Published:Updated:

ஹலாலை முன்வைத்து கலவரமா?

ஹலால்
பிரீமியம் ஸ்டோரி
ஹலால்

ஹலால் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கின்றன இந்தச் சர்ச்சைகள். ‘ஹலால்' என்பது வெறுமனே இறைச்சி சார்ந்தது மட்டுமே இல்லை.

ஹலாலை முன்வைத்து கலவரமா?

ஹலால் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கின்றன இந்தச் சர்ச்சைகள். ‘ஹலால்' என்பது வெறுமனே இறைச்சி சார்ந்தது மட்டுமே இல்லை.

Published:Updated:
ஹலால்
பிரீமியம் ஸ்டோரி
ஹலால்

ஹிஜாப்பை அடுத்து இப்போது ஹலால் விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கின்றன கர்நாடக இந்துத்துவ அமைப்புகள். ஷிவமோகா மாவட்டத்தில் இஸ்லாமிய இறைச்சி வியாபாரியிடம் போய், ‘ஹலால் இல்லாத இறைச்சி கொடு' என்று கேட்டுத் தகராறு செய்து அந்த வியாபாரியை அடித்த பஜ்ரங் தள அமைப்பினர் ஐந்து பேரை போலீஸ் கைது செய்துள்ளது. அதேநாளில் அவர்கள் ஓர் இஸ்லாமியரின் ஹோட்டலுக்கும் சென்று ஹலால் உணவுகள் விற்பதைக் கண்டித்துத் தகராறு செய்து அடித்துள்ளனர். பெங்களூரு நகரில் ‘ஹலால் இறைச்சியை வாங்காதீர்கள்' என்று மார்க்கெட் பகுதியில் நோட்டீஸ்கள் விநியோகித்துப் பிரசாரம் செய்த சிலரைப் பொதுமக்களே கண்டித்துள்ளனர். ‘சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தாமல் யுகாதியை அமைதியாகக் கொண்டாடுங்கள்' என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலைமை போனது.

இந்த நேரடிப் பிரசாரத்தைத் தாண்டி சோஷியல் மீடியாவிலும் விவகாரம் கொதிக்கிறது. ஹலால் தயாரிப்புகளை விற்கும் பல நிறுவனங்களைக் குறி வைத்திருக்கிறது ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி. ஹலால் சான்றுள்ள உணவுகள், குளிர்பானங்கள், சாக்லேட் போன்றவற்றை விற்கும் ஐ.ஆர்.சி.டி.சி., ஏர் இந்தியா, மகாராஷ்டிரா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் போன்ற நிறுவனங்களும் இதிலிருந்து தப்பவில்லை. ‘‘இதை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறோம். ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு இந்திய உணவுப் பாதுகாப்புத் தர நிர்ணய அமைப்பு எவருக்கும் அங்கீகாரம் தரவில்லை. ஆனாலும் இந்த நிறுவனங்கள் யார் யாரிடமோ ஹலால் சான்றிதழ் வாங்குகின்றன'' என்கிறார் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதியின் செய்தித் தொடர்பாளர் மோகன் கவுடா.

ஹலாலை முன்வைத்து கலவரமா?

இன்னொரு பக்கம், ஹலால் குறித்த தவறான தகவல்களும் பரப்பப்படுகின்றன. இதன் பாதிப்பைப் பெரிதும் சந்தித்தது, ஹிமாலயா மருந்து நிறுவனம். ‘அந்த நிறுவனத்தின் மருந்துத் தயாரிப்புகளில் மாட்டிறைச்சி கலந்திருக்கிறது. அதனால்தான் ஹலால் சான்றிதழ் பெற்றனர்' என்று பொய்த் தகவல் இணையத்தில் பரப்பப்பட்டது. ‘எங்களின் எந்தத் தயாரிப்பிலும் இறைச்சி இல்லை. இறக்குமதி செய்யும் நாடுகளின் சட்டவிதிகளின்படியே ஹலால் சான்று பெறுகிறோம்' என்று ஹிமாலயா விளக்கமளித்தது.

ஹலால் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கி வைத்திருக்கின்றன இந்தச் சர்ச்சைகள். ‘ஹலால்' என்பது வெறுமனே இறைச்சி சார்ந்தது மட்டுமே இல்லை. ஹலால் என்றால் ‘அனுமதிக்கப்பட்டது' என்று அர்த்தம். இது உணவு, மருந்துகள், அழகுப்பொருள்கள் என வாழ்க்கைமுறை சார்ந்த எல்லாவற்றுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஆல்கஹால் கலந்த ஒரு மருந்தை முஸ்லிம்கள் பயன்படுத்துவதை இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக மாற்றுப் பொருள்களைச் சேர்த்து மருந்து தயாரித்து ஹலால் சான்றிதழ் பெறுவார்கள். லிப்ஸ்டிக்கில் விலங்குக் கொழுப்பு சேர்ப்பார்கள். அது அனுமதிக்கப்படாத விஷயம் என்பதால், அந்தக் கொழுப்புக்குப் பதிலாக நெய் சேர்த்து ஹலால் சான்று பெறுவார்கள்.

இப்படி உருவாக்கப்படும் பொருள்களுக்கு ஹலால் சான்று தருவதற்கு இந்தியாவில் சட்டபூர்வமான அமைப்பு இல்லை. எனவே, ஹலால் இந்தியா, ஹலால் கவுன்சில் ஆஃப் இந்தியா, ஜமாத் உலேமா ஹலால் பவுண்டேஷன் உள்ளிட்ட ஆறு அமைப்புகள் இந்தச் சான்றிதழைத் தருகின்றன. இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தச் சான்றிதழ் அவசியம். குறிப்பாக அரபு நாடுகள் இந்த விஷயத்தில் கறாராக இருக்கின்றன. உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இங்கிருக்கும் முஸ்லிம்களுக்கு விற்பனை செய்யவும் இந்த சான்று அவசியம்.

ஹிமாலயா மட்டுமல்ல, ஆயுர்வேத மருந்துகளைத் தயாரிக்கும் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனமும் ஹலால் சான்று பெற்றிருக்கிறது. அப்போதும் இதேபோல ‘பதஞ்சலி மருந்துகளில் இறைச்சி கலந்திருக்கிறது' என்று வதந்தி பரப்பப்பட்டது. பதஞ்சலி யோகபீடத்தின் பொதுச் செயலாளர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா இதை மறுத்தார். பதஞ்சலி தயாரிப்புகளுக்கு அரபு நாடுகளில் பெரிய வரவேற்பு இருக்கிறது.

மோகன் கவுடா. ஆச்சார்ய பாலகிருஷ்ணா
மோகன் கவுடா. ஆச்சார்ய பாலகிருஷ்ணா

ரிலையன்ஸ் நிறுவனம், அதானி வில்மார் நிறுவனம், டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் போன்றவையும் தங்கள் உணவுப் பொருள்களை இஸ்லாமிய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளன. எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோமோ, அந்த நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்படுவதே வியாபார நியதி.

இந்தியாவின் உணவுப்பொருள் ஏற்றுமதியில் அரிசி, பாஸ்மதி அரிசிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது எருமை இறைச்சி. இறக்குமதி செய்யும் நாட்டின் விதிகளின்படி சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுப்பொருள் ஏற்றுமதி வளர்ச்சி அமைப்பு அனுமதித்துள்ளது.

ஹலால் சார்ந்த ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. வரும் 2025-ம் ஆண்டில் ஹலால் சான்று பெற்ற அழகுப் பொருள்களின் வணிகம் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ஹலால் மருந்துப் பொருள்களின் மார்க்கெட் 13 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹலால் குறித்த சர்ச்சைகள் இந்த வர்த்தகத்தை பாதிக்கும். மறைமுகமாக வேலைவாய்ப்பையும் பாதிக்கும். இந்த விஷயம் எல்லாம் தெரிந்தும் ஆட்சியாளர்கள் மௌனம் காப்பதால்தான் சர்ச்சைகள் அணைய மறுக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism