Published:Updated:

நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?

தேன்
பிரீமியம் ஸ்டோரி
தேன்

கொரோனாச் சூழலில் இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் தேன் கொள்முதல் இந்த ஆண்டு பெரிய அளவில் நடைபெறவில்லை என்கிறது ஓர் ஆய்வு

நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?

கொரோனாச் சூழலில் இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் தேன் கொள்முதல் இந்த ஆண்டு பெரிய அளவில் நடைபெறவில்லை என்கிறது ஓர் ஆய்வு

Published:Updated:
தேன்
பிரீமியம் ஸ்டோரி
தேன்

நாம் சாப்பிடும் உணவுகளில் கலப்படமோ, நச்சுத்தன்மையோ நமக்கு ஒன்றும் புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்னால், குளிர்பானங்களில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாகக் குற்றம் சாட்டிய அறிவியல் மற்றும் சுற்றுசூழலுக்கான மையம்தான் இந்தமுறை தேனிலிருக்கும் கலப்படத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. பிரபலமான பதின்மூன்று நிறுவனங்களில், டாபர், இமாமி, பதஞ்சலி போன்ற பெருநிறுவனங்களே ஜெர்மனியில் நடத்தப்படும் NMR சோதனையில் தோல்வியடைந்திருக்கின்றன. சபோலா, நேச்சர்ஸ் நெக்டார், மார்க்பெட்சோனா இந்த மூன்று நிறுவனங்கள் இந்தச் சோதனையில் தகுதிபெற்றிருக்கின்றன.

நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?
நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?

கடந்த இருபதாண்டுகளில், உலகம் முழுக்கவே தேனீக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கிறது. ஆனால், தேனை பாட்டிலில் அடைத்துத் தரும் நிறுவனங்கள், ஒருநாளும் ‘ஸ்டாக் இல்லை’ எனத் தங்கள் கைகளை விரித்ததேயில்லை. அமெரிக்காவில் தேன் கொள்முதல் நிலையங்கள் நன்றாக இயங்கிக்கொண்டிருந்தபோது, பாதி விலைக்கு உள்ளே நுழைந்தது சீனத்தேன். சீனா தரும் விலைக்கு ஒரு நாளும் அமெரிக்க நிலையங்களால் தர முடியவில்லை . அமெரிக்காவின் முதற்கட்ட சோதனைகளை எளிதாகக் கடந்தது சீனத்தேன். போக்குவரத்துச் செலவுகள், ஏற்றுமதி வரி எல்லாம் கடந்து எப்படி சீனாவால் இப்படித் தர முடிகிறது எனத் தலையைப் பிய்த்துக் கொண்டது அமெரிக்கா. உள்நாட்டுத் தொழிற்சாலைகளைச் சமாளிக்க, சீனாவில் இருந்து வரும் தேனுக்கு 50% கூடுதல் வரி விதித்தது அமெரிக்க அரசு.

சீனாவிலிருந்து தேன் வருவது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. அந்த கண்டெய்னர்கள் அப்படியே, லேபிளை மட்டும் மாற்றி மலேசியாவிலிருந்து ஏற்றுமதி ஆயின. மலேசியாவின் ஒட்டுமொத்தக் கொள்முதலைவிட, 10 மடங்கு தேனை அமெரிக்காவுக்கு விற்று லாபம் பார்த்துவந்தது ‘மலேசியத் தோல் போர்த்திய’ சீனா. எங்கும் எதிலும் போலி, குறைவான விலை என்றால், அங்கு சீனா வந்து நிற்பது நாம் அன்றாடம் காண்பதுதான். இந்தியாவுக்கான எலெக்ட்ரானிக் சாதனங்கள், உதிரி பாகங்கள், அவ்வளவு ஏன், கொழுக்கட்டை பிடிக்கும் கருவிகூட சீனாவிலிருந்துதான் இறக்குமதி ஆகின்றது. தற்போது இந்திய நிறுவனங்கள் அம்பலப்பட்டு நிற்கும், தேன் கலப்படத்துக்கான காரணிகளும் சீனாவை நோக்கித்தான் இருக்கின்றன. நாம் சாப்பிட்டுக்கொண்டிருந்த தேனுக்கு மாற்றாக வந்திருக்கிறது சீனச்சக்கரை.

நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?
நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?

கொரோனாச் சூழலில் இந்தியாவில், குறிப்பாக வட மாநிலங்களில் தேன் கொள்முதல் இந்த ஆண்டு பெரிய அளவில் நடைபெறவில்லை என்கிறது ஓர் ஆய்வு . எல்லோரும் லாக்டௌனில் முடங்கிக்கிடக்க, தேன் எடுக்க வழக்கமாகச் செல்பவர்கள் செல்லவில்லை. ஆயினும், இந்தியாவின் எல்லா நிறுவனங்களும் தேனை அதே விலைக்கு விற்றுவந்தன. ஆன்லைன் தளங்களில் தள்ளுபடி விலையிலும் தேன் விற்கப்பட்டது. சாதாரண நாள்களைவிடவும் தற்போது தேனுக்கான தேவை அதிகரித்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, உடல் எடை எனப் பல பிரச்னைகளுக்குத் தேன் தற்போது முன்பைவிட அதிகமாக மக்களால் உட்கொள்ளப்படுகிறது. இந்தச் சூழலில்தான் மீண்டும் சீனா இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. உலகெங்கும் சீனாவிலிருந்து கொரோனா ஏற்றுமதியாகிக்கொண்டிருக்க, இந்தியா அரிசிச் சக்கரையைத் தேனுக்கான மாற்றாக இறக்குமதி செய்துகொண்டிருந்தது. ``தேனுக்குப் பதிலாகக் கலப்படமான சர்க்கரைப் பாகை மனிதர்கள் தேன் என நம்பி இந்த ஆண்டு சாப்பிட்டிருக்கிறார்கள். கோவிட் காலத்தில் இது அவர்களை மேலும் பாதிக்கும். இந்தச் சீனச் சர்க்கரையை NMR சோதனை மூலம்தான் கண்டறிய முடியும்’’ என்கிறார், அறிவியல் மற்றும் சுற்றுசூழலுக்கான மையத்தின் நிறுவனரான சுனிதா நரைன். இந்த NMR சோதனை இந்தியத் தேனுக்கும் இருக்கிறது. ஆனால், இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் தேனுக்கு மட்டும், இந்தத் தரச் சான்றிதழ் பெற்றுவிட்டால் போதுமானது. இந்தியாவில் வாழும் நம்மைப் போன்ற சாமானிய மனிதர்களுக்கு இந்தச் சான்றிதழ் தேவையில்லை என்பதில்தான் ஆளும் அரசுகள் நம்மீது வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்படைத்தன்மை இருக்கிறது.

கரும்புகளில் கிடைக்கும் சர்க்கரைப் பாகின் மூலம் வரும் கோல்டன் சிரப், க்ளூகோஸ் ஃப்ரக்டோஸ் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் இன்வர்ட்ட சுகர் சிரப், சீனச் சர்க்கரை போன்றவற்றைத் தேனுக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறார்கள் என FSSAI ஏற்கெனவே இந்த ஆண்டு எச்சரித்திருக்கிறது. ஆனாலும், கவலையின்றி இந்தக் கலப்படம் நிகழ்ந்திருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் வல்லுநர்கள். இணையத்தில் எளிதாக இந்தத் தேனுக்கான மாற்றுகள் கிடைக்கின்றன. அதைக்கூடக் கட்டுப்படுத்தத் தவறியிருக்கிறது அரசு. அமெரிக்கா செய்ததுபோல, சீனப் பொருள்களுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் அல்லது, NMR சோதனையை இந்திய விற்பனைக்கும் கட்டாயம் ஆக்க வேண்டும்.

நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?
நாம் சாப்பிடுவது தேனா... தேனேதானா?

கோலா நிறுவனங்கள் செய்த எல்லாத் தகிடுதங்களையும் இனி தேன் நிறுவனங்கள் செய்யும். ‘இந்த நிறுவனத்துத் தேன், பரிசுத்தமானது. நாங்கள் குடும்பத்துடன் எல்லா உணவுக்கும் சேர்த்துக்கொள்கிறோம்’ எனக் குடும்பம் சகிதமாக விளம்பரத்தில் பிரபலங்கள் வருவார்கள். பிளெக்ஸ் பேனர்கள், மீடியாக்களில் பெரிய அளவில் விளம்பரம் வரும். சோதனைகளைச் செய்து காண்பிக்கும் விளம்பரங்கள் மருத்துவர்களின் உடைகளில் வரும். ஆனால், இன்னும் சில மாதங்களுக்கேனும் இந்நிறுவனங்கள் அவற்றின் நம்பகத்தன்மையை இழந்துவிட்டன என்பதுதான் நிஜம்.

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என்னும் சிலப்பதிகார வரிகள் ஏனோ நினைவுக்கு வருகின்றன. அரசியல் பிழைப்பு நடத்துபவர்களிடம் அதை யாரும் இப்போது எதிர்பார்ப்பதில்லை. குறைந்தபட்சம் மருந்துக்காவது உணவு நிறுவனங்கள் அறத்துடன் செயல்படுங்கள். ஏனெனில், தேன் வெறும் உணவு அல்ல; மருந்து!