பிரீமியம் ஸ்டோரி
முத்தம்... ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்புவரை அவனுடன் தொடர்ந்து பயணிக்கும் அற்புதங்களில் ஒன்று. அம்மா என்ற பாத்திரத்துக்குள் நுழையும்போது தாய்மையாக, காதலன்/காதலி என்ற பாத்திரத்துக்குள் நுழையும்போது காதலாக, கணவன்/மனைவி என்ற பாத்திரத்துக்குள் நுழையும்போது காமமாக அந்தந்த பாத்திரத்துக்கேற்ப உருமாறும்.

முந்தைய தலைமுறை, முத்தத்துக்கான எல்லைகளை மிகச்சரியாக வகுத்திருந்தது. இன்றைய தலைமுறைக்கு இதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. வீட்டில் குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் பெற்றோர், இன்று அதிகரித்து வருகிறார்கள்.

முத்தம் கொடுப்போர் கவனிக்கவும்!

கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சரி, தவறு என்ற வாதத்துக்குள் போகும் முன்பு, இந்தச் செயல் குழந்தைகளின் மனத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும்.

“இந்திய கலாசாரத்தில் இதுபோன்ற விஷயங்கள் இன்னும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குழந்தைகள் மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்திருந்தால் இதுபோன்ற விஷயங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். மேலை நாடுகளிலேயே எந்த நடத்தை சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும், எது ஏற்றுக்கொள்ளப் படாது என்ற நன்னடத்தை விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முன்பாக சில விஷயங்களைச் செய்யக் கூடாது என்று மேலை நாட்டினருக்கும் தெரியும்.

இந்தியாவில் தொட்டுப்பேசுவதுகூட தவறு என்கிற ரீதியில்தான் பழக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய சூழலில், வீட்டில் பெற்றோர் முத்தமிட்டுக்கொள்வதைப் பார்க்கும் குழந்தை, சக நண்பர்களிடம் அதைப் பற்றி யதேச்சையாகப் பேசுவார்கள். அப்போது சக நண்பர்களின் பெற்றோர் இதுபோன்ற செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்று அறியும்போது மனத்தில் குழப்பங்கள் ஏற்படும். குழந்தையின் வயதைப் பொறுத்து அது ஒவ்வொருவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலுணர்வைத் தூண்டும்!

பதின்பருவக் குழந்தைகள் என்றால் அவர்களின் பாலுணர்வு தூண்டப்படலாம். சிறுவயதுக் குழந்தைகளுக்கு, ‘அப்பா, ஏதோ அம்மாவைக் கஷ்டப்படுத்துகிறாரோ?’ என்றுகூடத் தோன்றும். குழந்தையை விட்டுவிட்டு மனைவியை முத்தமிடும் போது, `நம்மை விரும்பாமல் அம்மாவை மட்டும்தான் அப்பா விரும்புகிறார்’ என்ற எண்ணம் தோன்றும். குறிப்பாக, ஒற்றைக் குழந்தை இருக்கும் வீட்டில், ‘நாம் ஒதுக்கப்பட்டுவிட்டோமோ' என்று கூட பெற்றோர்மீது கோபமோ, வெறுப்போ ஏற்படலாம்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த்.

முத்தம் கொடுப்போர் கவனிக்கவும்!

‘`குழந்தைகள் மனத்தில் ஏற்படும் தாக்கமானது தனிநபரை மட்டுமன்றி சமூகத்தையும் பாதிக்கும்’’ என்றும் எச்சரிக்கும் சித்ரா, “குழந்தைகளுக்கு பத்து வயதுக்கு முன்பே உடலில் பாலியல் தொடர்பான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். பெற்றோர் இதுபோன்ற செயல்களைச் செய்வதைப் பார்த்தால், தன்னுடன் விளையாடும் குழந்தையை முத்தமிட்டுப் பார்க்க வேண்டும் என்று அந்தக் குழந்தைக்குத் தோன்றும். இதுபோன்ற செயல்களில் தவறில்லை என்ற கருத்துடன் வளர்வார்கள். இதே குழந்தை சமூகத்துக்குள் நுழையும்போது நடத்தையில் சிக்கல்கள் ஏற்படும்.

அப்பா வேலைக்குக் கிளம்பும்போது, ‘போய் வருகிறேன்’ என்று குழந்தையையும் மனைவியையும் முத்தமிட்டுவிட்டுச் செல்வதை குழந்தைகள் இயல்பாக எடுத்துக்கொள்வார்கள். குழந்தைகளின் முன்னால் மனைவிக்கு மட்டும் முத்தம் கொடுப்பது, உதட்டு முத்தம் போன்ற செயல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை” என்கிறார்.

உதட்டு முத்தம் வேண்டாமே!

முத்தம் என்ற செயலே தவறானதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. அதை வெளிப்படுத்தும்விதம்தான் விளைவுகளைத் தீர்மானிக்கிறது. பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம், தன்னுடைய ஏழு வயது பெண் குழந்தையின் உதட்டில் முத்தமிட்ட புகைப்படம் இங்கிலாந்திலேயே பலரின் விமர்சனத்துக்குள்ளானது.

இதுபற்றி மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் கேட்டபோது, “குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் மேற்கத்திய கலாசாரம்... கார்ட்டூன்கள், சினிமா எனப் பல விஷயங்கள் மூலமாக இங்கும் வந்துவிட்டது.

`அம்மா அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா...’ என நமது கலாசாரத்திலேயே முத்தம் இருக்கிறது. அன்பின் வெளிப்பாடாக முத்தம் இருக்கும் போது அதைப் பற்றி விவாதிக்கவே வேண்டியதில்லை. முத்தம் அன்பை வெளிப்படுத்தலாம்; இச்சையையோ, காமத்தையோ வெளிப்படுத்தக் கூடாது.

பொதுவாக நெற்றியில் கொடுக்கும் முத்தம் புனிதமாகக் கருதப்படுகிறது. போப் பாண்டவர் கையில் முத்தமிடுவது மரியாதையைக் காட்டுகிறது. நெற்றியில் முத்தமிடுவது, `நான் உன்னை மதிக்கிறேன், உன்னை நேசிக்கிறேன்' என்ற உன்னத அன்பின் வெளிப்பாடு.

உதட்டில் முத்தமிடுவது என்பது பாலியல் உணர்வின் வெளிப்பாடு. குழந்தையின் வாயில் முத்தமிட்டுப் பழக்கும்போது, குழந்தை வேறு யாரிடம் சென்றாலும் முத்தமிடுவதற்கு உதட்டைத்தான் கொடுக்கும். உதடு என்பது மிகவும் மென்மையான பகுதி. வாய், உதட்டுப் பகுதியில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய நரம்புகளின் நுனிகள் நிறைய இருக்கின்றன. தேவையில்லாமல் அதைத் தூண்டக் கூடாது” என்று எச்சரிக்கிறார்.

முந்தைய தலைமுறை பெற்றோர் குழந்தைகள் முன்னர் தொட்டுப் பேசுவதைக்கூட பார்க்க முடியாது. அந்த அளவு குழந்தைகளின் முன்பாக விலகியும் இருக்க வேண்டாம். அதேநேரம், குழந்தைகள் முன்பாக முத்தமிட்டுக்கொள்ளும் அளவுக்கு வரம்பு மீறவும் வேண்டாம்.

‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்... முத்தம் காமத்தில் சேராது என்று’ - இயக்குநர் ராமின் அர்த்தமிக்க வரிகள் இவை.

குழந்தைகளின் உலகில் முத்தத்தைக் காமத்தில் சேர்க்காமல் இருப்போமே!

முத்தம் Vs சண்டை

‘முத்தமிடுவது விவாதப் பொருளாவது போன்று, குழந்தையின் எதிரில் பெற்றோர் சண்டையிட்டுக்கொள்வது அத்தனை பெரிய விவாதமாக நம் சமூகத்தில் மாறுவதில்லையே. இப்படி சண்டையிடுவது பிரச்னைகளுக்கு வழி வகுக்காதா?' என்ற கேள்வியை சித்ரா அரவிந்த், சுபா சார்லஸ் இருவரிடமும் வைத்தபோது...

முத்தம் கொடுப்போர் கவனிக்கவும்!

சித்ரா அரவிந்த்

“முத்தமிட்டுக்கொள்வதைப் போன்று குழந்தையின் முன்பு சண்டையிட்டுக்கொள்வதும் கெடுதல்தான். பெரும் பாலான பெற்றோர், குழந்தையின் முன்பு சண்டையிட விரும்புவ தில்லை. உணர்வுகளைத் தவிர்க்கமுடியாமல் சண்டை ஏற்பட்டுவிடுகிறது. சண்டையிடுவதைப் பார்க்கும் குழந்தைக்குத் திருமணத்தின் மீதான நம்பிக்கை குறையும். பல இளைஞர்கள் திருமணத்தை வெறுப்பதற்கு குழந்தைப் பருவத்தில் அவர்கள் எதிரில் பெற்றோர் போட்டுக்கொண்ட சண்டைதான் காரணமாக இருக்கிறது”.

முத்தம் கொடுப்போர் கவனிக்கவும்!

சுபா சார்லஸ்

“மனநோயோடு சிகிச்சைக்காக வருவோரில் பலருக்கு, சிறிய வயதில் பெற்றோர் இடையே ஏற்பட்ட பிரச்னைதான் அவர்களை பாதித்திருக்கும். ஏழு வயதுக்குக்கீழ் உள்ள குழந்தைக்கு அதைப் பார்க்கும்போது அந்தச் சண்டைக்குத் தான்தான் காரணம் என்ற எண்ணம் தோன்றிவிடும். இது அவர்களை மன அழுத்தம், பதற்றத்துக்கு ஆளாக்கும். கணவன், மனைவி சண்டையிட்டுக்கொள்வார்கள், பிறகு சேர்ந்துகொள்வார்கள் என்ற முதிர்ச்சி 17, 18 வயதுள்ள குழந்தைகளுக்குத்தான் இருக்கும். கணவன், மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம். ஆனால் ‘நீ சரியில்லை’ என்ற அர்த்தத்தில் சண்டையிடக் கூடாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு