Published:Updated:

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

கலீம்
பிரீமியம் ஸ்டோரி
கலீம்

25 வருஷமா யானைப் பாகனா இருக்கேன். எங்க பரம்பரையே யானைப் பாகங்கதான். வெள்ளைக்காரன் காலத்துலயே இங்க யானை கேம்ப் இருந்துச்சு.

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

25 வருஷமா யானைப் பாகனா இருக்கேன். எங்க பரம்பரையே யானைப் பாகங்கதான். வெள்ளைக்காரன் காலத்துலயே இங்க யானை கேம்ப் இருந்துச்சு.

Published:Updated:
கலீம்
பிரீமியம் ஸ்டோரி
கலீம்

“பேரு கலீம். ஊரு ஆனைமலை புலிகள் காப்பகம். தில் இருந்தா ஒத்தைக்கு ஒத்தை வாடா’’ என்று ‘விஸ்வாசம்’ பட அஜித்போல, காட்டு யானைகளைத் தெறிக்க விடும் கலீம், கும்கி யானை. தனது அறிவாலும் செயலாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என்று தென்னிந்தியா முழுவதும் புகழ் பெற்றிருக்கிறது கலீம். இதுவரை 100-க்கும் மேற்பட்ட யானை ஆபரேஷன்களில் கலீம் களமிறங்கியுள்ளது. எல்லாவற்றிலும் வெற்றிதான். களத்தில் கலீம் மற்றும் அதன் பாகன் மணி உரையாடல்கள் சுவராஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.

பொள்ளாச்சி அருகே, ஊருக்குள் வந்த அரிசிராஜா என்ற காட்டு யானை பிடிக்கப்பட்டது. இளம் வயது யானையான அரிசிராஜா கலீமிடம் சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கலீமுக்கு லேசான காயமும் ஏற்பட்டுவிட்டது. கடுப்பான பாகன் மணி, ‘`டேய்... ஒண்ணும் தெரியாதவன் மாதிரி நடிக்காத. பிச்சுருவேன்’’ என்று கோபப்பட, அரிசிராஜாவைத் தனது தந்தத்தால் தூக்கி ஒரு மிரட்டு மிரட்டியது கலீம். பெட்டிப் பாம்பாய் அடங்கிய அரிசிராஜா லாரியில் ஏற்றப்பட்டது.

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

கலீம் மற்றும் பாகன் மணி அனுபவங்களைக் கேட்க, வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கிவிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்ஸ்லிப் அருகே உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமுக்குச் சென்றோம். இந்தக் கூட்டத்துக்கு ‘நான்தான் ராஜா’ என்பதுபோல தனித்துத் தெரிந்தது கலீம். கலீமுடன் முகாம் அருகே இருந்த நீரோடைக்கு வந்தார் மணி. தும்பிக்கையில் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து உற்சாகமாக விளையாடத் தொடங்கியது கலீம்.

‘`25 வருஷமா யானைப் பாகனா இருக்கேன். எங்க பரம்பரையே யானைப் பாகங்கதான். வெள்ளைக்காரன் காலத்துலயே இங்க யானை கேம்ப் இருந்துச்சு. இந்தியால டாப்ஸ்லிப் யானைக்காரங்களுக்குன்னு ஒரு பேர் இருக்கு. எல்லா இடத்துலயும் அங்குசத்தை வெச்சு அடிச்சு, மிரட்டிதான் யானைக்கு ட்ரெய்னிங் கொடுப்பாங்க. நாங்க கரும்பு ஊட்டி, பாசமா ட்ரெய்னிங் கொடுப்போம். அதனாலயே, இங்க ட்ரெய்ன் ஆகற யானைங்க எல்லா வேலையும் சிறப்பா பண்ணும். மேற்கு வங்கம், கேரளானு பல இடங்கள்ல யானைக்கு ட்ரெய்னிங் கொடுக்க நம்மள கூப்ட்ருக்காங்க.

1972-ல சத்தியமங்கலத்துல பிடிச்சப்ப கலீமுக்கு வயசு 6. என் மாமா பழனிசாமி அதுக்குப் பாகனா இருந்தார். அவருக்கு நான் அசிஸ்டென்ட். அவர் இறந்தப்பறம்தான், நான் பாகனானேன். மாமா இருந்தவரை கலீம் என்னைப் பக்கத்துலயே விடமாட்டான். அதனால கலீம் மேல எனக்கு பயம் இருந்துச்சு.

இப்பவே எங்க போனாலும் கலீமுக்கும் எனக்கும் ஒரு கெத்தான பேர் இருக்கு. அந்தக் காலத்துல கேக்கவா வேணும்? அப்ப இன்னும் செம கெத்தா இருப்பான். பாலக்காட்டுல ஒரு காட்டு யானைய விரட்டப் போனோம். அது சைஸ்ல கலீமைவிடப் பெருசு. ரெண்டு யானையும் நேருக்கு நேர் சண்டை பண்ணுது. நான் பயந்து மரத்துல ஏறிட்டேன். மாமா தைரியம் கொடுக்க, கலீம் அசராம நின்னுச்சு. கலீம் அடிச்ச அடில அந்த யானை 30 கி.மீ தூரத்துக்கு ஓடிப் போய்ருச்சு. அப்பதான் யானை -–பாகன் உறவு எந்த அளவுக்கு இருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன்.

எந்தச் சூழ்நிலையிலும் நம்ம பயத்தைக் காட்டவே கூடாது. நாம துளி பயந்தாலும், அதைப் புரிஞ்சுக்கிட்டு யானையும் பயந்துரும். பயப்படாம எதிர்த்து நின்னா, மீதிய கலீம் பார்த்துக்குவான். மத்த யானைங்ககிட்ட, மஸ்த் (மதம்) நேரத்துல கிட்ட போறதே ரிஸ்க்தான். ஆனா, கலீம் மஸ்த்துல இருந்தாலும், நான் அவன் மேல ஏறி உக்காந்தா என்ன வேலைன்னாலும் செய்யலாம்.

திருவண்ணாமலையில ரெண்டு நாள்ல ஆறு காட்டு யானைகளைப் பிடிச்சோம். அப்ப கலீம்கூட முதுமலைல இருந்து ரெண்டு கும்கி யானைங்க வந்துச்சு. ஆபரேஷன் காலை 5.30 மணிக்கு ஆரம்பிச்சுது. முதல் யானைய பிடிச்சோன, மற்ற 5 யானைங்க காட்டுக்குள்ள போய்டுச்சு. அதுங்க போன வழி தெரியல. கலீமோட மோப்ப சக்தி மூலமா யானைங்களைக் கண்டுபிடிச்சோம். அதுக்கே நைட் ஆகிடுச்சு. பயங்கரமான முள்ளுக்காடு. கைல ஒரே ஒரு டார்ச் தான் இருந்துச்சு. அதை என்கிட்ட கொடுத்துட்டாங்க.

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

அப்ப ஒரு காட்டு யானை, கலீம் கிட்ட சண்டை போட வந்துருச்சு. எல்லாரும் பயந்துட்டோம். 100 பேர் கலீம ஒட்டி நின்னுட்ருக்காங்க. நான் அவன் மேல உக்காந்துட்டிருந்தேன். காட்டு யானையை எங்க கிட்டயே விடாம, அடிச்சுத் துரத்தினான். அடுத்த நாள் மற்ற கும்கிங்க வர்ற வரைக்கும், அந்த யானையை கிட்ட விடாம எல்லாரையும் பாதுகாத்தான். நாம என்ன சொல்றமோ, அதை அப்படியே செய்வான்’’ என்று மணி பேசிக்கொண்டிருக்கும்போது அசைந்த கலீமை கரும்பு கொடுத்து அமைதிப்படுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தார் மணி.

“கேம்ப்ல மனுஷங்க யாரையுமே கிட்ட விடமாட்டான். ஆனா, வெளில போய்ட்டா எல்லாரையும் பத்திரமா பாதுகாப்பான். வேலைல ரொம்ப சின்சியரா இருப்பான். நாம யோசிக்காத வேலை எல்லாம் செஞ்சு நம்மளை ஆச்சரியப்படுத்து வான். என் மாமா இருந்தப்ப, ஒரு லோடு லாரிக்கு மரத்தைத் தூக்கற வேலை கலீமுக்குக் கொடுத்தார். நான், ‘எப்படி மாமா?’ன்னு கேட்டேன். ஆனா, கிட்டத்தட்ட கீழே விழுகற மாதிரி பெண்ட் ஆகி அதைத் தூக்கினான் கலீம். இப்படி எல்லா விஷயத்துலயும் கில்லியா இருக்கறதாலதான் கலீம், கும்கிகளோட கேப்டனா இருக்கான். வனத்துறைகிட்ட அதிக அவார்டு வாங்கின யானையும், பாகனும் நாங்கதான்.

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

மதுக்கரை மகாராஜ், ஆபரேஷன் மலைன்னு நிறைய ஆபரேஷன் பண்ணிருந்தாலும், நான் பயந்த ஒரு ஆபரேஷன் சின்னத்தம்பி. காரணம், அவன் கலீமைவிடப் பெரிய சைஸ். முதல் தடவை கோயம்புத்தூர்ல, சின்னத்தம்பிய பிடிக்க 4 கும்கி யானைங்க போச்சு. ஆனா, ரெண்டாவது தடவை உடுமலைப் பேட்டைல 2 கும்கி யானைங்கதான் இருந்துச்சு. கூட வந்த யானைக்கு அதுதான் முதல் ஆபரேஷன். அதனால, நாம தனியா எப்படின்னு யோசிச்சோம். வாழைத் தோட்டத்துல இருந்து சின்னத்தம்பி வர்றதைப் பார்த்தப்ப அது யானை மாதிரியே இல்ல. அவ்ளோ பெரிய உருவம். இருந்தாலும் பயத்த வெளிப்படுத்தாம எதிர்த்து நின்னோம். கடைசில சின்னத்தம்பி எங்ககிட்ட சரண்டர் ஆகிடுச்சு. அதை என்னால மறக்கவே முடியாது. முதுமலை சங்கர் ஆபரேஷனுக்கும் நாங்க போனோம். அங்க அவ்ளோ கும்கி யானைங்க இருந்தும் கலீமோட போய் ஆபரேஷன்ல கலந்துக்கிட்டது எங்களுக்குப் பெருமையா இருந்துச்சு.

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

கலீம் கரும்பு, மூங்கில் நல்லா விரும்பிச் சாப்பிடுவான். தண்ணிய பார்த்தா குழந்தையா மாறி விளையாட ஆரம்பிச்சிருவான். அவன செல்லமா ‘மொட்டுக் கண்ணா’ன்னு கூப்பிடுவேன். நான் இல்லாட்டி இவனும் சரியா சாப்பிட மாட்டான். அதனாலேயே, எங்க போனாலும் ஒரு நாளைக்கு மேல இருக்க மாட்டேன். இத கவர்மென்ட் யானையா எல்லாம் நான் பார்க்கல. எங்க சொந்த யானையா நினைச்சுதான் வளக்கறேன். என் பேரப்பசங்க, கலீமையும் ‘தாத்தா’ன்னுதான் கூப்பிவாங்க. எங்கயாச்சும் வெளிய போய்ட்டா, ‘கலீம் தாத்தா எங்க, தாத்தா சாப்பிட்டாரா?’ன்னு கேட்டு நச்சரிப்பாங்க. இவனைக் கொஞ்சுவாங்க. நான் வாங்கின வண்டிக்குக்கூட கலீம் பேரைத்தான் வெச்சிருக்கேன். இதுக்கு மாங்காய் ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்ல இருக்கற மாமரத்துல காய்க்கற மாங்காய் எல்லாமே இவனுக்குத்தான். வேற யாருக்கும் கொடுக்க மாட்டோம். எனக்கும், கலீமுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான். நண்பன் மாதிரிதான் பழகுவோம். நல்லா பேசிப்போம். அவனுக்கு எல்லாமே நல்லா புரியும். ஏதாவது கோபப்பட்டா அதைப் புரிஞ்சுக்கிட்டு மூஞ்சிய காமிப்பான். அப்பறம் கொஞ்சி சமாதானம் பண்ணுவேன். அவன் இல்லாம எதுவுமே இல்ல.

யானைங்களுக்கு அறிவும் பலமும் அதிகம். அதுங்களை பாசத்தாலதான் கன்ட்ரோல் பண்ண முடியும். நாம கோபப்பட்டு ஏதாவது தப்புப் பண்ணுனா, யானைங்க கோபப்பட்ரும். நம்ம கோபத்தை அதுங்க தாங்கும். அதுங்களோட கோபத்தை நம்மளால தாங்க முடியாது. நாம நடந்துக்கற விதத்துலதான் எல்லாமே இருக்கு. அதுக்கு நாம தொந்தரவு கொடுக்காம இருந்தாலே பிரச்னை இல்ல.

கலீம் வெறும் யானை மட்டுமல்ல...
கலீம் வெறும் யானை மட்டுமல்ல...

சின்ன வயசுல கலீம் உருளைக்கிழங்கு மாதிரி இருப்பான். இப்ப பாதி உடம்பு இல்ல. வயசாகிடுச்சுல்ல. நமக்கு வயசானா எப்படியோ, அப்படித்தான் யானைங்களுக்கும். வயசாகறப்ப கொஞ்சம் வேகம் குறையத்தான் செய்யும். ஆனா, இப்பவும், இவனை வெச்சுட்டு எந்த வேலைனாலும் செய்ய முடியும்னு நம்பிக்கை இருக்கு. கலீம் மாதிரி இன்னொரு யானைய உருவாக்கிக் கொடுத்துட்டுப் போகணும்னு ஆசையா இருக்கு. ஆனா, இதுக்கப்பறம் அப்படி ஒரு யானை வர்றது சந்தேகம்தான்!’’

கலீம் மீது ஏறி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்கிறார் மணி. கலீமின் பிளிறலில் அதிர்கிறது காடு.