Published:Updated:

“மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு

‘‘2009-ல இருந்து கனகராஜ் எனக்கு பழக்கம். அவர் போயஸ் கார்டன்ல டிரைவரான பிறகு அடிக்கடி போன்ல பேசுவோம். ஊருக்கு வந்தாலும் கனகராஜ் அதிகபட்சம் ரெண்டு நாளுக்கு மேல இருக்க மாட்டார்.

“மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

‘‘2009-ல இருந்து கனகராஜ் எனக்கு பழக்கம். அவர் போயஸ் கார்டன்ல டிரைவரான பிறகு அடிக்கடி போன்ல பேசுவோம். ஊருக்கு வந்தாலும் கனகராஜ் அதிகபட்சம் ரெண்டு நாளுக்கு மேல இருக்க மாட்டார்.

Published:Updated:
கொடநாடு
பிரீமியம் ஸ்டோரி
கொடநாடு

ஒரு கொலை, கொள்ளைச் சம்பவம்... அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு விபத்துகள், ஒரு தற்கொலை என கொடநாடு வழக்கில் இருக்கும் மர்ம முடிச்சுகள் ஏராளம். சம்பவம் நடந்தது என்னவோ கொடநாடு பங்களாவில்தான் என்றாலும் கேரளத்தின் வயநாடு, திருச்சூர், பாலக்காடு, தமிழகத்தின் கூடலூர், சேலம், ஆத்தூர் என்று அதற்கான நெட்வொர்க் பின்னிப் பிணைந்திருக்கின்றன. விலகாத மர்மங்களோடு நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த வழக்கின் மர்மங்களுக்கு விடைதேடிக் கிளம்பியது ஜூனியர் விகடனின் சிறப்புக் குழு!

“மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, பிறகு விபத்தில் பலியான கனகராஜின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், சமுத்திரம் அருகேயுள்ள சித்தரபாளையத்திலிருந்து விசாரணையைத் தொடங்கினோம். ‘‘கனகராஜ் உயிரிழந்த தகவல், சம்பவ இடத்திலிருந்த அவரின் உறவினர் ரமேஷ் மூலம் கனகராஜின் அண்ணன் தனபாலுக்குத்தான் முதலில் சொல்லப்பட்டது. தனபால் அந்தத் தகவலை அதே ஊரைச் சேர்ந்த ‘மைக் செட்’ கனகராஜ் என்பவரிடம்தான் முதலில் சொல்லியிருக்கிறார். உயிரிழந்த கனகராஜ், ‘மைக் செட்’ கனகராஜ் இருவரும் நண்பர்கள். ‘மைக்செட்’ கனகராஜ் உடனடியாக ‘எடப்பாடிக்கு விசுவாசி’ என்று சொல்லப்பட்ட எடப்பாடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷைத் தொடர்பு கொண்டிருக்கிறார்’’ என்ற தகவல்கள் கிடைத்தன. அத்துடன், ‘‘கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு ஆவணங்கள் கைமாறியது உட்பட ஆரம்பத்திலிருந்து நடந்த அனைத்தும் தெரியும். அதனால்தான் அவர் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியைக் குற்றம் சுமத்திவருகிறார்’’ என்றார்கள். இதையடுத்து தனபாலைச் சந்திக்கச் சென்றோம்...

எடப்பாடி பழனிசாமி - இளங்கோவன்
எடப்பாடி பழனிசாமி - இளங்கோவன்

“கனகராஜ் எங்க வீட்டுலதான் இருந்தான்!”

தனபாலின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டில் அவர் இல்லை... நீண்ட நேரம் காத்திருந்தும் அவர் வராததால், செல்போனில் தொடர்புகொண்டோம். ‘‘உள்ளாட்சி சீட் விவகாரத்துல எடப்பாடிக்கும் எனக்கும் மனஸ்தாபம் ஆகுறப்பகூட, என் தம்பி எடப்பாடி மேல பெருசா கோபப்படலை. இது மாதிரி பல விஷயங்களைவெச்சுத்தான் எடப்பாடிகூட கனகராஜ் தொடர்புல இருந்தான்னு சொல்றேன். கொள்ளைச் சம்பவத்துக்கும் விபத்துக்கும் இடைப்பட்ட நாலு நாள்ல ஒரே ஒரு நாள்தான் கனகராஜ் எங்க வீட்ல இருந்தான். விபத்து நடந்த மூணாவது நாளே ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபுவை மாத்தினதும் ஏன்னு தெரியலை. நண்பர்கள், ஒரே ஊர்க்காரர் என்ற அடிப்படையிலதான் ‘மைக் செட்’ கனகராஜ்கிட்ட தகவலைச் சொன்னேன்’’ என்றதுடன் முடித்துக்கொண்டார்.

‘மைக் செட்’ கனகராஜைச் சந்தித்து பேசியபோது, ‘‘2009-ல இருந்து கனகராஜ் எனக்கு பழக்கம். அவர் போயஸ் கார்டன்ல டிரைவரான பிறகு அடிக்கடி போன்ல பேசுவோம். ஊருக்கு வந்தாலும் கனகராஜ் அதிகபட்சம் ரெண்டு நாளுக்கு மேல இருக்க மாட்டார். விபத்து நடக்கறதுக்குp பத்து நாளுக்கு முன்னாடி நான் அவருக்கு போன் பண்ணினேன். போன் சுவிட்ச் ஆஃப்ல இருந்துச்சு. விபத்து நடந்த அன்னிக்கு நைட்டு எட்டு மணியளவுல தனபால் அண்ணன் எனக்குத் தகவல் சொன்னார். தகவலை உறுதிப்படுத்த எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார்கிட்ட பேசினேன். அதேசமயம், கனகராஜோட தனிப்பட்ட எந்த விஷயமும் எனக்குத் தெரியாது’’ என்றார்.

கனகராஜின் மற்றோர் அண்ணனான கண்டக்டர் பழனிவேல், ‘‘கொடநாடு கொள்ளைச் சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும் கனகராஜ் சிறுநீரகக்கல் பிரச்னை காரணமா சென்னை மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்தார். நான்கூட அவரைப் பார்த்துட்டு வந்தேன். விபத்து நடந்தன்னிக்குக்கூட கனகராஜைப் பார்த்துப் பேசிட்டுதான் நைட் டூட்டிக்குப் போனேன். நைட் டூட்டியில இருந்தப்பதான் எனக்குத் தகவல் வந்துச்சு. மத்தபடி எனக்கு எந்த விஷயமும் தெரியாது’’ என்றார்.

“மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

டீக்கடையில் மூன்று மணி நேரம்!

விபத்து நடந்ததாகச் சொல்லப்படும் ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள சந்தனகிரி பிரிவுப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘கனகராஜை இந்தப் பக்கம் அதிகம் பார்த்ததில்லை. ஆனா, சம்பவம் நடக்குறதுக்கு மூணு நாள் வரைக்கும் அவர் இங்கதான் அடிக்கடி சுத்திக்கிட்டிருந்தார். விபத்து நடந்த இடத்துக்குப் பக்கத்துல ஒரு டீக்கடை இருக்குது. சம்பவத்தன்னிக்கு பகல்ல மூணு மணி நேரம் கனகராஜ் அந்தக் கடையில்தான் டீ குடிச்சுக்கிட்டும், பேப்பர் படிச்சுக்கிட்டும் இருந்தார்” என்றார்கள்.

‘‘கொடநாட்டில் கொள்ளையடித்துவிட்டு சேலம் வந்த பிறகு, சயானை ஒரு டீக்கடையில் அமரவைத்துவிட்டு கனகராஜ் யாரிடமோ சென்று ஆவணங்களை ஒப்படைத்ததாக ஒரு தகவல் உண்டு. எனவே, ஆத்தூர் பகுதியிலும் கனகராஜ் யாருக்காகவோ காத்திருந்திருக்கிறார்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கனகராஜின் வீடு இருப்பது சேலம் மேற்குப் பகுதி. அதற்கு நேரெதிராக, கிழக்குப் பகுதியில் ஆத்தூர் உள்ளது. ஆத்தூருக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்தால், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிழலாக வலம்வந்த இளங்கோவனைக் கைகாட்டுகிறார்கள். ஆத்தூர் அருகேயுள்ள புத்தரகவுண்டன் பாளையத்தில்தான் இளங்கோவனின் வீடு இருக்கிறது.

தனபால் - மைக்செட் கனகராஜ்
தனபால் - மைக்செட் கனகராஜ்

அ.தி.மு.க-விலிருந்து விலகி சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்துள்ள ஆத்தூரைச் சேர்ந்த கர்ணனிடம் பேசினோம்... ‘‘எடப்பாடி முதல்வராக இருந்தபோது, சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத முதல்வராக இளங்கோவன் இருந்தார். முன்னாள் சாராய வியாபாரியான அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், இளங்கோவனுக்கு அடியாளாகச் செயல்படுபவர். இளங்கோவன் சொன்னால் அந்த நிர்வாகி என்ன வேண்டுமானாலும் செய்வார். சம்பவத்தன்று அந்த நிர்வாகி தரப்பினர் மூலம் கனகராஜிடம் பேசியதாகவும் ஒரு தகவல் உள்ளது. எனவே, அந்தத் தொடர்பை விசாரித்தால், உண்மைகள் தெரியவரும்’’ என்றார்.

கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தபோது சம்பவ இடத்தில் இருந்தவரும், அவருடைய உறவினருமான ஆத்தூரைச் சேர்ந்த ரமேஷ் நம்மிடம், ‘‘சம்பவம் நடந்த அன்னிக்கு சாயங்காலம் நாலு மணி இருக்கும். கனகராஜ் எனக்கு போன் பண்ணி, ‘எங்கடா இருக்கே?’னு கேட்டாரு. ‘நான் வெளிய இருக்கேன்’னு சொல்லவும், உடனே போனை கட் பண்ணிட்டாரு. அதுக்குப் பின்னாடி எங்க வீட்டுக்குப் போய், என்னோட பைக்கை எடுத்துட்டு வெளியே கிளம்பியிருக்காரு. அவர் எங்க வீட்டுக்கு வந்த விஷயமே எனக்குத் தெரியாது. நான் என்னோட மாமியார் வீட்டுக்குப் போயிட்டு ராத்திரி எட்டரை மணி வாக்குல வீட்டுக்கு வர்றப்ப, சந்தனகிரி பிரிவுல கூட்டமா இருந்துச்சு. எட்டிப் பார்த்தப்பதான் கனகராஜ் அடிபட்டுக் கிடந்தது தெரிஞ்சுது.

ஏ.எல்.சுரேஷ்
ஏ.எல்.சுரேஷ்

கனகராஜை ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டுப் போற வழியிலேயே அவர் காதுல இருந்து ரத்தம் வழிஞ்சுது. ஆம்புலன்ஸ்ல இருந்தவங்க செக் பண்ணிட்டு இறந்துட்டாருன்னு சொன்னாங்க. உடனே கனகராஜோட அண்ணன் தனபாலுக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட்டேன். ஆம்புலன்ஸ்ல கனகராஜை ஏத்துனப்ப, அவர் பாக்கெட்ல சாதாரண பட்டன் செல்போனும், 1,500 ரூபாய் பணமும்தான் இருந்துச்சு. அதை கனகராஜோட அண்ணன் பழனிவேல்கிட்ட கொடுத்துட்டேன். மத்தபடி கனகராஜுக்கு என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. சம்பவத்தன்னிக்கு கனகராஜ் எங்க வீட்டுல இருந்ததா சொல்றதுல துளிக்கூட உண்மையில்லை. அவர் எங்க வீட்டுக்கு அடிக்கடி வர்ற ஆளும் கிடையாது’’ என்றார்.

கனகராஜ் விபத்தை நேரில் பார்த்த சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் ராஜேந்திரன் என்பவரைச் சந்தித்தோம். ‘‘விபத்து நடந்ததுக்கு மறுநாள் போலீஸ்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் வந்து என்கிட்ட அட்ரஸ் வாங்கிட்டுப் போனாரு. அப்புறம்தான் சம்பந்தமே இல்லாம என்னை இந்த கேஸ்ல சேர்த்துருக்காங்கன்னு தெரிஞ்சுது. சம்பவம் நடந்த அன்னிக்கு நான் வயலுக்குத் தண்ணிகட்ட போயிருந்தேன். அப்படியொரு விபத்து நடந்ததே எனக்குத் தெரியாது. தெரியாத விஷயத்தைப் பார்த்ததா சொல்லுன்னு சொன்னா எப்படிங்க சொல்ல முடியும்?’’ என்றார் ஆதங்கத்துடன்!

ரமேஷ்
ரமேஷ்

“இளங்கோவனை விசாரிக்க வேண்டும்!”

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்து ஒதுங்கிய எடப்பாடியைச் சேர்ந்த ஏ.எல்.சுரேஷ் நம்மிடம், ‘‘உயிரிழந்த கனகராஜுக்கும் எடப்பாடி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமாருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை அமைச்சரா இருந்தபோதும், முதலமைச்சரான பிறகும் எடப்பாடி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரா இருந்தவர் சுரேஷ்குமார். இந்த சுரேஷ்குமாருக்கும் சேலம் இளங்கோவனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்குது. கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்னாடி வரைக்கும் அவர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாருடன் போனில் பேசினதா சொல்றாங்க. இளங்கோவனை விசாரிச்சா, நிறைய உண்மைகள் வெளிவரும்’’ என்றார்.

எடப்பாடி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்து தற்போது பென்னாகரத்தில் பணியாற்றிவரும் சுரேஷ்குமாரிடம் பேசினோம். “ஊரில் ஆயிரம் சொல்வார்கள். எல்லாவற்றுக்கும் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஆதாரங்கள் இருந்தால் கேளுங்கள்... பதில் சொல்கிறேன்’’ என்றார். எடப்பாடி பழனிசாமியின் நிழலாக வலம்வரும் சேலம் இளங்கோவனிடம் பேசியபோது, ‘‘நான் போன்ல எதுவும் பேச மாட்டேன். எதுவா இருந்தாலும் நேர்ல வாங்க பதில் சொல்றேன்’’ என்று போனை கட் செய்துவிட்டார். அதன் பிறகு நேரில் அவரைச் சந்திப்பதற்காக பலமுறை நாம் அழைத்தும், நம்மைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்.

போலீஸார் இந்த வழக்கில் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருக்கிறது என்பது மட்டும் புலப்படுகிறது!

*****

“மூன்று மணி நேரம் யாருக்காகக் காத்திருந்தார் கனகராஜ்?” - அதிரவைக்கும் கொடநாடு மர்மங்கள்...

‘‘கனகராஜ் பேப்பர்கள் எடுத்துச் சென்றதைப் பார்த்தேன்!’’ - அடித்துச் சொல்கிறார் ஜம்ஷீர் அலி

கொடநாடு சம்பவத்தில் போலீஸாரால் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் 11 நபர்களில், கனகராஜைத் தவிர மற்ற அனைவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். ‘தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த ஒருவர்கூட இந்தத் திட்டத்தில் இடம்‌பெற்றுவிடக் கூடாது’ என்ற மேலிடத்து கட்டளையின் அடிப்படையிலேயே இவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

‘‘ஊட்டியில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் வீட்டிலுள்ள பணப்பெட்டிகளை எடுத்து வேறொரு நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்” என்று ஒரே பதிலை குற்றம்சாட்டப்பட்டவர்கள் சொல்லிவந்தார்கள். ஆனால், தற்போதைய கூடுதல் விசாரணையில் ‘‘ஜெயலலிதா அறையில் இருந்த சில பேப்பர்களை கனகராஜ் எடுத்ததைப் பார்த்தேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ஜம்ஷீர் அலி (ஏ-4). அவரைத் தேடி கேரள மாநிலம், வயநாட்டுக்குப் பயணித்தோம். இதுவரை எந்த ஊடகத்திடமும் வாய் திறக்காத ஜம்ஷீர் அலி, முதன்முறையாக ஜூ.வி-க்காகப் பேசினார்.

‘‘ஊட்டிக்குப் போக வாடகை கார் ஒண்ணு வேணும்னு என்கிட்ட கேட்டாங்க‌. அப்படித்தான் இந்த விவகாரத்துக்குள்ள நான் வந்தேன். ஒரு வழக்கு தொடர்பா ஜெயில்ல இருந்தப்ப பழக்கமான தீபுங்கிறவர்தான் (ஏ-3) என்னை இதுக்குக் கூட்டிட்டுப் போனார். ஊட்டியில இருக்குற ஒரு எம்.எல்.ஏ வீட்டுல இருந்து பணப்பெட்டியை எடுத்து வேற ஒரு ஆளுக்கு மாத்தணும்னு சொன்னாங்க. அங்க போயிதான், அது ஜெயலலிதா அம்மாவோட பங்களான்னு தெரியும். பங்களாவுல இருக்குற பணப்பெட்டிய எடுக்குறதுதான் அசைன்மென்ட். டார்ச் வெளிச்சத்தைவெச்சே அந்த நாலு ரூம்லயும் பணப்பெட்டிகளைத் தேடிக்கிட்டிருந்தாங்க. கனகராஜ் மட்டும் சம்பந்தமே இல்லாத இடத்துல ஏதேதோ தேடிக்கிட்டு இருந்தார். அப்பதான் கனகராஜ் பேப்பர்களை எடுத்து ஒரு பையிலவெச்சதைப் பாத்தோம். உறுதியா சொல்றேன்... பணத்தை எடுக்கவோ, தங்கத்தை எடுக்கவோ அவங்க அங்க வரலை. கனகராஜ் எடுக்க வந்தது வேற ஒரு விஷயத்தை. அவர் தேடிவந்த அந்தப் பொருள் அவருக்குக் கெடைச்சுருக்சு. அதை யார்கிட்ட கொடுத்தாருங்கறதுதான் என் கேள்வி’’ என்றார்.