கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

விவசாயிகளுக்கு அரசு உண்மையில் என்ன செய்ய வேண்டும்?

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துகள் உட்பட 23 பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பணிந்து மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறது மத்திய அரசு. ‘பல நூறு விவசாயிகளின் மரணங்கள், பல்வேறு அச்சுறுத்தல்களைக் கடந்து உறுதியாகப் போராட்டக்களத்தில் நின்ற விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி இது’ என நாடெங்கும் மகிழ்ச்சிக்குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால், விவசாயிகள் இன்னும் போராட்டத்தை விலக்கிக்கொள்ளவில்லை.

விரைவில் நடக்கவுள்ள நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் முறைப்படி இந்தச் சட்டங்களை வாபஸ் பெறவுள்ளது மத்திய அரசு. இந்நிலையில், ‘குறைந்தபட்ச ஆதாரவிலையைச் சட்டபூர்வமாக்கவேண்டும்; களத்தில் உயிரிழந்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்’ என்றெல்லாம் விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுள்ள நிலையில், உடனடியாகச் செய்யவேண்டியது என்ன என்பது பற்றி அரசின் வேளாண் விற்பனைத் துறையில் நெடுங்காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவரும், ‘கிரியேட்’ அமைப்பின் மேலாண்மை அறங்காவலருமான ஆர்.பொன்னம்பலத்திடம் உரையாடினேன்.

பொன்னம்பலம்
பொன்னம்பலம்

“விவசாயிகள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெறவேண்டும் என்று போராட்டக்குழு கோரிக்கை வைத்திருக்கிறது. இன்னொரு முக்கியக் கோரிக்கையாக குறைந்தபட்ச ஆதாரவிலையைச் சட்டபூர்வமாக வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். மூன்று சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் இந்த அளவுக்கு உறுதியோடு நிற்கக் காரணமே, குறைந்தபட்ச ஆதாரவிலை உரிமை பறிபோய்விடுமோ என்பதுதான்.

அரிசி, கோதுமை, எண்ணெய் வித்துகள் உட்பட 23 பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் முகவராக இந்திய உணவுக்கழகம், நாபெட் (NAFED) ஆகிய நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து வேளாண் பொருள்களைக் கொள்முதல் செய்கின்றன. 23 பொருள்கள் இருந்தாலும் அரிசி, கோதுமை இரண்டையும்தான் மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்கிறது. மற்ற பொருள்களைப் பெயரளவுக்கே வாங்குகிறது.

இப்போது அதிகபட்சமாக 25 சதவிகிதம்தான் விவசாயிகளின் உற்பத்தியை அரசு கொள்முதல் செய்கிறது. மீதமுள்ள 75 சதவிகிதம் தனியார்தான் கொள்முதல் செய்கிறார்கள். குறைந்தபட்ச ஆதாரவிலை சட்டபூர்வமானால் வெளி மார்க்கெட்டில் நட்டமில்லாத விலை விவசாயிக்கு உறுதியாகும். மேலும் குறைந்தபட்ச ஆதார விலை என்பது இப்போதுவரை அரசாணையாக மட்டுமே இருக்கிறது. சட்டமாக்கினால் மட்டுமே விவசாயிகள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பமுடியும். பல்வேறு நாடுகளில் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது.

மின்சார சட்டத்திருத்த வரைவு மசோதாவை அரசு திரும்பப் பெறுவதும் காலத்தின் தேவை. ‘மாநிலங்களின் கையிலிருந்து மின்துறையை அபகரித்துப் பெரு முதலாளிகள் வசம் தருவதற்கான ஏற்பாடு அது’ என அச்சம் நிலவுகிறது. விவசாயத்துக்குக் கிடைக்கும் மின்சலுகைகள் ரத்தாகிவிடும் என்ற எண்ணமும் இருக்கிறது.

விவசாயிகளுக்கு அரசு உண்மையில் என்ன செய்ய வேண்டும்?

2018-19-ல் மத்திய அரசு செய்த ஓர் ஆய்வில் ‘ஒரு விவசாயியின் சராசரி மாத வருவாய் 10,218 ரூபாய்’ என்று வரையறுக்கப்பட்டது. ஒரு கடைநிலை அரசு ஊழியருக்குக் கிடைக்கும் குறைந்தபட்ச மாத வருமானம் 20,000. 1967-ல் 500 ரூபாய் சம்பளம் வாங்கிய ஊழியர்கள், அதே வேலைக்கு இப்போது 50,000 வாங்குகிறார்கள். ஆனால் விவசாயிகளின் வருமானம் கூடவே இல்லை. அவர்களின் உற்பத்திக்கு உரிய மதிப்பும் விலையும் தரவேண்டும். அதற்காகத்தான் ஓராண்டாகத் தெருவில் அமர்ந்து போராடுகிறார்கள். இந்தச் சூழலில் தமிழக அரசும் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் வலுவான வேளாண் விற்பனைக் கட்டமைப்புகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை மறுசீரமைப்பு செய்யவேண்டியது அவசியம். இங்கு 282 விற்பனைக் கூடங்கள் இருக்கின்றன; இவற்றில் 40 முதல் 50 மட்டுமே உண்மையாகச் செயல்படுகின்றன. 197 விற்பனைக் கூடங்களுக்குச் சொந்தக் கட்டடம் இருக்கிறது. 441 குடோன்கள் இருக்கின்றன. 367 வர்த்தகக் கொட்டகைகள் இருக்கின்றன. இவற்றால் எத்தனை விவசாயிகள் பயன்பெறுகிறார்கள் என்று ஆய்வு செய்யவேண்டும்.

