கம் இந்தச் சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும் அல்லது நாங்கள் நிறுத்திவைக்க நேரிடும். இதில் உங்களுக்கு உள்ள கௌரவப் பிரச்னை என்ன? நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்னையின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருநாள் இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. ஏதாவது தவறு நடந்தால் நாம் ஒவ்வொருவரும் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்” என்றது உச்ச நீதிமன்றம். இதன் பிறகு, அடுத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு இந்தச் சட்டத்தை நிறுத்திவைக்கும் முடிவை ஒன்றிய அரசு அறிவித்தது.

ஆனால், விவசாயிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டங்கள் முழுமையாக ரத்துசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாள்கள் முழுவதிலுமே 200 விவசாயிகள் தினமும் போராட்டக் களத்திலிருந்து ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ என்கிற தொடர் போராட்ட வடிவத்தை நடைமுறைப்படுத்தினர்.

விவசாயிகள் வீடு திரும்புவது எப்போது? - நடுத்தெருவில் உலகின் ஆதித் தொழில்!

“இந்தச் சட்டங்கள் இந்திய விவசாயத்தைப் பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்க வழி செய்கின்றன. நாங்கள் கேட்பது, இந்தச் சட்டங்களில் திருத்தங்கள் அல்ல; மாறாக இந்தச் சட்டங்கள் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை மட்டுமே. வேறு எதற்கும் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை” என்று தீர்க்கமாக தெரிவித்திருக்கிறது போராட்டக்குழு. இந்திய வரலாற்றில் நீண்டகாலம் நடைபெறும் போராட்டமாக மாறியுள்ள டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஏராளமான உயிர்த் தியாகங்களும் நடைபெற்றிருக்கின்றன. ‘விவசாயிகள் படும் வலியைத் தாங்க முடியவில்லை’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார் 62 வயதான சீக்கிய மதகுரு ஒருவர். கடும் குளிர், உடல்நலக் கோளாறு, சாலை விபத்து, கோவிட் இரண்டாம் அலை, காவல்துறையினருடன் மோதல், தற்கொலைகள் எனப் போராட்டக்களத்தில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 600-ஐ தாண்டுகிறது. சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் போராடும் விவசாயிகள்மீது பா.ஜ.க அமைச்சர் மகனின் காரை ஏற்றி விவசாயிகள் கொலை செய்யப்பட்ட காணொலி உலகம் முழுவதையும் உலுக்கியது.

பிரிட்டிஷார் இந்தியாவை ஆண்டபோதுகூட இப்படியான சட்டங்களை அவர்கள் கொண்டுவந்ததில்லை. இந்திய விவசாயிகளை இந்திய மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கம் பிரிட்டிஷாருக்கு இருந்ததில்லை. ஆனால், இன்றைக்கு இந்திய விவசாயிகளுக்குத் தூக்குக்கயிறுகளை வழங்கி அப்புறப்படுத்திவிட்டு, பெரு முதலாளிகள் கையில் விவசாயத்தைக் கொடுக்க ஒன்றிய அரசு முற்படுகிறது. நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலருடன் விருந்துகளில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லை. ஒன்றை மட்டும் மறந்துவிடக் கூடாது... விவசாயிகள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை... உணவு உண்ணும் அனைவருக்கும் சேர்த்தே போராடுகிறார்கள். ஓராண்டு நிறைவுபெறப் போகிறது... இனியாவது அவர்கள் வீடுகளுக்குத் திரும்பும் வகையில் உண்மையான அக்கறையுடன் தீர்வுகாண வேண்டும் ஒன்றிய அரசு!

குறிப்பு: நவம்பர் 19-ம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், `அந்தச் சட்டங்களை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முறையாகத் திரும்பப் பெற்ற பிறகே போராட்டங்களை நிறுத்துவோம்’ என்று விவசாயி சங்க நிர்வாகிகள் தெரிவித்திருக்கிறார்கள். இது பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்கான ஸ்டன்ட் என்று எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு