அரசியல்
அலசல்
Published:Updated:

அதிகரிக்கும் லாக்கப் டெத்... தேவை காவல்-சிறைத்துறை மாற்றங்கள்!

லாக்கப்
பிரீமியம் ஸ்டோரி
News
லாக்கப்

வழக்கறிஞர் ஹென்றி திபேன், மக்கள் கண்காணிப்பகம்

தமிழ்நாட்டில் கடந்த 01.04.2021 முதல் 21.03.2022 வரை நடந்த காவல் மரணங்கள் பற்றி, ஜூலை 26-ம் தேதியன்று நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. தமிழ்நாட்டில் 109 காவல் மரணங்கள் நடந்திருப்பதாக, பொதுவாக பதில் கூறப்பட்டது. ஏன் ‘பொதுவாக’ என்று குறிப்பிட்டுக் கூறுகிறேன் என்றால், காவல் மரணம் பற்றி நமக்கு ஒரு தெளிவு தேவைப்படுகிறது. காவல் மரணத்தை இரண்டுவிதமாகப் பகுத்துப் பார்க்கலாம். ஒன்று, காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம்; மற்றொன்று, சிறையில் ஏற்படும் மரணம்.

ஹென்றி திபேன்
ஹென்றி திபேன்

காவல் மரணமும், நீதிமன்றக் காவல் மரணமும்!

விசாரணையின் பெயரால் காவலர்கள் தாக்குவதால் - காவல் வன்முறையால் - மனித உரிமை மீறலால் - காவல் நிலையத்தில் ஏற்படும் மரணத்தை `காவல் மரணம்’ என்கிறோம். அது மட்டுமல்ல... உடல்நலக் குறைவால் ஏற்படும் இறப்பும், காவல் நிலையத்தில் ஏற்படும் இயற்கை மரணமும், ஒருவரை விசாரணைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது - மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது - மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஏற்படும் மரணமும் காவல் மரணமே. ஒருவர் காவல் நிலையக் காவலில் அல்லது காவல் நிலையத்துக்கு வெளியே காவலர்களின் காவலில் இருக்கும்போது அவர் மரணித்தால் அதுவும் காவல் மரணமாகவே கருதப்படும்.

காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு, ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த பிறகு, சிறையினுள் இருக்கும்போது அல்லது சிறைக்கு வெளியே சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போது அல்லது மருத்துவமனை சிகிச்சையின்போது ஏற்படும் மரணம் நீதிமன்றக் காவல் மரணம் எனப்படும். காவலர்களின் தாக்குதலால் பாதிப்புற்று சிறையினுள் அல்லது சிகிச்சைக்குக் கொண்டு செல்லும்போது அல்லது சிகிச்சையின்போது மருத்துவமனையில் ஏற்படும் மரணங்களும்கூட நீதிமன்றக் காவல் மரணமே. சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், அன்றைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காவல் சித்ரவதையை மறைக்கும் நோக்கில், ‘இது காவல் மரணம் அல்ல, சிறையில் ஏற்பட்ட மரணம்’ என்று கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.

சிறையில் டி.பி., மாரடைப்பு போன்ற உடல்நலக் குறைவால், வயது முதிர்வால் ஏற்படும் மரணங்களும்கூட நீதிமன்றக் காவல் மரணங்களே. சிறையினுள் கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டு கொலை நடந்தால், அதுவும் நீதிமன்றக் காவல் மரணமே. எடுத்துக்காட்டாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த முத்து மனோ மரணம்.

சரி, காவல் மரணங்களையும், நீதிமன்றக் காவல் மரணங்களையும் மட்டுப்படுத்த அரசு என்ன செய்ய வேண்டும்?

அதிகரிக்கும் லாக்கப் டெத்... தேவை காவல்-சிறைத்துறை மாற்றங்கள்!

காவல்துறையில் செய்யவேண்டியவை!

பொதுவெளியில் மக்களோடு, பள்ளிகளில் குழந்தைகளோடு உரையாடும் முதல்வர், புதிய காவல் நிலையக் கட்டடங்களைத் திறக்கும்போது அங்குள்ள காவலர்களிடமும் ‘லாக்கப் டெத்’ பற்றிக் கலந்துரையாட வேண்டும். பழைய காவல் நிலையக் கட்டடங்களையும் பார்வையிட்டு அவை காவல் சித்ரவதைக்குப் பயன்படுத் தப்படுகின்றனவா என்று ஆராய வேண்டும். ‘விசாரணை என்ற பெயரில் ஒருவரைக் காவல் நிலையத்துக்கு வெளியே கொண்டு செல்லக் கூடாது. வெளியில் தங்கவைக்கக் கூடாது’ என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பரம்வீர்சிங் எதிர் பல்ஜித்சிங் வழக்கில் 02.12.2020 தேதி (SLP Criminal No:3543/2020) உச்ச நீதிமன்றம் ஓர் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, “அனைத்துக் காவல் நிலைய வரவேற்பறை, கைதி அறை, சார்பு ஆய்வாளர் அறை, ஆய்வாளர் அறை, சுற்றுச் சுவரின் முன்பகுதி, பின்பகுதி (கழிப்பறை தவிர்த்து) ஆகிய இடங்களில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, இருளிலும் ஒளி பதிவாகக்கூடிய, 18 மாதங்கள் சேமிப்புத் திறனுள்ள தரமான சிசிடிவி பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். காவல் நிலையத்துக்கு வெளியே, ‘இந்தக் காவல் நிலையம் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் உள்ளது, மனித உரிமை மீறல்கள் பற்றிய பதிவுகளைப் பெறலாம்’ என்ற அறிவிப்புப் பலகை இருக்க வேண்டும்” ஆகியவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதிகரிக்கும் லாக்கப் டெத்... தேவை காவல்-சிறைத்துறை மாற்றங்கள்!

கடந்த ஜூன் 22 அன்று சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவேந்தல் நாள் நிகழ்வில் பங்கேற்ற பிறகு சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்று பார்வையிட்டேன். அங்கு வரவேற்பறை இல்லை. வரவேற்பாளரும் இல்லை. தலைமைக் காவலர், சார்பு ஆய்வாளர், ஆய்வாளர் அறையிலும் சிசிடிவி கேமரா இல்லை. ஆனால், ஆய்வாளர் அறையிலுள்ள கணினி திரையில் சாத்தான்குளத்தின் முக்கிய வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள 65 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தன. சார்பு-ஆய்வாளர் அறை பூட்டியிருந்தது. நான் பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது ஆய்வாளர் வந்தார். அவரிடம் ‘உங்கள் அறையில் சிசிடிவி கேமரா இல்லையே...’ என்று கேட்டபோது, சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது. ஒரு கொடுஞ் சம்பவத்தால் கண்டனத்துக்குள்ளான காவல் நிலையத்திலேயே இதுதான் நிலை என்றால், மற்ற காவல் நிலையங்களின் நிலை என்ன?

குற்றம்சாட்டப்பட்டவர்களை அல்லது சந்தேகத்துக்குரியவர்களைக் காவல் நிலையங்களில் எவ்வாறு நடத்த வேண்டும் என்ற, ‘41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை’ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திரபாபு, ஜூன் 14, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையாக அனுப்பியிருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், அவை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க காவல்துறையில் திறம்படப் பணியாற்றும் ஐ.ஜி-க்கள், மாநகர காவல் ஆணையர்கள் (CoP), மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர்கள் (ACP) மூலம் மண்டல அளவில் தரமான, நம்பகத்தன்மையான கண்காணிப்பை உறுதிப்படுத்துவதன் மூலமே இதை முறையாக நடைமுறைப்படுத்த முடியும்.

சிறைத்துறையில் செய்யவேண்டியது!

சிறைச்சாலை என்பது நான்கு சுவருக்குள் மூடப்பட்ட இடம். அங்கு என்ன நடந்தாலும் வெளியுலகுக்குத் தெரியாது. எனவே சிறைச்சாலை விதிகள் பிரிவு 506 & 507-ன்படி ஒவ்வொரு சிறையையும் அரசு சார்ந்த பார்வையாளர்கள், அரசு சாரா பார்வையாளர்கள் முழுமையாகப் பார்வையிட வேண்டும். மறைக்கப்பட்ட பகுதி எதுவும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். அரசு சார்ந்த பார்வையாளர்கள் குழுவுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியரே தலைவர். இந்தக் குழுவில் மாவட்டக் கல்வி அதிகாரி, மாவட்ட மருத்துவ அதிகாரி, மாவட்ட கால்நடை மருத்துவ அதிகாரி, மாவட்ட வேளாண்துறை அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் சிறைகளைப் பார்வையிட்டதே இல்லை. உதாரணமாக, ‘மதுரை மாவட்ட ஆட்சியர் எத்தனை முறை சிறையைப் பார்வையிட்டார்?’ என்று ஆர்.டி.ஐ மூலம் கலெக்டரிடம் தகவல் கேட்டிருந்தோம். பொறுப்புடன் முறையாக பதிலளிக்கவேண்டிய அவர், அந்தக் கடிதத்தை மாவட்ட சிறைக் கண்காணிப்பாளருக்கு அனுப்பிவிட்டார். சிறைகளைப் பார்வையிடவேண்டிய பொறுப்பும் கடமையும் உள்ள மாவட்ட நீதிபதியும், தலைமை குற்றவியல் நடுவரும் சிறைகளைப் பார்வையிட்டதாக பதில் கூறியிருக்கிறார்கள்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு இருந்தபோது, அரசு சாரா பார்வையாளர்களை நியமனம் செய்யக் கோரி 2016-ல் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தேன். 2017, ஆகஸ்ட் 1-ல் நியமனம் செய்த பட்டியலை நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள். இப்போது அந்தப் பட்டியலில் 90 சதவிகித இடங்கள் காலியாக இருக்கின்றன. 2017-ல் நியமனம் செய்யப்பட்டவர்களில் எத்தனை பேர் சிறைக்குச் சென்று பார்வையிட்டார்கள் என்று சிறைத்துறை டி.ஜி.பி சுனில்குமார் வெள்ளை அறிக்கை கொடுக்க முடியுமா? அரசு சாரா பார்வையாளர்களைத் தேர்வு செய்வது முக்கியமல்ல. அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக, அனுபவம் உள்ளவர்களாக, பணி செய்பவர்களாக இருக்க வேண்டும்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

எடுத்துக்காட்டாக சிறையில் நீண்ட நாள்கள் இருந்து சிறைவாசிகளைப் பற்றி முழுமையாக அறிந்த தோழர் தியாகு, பேரறிவாளன் ஆகியோருடன் சமூக அறிவியல் கல்லூரிப் பேராசிரியர்கள், சமூக அக்கறைகொண்ட மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், பத்திரிகையாளர்கள், தகுதி வாய்ந்த, அனுபவமிக்க, பயிற்சிபெற்ற தன்னார்வலர்கள் போன்றோரை நியமிக்கலாம். இதன் மூலம் சிறையின் சுகாதாரம், உணவு போன்றவை தரமுடையவையாக மாறும். சித்ரவதை குறையும். மரணம் குறையும்.

குறைகளை நேர் செய்தாலே போதும். காவல் மரணங்களும், நீதிமன்ற மரணங்களும் மட்டுப்படுத்தப்படும்!