Published:Updated:

நரகமாகும் நகரங்கள்... மிருகமாகும் இளைஞர்கள்... மிரட்டும் போதை மாஃபியா!

மிரட்டும் போதை மாஃபியா
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டும் போதை மாஃபியா

இந்த போதை கலாசாரத்தின் புதிய பிரச்னையாகக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. திருட்டு, கொலை, பாலியல் குற்றங்கள் என இளைஞர்கள் சீரழிவது அச்சமூட்டுகிறது.

நரகமாகும் நகரங்கள்... மிருகமாகும் இளைஞர்கள்... மிரட்டும் போதை மாஃபியா!

இந்த போதை கலாசாரத்தின் புதிய பிரச்னையாகக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. திருட்டு, கொலை, பாலியல் குற்றங்கள் என இளைஞர்கள் சீரழிவது அச்சமூட்டுகிறது.

Published:Updated:
மிரட்டும் போதை மாஃபியா
பிரீமியம் ஸ்டோரி
மிரட்டும் போதை மாஃபியா

சமீபகாலங்களில் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகம் இத்தனை பரபரப்பாக இருந்ததில்லை. மார்ச் 18-ம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “ஜனவரி முதல் மார்ச் 17-ம் தேதி வரை, போதைப்பொருள் தொடர்பாக சென்னையில் மட்டும் 109 வழக்குகள் பதிவுசெய்துள்ளோம். 189 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 581 கிலோ கஞ்சா, 10 கிலோ கஞ்சா ஆயில், 964 மெத், அமெத் எனும் இரண்டு வகைப் போதைப்பொருள்கள், 10 கிலோ எஃபிட்ரின் எனும் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவையல்லாமல் 8,672 போதை மாத்திரைகளும் பிடிபட்டுள்ளன” என்று பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார்!

தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கமாக மதுவும் கஞ்சாவும்தான் பெரிய அளவில் பயன்பாட்டில் இருந்துவந்தன. ஆனால், சமீபகாலமாக மாத்திரைகள், பவுடர்கள், க்ரிஸ்டல், லிக்விட், ஸ்டாம் பேப்பர், சாக்லேட் எனப் பல வடிவங்களில் ரகம் ரகமாகப் போதைப்பொருள்கள் தமிழக மார்க்கெட்டில் வலம்வருகின்றன. இந்த போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள், போதை வெறியில் மிருக குணத்துக்கு மாறி, பல்வேறு குற்றச் செயல்பாடுகளில் ஈடுபடுவது பெரும் சமூகப் பிரச்னையாகிவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமான பல நகரங்களில் இதுதான் நிலை. என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்? விசாரணையில் இறங்கினோம்...

நரகமாகும் நகரங்கள்... மிருகமாகும் இளைஞர்கள்... மிரட்டும் போதை மாஃபியா!

“புதுப்புது போதை...” - சீரழியும் இளைஞர்கள்!

தமிழகத்துக்கு போதைப்பொருள் சப்ளையில் பெரும்பகுதி ஆந்திராவிலிருந்துதான் வருகிறது. 27 வகையான போதைப்பொருள்கள் சர்வதேச மார்க்கெட்டில் இருந்தாலும், தமிழகத்தில் சரி பாதி போதைப்பொருள்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. ஒரு கிராம் 30 ரூபாயில் ஆரம்பித்து 5,000 ரூபாய் வரையில் இந்தப் போதைப்பொருள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. காலம் காலமாக சென்னை மாநகரிலுள்ள பப்புகள், பண்ணை விடுதிகளில், மேல்தட்டு வர்க்கத்தினர் மத்தியில் மட்டுமே விற்கப்பட்டுவந்த இந்த போதைப்பொருள்கள், இன்று சர்வ சாதாரணமாக வண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர், வியாசர்பாடி ஏரியாக்களில்கூட கிடைப்பதுதான் விவகாரத்தை சீரியஸாக்கியிருக்கிறது. Narcotic Control Bureau- NCB அமைப்பின் சீனியர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.

“கஞ்சா, ஹெராயின் போலவே க்ரிஸ்டல் வடிவத்திலான ‘மெத்’ போதைப்பொருள் பயன்பாடு தற்போது அதிகரித்திருக்கிறது. இதைத் தயாரிப்பதற்குச் சிறிய அளவிலான ‘லேப்’ செட்டப் போதும். மூலப்பொருள்களை தாய்லாந்து, மியான்மரிலிருந்து கொண்டுவந்து, ஹைதராபாத்திலுள்ள ‘லேப்’களில் இந்த வகை போதைப்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு துணுக்கு பயன்படுத்தினாலே போதும், இரவு முழுவதும் தூக்கமில்லாமல் போதை மயக்கத்திலேயே நீண்ட நேரம் இருக்க வைத்துவிடும். தொடர்ந்து பயன்படுத்தினால், மூளை தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படுவதோடு, மனச்சிதைவும் ஏற்படும். புதுப்புது போதைகளைத் தேடி அலையும் தமிழக இளைஞர்கள் இதற்குப் பெருவாரியாக அடிமையாகிறார்கள். சமீபத்தில்கூட வண்ணாரப்பேட்டையில் 860 கிராம் ‘க்ரிஸ்டல்’ போதை வஸ்துவை சென்னை போலீஸார் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இந்த போதை கலாசாரத்தின் புதிய பிரச்னையாகக் குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. திருட்டு, கொலை, பாலியல் குற்றங்கள் என இளைஞர்கள் சீரழிவது அச்சமூட்டுகிறது. சென்னையில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு 13 வயது சிறுமிக்கு, சமூக வலைதளம் மூலமாக நான்கு நண்பர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அனைவருமே சிறுமியைவிட வயதில் மூத்தவர்கள். வார இறுதி நாள்களில் தோழிகளுடன் போதை உலகத்தில் சஞ்சரிப்பது அவர்களுக்கு வாடிக்கையாக இருந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அந்தச் சிறுமியையும் போதை வஸ்துகள் கொடுத்து அடிமையாக்கியிருக்கிறார்கள். பிறகு, அந்த நான்கு பேரும், போதையில் சிறுமியைத் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். போதைக்கு முற்றிலும் அடிமையான அந்தச் சிறுமியை மீட்க முடியாமல் போராடிவருகிறோம். கடந்த வாரத்தில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், போதையில் நடந்த தகராறில் குத்திக் கொல்லப்பட்டிருக்கிறான். மடிப்பாக்கம் பகுதியில் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வம், கஞ்சா போதையிலிருந்த நபர்களால்தான் கொலைசெய்யப்பட்டார். புளியந்தோப்புப் பகுதியில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன், போதைப்பொருள் வாங்குவதற்காக செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறான். சமீபத்தில், ஆவடியில் நடந்த இரட்டைக் கொலை வழக்கின் ஆரம்பப் புள்ளியே போதைதான். இப்படிக் குற்ற நிகழ்வுகள் போதையை மையமாகவைத்தே நடப்பதும், இதில் அதிகமும் சிறுவர்கள், இளைஞர்கள் ஈடுபடுவதும் வேதனையளிக்கிறது” என்று அதிர்ச்சியளித்தார் அந்த அதிகாரி.

ஆன்லைன் ஆர்டர் முதல் கார்கோ ரூட் வரை

கடந்த ஆண்டு, குஜராத்தில் 21,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் குவியலைத் தனியார் துறைமுகத்தில்வைத்து அந்த மாநில போலீஸார் பிடித்தனர். அந்த போதை நெட்வொர்க்கில் சென்னையைச் சேர்ந்த சுதாகர், கோவையைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட சிலரை மத்திய போதைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் கைதுசெய்தது. பிடிபட்ட அந்த நெட்வொர்க் ஆட்கள்தான், சென்னையிலுள்ள போதை வியாபாரிகளுக்குப் பிரதானமாக சப்ளை செய்கிறார்கள் என்கிறது காக்கிகள் வட்டாரம்.

