
தங்கமே... தங்கம்
கொரோனாவுக்கும் கோல்டுக்கும் சில ஒற்றுமைகள்... கடந்த சில மாதங்களாக இரண்டுமே பிரேக்கிங் நியூஸில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஜூன் மாத இறுதி வரை வரைபடத்தில் மேல்நோக்கியே எகிறிக்கொண்டிருந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் எக்குத்தப்பாய் எகிறிக்கொண்டே போன தங்கத்தின் விலை பீதியைக் கிளப்பியிருக்கிறது.

கொரோனா தொற்றும் கோல்டு விலையும் இறங்குமா என ஏங்கித் தவித்தவர்களுக்கு, கடந்த சில நாள்கள் ஆறுதலை அளித்திருக்கும். இரண்டுமே இறங்குமுகத்தை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலை இப்படியே தொடரும் என நிம்மதிகொள்ள முடியாத அளவுக்கு இரண்டும் எந்த நேரமும் மீண்டும் உச்சம் தொடலாம் எனும் நிபுணர்களின் கணிப்புகள் பிபியை ஏற்றி, பல்ஸ் ஆக்ஸி மீட்டரில் பிரதிபலிக்கின்றன.

கொரோனாவோடு வாழக்கூடப் பழகிக் கொண்டோம். தங்கமில்லாமல் வாழ்வ தென்பதுதான் சாமானிய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும்போல... தங்கத்தின் விலை இன்னும் இறங்குமா, இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா, காத்திருந்து வாங்கலாமா? மக்களும் நிபுணர்களும் என்ன சொல்கிறார்கள்?
தங்கம் நல்ல முதலீடு அல்ல!
பாரதி பாஸ்கர்
பட்டிமன்றப் பேச்சாளர், வங்கி அதிகாரி
‘`தங்கம் உணர்வுபூர்வமான விஷயமாகத் தான் காலங் காலமாக இருந்து வருகிறது.நம்முடைய பாட்டி, அம்மா, மாமியார் எனத் தலைமுறைகளைக் கடந்து நம் கைகளுக்கு வரும்போது, அதற்கு ஒரு கதையும் சரித்திரமும் இருப்பதாக உணர்கிறேன். அந்த உறவுகளின் அன்பும் பாசமும் அதைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு வெளிப்படவே செய்கிறது. தங்கத்துக்கு ‘எமோஷனல் பாண்டேஜ்’ ஒன்று நிச்சயம் உண்டு. அதனால்தான் பெண்கள் அதை விற்பதிலும், அடகு வைப்பதிலும் தயக்கம் காட்டுகிறார்கள்.
பெண்களுக்கு பாதுகாப்பு தரக்கூடிய ஒரு பொக்கிஷமாகவே தங்கம் இருந்திருக்கிறது. 200 ஆண்டுகளுக்கு முன்புவரை பணத்தை எப்படி வைத்துக்கொள்வது என்ற பிரச்னை இருந்தபோது அதைத் தங்கமாக மாற்றித்தான் வைத்திருந்தார்கள். தங்களுடைய வீடுகளில், நிலங்களில்கூட தங்கத்தைப் புதைத்து வைத்திருந்த கதைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். இன்று பணத்தை முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் பல வழிகள் வந்துவிட்டன.