விற்பனைக்கூடங்களின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை. மார்க்கெட் கமிட்டி என்பது ஒரு ஜனநாயக அமைப்பு. விவசாயிகள், வர்த்தகர்கள், அதிகாரிகள் என எல்லாத்தரப்பும் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆயினும் விவசாயிகளே அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். இந்தக் கமிட்டிக்கு சேர்மனாக ஒரு விவசாயிதான் தேர்வு செய்யப்படுவார். ஆனால், ஆளும்கட்சி மற்றும் விவசாயத்துக்குத் தொடர்பில்லாத செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் இதில் ஊடுருவிவிடுகிறார்கள். செயல்பாடுகளும் முடங்கிவிடுகின்றன. அதனால் மாநில அரசு இந்த மார்க்கெட் கமிட்டியை அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாக மாற்றவேண்டும். இவற்றின் செயல்பாடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் அறிக்கையாக வெளியிடவேண்டும்.

இந்தியாவின் பல மாநிலங்களில் வேளாண் விளைபொருள் விற்பனை என்பது தனித்துறையாகவே இருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் வேளாண்துறையின் சகோதர அமைப்பாகவே அது இருக்கிறது. விற்பனைப் பிரிவு என்பது மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களால் நிர்வகிக்கப்படவேண்டும். ஆனால், இது வேளாண் துறையோடு இணைந்திருப்பதால் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக அதிகாரிகள் வந்து போகிறார்கள். அது முடிவெடுப்பதில் சிக்கலை உருவாக்குகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வேளாண்மைக்கு ஒரு அமைச்சர், வேளாண் விளைபொருள் விற்பனைக்குத் தனித்துறை, தனி அமைச்சர் என்று இருக்கிறார்கள். கர்நாடக விவசாயிகள் மிக லாபகரமாக விவசாயம் செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களின் பிரச்னையறிந்து முடிவெடுக்க அமைச்சர், அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அப்படியில்லை.

ஒவ்வொரு மார்க்கெட் கமிட்டியும் சுய நிதியாதாரம் கொண்ட அமைப்பு. ஆனால் அவற்றின் வருமானம், நல்ல உள்கட்டமைப்புகளை உருவாக்கப் போதுமானதாக இல்லை. தனி பட்ஜெட் போடும் தமிழக அரசு மார்க்கெட் கமிட்டிகளுக்குப் போதிய நிதியாதாரத்தை ஒதுக்கவேண்டும். மத்திய அரசும் இந்த கமிட்டிகளுக்கு நிதியுதவி செய்யவேண்டியது அவசியம்.

வேளாண்மை விளைபொருள் சட்டத்தில் விற்பனைக்கூடங்கள் மூலமாகவே பொருள்களை விற்பனை செய்யவேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெல்தான் பிரதானமாக விளைகிறது. ஆனால், அரசு நெல் கொள்முதலுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தைப் பயன்படுத்துவதில்லை. பயன்படாமல் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோன்களை அரசு பயன்படுத்தவேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுமம் போன்ற அமைப்புகளெல்லாம் தனித்தனியாகச் செயல்படுகின்றன. இவற்றையெல்லாம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களோடு இணைக்கவேண்டும். அப்போதுதான் போட்டி அதிகரிக்கும். விவசாயிகளுக்கும் என்ன விலை கிடைக்கிறது என்ற தெளிவு இருக்கும்.

விவசாயிகளுக்கு அரசு உண்மையில் என்ன செய்ய வேண்டும்?

பல நேரங்களில், ஏலம் நடக்கும்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழே போய்விடும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு நெல் குவிண்டால் 2,000 ரூபாய் என்று குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தால், 1,800 ரூபாய்க்கு மேல் ஏலம் போகாது. அதுமாதிரி நேரத்தில் இந்த நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு நிதியத்தை அரசு உருவாக்கவேண்டும். கேரளாவில் சமீபத்தில் 13 காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்தார்கள். இதற்கென்று 32 கோடி ரூபாயை ஒதுக்கி ஒரு நிதியத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட விலைக்குக் கீழே விற்பனை நடக்க நேர்ந்தால், இந்த நிதியம் விவசாயிக்கு இழப்பீடு தந்துவிடும். மத்தியப்பிரதேச மாநிலத்திலும் இப்படியான நிதியம் இருக்கிறது. தமிழகம் இதையும் பரிசீலிக்கலாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு புவியியல் அமைப்பு, வேளாண் மரபு இருக்கின்றன. வேளாண்மை சார்ந்த எல்லா முடிவுகளையும் மாநில அரசுகளே எடுக்கவேண்டும். அதனால்தான் வேளாண்மை மாநில அரசுகளின் பட்டியலில் இருக்கிறது. வேளாண்மை தொடர்பான முடிவுகளை மாநில அரசுகளே எடுக்கவேண்டும். மாநிலங்களின் தன்மைக்கேற்ப மாநில அரசுகளே வணிகத்தைக் கையாளவேண்டும். அதற்கான வழிவகைகளைத்தான் மத்திய அரசு செய்யவேண்டுமே ஒழிய, ஆளுமை செய்ய முயலக்கூடாது...” என்கிறார் பொன்னம்பலம்.

வெறுமனே வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதுடன் மத்திய அரசின் கடமை முடிந்துவிட்டது என்று நினைத்துவிடக்கூடாது. விவசாயிகளின் பிரச்னைகளையும் சாத்தியமான தீர்வுகளையும் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.