Published:Updated:

கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!

பானை வனைதல்
பிரீமியம் ஸ்டோரி
பானை வனைதல்

பாரம்பர்யம்

கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!

பாரம்பர்யம்

Published:Updated:
பானை வனைதல்
பிரீமியம் ஸ்டோரி
பானை வனைதல்

நெல் எந்த மரத்தில் விளைகிறது, ஆடு என்ன சாப்பிடும், பால் எங்கிருந்து வருகிறது என்று உயிர்ச்சங்கிலியும் உணவுச்சங்கிலியும் அறியாமல் வளரும் நகரத்துக் குழந்தைகள் ஏராளம். உணவு எப்படி விளைகிறது, கிராமத்து வாழ்க்கை எப்படிப்பட்டது, பாரம்பர்ய விளையாட்டுகள் என எல்லாவற்றையும் இவர்கள் நேரில் பார்த்துத் தெரிந்துகொள்ள கிளார் கிராமத்துக்குப் போகலாம்.

காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிளார் கிராமத்தில் `முருகு தோட்டம்' என்ற பெயரில் மாதிரி கிராமம் அமைத்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தணிகாசலம். விவசாயம் பற்றி எதுவுமே தெரியாதவர், இயற்கையின் மீது ஈர்ப்பு வந்து உருவாக்கிய பண்ணை இது.

கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!
கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஊருக்குச் செல்லும் சிறு சாலையின் இருபுறத்திலும் பொன்னிறத்தில் நெல் வயல்கள் தலையசைத்து சலசலவென வரவேற்றன. நெல் வயல் பசுமை போர்த்தி விளைந்திருக்க, அதற்குக் காவல் காக்கப் பரண் கொட்டகைகள் இருந்தன. அமேசான், நைல் என நதிகளின் பெயரில் இரண்டு பிரமாண்டக் கிணறுகள். மின்சாரம் இல்லாத அந்தக்காலத்தில் ஏற்றம் இறைப்பதுபோல அமைத்திருந்தார்கள். இதில் தண்ணீர் இறைக்கும் காட்சி, குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் பரசவப்படுத்தும். பக்கத்திலேயே மீன் வளர்க்கும் குளம் உள்ளது. குழந்தைகள் நீச்சல் அடித்து மகிழ சிறிய குளம்போலத் தொட்டி இருக்கிறது.

தோட்டத்து வீட்டின் முற்றத்தில் மயில் வடிவில் மரத்தால் செய்யப்பட்ட பெரிய பல்லாங்குழிக் கட்டையில் காய்களைப் போட்டுப் பல்லாங்குழி ஆட்டம் விளையாடலாம். கேரம் போர்டு அளவிலான தாயக்கட்டைப் பலகையும் இருக்கிறது. மண்பாண்டக் கலைஞர்கள் சக்கரத்தைச் சுழலவிட்டு அழகிய பூந்தொட்டி செய்து காட்டுகிறார்கள். ஆரோக்கியமான எண்ணெய் தரும் கல்செக்கு ஒன்றும் இருக்கிறது. தோட்டத்தில் இருக்கும் வழுக்குமரத்தில் ஏறிப் பார்க்க முயன்று உற்சாகமாகத் தோற்கலாம். பக்கத்திலேயே உறியடி விளையாடவும் ஏற்பாடுகள் உள்ளன.

கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!

பண்ணையின் இன்னொரு பக்கத்தில் கறுப்புக் கோழிகள், தீக்கோழிகள், வாத்துகள், மாடுகள், ஆடுகள் உற்சாகமாக ஓடியாடுகின்றன. ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி என நாட்டுநாய்களும் வளர்கின்றன. கிராமத்தின் இயல்பான வாழ்வு எப்படி இருக்கும் என்று அனுபவிக்கப் பொருத்தமான இடம்.

``நெல் ஜெயராமன் பாதுகாத்துவந்த பாரம்பர்ய நெல் வகைகள் அத்தனையையும் ஒரே இடத்தில் அவரின் வழிகாட்டுதலோடு இங்கு பயிர் செய்தோம். அவற்றிலிருந்து விதை நெல்லையும் சேமித்திருக்கிறோம். அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்காதபோதும் நான்கு முறை இங்கு வந்திருக்கிறார். ஆத்தூர்க் கிச்சலி, இலுப்பைப்பூச் சம்பா, காலா நமக், காட்டுயானம், கைவரச் சம்பா, கள்ளுண்டை, கந்தசாலா, கருடன் சம்பா, கருங்குருவை, கறுப்புக் கவுணி, கருவாச்சி, கவுணி, கிச்சிலிச் சம்பா, கொத்தமல்லிச் சம்பா, குடவாழி, குழியடிச்சான், குண்டுகார், மடுமுழுங்கி, மஞ்சள் பொன்னி, மாப்பிள்ளைச் சம்பா, மரசுதொண்டி, மிளகுச் சம்பா, முற்றின சன்னம், மைசூர் மல்லி, நவரா, நீலஞ்சம்பா, ஒட்டம், பால் குடவாழை, பொன்னி, பூம்பாலை, சேலம் சம்பா, ராஜமன்னார், ராஜமுடி, ரத்தசாலி, சீரகச் சம்பா, செம்புளிப் பிரியன், சிங்கிணிக்கார், சின்னார், சிவப்புக் கவுணி, சொர்ண மசூரி, தேங்காய்ப்பூச் சம்பா, வாழைப்பூச் சம்பா, துளசி வாசம், தூயமல்லி, வாகை, வாடன் சம்பா, வாலான், வெள்ளைக் குட வாழை, வெள்ளை மிளகுச் சம்பா ஆகிய பாரம்பர்ய நெல் வகைகள் இங்கு பயிரிடப்படுகின்றன’’ என்றார் தணிகாசலம்.

கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!
கிராமத்து வாழ்க்கையை கற்றுத் தரும் கிளார்!

கிணற்றின் ஒரு பக்கத்தில் ஆறு பெரிய நட்சத்திரங்கள் வடிவில் தடுப்புகள் அமைத்து, 36 வகையான மூலிகைகள் அடங்கிய தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து 20 வகையான தென்னைகளையும் நட்டுக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

விதவிதமான பயிர்களை வைத்ததால், இங்கு ஏராளமான பறவைகளும் வருகின்றன. 60 வகையான வனப்பறவைகளை இப்படி அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவை வந்து அமர்வதற்கான கூண்டுக் கம்பங்கள் அமைக்க உள்ளனர். பறவைகள் போலக் கவலையின்றி இங்கு சுற்றித் திரிந்து கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்கலாம்.