சென்னை பெருநகரக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “இந்த நெட்வொர்க் செயல்படுவது தனி. அதேநேரம், ஆன்லைன் மூலம் மருந்து என்கிற பெயரில்கூட போதைப்பொருள்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. வலி நிவாரணி மாத்திரைகளைக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துக்கொண்டால், அதுவே போதைப்பொருளாகிவிடும். இவற்றை மருத்துவர்களின் அனுமதி இல்லாமல் விற்கக் கூடாது. ஆனால், சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர், வலி நிவாரணி மாத்திரைகளை டெல்லியிலிருந்து ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து கூடுதல் விலைக்குத் தமிழகம் முழுவதும் விற்றுவந்திருக்கிறார். இவரை மார்ச் 17-ம் தேதி கோடம்பாக்கம் போலீஸார் கைதுசெய்தபோதுதான், ஆன்லைன் மூலமாக இப்படியொரு வியாபாரம் நடப்பதே முழுவதுமாகத் தெரிந்தது. இப்படியான ஆன்லைன் போதைப்புள்ளிகள் பலருக்கும் வலைவிரித்திருக்கிறோம்.

விமான நிலையத்தின் கார்கோ பிரிவு மூலமாகவும் போதைப்பொருள் கடத்தல் அரங்கேறுகிறது. சென்னை விமான நிலையத்துக்கு மருந்து என்ற பெயரில் வரும் பார்சல்களில் போதைப்பொருள்கள் வந்து இறங்குகின்றன. கடந்த மார்ச் 9-ம் தேதி ‘பர்த் டே கிஃப்ட்’ என்கிற பெயரில் வந்த இரண்டு பார்சல்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. ஹைதராபாத், விஜயவாடா முகவரியில் வந்த அந்த பார்சல்களைச் சோதனையிட்டபோது, விலையுயர்ந்த 32 போதை மாத்திரைகளும், 419 கிராம் உயர்ரக கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது ஒருபுறமென்றால், கடல்வழியாக நடக்கும் கடத்தல் சம்பவங்களும் அதிரவைக்கின்றன. கடந்த வருடம் வேளாங்கண்ணி அருகே செருதூர் கடற்கரையோரம் மிதந்துவந்த மரப்பெட்டி ஒன்றைக் கடலோரக் காவல்படையினர் கைப்பற்றினர். அதில், 15 கோடி மதிப்புள்ள 15 கிலோ ஹெராயின் இருந்தது காவல்துறையை அதிரவைத்தது. இப்படி, கடந்த சில மாதங்களில் மட்டும் கடல் மார்க்கமாக 150 கிலோ போதைப்பொருள் சிக்கியுள்ளன. ஆப்கானிஸ்தானில் உற்பத்தியாகும் இந்தப் போதைப்பொருள்கள், இரான் வழியாகக் கப்பல் மூலம் சர்வதேசக் கடல் பரப்புக்கு எடுத்துவரப்பட்டு, அங்கு வைத்து இலங்கைப் படகுகளுக்கு மாற்றப்படுகின்றன. அந்தப் படகுகள் மூலமாகத் தமிழகக் கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு, தமிழக எல்லைக்குள் நுழைகின்றன. இந்த போதைப்பொருள்களை சென்னையிலுள்ள பல பகுதிகளில் அதிகமாக விற்கிறார்கள்.

நரகமாகும் நகரங்கள்... மிருகமாகும் இளைஞர்கள்... மிரட்டும் போதை மாஃபியா!

கரையக் கரைய போதை... தமிழகம் முழுவதும் ‘ஸ்டாம்ப்’ கனஜோர்!

போதை உலகத்தில் ஸ்டாம்ப் வடிவிலான போதை பேப்பருக்கு தனி மவுசு உள்ளது. கஞ்சா, ஹெராயின், கோகெயின், அபின் போன்ற போதைப்பொருள்களைப் பயன்படுத்தும்போது, வாசத்தை வைத்து அருகில் இருப்பவர்களால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், ‘எல்.எஸ்.டி ஸ்டாம்ப்’ வடிவிலான போதைப்பொருளுக்கு வாசனை இருக்காது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை போன்ற நகரங்களில் இதன் பயன்பாடு அதிகம். போதை தரக்கூடிய ஒரு வேதிப்பொருளைத் தண்ணீரில் கரைத்து, அதை ஸ்டாம்ப்பில் ஊற்றி போதை ஸ்டாம்ப்பாக மாற்றுகின்றனர். இதை நாக்கில் வைத்துக்கொண்டால், ஸ்டாம்ப் கரையக் கரைய போதை தலைக்கேறும். ஏறத்தாழ 8 முதல் 13 மணி நேரம் வரை இந்த போதை இருக்கும். சென்னையில் வார இறுதி நாள்களில் ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர் சாலை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வீக் எண்ட் பார்ட்டிகளில், இந்தவகை ‘ஸ்டாம்ப்’ போதைப்பொருள் இளைஞர்களிடம் அதிகமாக விற்பனையாகிறது.

இந்த போதை வியாபாரிகளுக்கு என ‘சென்ட்ரல் நெட்வொர்க்’ இல்லை. ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு குழுக்கள்தான் கோலோச்சுகின்றன. இதனால், இவர்களை முழுவதுமாகக் கட்டுப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. சப்ளை செயினை முழுவதுமாக உடைக்க முடிவதில்லை. ஏதாவது ஒரு ரூட்டில் போதைப்பொருள் தமிழகத்துக்கு வந்துவிடுகிறது. வியாசர்பாடி, கண்ணகி நகர், புளியந்தோப்பு, ஐஸ் ஹவுஸ் என சென்னையிலும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை எனப் பல்வேறு ஊர்களிலுள்ள பகுதிகளிலும் அந்தந்த லோக்கல் ரெளடிகளின் கண்ணசைவில் இவை விற்கப்படுகின்றன. நகரங்களை நரகமாக்கி, இளைஞர்களை மிருகமாக்கிவரும் இந்த போதை கலாசாரத்தைத் தடுப்பதற்கு போலீஸும் கடும் முயற்சி செய்கிறது. தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில், கடந்த 2019-ல் 12,000 கிலோ மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 2020-ல் 14,000 கிலோ போதைப் பொருளும், 2021-ல் 17,000 கிலோ மதிப்புள்ள போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, 2021-ல் 6,900 வழக்குகள் போடப்பட்டுள்ளன. காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த போதை மாஃபியா உலகத்தை முழுவதுமாக உடைக்க முடியவில்லை என்பது உண்மைதான்” என்றார்.

இந்த போதை கலாசாரத்தை முறியடிக்க போலீஸார் தீவிரமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘ஆபரேஷன் DAD’ என்கிற பெயரில் இதற்கென ஸ்பெஷல் டீம் போடப்பட்டு, விசாரணையும் சூடுபிடித்திருக்கிறது. ஆனால், நெட்வொர்க்கை முழுவதுமாக உடைக்க முடியுமா என்பதும், போதைப் பழக்கத்துக்கு அடிமையான அனைவரையும் மீட்டெடுக்க முடியுமா? என்பதும் கேள்விக்குறி. “சுகாதாரத்துறை, சமூக நலத்துறை ஆகியோருடன் சேர்ந்து போதைக்கு அடிமையானவர்களுக்கு ‘கவுன்சலிங்’ அளிக்க திட்டமிட்டிருக்கிறோம்” என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலே சொல்லும் அளவுக்கு சீரியஸாகியிருக்கிறது போதை கலாசாரம். போதையும் குற்றங்களும் பெருகி, நரகமாக மாறிக்கொண்டிருக்கும் நகரங்களை எப்படி மீட்கப் போகிறோம்? சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக இது மாறிவிடும் முன்பு போலீஸ் தீவிரம் காட்ட வேண்டும்!