தனிப்பட்ட முறையில் தங்கத்தின் மீது எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. பட்டி மன்றங்களில் பேசச் செல்லும்போதுகூட, ‘எப்போதும் அதே தோடையே போட்டுக்கிட்டு வர்றீங்களே?’ என்று கேட்டிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை தங்கம் ஓர் உலோகம், அவ்வளவுதான். ஒரு வங்கி அதிகாரியாகச் சொல்வதென்றால், தங்கம் நல்ல முதலீடு அல்ல. முதலீட்டுக்காக நாம் வாங்கும் ஆபரணத் தங்கம் தங்கமே அல்ல.
2010-ல் ஒருவர் நான்கு லட்சம் ரூபாயில் ஒரு கார் வாங்கினார். அதே நேரத்தில் அவரின் மனைவி நான்கு லட்சம் ரூபாயில் தங்கம் வாங்கினார் பத்து ஆண்டுகளில் அந்த காரின் மதிப்பு வெறும் 50,000 ரூபாய்தான். ஆனால் நகையின் மதிப்பு 16 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. இப்படியொரு வாட்ஸ்அப் செய்தியை சமீபத்தில் பார்த்தேன். இந்த ஒப்பீடே தவறானது.
பயன்பாட்டு அடிப்படையில் வாங்கப்பட்ட ஒன்று கார். நகை வாங்கியது முதலீடு தொடர்பானது. முதலீட்டுக்காக வாங்கிய இரண்டு பொருள்களைத்தான் ஒப்பிட வேண்டுமே தவிர, பயன்பாட்டுக்காக வாங்கிய ஒன்றை, முதலீட்டுக்காக வாங்கிய ஒன்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறானது. தங்கத்தில் முதலீடு செய்வதாக இருந்தால், வங்கியில் தங்கக் கட்டிகளாக வாங்கி வைத்திருந்து குறிப்பிட்ட காலம் வரும்போது விற்று பணமாக்குவதுதான் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும். ஆனால், இதற்குப் பொறுமையும் புத்திசாலித்தனமும் தேவை.
போன தலைமுறை பெண்களைப் போல இந்தத் தலைமுறை பெண்களுக்குத் தங்கத்தின் மீது ஆர்வம் இல்லை என்பதே உண்மை. மற்றபடி, குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதுதான் தங்க நகைகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் கணவரின் துணையோடு லாக்கரிலிருந்து நகைகளை எடுத்துக்கொண்டு வருவதும், மீண்டும் கொண்டு போய் லாக்கரில் வைப்பதும் எதையும் மிஸ் பண்ணிவிட்டோமா என்று பயப்படுவதும் எப்போதும் இருக்கிறது.’’
கொரோனா முடிவுக்கு வந்ததும் தங்கத்தின் விலை இறங்கும்!
சோம.வள்ளியப்பன் நிதி ஆலோசகர்
‘`தங்க விலையேற்றம் பற்றிய செய்திகள் வரும்போது தங்கம் வாங்கியவர்களுக்கு ஒரு திருப்தியும், தங்கம் வாங்காதவர்களுக்கு ஒரு பதற்றமும், தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு வருத்தமும் ஏற்படுகிறது. கண்ணுக்குத் தெரியும் சொத்தாக நிலத்துக்கு அடுத்தபடியாக இருப்பது தங்கம். ஒவ்வொரு முறை தங்கத்தை வாங்கும்போதும் விற்கும்போதும் ஒரு தொகையை நீங்கள் கடைக்காரர்களிடம் இழக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்னொரு வகையினர் பணத்தைப் பங்குச்சந்தையில் போடாமல், வங்கியில் போடாமல் தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்ப்பார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராக இருந்தால், உங்களுக்கு முக்கியமான ஒரு செய்தி.

உலகில் முதலீடு செய்வதற்கான சொத்துகள் என்று சொல்லக்கூடிய பிரிவுகளில் நிலம், பங்குச்சந்தை, கமாடிட்டி டிரேட் என்னும் பொருள்சந்தை போன்றவை முக்கியமானவை. பெட்ரோல், இரும்பு, நிக்கல், அலுமினியம் போன்ற உலோகங்களில் முதலீடு செய்வது பொருள்சந்தை முதலீடுகள்.
இவற்றில் நிலத்தில் முதலீடு செய்வதற்கு அடுத்து தங்கத்தில் முதலீடு செய்பவர்களே அதிகம். பெரிய வியாபாரிகள் தங்கத்திலும் வெள்ளியிலும் முதலீடு செய்வார்கள். உலகின் பொருளாதாரச் சூழல் சிறப்பாக இருக்கும்போது அவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் இருக்கும் பணத்தையும் தங்கத்தில் இருக்கும் பணத்தையும் எடுத்து அதை பங்குச் சந்தையில் முதலீடு செய்வார்கள். அதன் மூலம் கூடுதல் லாபம் பார்ப்பார்கள். எப்போதெல்லாம் உலகில் வியாபாரமும் பொருளாதார சூழலும் சிக்கலுக்குள்ளாகிறதோ அப்போது அதிலிருந்து லாகவமாக வெளியேறி, தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.
கொரானா பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக் குள்ளாகியிருக்கிறது. வர்த்தகமும் பெரிய அளவில் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தங்கத்தில் பெரிய அளவில் முதலீடு செய்கிறார்கள் பலரும். நிறுவனங்கள், பங்குகளை விற்றுவிட்டு, அதைப் பணமாக்கி தங்கத்தில் முதலீடு செய்கின்றன. மீண்டும் சூழ்நிலை சரியாகும்போது இதைப் பணமாக்கி வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள்.
இந்த இதழ் வெளிவரும் நேரத்தில் மீண்டும் தங்கம் விலை ஏறியும் இருக்கலாம். இறங்கியும் இருக்கலாம். தங்கம் முதலீட்டிலிருந்து இப்போது வர்த்தகத்துக்கு வந்துவிட்டது. வர்த்தகத்தில் ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.
கொரோனா முடிவுக்கு வந்ததும் மீண்டும் தங்கத்தின் விலை இறங்கும். ஆனால், தொடக்க நிலையில் இருந்த விலைக்கு வராது. அதைவிட சற்று கூடுதலான விலையில் விற்கப்படும்.
33,000-ல் இருந்து 43,000-க்குச்சென்றது. 38,000 ரூபாயில் நிற்கலாம். அதிலேயே சில ஆண்டுகளுக்குக்கூட தொடரலாம். நிதானமான விலை வரும்போது எப்போது வேண்டு மானாலும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். முதலீடு என்றால், யோசித்து செய்யுங்கள்.''
மூன்று மகள்களுக்கும் ஆளுக்கு 80 சவரன் நகை போட்டேன்!
73 வயது செல்லப்பழம்
“என் கணவர் இலங்கையில் தொழில் செய்து வந்தார். மாதா மாதம் அவர் அனுப்பும் பணத்தை மிச்சம் செய்து சில மாதங்களுக்கு ஒருமுறை நகை வாங்குவேன். 1970-களில் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு சுமார் 250 ரூபாய். என் மூத்த மகள் பெரியவளானபோது நகை செய்ய கையில் காசு இல்லை என்பதால் எங்களுக்குச் சொந்தமான பத்துப் பதினைந்து பனை மரங்களை விற்றேன். அந்தப் பணத்தை வைத்து ஐந்து பவுன் நகை செய்தேன். இப்போது போல நகைக்கடைகள் எல்லாம் அந்தக் காலத்தில் கிடையாது. எங்கள் ஊரிலுள்ள ஆசாரியிடம்தான் நகை செய்து வாங்குவோம். என் மூன்று மகள்களுக்கும் தலா 80 சவரன் நகை போட்டுத் திருமணம் செய்து கொடுத்தோம்.

இலங்கையில் வேலை செய்பவர்கள் தங்கத்தை அங்கிருந்து வாங்கி வருவார்கள். பெரும்பாலும் சட்டவிரோதமாகத்தான் கொண்டு வர முடியும். என் கணவருக்கு அப்படி எடுத்து வர பயம் என்பதால் பணமாகத்தான் அனுப்பி வைப்பார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் தொழில் செய்து இறுதியாக சொந்த ஊருக்குத் திரும்பி வந்தபோது எனக்காக 2 சவரனில் மோதிரம் செய்து அவர் விரலில் போட்டுக்கொண்டு வந்தார். முதலும் கடைசியுமாக அவர் இலங்கையிலிருந்து வாங்கி வந்த தங்கம் அதுதான்.
இரண்டாண்டுகளுக்கு தங்க விலை குறையாது
ரேணு மகேஸ்வரி முதலீட்டு ஆலோசகர்
‘`கோவிட்-19 பரவத் தொடங்கு வதற்கு சற்று முன்பிருந்தே தங்கத்தின் விலை உயரத்தொடங்கிவிட்டது. இப்போது சற்று குறைந்திருப்பது போல் தோன்றினாலும் மீண்டும் அது உயரத் தொடங்கும். கோவிட்-19 பரவல் காரணமாக மட்டுமல்ல, இந்தியா, சீனா, அமெரிக்கா இடையிலான அரசியல் மற்றும் புவிசார் விவகாரங்கள் எனப் பல விஷயங்களில் பல்வேறு நிலையற்ற தன்மை தொடரும் வரை தங்கத்தின் விலை அதிகரிக்கவே செய்யும்.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதும் தங்கத்தின் விலையேற்றத்தில் எதிரொலிக்கிறது. அடுத்த இரண்டாண்டுகளுக்கு தங்கத்தின் விலை குறையாது, அதிரிக்கவே செய்யும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நேரத்தில் தங்கத்தில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டாம். மொத்த முதலீட்டில் 5 சதவிகிதம் மட்டுமே தங்கத்தில் செய்தால் போதுமானது. முதலீட்டுக்காக நகைக்கடைகளில் சீட்டு போடுவது, தங்கக் காசு வாங்கிச் சேமிப்பது எல்லாமே பண விரயம்தான். வாங்கும் தங்கத்தில் செய்கூலி, சேதாரம் என்று கணிசமான அளவு பணம் வீணாகும். தங்கத்தில் நீண்ட கால முதலீடு செய்ய விரும்பினால் அரசின் தங்கப் பத்திரத்தில் (Gold Bond) முதலீடு செய்யலாம். தங்கப் பத்திரத்தில் ஆண்டுக்கு 2 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இடையில் அதை விற்க நினைத்தாலும் பங்குச் சந்தையில் விற்கலாம். சிறுகச் சிறுகச் சேமிக்க நினைப்பவர்கள் தபால் அலுவலகம், வங்கிகளில் அமலிலிருக்கும் சிறிய சேமிப்புத் திட்டங்களில் சேரலாம்.’’
நடமாடும் நகைக்கடை
அய்யாபாலு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த செம்பனார்கோயிலைச் சேர்ந்தவர் அய்யாபாலு. நகைகள் வாங்கி, விற்பனை செய்வது இவரின் தொழில். எட்டு விரல்களிலும் மோதிரங்கள், இரண்டு கைகளிலும் பிரேஸ்லெட், கழுத்து நிறைய சங்கிலிகள் - இது இவரது அடையாளம்.

``ஒருவருக்கு 100 ஏக்கர் நிலம் இருந்தாலும் அதை அடமானம் வைத்தோ, அல்லது விற்றோ அவசரத் தேவைக்குப் பயன்படுத்த முடியாது. நிலத்தை விற்க வேண்டுமானால் வில்லங்கச் சான்றிதழ் பத்திரப்பதிவுத்துறையில் ரெஜிஸ்டர் செய்து தர வேண்டும். எவ்வளவு விலையுயர்ந்த காராக இருந்தாலும் அதை விற்க வேண்டுமானால் வட்டாரப் போக்குவரத்துத்துறையில் ஆர்.சி புக், பெயர் மாற்றம் செய்துதர அலைய வேண்டும். எந்த லைசென்ஸும் இல்லாமல் எளிதாக விற்க முடிகிற ஒரே பொருள் தங்கம்தான். இப்படிப்பட்ட தங்கத்தை சொத்தாக அனைவரும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து'' என்கிற அய்யாபாலுவிடம் 250 பவுன் நகைகள் உள்ளனவாம். அத்தனையும் பத்திரமாக லாக்கரில்!
திருமணத்துக்கு தங்க நகை அணிய மாட்டேன்!
மூசா நவாஸ்
பெண்களுக்கு நகை மீது ஆசை என்ற கருத்தை உடைத்து, சிறு வயது முதலே தங்க நகை அணிவதைத் தவிர்த்து வந்தவர், தற்போது மலேசியாவில் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினீயரிங் படித்து வரும் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அல் ஜவ்கரா. மேலும், ‘திருமணத்தில் தங்க நகை அணிய மாட்டேன், மாப்பிள்ளை வீட்டினர் மணமகளுக்கு சீதனமாக (மஹர்) நகை கொடுப்பதும் வேண்டாம்’ என்று தன் திருமணத்திலும் தங்கத்தை தள்ளி வைத்திருக்கிறார்.

கோழிக்கோட்டைச் சேர்ந்த புராஜெக்ட் இன்ஜினீயர் மூசா நவாஸ். கொரோனா போக்குவரத்து முடக்கத்தால், மணமகள் மலேசியாவிலும் மணமகன் கோழிக்கோடிலும் இருந்தவாறு கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்துமுடிந்திருக்கிறது இவர்களின் திருமணம். தற்போதும் அல் ஜவ்கரா மலேசியாவில்தான் உள்ளார். “என் தாத்தா தன் பெண்களுக்கு நகை போட மிகவும் கஷ்டப்பட்டதை, என் அப்பா சிறு வயதில் என்னிடம் சொல்லிச் சொல்லி வருத்தப்படுவார். அதைக் கேட்டதிலிருந்து எனக்கு நகை மீதே வெறுப்பாகிப் போனது. அப்படியே வளர்ந்தேன். திருமணத்திலும் அதே உறுதியோடு இருந்தேன்” என்றார்.
ஜவ்கராவின் கணவர் மூசா நவாஸிடம் பேசினோம். “தங்கத்தையும் பெண்களையும் இணைக்கும் சிஸ்டத்தால் நிறைய திருமணங்கள் நடக்காமல் போகின்றன. அதனால், திருமணத்துக்கு தங்க நகை தேவையில்லை என்ற மெசேஜை எங்கள் திருமணம் மூலமாகச் சொல்லியிருக்கிறோம். நாங்கள் இன்னும் நேரில் சந்திக்கவே இல்லை. நகையாக அல்லாமல், தங்கத்தை சேமிப்பாகச் சேர்த்து வைக்கலாமா என்பதைப் பற்றி இனிதான் பேசி முடிவெடுக்க வேண்டும்’’ என்றார்.