Published:Updated:

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

நிலக்கரியைக் கையாண்டதில் பெரிய மோசடி நிகழ்ந்திருப்பதே தரக் குறைபாட்டில்தான். டான்ஜெட்கோவுக்குச் சொந்தமாக ஆறு அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

நிலக்கரியைக் கையாண்டதில் பெரிய மோசடி நிகழ்ந்திருப்பதே தரக் குறைபாட்டில்தான். டான்ஜெட்கோவுக்குச் சொந்தமாக ஆறு அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன

Published:Updated:
நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!
பிரீமியம் ஸ்டோரி
நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

வட சென்னை அனல் மின் நிலையத்தில், 2.38 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரி மாயமான விவகாரம் சமீபத்தில் வெளியாகி, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. `இது போன்ற மோசடி இதர அனல் மின் நிலையங்களிலும் நடைபெற்றிருக்கிறதா’ என்பதை அறிய, குழுவை நியமித்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்தச் சலசலப்பு அடங்குவதற்கு முன்னதாகவே, கடந்த ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றிருக்கும் முறைகேடுகளை விசாரிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருக்கிறது ‘அறப்போர் இயக்கம்.’

நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற முறைகேட்டை அறப்போர் இயக்கம் வெளிப்படுத்துவது இது முதன்முறையல்ல. 2018-ம் ஆண்டே இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடமும் ஆதாரங்களை அளித்தனர். ஆட்சி மாறியிருக்கும் நிலையில், அந்தப் புகாரை விசாரிக்கும்படி மீண்டுமொரு மனுவை லஞ்ச ஒழிப்புத்துறையில் வழங்கியிருக்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன். இந்த முறைகேட்டில் 7,906 கோடி ரூபாய் கரியாகிப்போனதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இதன் பின்னணி என்ன?

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

சந்தை மதிப்பைவிட கூடுதல் விலை!

நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகாரில், மூன்று விஷயங்கள் பிரதானமாகக் கூறப்பட்டுள்ளன. 2012 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்திக்காக 2.44 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியை, தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) இறக்குமதி செய்திருக்கிறது. அதானி குலோபல் பிரைவேட் லிமிடெட், நாலேஜ் இன்டெர்நேஷனல் ஸ்ட்ராடஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்.எஸ்.டி.சி லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட இந்த நிலக்கரியின் மதிப்பு 12,250 கோடி ரூபாய்.

சந்தை மதிப்பைவிடக் கூடுதல் விலை கொடுத்து நிலக்கரி வாங்கியதால், அரசு கூடுதலாக 2,177 கோடி ரூபாய் இதில் செலுத்தியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது அறப்போர் இயக்கத்தின் புகார். அதாவது ஒவ்வொரு மெட்ரிக் டன்னுக்கும் 15 அமெரிக்க டாலர் அதிகமாகக் கொடுத்து கொள்முதல் செய்ததால், இந்த இழப்பு ஏற்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் புகார் விஸ்வரூபம் எடுத்ததால், 2018-ல் ‘ரிவர்ஸ் ஏலம்’ முறைக்கு மாறியது தமிழக அரசு. இதன்படி, யார் குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறார்களோ, அவர்கள் கோரியிருக்கும் தொகையிலிருந்து குறைவான தொகையைக் கோருபவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், ஒரு மெட்ரிக் டன்னுக்கு, சந்தை மதிப்பைவிட சுமார் 15 டாலர் வரை விலை குறைவாக நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே வழிமுறையைக் கையாண்டிருந்தால், 2012-16 காலகட்டத்தில் அரசுக்கு இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. இந்தவகையில் 1,494 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

தரத்தில் மோசடி!

நிலக்கரியைக் கையாண்டதில் பெரிய மோசடி நிகழ்ந்திருப்பதே தரக் குறைபாட்டில்தான். டான்ஜெட்கோவுக்குச் சொந்தமாக ஆறு அனல் மின் நிலையங்கள் இருக்கின்றன. இவற்றுக்குத் தேவைப்படும் நிலக்கரியை, ஒடிசாவின் இப் சமவெளி சுரங்கத்திலிருந்தும், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் வாங்கியிருக்கிறார்கள். அதானி நிறுவனம்தான் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நிலக்கரி சப்ளையர். கப்பல் மூலமாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்போது, அதைச் சுங்கத்துறையினர் தர ஆய்வு செய்கிறார்கள். பிற்பாடு, தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான குடோன்களுக்கு நிலக்கரி வரும்போது, அதை டான்ஜெட்கோவும், மூன்றாவது பார்ட்டியான நிறுவனம் ஒன்றும் தனித்தனியே தர ஆய்வு மேற்கொள்கின்றன. சுங்கத்துறையின் தர ஆய்வு முடிவுகளுக்கும், இதர இரண்டு ஆய்வு முடிவுகளுக்கும் இடையே கிட்டத்தட்ட 25 சதவிகிதம் அளவுக்கு வித்தியாசம் இருப்பதாகக் கூறுகிறது 2017-ம் ஆண்டு வெளிவந்த சி.ஏ.ஜி-யின் அறிக்கை.

நம்மிடையே பேசிய நிலக்கரி ஒப்பந்ததாரர் ஒருவர், “நிலக்கரியின் தரத்தை, அதிலிருக்கும் கலோரியின் அளவை வைத்து அளப்பார்கள். இதற்கு ‘கார்’ என்று பெயர். கலோரியின் அளவு அதிகமிருந்தால்தான், அந்த நிலக்கரியை எரியூட்டும்போது தேவையான மின்சாரம் கிடைக்கும். கொள்முதல் செய்யும் ஒரு கிலோ நிலக்கரியில், 5,000-க்கும் மேல் கலோரி அளவு இருந்தால் அது நல்ல நிலக்கரி. இதில்தான் பெரிய மோசடி நடக்கிறது. 3,000, 4,000 கலோரி அளவுள்ள நிலக்கரியை சப்ளை செய்துவிட்டு, பதிவேட்டில் 5,000 கலோரி நிலக்கரி எனக் கணக்கு எழுதிவிடுவார்கள். நிலக்கரி சப்ளை செய்யும் நிறுவனம், டான்ஜெட்கோ, மூன்றாவது ஆய்வு நிறுவனம் என அனைவருமே இதில் கூட்டு என்பதால், இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வருவதே இல்லை.

ஜெயராம் வெங்கடேசன்
ஜெயராம் வெங்கடேசன்

இந்த முறைகேட்டால், மூன்றுவிதங்களில் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. ஒன்று, தரம் குறைவான நிலக்கரியைக் கொள்முதல் செய்துவிட்டு, தரம் அதிகமுள்ள நிலக்கரிக்கான தொகையை அளிப்பதால் அரசுக்குப் பண இழப்பு. இரண்டாவது, தரக்குறைவான நிலக்கரியை எரியூட்டும்போது தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படாத வகையில் அரசுக்கு உற்பத்தி இழப்பு. மூன்றாவது, தரத்தில் குறைபாடு இருந்தால், அதற்கேற்ப அபராதம் விதிக்க வேண்டும். குறைபாடு வெளிச்சத்துக்கு வராததால் அரசுக்குப் பண இழப்பு.

பொதுவாக, 800 கிராம் அளவுள்ள நிலக்கரியை எரிக்கும்போது, அதிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். ஆனால், தரக்குறைவான நிலக்கரியைக் கொள்முதல் செய்ததால், அதில் 900 கிராம் நிலக்கரியை எரித்தால் மட்டுமே ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். இந்த 100 கிராம் வித்தியாசத்தை அதிகாரிகள் கணக்கில் கொண்டுவருவதில்லை. எவ்வளவு நிலக்கரிக்கு, எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்கிற கணக்கும் இல்லை. நிலக்கரி தீர்ந்தவுடன் புதிய டெண்டர், அதில் புது மோசடி என ஒரு சங்கிலித் தொடராகவே இந்த முறைகேடு நடைபெறுகிறது. இந்த மோசடியால் ஏற்படும் இழப்பு, இறுதியில் மின் கட்டண உயர்வாகப் பொதுமக்களின் தலையில் வந்துவிழுகிறது” என்றார்.

2012 - 2016 காலகட்டத்தில், தரமில்லாத நிலக்கரியை இறக்குமதி செய்து உற்பத்தி இழப்பு ஏற்பட்ட விதத்தில், 2.44 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரிக்கு 2,395 கோடி ரூபாய் இழப்பு. அதேபோல, தரக்குறைபாடு இருந்தும் அபராதம் ஏதும் விதிக்கப்படாததால், 813 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கூறுகிறது அறப்போர் இயக்கம்.

ரெய்டில் சிக்கிய ஆவணங்கள்!

இந்த மோசடி, 2014 காலகட்டத்திலேயே வருவாய் புலனாய்வுத்துறையால் (டி.ஆர்.ஐ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வருடம், இந்தியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்குச் சொந்தமான 80 இடங்களில் திடீர் சோதனை நடத்தியது டி.ஆர்.ஐ. ஹாங்காங்கைச் சேர்ந்த இந்தியரான மனோஜ் குமார் கார்க் என்பவரின் இடத்திலிருந்து, ஒரே நிலக்கரி இறக்குமதிக்கு இரண்டுவிதமான தரச் சான்றிதழ்களை அவர் வைத்திருந்ததைக் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 27, 2016-ல் அவர் டி.ஆர்.ஐ-யால் கைதும் செய்யப்பட்டார். இவரது துபாய் நிறுவனமான கிளின்ட்ஸ் குளோபல் ஜெனரல் டிரேடிங் நிறுவனத்திடமிருந்துதான் டான்ஜெட்கோவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதை டி.ஆர்.ஐ கண்டுபிடித்தது. மோசடியாகத் தரச் சான்றிதழ் தயாரித்து, தரக்குறைவான நிலக்கரியை அவர் டான்ஜெட்கோவுக்கு சப்ளை செய்திருப்பதும் அம்பலமானது. இந்த மோசடியை மேற்கொண்டு விசாரிக்க, தமிழக அரசின் சார்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நத்தம் விஸ்வநாதன்
நத்தம் விஸ்வநாதன்

போக்குவரத்திலும் மோசடி!

நிலக்கரியைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவருவதிலும் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றிருப்பது, சமீபத்தில் வெளியிடப்பட்ட 2018 சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் விரிவாகத் தெரியவந்திருக்கிறது. ஒடிசாவின் நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து நிலக்கரியை எடுத்து, தமிழ்நாட்டிலுள்ள டான்ஜெட்கோவின் கிடங்குகளில் சேர்ப்பது வரைக்குமான போக்குவரத்து டெண்டர், நவம்பர் 2000-ல் விடப்பட்டு, சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு பிப்ரவரி 2001-ல் பணி ஆணையும் அளிக்கப்பட்டது. ஐந்து மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய இந்த ஆணையை, 17 வருடங்களுக்கு நீடித்ததால் ஏகப்பட்ட கோடிகள் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறுகிறது சி.ஏ.ஜி-யின் அறிக்கை.

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குக் கூலியாக, ஒரு மெட்ரிக் டன்னுக்கு 131.40 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 2011-18 காலகட்டத்தில் மட்டும், துறைமுகத் தீர்வை உட்பட இறக்கு கூலியாக 1,558.66 கோடி ரூபாய் தங்களுக்குச் செலவானதாகக் கணக்கு காண்பித்திருக்கிறது அந்த நிறுவனம். அந்தக் கணக்கை ஏற்றுக்கொண்டு, 807.58 கோடி ரூபாயைத் துறைமுகத் தீர்வையாக டான்ஜெட்கோவும் அந்த நிறுவனத்துக்கு அளித்திருக்கிறது. ஆனால், விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு அந்த நிறுவனம் 293.54 கோடி ரூபாய் மட்டுமே அளித்திருக்கும் உண்மை சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தங்கமணி
தங்கமணி