*****

நரகமாகும் நகரங்கள்... மிருகமாகும் இளைஞர்கள்... மிரட்டும் போதை மாஃபியா!

போதை லேப்!

சமீபத்தில், சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த காதர் மொய்தீனைக் கைதுசெய்த சென்னை போலீஸ், அவரிடமிருந்து 80 கிராம் செயற்கை போதைப்பொருளைக் கைப்பற்றியது. அவரை விசாரித்தபோது, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அனிபாவைக் கைகாட்டியிருக்கிறார். இந்த செயின் லிங்க் விசாரணை, பலரைத் தாண்டி ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில், அரசுத் தொழில் பூங்காவில் ஆய்வகம் நடத்திவந்த ரமேஷ் என்பவரது வாசல் வரை வந்திருக்கிறது. அவரது ஆய்வகத்தில்தான் செயற்கை போதைப்பொருள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு உதவியாக இருந்த வெங்கட் ரெட்டி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ரமேஷை போலீஸார் தேடிவருகிறார்கள். இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், கடந்த நான்கு வருடங்களாகத் தமிழகத்துக்குத் தங்கு தடையின்றி போதைப்பொருள் சப்ளை செய்திருக்கிறார் ரமேஷ்!

யார் அந்த ஸ்டார் பாய்?

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த எண்டமூரி கவுரி ஸ்கந்த குமார் என்பவன், மார்ச் 18-ம் தேதி கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தபோது கைதுசெய்யப்பட்டான். ஓராண்டுக்கு முன்பே, தெலங்கானா போலீஸார் இவனைத் தேடியபோது தலைமறைவாகிவிட்டான். இவனைப் பற்றி அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, அவனை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைதுசெய்திருக்கிறார்கள்.

அதேவேளையில், கடந்த ஜனவரி 21-ம் தேதி சர்வதேச போதைக் கடத்தல் தலைவன் டோனி என்பவன் மும்பையில் பதுங்கியிருக்கும் ரகசியத் தகவலை அறிந்து, தெலங்கானா போலீஸார் அவனைக் கைதுசெய்தனர். நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அவனிடம் விசாரித்தபோது, ‘தெலங்கானாவைச் சேர்ந்த 13 பெரிய தொழிலதிபர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்வதாக’ வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். ‘டோனிக்கும் ஸ்கந்த குமாருக்கும் தொடர்பு இருக்கலாம்’ என்று தெலங்கானா போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ‘ஸ்டார் பாய்’ என்ற புனைபெயரை வைத்திருக்கும் சர்வதேச போதை மாஃபியா தலைவனுடன் டோனி தரப்பினருக்கும் உள்ள தொடர்பு தற்போது தெலங்கானா போலீஸாரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டுவருகிறது.

நரகமாகும் நகரங்கள்... மிருகமாகும் இளைஞர்கள்... மிரட்டும் போதை மாஃபியா!

“போதையில்லாத நகரமாக மாறும்!” - சங்கர் ஜிவால் நம்பிக்கை

சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் பேசினோம். “ஆந்திராவிலிருந்துதான் 70 சதவிகித போதைப்பொருள்கள் தமிழகத்துக்கு ரயில்கள், லாரிகள், கூரியர் மூலம் கொண்டுவரப்படுகின்றன. ஆன்லைன் மூலமாகவும் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். ஏற்கெனவே மருத்துக்கடை உரிமையாளர்கள், கூரியர் நிறுவனத்தினரிடம் மீட்டிங் நடத்தியுள்ளோம். மேலும் இளைஞர்கள்தான் அதிக அளவில் போதைப்பொருள்களைப் பயன்படுத்திவருகின்றனர். போதைப்பொருள்களைக் கடத்தி விற்பவர்களோடு அந்த மொத்த நெட்வொர்க்கையும் பிடிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். பொதுமக்களும் எங்களுக்குத் துப்பு கொடுக்கலாம். விரைவில் சென்னை போதையில்லாத நகரமாக மாறும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism