Published:Updated:

போதை கேந்திரமான குஜராத்! - எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறது மத்திய அரசு?

குஜராத்
பிரீமியம் ஸ்டோரி
குஜராத்

குஜராத்தில் தனியார் துறைமுகங்களான முந்த்ரா, பிபாவாவ் துறைமுகங்கள் நாட்டுக்குள் போதைப்பொருளைக் கொண்டுவருகின்றன

போதை கேந்திரமான குஜராத்! - எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறது மத்திய அரசு?

குஜராத்தில் தனியார் துறைமுகங்களான முந்த்ரா, பிபாவாவ் துறைமுகங்கள் நாட்டுக்குள் போதைப்பொருளைக் கொண்டுவருகின்றன

Published:Updated:
குஜராத்
பிரீமியம் ஸ்டோரி
குஜராத்

`கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்கள் குஜராத்தை வந்தடைகின்றன. காந்தி, படேலின் புண்ணிய பூமியில் இந்த விஷத்தைப் பரப்புவது யார்... கடத்தல் கும்பலை அரசு அமைப்புகளால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை... அவர்களை யார் பாதுகாக்கிறார்கள்... பிரதமரே எத்தனை காலத்துக்கு நீங்கள் மௌனமாக இருப்பீர்கள்... கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்’ என அடுக்கடுக்கான கேள்விக் கணைகளால் மத்திய அரசை துளைத்தெடுத்திருக்கிறார் ராகுல் காந்தி. அப்படி என்ன நடந்தது குஜராத்தில்?

போதை கேந்திரமான குஜராத்! - எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறது மத்திய அரசு?

குஜராத் - போதைப்பொருள் கடத்தல் மாடல்!

போதைப்பொருள் கடத்தல் தொழிலின் மையப்புள்ளியாக மாறியிருக்கிறது குஜராத். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அங்கே 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பிடிபட்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதிகூட அங்கே ரூ.1,026 கோடி மதிப்புள்ள 513 கிலோ போதைப்பொருள் சிக்கியிருக்கிறது.

ஆப்கன் உள்ளிட்ட பிற நாடுகளிலிருந்து குஜராத்துக்குக் கடத்திவரப்படும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்படும் முக்கிய இடமாக இருப்பது அதானியின் முந்த்ரா துறைமுகம் உள்ளிட்ட தனியார் துறைமுகங்கள்தான். கடந்த ஜூலையில் முந்த்ரா துறைமுகம் அருகே சுமார் 376.5 கோடி ரூபாய் மதிப்பிலான 75.3 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஜவுளி சரக்குப் பெட்டகம் என்று மே மாதம் அனுப்பப்பட்ட ஒரு கன்டெய்னரை சோதித்துப் பார்த்தால், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சரக்கு இருந்தது; அதுவும் ஜவுளி அல்ல.... போதைப்பொருள் மூட்டைகள்!

கடந்த ஆண்டு, செப்டம்பரில் சுமார் 21,000 கோடி மதிப்புள்ள 3,000 கிலோ ஹெராயின் இதே துறைமுகத்தில் பிடிபட்டிருக்கிறது. அதே ஆண்டு, ஜூன் மாதம் இரானிலிருந்து கப்பலில் கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் அதிகாரிகளின் சோதனையிலிருந்து தப்பித்து வெளியில் சென்றிருக்கிறது. இதை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார். எல்லாச் சம்பவங்களையும் சொன்னால், பக்கங்கள் போதாது.

அதானியின் முந்த்ரா துறைமுகம்
அதானியின் முந்த்ரா துறைமுகம்

அதானி துறைமுகமே நுழைவாயில்!

இது குறித்துப் பேசும் காவல்துறை அதிகாரிகள், ``குஜராத்தில் தனியார் துறைமுகங்கள் அதிகமாக இருக்கின்றன. அங்கெல்லாம், வெளிநாடுகளிலிருந்து வரும் கண்டெய்னர்கள் சரியாகப் பரிசோதிக்கப்படாமலேயே வெளியில் அனுப்பப்படுகின்றன. குறிப்பாக அதானி குழுமத்துக்குச் சொந்தமான முந்த்ரா துறைமுகம், போதைப்பொருள் கடத்திக்கொண்டு வர பிரதான நுழைவு வாயிலாக இருக்கிறது” எனக் குற்றம்சாட்டுகின்றனர்.

இப்படி போதைப்பொருள் சர்ச்சையில் தொடர்ச்சியாக சிக்கியதையடுத்து, ஆப்கன், இரான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்குகளை கையாள மாட்டோம் என்று முந்த்ரா துறைமுகம் தெரிவித்தது. இருந்தாலும், போதைப்பொருளை இரானிலிருந்து அனுப்பாமல் துபாயிலிருந்து அனுப்ப ஆரம்பித்திருக்கின்றனர் கடத்தல்காரர்கள். மேலும், இந்தியாவுக்குள் போதைப்பொருளை அனுப்ப, தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பயன்படுத்திவருவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போதை கேந்திரமான குஜராத்! - எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறது மத்திய அரசு?

நண்பர் என்பதால் நடவடிக்கை இல்லையா?

இந்த போதைப்பொருள் கடத்தல் பற்றிப் பேசிய காங்கிரஸ் சோஷியல் மீடியா பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, ``குஜராத்தில் தனியார் துறைமுகங்களான முந்த்ரா, பிபாவாவ் துறைமுகங்கள் நாட்டுக்குள் போதைப்பொருளைக் கொண்டுவருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து ஆண்டுகளில், குஜராத்தில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டிருக்கிறது. இது குஜராத்தின் பட்ஜெட்டைவிட அதிகம். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, மத்திய போதைப்பொருள் தடுப்பு ஏஜென்சிகள் இது குறித்து சரிவர விசாரிப்பதில்லை. தனியார் துறைமுக உரிமையாளர்களும் விசாரிக்கப்படவில்லை. குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்க்வி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் மூன்று போதைப்பொருள் தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதேபோல, முந்த்ரா துறைமுகம் அதானிக்குச் சொந்தமானது என்பதால்தான் மோடி அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லையா என்ற பொருளில், “பலமுறை போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட போதிலும் துறைமுக உரிமையாளரிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தப்படவில்லை... மத்திய அரசிலும், குஜராத் அரசிலும் அமர்ந்துகொண்டு மாஃபியா நண்பர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்கள் யார்... பிரதமரே எத்தனை காலத்துக்கு நீங்கள் மௌனமாக இருப்பீர்கள்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

விரைவில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாகவும் இது உருவெடுத்திருக்கிறது. அரசியலைத் தாண்டி நாட்டின் பாதுகாப்பும், இளைஞர்களின் எதிர்காலமும் முக்கியம். போதைப்பொருள் கடத்தலை எப்படித் தடுத்து நிறுத்தப்போகிறது மத்திய அரசு?

கடத்தல்காரர்கள், இந்தியா பக்கம் திரும்பியது ஏன்?

மேற்கத்திய நாடுகளுக்குத் தேவையான போதைப்பொருளில் பெரும் பகுதி ஆப்கானிஸ்தானிலிருந்தே சப்ளையாகிறது. இப்படி ஆப்கனில் உற்பத்தியாகும் போதைப்பொருள்களை, இலங்கைக்குக் கடத்திச் சென்று, பின்னர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்குக் கடத்துவதைத்தான் கடத்தல்காரர்கள் வழக்கமாகக்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் நடைமுறையை மீண்டும் கொண்டுவந்தது இலங்கை அரசு. இதனால் கடத்தல்காரர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரானிலிருந்து போதைப்பொருளை நேரடியாக இந்தியாவுக்குள் கடத்திக்கொண்டு வந்து, இங்கிருந்து மற்ற நாடுகளுக்குப் பிரித்து அனுப்புகின்றனர். குஜராத்துக்கு கப்பல்கள் மூலம் மட்டுமல்ல, நள்ளிரவு நேரங்களில் பாகிஸ்தானிலிருந்து படகு வழியாக போதைப்பொருள் கடத்திவரப்படும் சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர்.