2018-ல் இந்த விவகாரம் வெடித்த பிறகு, சவுத் இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட டெண்டர் கேன்சல் செய்யப்பட்டு, ஒடிசாவின் சுரங்கங்களிலிருந்து டான்ஜெட்கோ நேரடியாகவே நிலக்கரியைக் கொண்டுவருகிறது. `இதை முன்கூட்டியே செய்திருந்தால், தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்காது’ என்பதே சி.ஏ.ஜி-யின் வாதம். இதே குற்றச்சாட்டை முன்வைக்கும் ‘அறப்போர்’ ஜெயராம் வெங்கடேசன், “சி.ஏ.ஜி அறிக்கையில் குறைவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையில், வெளி மாநிலத்திலிருந்து நிலக்கரியைத் தமிழ்நாட்டுக்குள் கொண்டுவந்த வகையில் மட்டுமே 1,027 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருக்கிறது. ஆனால், எந்த விசாரணையும் இல்லாமல் கிடப்பில் போட்டுவிட்டனர். நிலக்கரி இறக்குமதி குறித்து டி.ஆர்.ஐ-யிடம் நாங்கள் அளித்திருக்கும் புகாரும் விசாரிக்கப்படவில்லை. இந்த மோசடியில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், தங்கமணி ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டுமென்று லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்திருக்கிறோம்” என்றார்.

2012-16 காலகட்டத்தில் மட்டும் நிலக்கரி இறக்குமதி மற்றும் சந்தை மதிப்பைவிடக் கூடுதல் தொகையில் கொள்முதல் செய்த வகைகளில் 6,066 கோடி ரூபாயும், போக்குவரத்து மோசடியால் 1,027 கோடி ரூபாயும், அபராதத்தை வசூலிக்காத வகையில் 813 கோடி ரூபாயும் என மொத்தம் 7,906 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடந்திருப்பது அதிர்வைக் கிளப்புகிறது. அப்போதே இந்த அளவுக்கு முறைகேடு என்றால், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு என்னென்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறோம். இந்த முறைகேடு புகாரில், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்களான நத்தம் விசுவநாதன், தங்கமணி இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. புகார்கள் தொடர்பாக விளக்கமறிய அவர்களைத் தொடர்புகொண்டோம். இருவருமே நமது அழைப்புகளை ஏற்கவில்லை.

வட சென்னை அனல் மின் நிலையத்துக்கு ஆய்வுக்குச் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி, 2.38 லட்சம் டன் நிலக்கரி மாயமானதை வெளிக் கொண்டுவந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, “இந்த முறைகேட்டை நாங்கள் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டோம்.எனக்கு மடியில் கனமில்லாததால், வழியில் பயமில்லை. தவறுகள் யார் செய்திருந்தாலும், நடவடிக்கை எடுக்க வரவேற்கிறேன்” என்றார்.

இது குறித்து விளக்கமறிய அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பலமுறை தொடர்புகொண்டோம். அவர் நம்மிடம் பேசவில்லை. இந்த விவகாரத்தில், நிலக்கரி மாயமானது மட்டுமல்ல... நிலக்கரி கொள்முதல் முறைகேடும் விசாரிக்கப்பட வேண்டும். உண்மை வெளிவர வேண்டுமென்பதே அனைவரது எதிர்பார்ப்பு!

*****

இவர்கள் என்ன சொல்கிறார்கள்...

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

“முறைகேடுகளைத் தவிர்க்க, நிலக்கரியை ஏன் நாமே நேரடியாகக் கொள்முதல் செய்யக் கூடாது? இந்த முறைகேட்டில் யார் குற்றமிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்.”

- கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

“மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஊழலைச் செய்தவர்களை தண்டிப்பதோடு, அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.”

- இரா.முத்தரசன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

நிலக்கரி முறைகேடு... கரியாகிப்போன ரூ.7,906 கோடி!

“கமிஷனுக்காகவே கடந்த ஆட்சியாளர்கள் பணியாற்றியதால்தான், இவ்வளவு பெரிய மோசடி நிலக்கரி இறக்குமதியில் அரங்கேறியிருக்கிறது. மக்கள் நலனைவிட கொள்ளையடிப்பதில்தான் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.”

- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி