Published:Updated:

பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை! - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடதடத்த விசாரணை

பறக்கும் தட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
பறக்கும் தட்டுகள்

பறக்கும் தட்டுகள் என்பவை உண்மை. அவை கட்டுக்கதையல்ல, நிஜத்தில் இருப்பவை” என்று கூறி விசாரணை அமர்வைத் தொடங்கினார் ஆண்ட்ரே கார்சன்

பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை! - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடதடத்த விசாரணை

பறக்கும் தட்டுகள் என்பவை உண்மை. அவை கட்டுக்கதையல்ல, நிஜத்தில் இருப்பவை” என்று கூறி விசாரணை அமர்வைத் தொடங்கினார் ஆண்ட்ரே கார்சன்

Published:Updated:
பறக்கும் தட்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
பறக்கும் தட்டுகள்

விஞ்ஞானம் பெருவளர்ச்சியடைந்துவிட்ட இந்தக் காலத்திலும், பறக்கும் தட்டுகளைப் பற்றிய மர்மம் இன்னும் விடை தெரியாத புதிராகவே நீடிக்கிறது.

பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை! - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடதடத்த விசாரணை

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், பறக்கும் தட்டுகளைப் பற்றிய விவரங்களை முதன்முறையாக வெளியிட்டது அமெரிக்க அரசு. “பறக்கும் தட்டுகளைப் பற்றி நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த விமானிகளே சில பறக்கும் தட்டுகளைப் படம் பிடித்திருக்கிறார்கள். அவை எங்கேயிருந்து வந்தன... எங்கே சென்றன என எந்த விவரமும் எங்களிடம் இல்லை. மேற்கொண்டு விசாரித்துவருகிறோம்” என அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது அமெரிக்க அரசு. பறக்கும் தட்டுகளைப் பற்றிய தேடல் உள்ளவர்களிடமும், வேற்று கிரகவாசிகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்குமிடையே இந்த அறிவிப்பு ஆர்வத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இச்சூழலில்தான் மே 17-ம் தேதி பறக்கும் தட்டுகள் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணை நடந்திருக்கிறது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு பறக்கும் தட்டுகள் பற்றி நடைபெறும் அரசு விசாரணை என்பதால், அமெரிக்க நாடாளு மன்றத்தைப் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரே கார்சன், அமெரிக்க உளவுத்துறை மேற்பார்வைக்குழுவில் உறுப்பினராக இருக்கும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரான ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது தலைமையில் இந்த விசாரணை நடைபெற்றது. காலையில் பொது விசாரணையாகவும், மாலையில் ரகசிய விசாரணையாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிர்ச்சியைக் கிளப்பும் சில வீடியோக்கள், தரவுகளை எடுத்துவைத்திருக் கிறார்கள் அரசு அதிகாரிகள்.

பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை! - அமெரிக்க நாடாளுமன்றத்தில் தடதடத்த விசாரணை

“பறக்கும் தட்டுகள் என்பவை உண்மை. அவை கட்டுக்கதையல்ல, நிஜத்தில் இருப்பவை” என்று கூறி விசாரணை அமர்வைத் தொடங்கினார் ஆண்ட்ரே கார்சன். “இவை ஏன் வேற்றுக் கிரகவாசிகளின் தயாரிப்பாக இருக்கக் கூடாது...” என ஆண்ட்ரே கேட்டவுடன் ‘ஜெர்க்’ ஆன, அமெரிக்க கடற்படை உளவுப்பிரிவின் துணை இயக்குநர் ஸ்காட் பிரே, “இவை வேற்றுக் கிரகங்களில் இருந்து வந்ததற்கான எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. பசிபிக் பெருங்கடலில் அமெரிக்க போர்ப்படை விமானம் ஒன்று பறந்துகொண்டிருந்தபோது, வானத்தில் அந்தரத்தில் பந்து போன்ற ஒரு பொருள் நின்றிருக்கிறது. அதை நம் விமானி படம் பிடித்திருக்கிறார். சில நிமிடங்களில் அந்தப் பொருள் மின்னல் வேகத்தில் பறந்து மறைந்துவிட்டது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ‘ஹைசானிக்’ தொழில்நுட்பத்தில் பறக்கும் விமானங்களைத் தயாரிக்க ஆய்வு செய்கின்றன. அந்த நாடுகளின் ஆய்வு முயற்சியாக இந்த பறக்கும் தட்டுகள் இருக்கலாம் எனக் கருதினோம். ஆனால், அப்படி மட்டுமே இதை எண்ணிக் கடந்துவிட முடியாது” என்று விளக்கமளித்திருக்கிறார் ஸ்காட் பிரே.

ஆண்ட்ரே கார்சன்
ஆண்ட்ரே கார்சன்

“ஒரு வானியல் நிகழ்வாகக்கூட இது நிகழ்ந்திருக்கலாம். அவை மர்ம பறக்கும் தட்டுகளாக மனிதர்களின் கண்ணில் பட்டிருக்கலாம். இதற்கு ஏன் வாய்ப்பு இருக்கக் கூடாது?” என ராஜா கிருஷ்ணமூர்த்தி கேள்வி எழுப்பியதும், விசாரணை அரங்கில் சூடு பறந்தது. அதற்கு பதிலளித்த ஸ்காட் பிரே, “பறக்கும் தட்டுகள் இருப்பது உண்மை. அதேநேரம், அவற்றுடன் தொடர்புகொள்ள அமெரிக்க ராணுவம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பறக்கும் தட்டுகளின் உடைந்த பாகங்கள் எதையும் நாங்கள் மீட்கவில்லை. நம் ராணுவ விமானிகள் கடந்த சில வருடங்களில் மட்டும் 11 முறை அவற்றுடன் மோதுவதிலிருந்து தப்பியிருக்கிறார்கள். இது ஒரு சீரியஸ் பிரச்னைதான். அதேநேரம், எல்லாவற்றையும் பொதுவெளியில் எங்களால் சொல்ல முடியாது” என்றார். பறக்கும் தட்டுகள் பற்றி அமெரிக்க விமானிகள் எடுத்த இரண்டு வீடியோக்களும் விசாரணை அமர்வில் வெளியிடப்பட்டன.

ஸ்காட் பிரே
ஸ்காட் பிரே

பொது அமர்வைத் தொடர்ந்து, ரகசிய அமர்வு நடந்திருக்கிறது. இதில், 1969-ல் கைவிடப்பட்ட ‘புராஜெக்ட் புளூ புக்’ திட்டத்துக்குப் பிறகு, அமெரிக்க ராணுவம் எதிர்கொண்ட பறக்கும் தட்டு நிகழ்வுகள் பற்றி பேசியிருக்கிறார்கள். ‘புராஜெக்ட் புளூ புக்’ திட்டத்தில், பறக்கும் தட்டுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு, 12,618 சம்பவங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில், 706 சம்பவங்களுக்கு உரிய விளக்கத்தை அமெரிக்க ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது பற்றியும் ரகசிய அமர்வில் விவாதித்திருக்கிறார்கள். “வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய தகவல் தெரிந்தால், அதை மறைத்துவைக்க வேண்டிய அவசியம் அமெரிக்க ராணுவத்துக்குக் கிடையாது” என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார் ஸ்காட் பிரே.

ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி

“1970-ம் ஆண்டுக்குப் பிறகு, பறக்கும் தட்டுகள் பற்றிய விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றம் நடத்தியிருப்பதால், முதல்நாளே எல்லா மர்மங்களும் உடைந்துவிடாது” என்கிறார்கள் இந்த விசாரணையில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். மர்மம் உடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே, இந்த விசாரணை உணர்த்தும் தகவல்.

அதுவரை, சுவாரஸ்யமான கற்பனைகளுக்குப் பஞ்சமிருக்காது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism