அரசியல்
அலசல்
Published:Updated:

சுள்ளான் சோக்கு... மைனர் சோக்கு... சாதிக்கு ஒரு பிளாக்... சிறைக்குள்ளே சிறை... அதிர்ச்சி ரிப்போர்ட்!

சிறை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறை

சிறைகளில் இருக்கும் புகார்ப் பெட்டிகளில் போடப்படும் புகார் மனுக்களை, அங்கிருக்கும் சிறைக் காவலர்களே திறந்து படிக்கும் நிலை இருக்கிறது.

தமிழகச் சிறைகளில் மனித உரிமை மீறல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக எழும் புகார்களையொட்டி, சமீபத்தில் வேலூர் மத்திய சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தியது தமிழக அரசின் பொதுக்கணக்குக் குழு. ஆய்வறிக்கையில், “சாதிரீதியாகக் கைதிகளைப் பிரித்துவைத்திருப்பது’ உட்பட பல்வேறு அதிர்ச்சிக்குரிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகச் சிறைகளின் நிலவரம் குறித்த விசாரணையில் இறங்கினோம்!

‘சுள்ளான் சோக்கு’ பாலியல் அத்துமீறல்!

பாலியல்ரீதியான அத்துமீறல்கள் சிறைகளுக்குள் அதிக அளவில் அரங்கேறுகின்றன. குறிப்பாக, தென்மாவட்டச் சிறைகளில், ‘சுள்ளான் சோக்கு’, ‘மைனர் சோக்கு’ என்ற சொற்றொடர்கள் பிரபலம். ஓர் அழகான இளைஞன் சிறைக்கு வந்துவிட்டால், ‘சீனியர்’ கைதிகளுக்கு ஒரே கொண்டாட்டம்தானாம். அந்த இளைஞனை சிறையிலிருக்கும் சீனியர்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி, துன்புறுத்தத் தொடங்கிவிடுவார்களாம். இதற்கு உதாரணம், மதுரை மத்திய சிறையில் சீனியர்களால் பாழாக்கப்பட்ட 20 வயது இளைஞன் மகேஷின் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) சிறை அனுபவம்.

மகேஷ் அனுபவித்த துயரங்களை நேரில் கண்ட ஒரு முன்னாள் கைதி, “அந்தப் பையன் ஒல்லியா, சிவப்பா, அழகா இருப்பான். ஒரு குற்ற வழக்கில் கைதியா இங்கே வந்தான். முதல் நாளே சீனியர் கைதிகள் மூணு பேர் சேர்ந்து அவனைக் கட்டாயப்படுத்தி ‘செக்ஸ்’ வெச்சுக்கிட்டாங்க. அவன் முரண்டு பிடிச்சான், இவனுங்க விடலை. அப்பட்டமா, அது ஒரு ‘கேங் ரேப்’தான். பிறகு, தினமும் இதே கொடுமை அவனுக்கு நடந்துச்சு. ஒரு கட்டத்துல அவனும் இணங்கிப்போயிட்டான். வேறு வழியில்லையே. மூணு வருஷம் தண்டனை முடிஞ்சு ரிலீஸாகி வெளியே போன அவன், இப்போ திருநங்கையா மாறிட்டான்” என்றார் வருத்தத்துடன்.

சுள்ளான் சோக்கு... மைனர் சோக்கு... சாதிக்கு ஒரு பிளாக்... சிறைக்குள்ளே சிறை... அதிர்ச்சி ரிப்போர்ட்!

சாதிக்கு ஒரு பிளாக்!

பெரும்பாலான தமிழக சிறைகளில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பிளாக் இருக்கிறது என்கிறார்கள் முன்னாள் சிறைவாசிகள். இது குறித்து பாளையங்கோட்டைச் சிறையில் பணியாற்றும் காவலர் ஒருவரிடம் பேசினோம். “புதுசா சிறைக்கு வர்றவங்ககிட்ட, ‘நீ எந்த ஊரு... என்ன ஆளுக’ன்னு சிறைக் காவலர்களே கேட்பாங்க. சாதி தெரிஞ்சதும், ‘உங்க ஆளுங்க இருக்குற செல்லுக்குப் போ’ன்னு அவங்களே பிரிச்சு அனுப்பிடுவாங்க. பாளையங்கோட்டை ஜெயில்ல, ‘நாடார் பிளாக்’, ‘முக்குலத்தோர் பிளாக்’, ‘தலித் பிளாக்’னு ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி பிளாக் இருக்கு. அவங்கள்ல நாலஞ்சு கைதிகளை ஜெயில் அதிகாரிகளே கைக்குள்ள போட்டுவெச்சுக்கிட்டு, அவங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுப்பாங்க. சிறைக்குள்ள எந்தப் பிரச்னையும் வராம அந்த நாலஞ்சு பேரும் பார்த்துப்பாங்க. அதிகாரிகளேகூட சாதிரீதியாப் பிரிஞ்சிருப்பாங்க. சில ஜெயிலர்கள் தங்களோட சாதியைச் சேர்ந்த பெரிய ரௌடிகளைப் பார்த்து, ‘அவரு நம்ம ஆளுடா’னு பெருமையா பேசிக்குவாங்க...” என்று அதிர்ச்சி கொடுத்தார்.

பலருக்கும் ‘பைல்ஸ்’ பிரச்னை!

சிறை அத்துமீறல்கள் குறித்துத் தொடர்ந்து பேசிவரும் வி.சி.க-வின் மாநில இளஞ்சிறுத்தைகள் பாசறையின் துணைச் செயலாளரான தா.மாலினிடம் பேசினோம். “ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக எட்டு ஆண்டுகள் மதுரை மத்திய சிறையில் இருந்திருக்கிறேன். சிறையில் அதிகாலை 5 மணிக்குக் கைதிகளைத் தூக்கத்திலிருந்து எழுப்புவார்கள். நள்ளிரவில் திடீர் திடீரென ரெய்டு நடத்துவார்கள். அது கைதிகளுக்கு பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தும். சிறையில் வழங்கப்படும் உணவு வெந்தும் வேகாததுமாக இருக்கும். அதை உண்பதால் பெரும்பாலான கைதிகளுக்கு சீக்கிரமே ‘பைல்ஸ்’ பிரச்னை வந்துவிடும். தமிழக சிறைகளில் மருத்துவ வசதிகள் மிகவும் மோசம். வாரத்தில் ஒரு நாள் ஆடு மாடுகளை அடைப்பதுபோல வேனில் ஏற்றி மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்வார்கள். கைதிகளில் பெரும்பாலானோர் அதிகமான மனஅழுத்தத்துடன் இருப்பார்கள். அதனால் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதும் உண்டு. தினமும் சாயங்காலம் எல்லா அறைகளையும் பூட்டிவிட்டு, சாவிகளை மெயின் கேட்டில் கொடுத்துவிடுவார்கள். நள்ளிரவில் யாருக்காவது நெஞ்சுவலி ஏற்பட்டால், மெயின் கேட்டுக்குப் போய் சாவியை வாங்கிவருவதற்குள் அந்த உயிர் போய்விடும். அப்படிச் சில கைதிகள் மரணமடைந்ததை நானே பார்த்திருக்கிறேன். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட சிறை விதிமுறைகளை இன்னமும் பின்பற்றுவதுதான் இது போன்ற பிரச்னைகளுக்குக் காரணம்” என்கிறார் தா.மாலின்.

தா.மாலின்.
தா.மாலின்.

‘மிசா’ முதல்வர் கவனத்துக்கு!

சிறைக் கைதிகளின் சட்ட உரிமைகளுக்காகப் போராடிவரும் ‘மக்கள் கண்காணிப்பக’ நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேனிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் போலீஸாரைவிட, சிறைத்துறை அதிகாரிகள் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள். சிறைகளில் ஏராளமான ஊழல்கள் நடக்கின்றன. கஞ்சாவையும் செல்போனையும் உள்ளே அனுமதிப்பதால் மட்டுமல்ல, ரொக்கமாகவே ஏராளமான பணம் சிறைக்குள் புழங்குகிறது. கைதிகள் அடித்து உதைக்கப்படுவதால், பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஏராளமான மரணங்கள் செய்தியாவது இல்லை.

ஹென்றி டிபேன்
ஹென்றி டிபேன்

சிறைகளில் இருக்கும் புகார்ப் பெட்டிகளில் போடப்படும் புகார் மனுக்களை, அங்கிருக்கும் சிறைக் காவலர்களே திறந்து படிக்கும் நிலை இருக்கிறது. ஒருவேளை யாராவது புகார் எழுதிப் போட்டால், அவரைக் கண்டுபிடித்து கை காலை உடைக்கும் நிலையும் இருக்கிறது. மனநல மருத்துவர்கள் அதிகமாகத் தேவைப்படும் இடமாகத் தமிழக சிறைக்கூடங்கள் இருக்கின்றன.

மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், மாவட்டக் கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளைக்கொண்ட ‘அஃபீஷியல் விசிட்டர்ஸ்’ தொடர்ச்சியாகச் சிறைகளுக்குச் சென்று பார்வையிட வேண்டும். அதுபோக, அதிகாரிகள் அல்லாத ‘நான் அஃபீஷியல் விசிட்டர்ஸ்’ குழுவும் தொடர்ச்சியாகச் சிறைகளுக்கு விசிட் செல்ல வேண்டும். இதை உறுதிசெய்தாலே அங்கு நடக்கும் தவறுகளையும் அத்துமீறல்களையும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். மிசாவில் சிறைக்குச் சென்று பல கொடுமைகளை அனுபவித்தவர் நம்முடைய முதல்வர். சிறைச் சீர்திருத்தங்களை இவர் முன்னெடுக்கவில்லை யென்றால், வேறு எவரும் முன்னெடுக்க மாட்டார்கள்” என்கிறார் ஹென்றி டிபேன்.

சிறைக் கைதிகளின் வாழ்வில் விடியல் கொண்டுவருவாரா முதல்வர்?

சுள்ளான் சோக்கு... மைனர் சோக்கு... சாதிக்கு ஒரு பிளாக்... சிறைக்குள்ளே சிறை... அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஒரு சிறைக்குள் இன்னொரு சிறை!

“வேலூர் மத்திய சிறையைப் பார்வையிட்டபோது, மனித உரிமை மீறல் தொடர்பாகச் சில கைதிகள் எங்களிடம் புகார் அளித்தனர். சிறை அதிகாரிகளின் ‘சொல்பேச்சைக் கேட்காத’ கைதிகள் இரவு நேரத்தில் கொடூரமாகத் தாக்கப்படுவது பற்றி அறிந்தோம். இதற்காக, சிறைக்குள்ளேயே இன்னொரு சிறை வைத்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தோம். நிர்வாகம் குறித்துப் புகார் தெரிவிக்கும் கைதிகளை அதில் அடைத்துவைத்திருந்தார்கள். இது குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘அந்தக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால், தனியாக அடைத்துவைத்திருக்கிறோம்’ என்றனர். அந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல. உணவின் தரம் மிக மோசமாகவே இருந்தது. சிறைக்குள் போதைப்பொருள்கள், செல்போன் பயன்பாடு இருப்பதும் தெரியவந்தது. சாதிரீதியாக கைதிகளைத் தனியாக வைத்திருந்ததும் எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியளித்தது. எங்கள் ஆய்வு தொடர்பான அறிக்கையை விரைவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறோம்!”

- செல்வப்பெருந்தகை, தமிழக சட்டமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர்.