Published:Updated:

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், கேரளா லாட்டரியை அடிப்படையாக வைத்தே 70 சதவிகித பிசினஸ் நடைபெறுகிறது

பிரீமியம் ஸ்டோரி

சமீபத்தில், நமது அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. பெயர் ஏதும் குறிப்பிடப்படாத அந்தக் கடிதத்தில், `கடந்த ஆறு வருஷமாக மூணு நம்பர் லாட்டரி வாங்கிட்டிருந்தேன். முதல்ல 143-னு நம்பர் வாங்கினேன். ஆனா, 142-க்கு பரிசு விழுந்தது. இன்னைக்குப் பரிசை விட்டுட்டோம், நாளைக்கு எப்படியும் எடுத்துடுவோம்னு நம்பி மறுபடியும் மறுபடியும் வாங்க ஆரம்பிச்சேன். ஒருகட்டத்துல அதிர்ஷ்டத்தின் மேல ஒரு போதையே உருவாகிருச்சு. வண்டியை அடகுவெச்சேன். மனைவியின் நகைகளை வித்தேன். சம்பாதிச்சதையெல்லாம் மொத்தமா லாட்டரியிலேயே தொலைச்சுட்டேன். இப்போ, குடும்பத்துலருந்து என்னை ஓரங்கட்டிட்டாங்க. நிர்க்கதியா தெருவுல நிக்கிறேன். எனக்கு நடந்தது மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது’ என்று வேதனையுடன் முடிகிறது அந்தக் கடிதம்!

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, லாட்டரியால் தமிழகக் குடும்பங்கள் சீரழிந்த நிலையில், தற்கொலைகளும் அதிகரித்தன. அதுவொரு மிகப்பெரிய, சமூகப் பிரச்னையாகவும் மாறியது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு ஜனவரி 8, 2003-ல் தடைவிதித்தார். பேப்பர், ஆன்லைன் மூலமாக விற்கப்பட்ட லாட்டரிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும். ஆனால், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதால், அங்குள்ள லாட்டரியை அடிப்படையாகவைத்து தமிழகத்தில் காகிதம், ஆன்லைன் என மாற்று வழிகளில் சட்டவிரோதமாகக் கொடிகட்டிப் பறக்கிறது கள்ள லாட்டரித் தொழில்.

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

நமக்கு வந்த கடிதத்தைத் தொடர்ந்து, இந்த லாட்டரித் தொழில் எப்படி நடக்கிறது... இதன் பின்புலத்தில் இருக்கும் முதலைகள் யார்... எப்படியிருக்கிறது இதன் பாதிப்பு? விவரமறியக் களமிறங்கியது ஜூ.வி டீம். இன்றைக்கும் கள்ள லாட்டரி, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கழுத்தை நெரித்துக் கொன்றபடிதான் இருக்கிறது என்பது விசாரணையில் கிடைத்த பகீர் உண்மை!

“எப்படி நடக்கிறது கள்ள லாட்டரித் தொழில்?”

நீண்ட முயற்சிக்குப் பிறகு, சென்னையில் கோலோச்சும் லாட்டரி ஏஜென்ட் ஒருவரைப் பேசவைத்தோம். “தமிழகத்தைப் பொறுத்தவரையில், கேரளா லாட்டரியை அடிப்படையாக வைத்தே 70 சதவிகித பிசினஸ் நடைபெறுகிறது. கேரள லாட்டரியில் பரிசுத் தொகை தினந்தோறும் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். அதற்கு முன்னதாக, மதியம் 2:45 மணி வரை தமிழகத்தில் லாட்டரி நம்பரை ‘புக்’ செய்துகொள்ளலாம். இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜென்ட்டுகள் உள்ளனர். ஒரு பேப்பரில், நாம் விரும்பும் மூன்று இலக்க எண்ணை ஏஜென்ட்டிடம் எழுதிக்கொடுத்தால் போதும். இதற்குக் கட்டணமாக, மாவட்டத்துக்குத் தகுந்தாற்போல, 30 ரூபாயில் ஆரம்பித்து, 120 ரூபாய் வரை பணம் வசூலிக்கப்படுகிறது. இதிலேயே, இரண்டு இலக்க எண், ஒரு நம்பர் என வகைகள் உண்டு. அவற்றுக்கான ரேட் குறைவு. பணத்தைப் பெற்றவுடன், சீட்டு ஒன்றில் வாடிக்கையாளர் கேட்கும் எண்ணைக் குறித்துத் தருகிறார்கள்.

உதாரணத்துக்கு, கேரள லாட்டரியில் 698742 என்கிற நம்பருக்கு முதல் பரிசு விழுந்திருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த எண்ணின் கடைசி மூன்று நம்பர் 742-தான் தமிழ்நாட்டில் முதல் பரிசு. 30 ரூபாய் கொடுத்து யாராவது 742 என்கிற எண்ணை வாங்கியிருந்தால், அதிகபட்சமாக 35 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. கடைசி இரண்டு நம்பர் (342, 442, 842, 142) சரியாக இருந்தால், பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய். ஒரே ஒரு நம்பர் மட்டும் சரியாக இருந்தால், 100 ரூபாய் கிடைக்கும். குலுக்கலில் நம்பர் விழவில்லையென்றால் எதுவும் கிடையாது. நாம் கட்டிய பணம் ஏஜென்ட்டுக்குப் போய்விடும். ஒரே நம்பரில் எத்தனை லாட்டரி சீட் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். விழும் பரிசுத்தொகையில் ஏஜென்ட் கமிஷன் போக, மாலை 6 மணிக்கெல்லாம் பணத்தை செட்டில் செய்துவிடுகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட ஏஜென்ட்டும் வெவ்வேறு குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதால், ஒரே எண்ணைப் பலர் வாங்கியிருந்தாலும், பரிசுத்தொகையைத் தருவதில் பிரச்னை இருக்காது!

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

“புதுசா வர்றவங்களுக்கு சீட்டு தர்றதில்லை!”

சென்னையில் எம்.எம்.டி.ஏ., போரூர், பூந்தமல்லி, திருவல்லிக்கேணி, கே.கே.நகர், புரசைவாக்கம் பகுதிகளில் கள்ள லாட்டரிச்சீட்டு விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. திருவல்லிக்கேணியில் ‘விஜய’மான தி.மு.க பிரமுகர்தான் இந்தத் தொழிலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம்

20 லட்சம் சீட்டுகள் விற்பனையாகின்றன. பிரின்டிங் செலவு இல்லை, டி.டி.எஸ் எனப்படும் வரி அரசுக்குக் கட்டத் தேவையில்லை. கிட்டத்தட்ட 200 சதவிகிதம் லாபம் கிடைக்கும் தொழிலாக உருமாறியிருப்பதால் ஏஜென்ட்டுகளும் அதிகரித்துவிட்டனர்” என்றவர், லாட்டரித் தொழில் நடக்கும் சில இடங்களுக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

போரூர் மின்சார வாரிய அலுவலகம் அருகிலுள்ளது அந்த டீக்கடை. 50 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம், பணம் கட்டி நம்பர்களைச் சொன்னபடி இருந்தனர் கஸ்டமர்கள். அடுத்ததாக, முகலிவாக்கம் அடுத்துள்ள பாய் கடை ஏரியாவுக்குச் சென்றோம். அங்குள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் நான்கைந்து பேர் அமர்ந்திருந்தனர். நம்மைப் பார்த்ததும் ‘ஜெர்க்’ ஆன ஏஜென்ட்டுகள், “புதுசா வர்றவங்களுக்கு சீட்டு விக்கிறதில்லை. அடுத்த வாட்டி வாங்க... தர்றோம்!” என்று நம்மைக் கிளப்புவதிலேயே குறியாக இருந்தனர். நம்மை அழைத்துச் சென்றவரிடம், ‘புதுசா வர்றவங்களுக்குக் கொடுக்குறதில்லைனு உங்களுக்குத் தெரியாதா?’ என்று கடிந்தும்கொண்டனர். சென்னையில் மட்டும், நாளொன்றுக்கு 50 லட்சம் ரூபாய் புரளும் தொழிலாக இருக்கிறது கள்ள லாட்டரி!

வாட்ஸ்அப் குரூப்புக்கு நுழைவுக் கட்டணம்...

காக்கிகளை கவனிக்கும் ‘போலீஸ் சிவா’!

தென்மாவட்டங்களில் ரவுண்ட் அடித்தது ஜூ.வி டீம். தூத்துக்குடியில் பிரையன்ட் நகர் ஜங்ஷன், திரேஸ்புரம் கடற்கரை, மீன்பிடித் துறைமுகம், காய்கறி மார்க்கெட்டுகளில் லாட்டரி ‘சேல்ஸ்’ அதிகம். தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் கள்ள லாட்டரி ஏஜென்ட் ஒருவர் நம்மிடம் பேசுகையில், “தூத்துக்குடி லாட்டரி பிசினஸில் முனியசாமி, முருகன், அய்யாசாமி ஆகிய மூன்று பேர்தான் கிங் மேக்கர்கள். இவர்களின் கீழ் 26 பேர் மாவட்டம் முழுவதும் ஏரியாக்களைப் பிரித்துக்கொண்டு கள்ள லாட்டரி விற்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குமே தனித்தனியாகக் கஸ்டமர்கள் உண்டு. லாட்டரிக்கென ‘லெட்சுமி’, ‘திருப்பதி’, ‘குபேரன்’, ‘அதிர்ஷ்டம்’ எனப் பல்வேறு பெயர்களில் தனித்தனி வாட்ஸ்அப் குரூப்களும் இயங்கிவருகின்றன. சில லாட்டரி புரோக்கர்கள், லாட்டரி குரூப்பில் இணைய ‘நுழைவுக் கட்டணம்’ என்ற பெயரில் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை பெற்றுக்கொள்கிறார்கள்.

திருச்சி மாநகர், புறநகர்ப் பகுதிகளில் 30 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய் என்ற விலைகளில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் விற்பனை நடக்கிறது. சங்கிலியாண்டபுரம் ராஜா, பிரகாஷ், காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோரின் டீம்தான் இந்தத் தொழிலில் அடித்து ஆடுகிறார்கள். ஒரு நாளைக்கு, இவர்கள் டீமிலுள்ள ஏஜென்ட் ஒருவர் மட்டுமே முப்பதாயிரம் முதல் நாற்பதாயிரம் ரூபாய் வரை வசூல் செய்கிறார். மாவட்டத்துக்குள் இவர்கள் எல்லோரையும் இணைக்கும் மையப்புள்ளியாக எஸ்.வி.ஆர்.மனோகர் என்பவர் செயல்படுகிறார். மனோகரின் ஆட்கள்தான், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டைப் பகுதிகளிலும் விற்பனையை கவனித்துக்கொள்கிறார்கள். தில்லை நகர் சிவா என்கிற ‘போலீஸ்’ சிவா என்பவர் மூலமாக காக்கிகளுக்கு ‘கவனிப்பு’ நடந்துவிடுவதால், இந்த நெட்வொர்க்கை போலீஸ் கண்டுகொள்வதில்லை” என்று விவரங்களைப் புட்டுப் புட்டு வைத்தார்.

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

திருவாரூரில் வாங்கலயோ... சிங்கப்பூர் லாட்டரி!

தமிழகமே கேரளா, பூடான் கள்ள லாட்டரி பக்கம் உருண்டுகொண்டிருக்கும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சிங்கப்பூர், மலேசிய லாட்டரிகளின் விற்பனை சூடு பறக்கிறது. உள்ளூர் பிரமுகர்களே சொந்தமாக இந்த லாட்டரி விற்பனையில் ஈடுபடுகிறார்கள். 250, 500, 750 ரூபாய் எனப் பல விலைகளிலும் நம்பர் விற்பனையாகிறது. சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள ஆன்லைன் லாட்டரி நிறுவனங்கள் ரிசல்ட்டை அறிவித்தவுடன், அந்த ரிசல்ட்டிலுள்ள எண்களில் கடைசி மூன்று இலக்கம், இரண்டு இலக்கங்களைக்கொண்டு, 500 ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது.

தஞ்சாவூரில் கீழராஜ வீதியிலுள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில், மாடியில் அலுவலகம் அமைத்து கார்த்திக் என்பவர் கள்ள லாட்டரி விற்பனையை ஜோராக நடத்துகிறார். இத்தனைக்கும், அவர் அலுவலகம் மேற்கு காவல் நிலையத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது என்பது வேடிக்கை. அதேபோல, கிழக்கு காவல் நிலையத்துக்கு எதிரேயுள்ள மரப்பட்டறை ஒன்றில், மணி என்பவர் லாட்டரி விற்பனை செய்கிறார். தினமும் நடக்கும் மொத்த விற்பனையில் 10 சதவிகிதம் போலீஸ் தரப்புக்கு கவனிக்கப்படுகிறதாம்.

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

கடனுக்கு லாட்டரி நம்பர்... சிதையும் குடும்பங்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பட்டாசுத் தொழிலாளர்கள், பிரின்டிங் பிரஸ் தொழிலாளர்கள் அதிகமும் இந்தக் கள்ள லாட்டரி மோகத்தில் மூழ்கியுள்ளனர். சில பட்டாசு ஆலைகளில், உடன் வேலை செய்பவர்களில் ஒருவரே ஏஜென்ட்டாக மாறி நம்பரைப் பெற்றுக் கொடுக்கிறார். பணமில்லாதவர்கள், அந்த ஏஜென்ட்டிடம் கடனுக்கு லாட்டரி நம்பரை வாங்குகிறார்கள். லாட்டரி நம்பருக்கு அடித்தால் ஜாக்பாட். இல்லையென்றால், வார இறுதியில் கொடுக்கப்படும் கூலிப்பணத்தில், நம்பருக்கான பணத்தை கம்பெனியிலிருந்து வெளிவரும்போதே வசூலித்துவிடுகிறார்களாம். இந்தப் பகுதியில், இப்படிக் காசை இழந்து, கடனில் மூழ்கிச் சிதைந்துபோன குடும்பங்கள் ஏராளம். சக்திவேல், சிவசங்கர், கருப்பசாமி உள்ளிட்ட 13 பேர்தான் விருதுநகரில் பிசினஸைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களாம்.

கரூர் மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக இந்தத் தொழிலில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த ‘மதுரை அரசர்’ பெயர்கொண்டவர்தான் கோலோச்சினார். இப்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, இளையராஜா என்பவர் ஆரம்பித்தார். சில வாரங்களுக்கு முன்னர் அவரை குண்டர் சட்டத்தில் போலீஸ் கைதுசெய்தவுடன், வேறு சிலர் பிசினஸைக் கையிலெடுத்திருக்கிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “ஏமூரைச் சேர்ந்த பசுபதி, கடவூரைச் சேர்ந்த சகோதரர்களான கண்ணன் மற்றும் சரவணன், லாலாபேட்டை பகுதியில் சேகர், கோபி ஆகியோரின் கைகளுக்கு லாட்டரித் தொழில் போயிருக்கிறது. குயில், ரோசா, டீர், தங்கம், நல்ல நேரம், குமரன், விஷ்ணு, சொர்ணலட்சுமி எனப் பல வாராந்தர கள்ள லாட்டரிகளும் விற்கப்படுகின்றன. அதேபோல், கேரள அரசால் நடத்தப்படும் லாட்டரி சீட் எண்களை வைத்தும் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கிறது. தினமும் 15 லட்சம் ரூபாய் வரை இந்தத் தொழிலில் பணம் புழங்குகிறது” என்றார்.

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

‘லாட்டரியால் அழிந்தோம்’ - கண்டுகொள்ளாத அரசு!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காவல் நிலையத்தின் எதிரிலிருக்கும் ஒரு ஃபேன்ஸி ஸ்டோரில், அதன் அருகிலேயே இருக்கும் ஒரு தங்கும் விடுதியில், ராம்சந்த் பேருந்து நிறுத்தம் அருகில் மாஸ்க் விற்கும் ஒரு முதியவரிடம் எனக் காவல் நிலையத்தைச் சுற்றியே டவுனில் ஜோராக நடக்கிறது ‘மூணு நம்பர்’ லாட்டரி பிசினஸ்.

புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் பகுதியில், மூணு நம்பர் லாட்டரி ஏஜென்ட் ஒருவரை வளைத்துப் பேசினோம். “கிராமப் பகுதியில வாட்ஸ்அப் வசதிகள் பத்தித் தெரியாதவங்க மட்டும் நம்பர் எழுதி வாங்கிக்கிறாங்க. மற்றபடி, இளைஞர்கள் எல்லாரும் வாட்ஸ்அப்பிலேயே நம்பரை அனுப்பிடுவாங்க. கூகுள் பே, போன் பே மூலமா பணத்தை வசூலிச்சுடுவோம். பரிசு விழுந்தாலும் அதே மாதிரி ஆன்லைன்லேயே பணத்தை அனுப்பிருவோம். இந்த வியாபாரத்துல கமிஷனெல்லாம் போக, ஒவ்வொரு நாளும் 8,000 ரூபாய் கையில் நிக்குமுங்க” என்றார்.

இதுவரை இங்கே குறிப்பிட்டவையெல்லாம் சாம்பிள்கள்தான். கோவை, மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, மதுரை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் என எல்லா மாவட்டங்களிலும் லாட்டரித் தொழில் கனஜோராக நடக்கிறது.

கழுத்தை நெரிக்கும் கள்ள லாட்டரி... கண்டுகொள்ளாத அரசு!

விழுப்புரத்தில் கடந்த டிசம்பர் 2019-ல், மூன்று நம்பர் லாட்டரி சீட்டால் ஏற்பட்ட கடன் சுமையால், தங்களது மூன்று பெண் குழந்தை களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு அருண் - சிவகாமி தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, ‘லாட்டரியால் அழிந்தோம்’ என்று அவர்கள் பேசிய வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே போன்ற தொரு நிலைமையைத்தான் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் சந்திக்க ஆரம்பித்திருக்கின்றன.

தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும், கிராமம் நகரம் என்றில்லாமல், எந்த அச்சமும் இன்றி கள்ள லாட்டரி கொடிகட்டிப் பறக்கிறது. அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஏதேனும், கொடூர மரணம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு விஷயத்தில் நடவடிக்கை என்கிற வழக்கத்தை மாற்றி, கள்ள லாட்டரியை ஒழிப்பதில் கடுமை காட்டுமா அரசு?

******

பாராட்டுகள்!

ஒரு மாவட்டத்தில் நடக்கும் நல்லது, கெட்டது அனைத்துக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கும் பொறுப்பு உள்ளது. கள்ள லாட்டரி விற்பனை தொடர்பாக நாம் கேள்வி எழுப்பியபோது, பல மாவட்ட ஆட்சியர்களும், ‘இது க்ரைம் பிரச்னை. நீங்கள் காவல்துறையில் கேளுங்கள்’ என்றதோடு கழன்றுகொண்டனர். விழுப்புரம் ஆட்சியர் மோகன், கோயம்புத்தூர் ஆட்சியர் சமீரன், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் மட்டுமே துணிச்சலோடு பதிலளித்தார்கள். அவர்களுக்குப் பாராட்டுகள்!

காவல்துறை என்ன சொல்கிறது?

“காய்கறி மற்றும் பழ வண்டிகள் மூலமாக, கேரளாவிலிருந்து லாட்டரிச்சீட்டுகளை வாங்கிவந்து விற்பனை செய்வது, வெள்ளைச்சீட்டு ஒன்றில் நம்பரை எழுதிக்கொடுப்பது, வாட்ஸ்அப் மற்றும் ஆன்லைனில் விற்பது என இந்த லாட்டரிச்சீட்டு பிசினஸ் பல வழிகளில் நடக்கிறது. லாட்டரி ஏஜென்ட்டுகளின் வாட்ஸ்அப் குரூப்புகளில் எங்களுடைய இன்ஃபார்மரை ரகசியமாக நுழைத்து, கண்காணித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் கோலோச்சிய பலர்மீது கடந்த நான்கு மாதங்களில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்!”

- சசிமோகன், எஸ்.பி., ஈரோடு.

“தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையைக் கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ அடங்கிய ஸ்பெஷல் டீம் அமைத்திருக்கிறோம். தற்போது பெரும்பாலும் ஆன்லைனில் நடப்பதால், லேப்டாப், கணினிகளையும் கைப்பற்றி விசாரணை நடத்துகிறோம். நவ.1-ம் தேதிகூட ஒரு சட்டவிரோத லாட்டரிச்சீட்டு குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. போலீஸார் யாரும் சட்டவிரோத லாட்டரிச்சீட்டுக்குத் துணைபோவதில்லை. அப்படிப் புகார் வரும்பட்சத்தில் உடனடி நடவடிக்கை இருக்கும்!”

- நிஷா பார்த்திபன், எஸ்.பி., புதுக்கோட்டை.

“லாட்டரி விற்பனையை ஒடுக்குவதற்கு, ஒவ்வொரு காவல் உட்கோட்டத்திலும் சிறப்பு தனிப்பட்டை அமைக்கப்பட்டுள்ளது. லாட்டரிச்சீட்டு விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்துவருகிறோம். கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 33 வழக்குகள் பதியப்பட்டு, 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 6,470 ரூபாய் மதிப்பிலான 647 லாட்டரிகள் பிடிபட்டுள்ளன. 36,990 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.”

- நாதா, எஸ்.பி., விழுப்புரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு