Published:Updated:

ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?

கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா சிகிச்சை

“தற்போது தீவிரமாகத் தொற்றும் ஒமைக்ரான், சாதாரண சளி, இருமல் காய்ச்சலோடு மூன்று நாள்களில் குணமாகிவிடுகிறது. பலருக்கு அறிகுறிகளற்ற தாக்கமே ஏற்படுகிறது

ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?

“தற்போது தீவிரமாகத் தொற்றும் ஒமைக்ரான், சாதாரண சளி, இருமல் காய்ச்சலோடு மூன்று நாள்களில் குணமாகிவிடுகிறது. பலருக்கு அறிகுறிகளற்ற தாக்கமே ஏற்படுகிறது

Published:Updated:
கொரோனா சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா சிகிச்சை

கடந்த ஆண்டு இதே பிப்ரவரி 3-ம் தேதி, தமிழகத்தில் புதிய கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 514. இப்போது 40 மடங்கு அதிகம். ஆனாலும் தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளைத் திறந்திருக்கிறது. ஊரடங்கைப் பெருமளவு தளர்த்தியிருக்கிறது.

ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவிவரும் சூழலில் அரசு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே இந்தத் தளர்வுகளை அறிவித்திருக்கிறது என்று ஒரு பக்கம் குற்றச்சாட்டு கிளம்ப, மருத்துவர்களோ தமிழக அரசின் நடவடிக்கை மிகச்சரியானதுதான் என்கிறார்கள்.

கொரோனா இரண்டாவது அலை உச்சம் தொட்ட 2021 மே 12-ம் தேதி சென்னையில் மட்டும் 7,564 நோயாளிகளுக்குத் தொற்று ஏற்பட்டது. உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் பலர் இறந்தார்கள். இன்று இதே அளவுக்குத் தொற்றாளர்கள் இருந்தாலும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக இருக்கின்றன. ஆம்புலன்ஸ் சத்தமே நகரத்தில் இல்லை.

ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?
ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?

“தற்போது தீவிரமாகத் தொற்றும் ஒமைக்ரான், சாதாரண சளி, இருமல் காய்ச்சலோடு மூன்று நாள்களில் குணமாகிவிடுகிறது. பலருக்கு அறிகுறிகளற்ற தாக்கமே ஏற்படுகிறது. அதனால் இதற்குமேலும் நாம் முடங்கியிருப்பது சரியாக இருக்காது. நமது உடல், அந்த வைரஸை எதிர்கொள்ளப் பழகிவிட்டது. 90 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும் 67 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்லப்போனால் நாம் கொரோனாவின் தீவிரத்திலிருந்து தப்பிவிட்டோம். ஆயினும் தொற்று எண்ணிக்கை நான்கு இலக்கத்தில் இருக்கும்போது பள்ளிகள் திறக்கலாமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

உலகளாவிய ஆய்வுகள் எல்லாவற்றிலும் குழந்தைகள் கொரோனா இலக்காக இல்லை என்பதே முடிவாக வந்திருக்கிறது. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டபோதும்கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் பாதிக்கப்பட்டாலும் பெருமளவு எந்தப் பிரச்னையும் எழவில்லை. காற்றோட்டமான இடங்களில் கொரோனாத் தாக்கம் பெரிதாக இருக்காது. நம் பள்ளிக்கூடங்கள் இயற்கையாகவே காற்றோட்டமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் குழந்தைகளைத் தயக்கமின்றி பள்ளிக்கு அனுப்பலாம்...” என்கிறார், பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி.

ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?
ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?

“கொரோனாவை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டுவிட்டோம். பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு மருந்துகள் என ஒரு வைரஸை எதிர்கொள்ளத் தேவையான அத்தனை விஷயங்களிலும் நாம் பெருமளவு முன்னேறியிருக்கிறோம். மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு வந்திருக்கிறது. இரண்டாம் அலை காலத்து வைரஸோடு ஒப்பிடும்போது தற்போதைய மூன்றாம் அலையில் வைரஸின் தன்மை வெகுவாக வலுவிழந்துவிட்டது. இனி அது அச்சுறுத்தலாக இருக்கப்போவதில்லை என்று நம்பலாம். அதேநேரம் நம் எதிர்ப்பு சக்தியும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால்தான் ஒமைக்ரான், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள், இதற்குமுன் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் ஆகியோருக்கு மீண்டும் வந்தாலும் லேசான அறிகுறிகளுடன் குணமாகிவிடுகிறது.

தடுப்பூசி போடாதவர்களும், சர்க்கரை நோய் மற்றும் மற்ற வாழ்க்கை முறை நோய்களுடன் இருப்பவர்களும்தான் இப்போது ஐ.சி.யூ வரை செல்கிறார்கள். இதையெல்லாம் ஆய்வுசெய்தே இங்கிலாந்து போன்ற சில நாடுகள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட கொரோனாக் கட்டுப்பாடுகள் அனைத்தையுமே தளர்த்தியுள்ளன.

ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?
ஊரடங்கை நீக்கியது ஓகேதானா?

தடுப்பூசிகளை முறையாகச் செலுத்தியிருந்தாலும், அது உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கிறதே தவிர மற்ற பாதிப்புகளைத் தவிர்க்கவில்லை. வீட்டில் இருக்கும் முதியவர்களும் வாழ்க்கை முறை நோயாளிகளும் இன்னும் அபாயக் கட்டத்தில்தான் இருக்கிறார்கள். அதனால் எப்போதும்போல மாஸ்க் பயன்படுத்துவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, நோய் அறிகுறிகள் தோன்றினால் உடனடியாகத் தனிமைப்படுத்திக்கொள்வது, தேவைப்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது என அரசின் வழிகாட்டுதலைக் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும்” என்கிறார் மருத்துவரும் எழுத்தாளருமான சசித்ரா தாமோதரன்.

“தற்போது தொற்று எண்ணிக்கை இறங்கு முகத்தில் இருக்கிறது. மூன்றாவது அலை உச்சநிலையைத் தொட்டுக் கீழிறங்கும் சூழ்நிலையில் 90 சதவிகிதத்துக்கும் மேல் ஆக்சிஜன் படுக்கைகளும் ஐ.சி.யூ படுக்கைகளும் காலியாகவே இருக்கின்றன.

டெல்டா வைரஸ் மூலம் உருவான இரண்டாம் அலையையும் ஒமைக்ரான் மூலம் உருவாகியுள்ள மூன்றாம் அலையையும் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட பத்து மடங்கு குறைவான பாதிப்பையே நாம் தற்போது சந்தித்துவருகிறோம். எனவே பொருளாதாரத்திற்குப் பாதகம் விளைவிக்கும் ஊரடங்கு போன்ற விதிகள் தேவையில்லை எனும் முடிவு வரவேற்கத்தக்கதே. மேலும் இந்த மூன்றாம் அலை குழந்தைகளிடமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. குழந்தை களுக்கென்று பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவமனை படுக்கைகளில் பெரும்பான்மை காலியாகவே இருக்கின்றன. பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத் தாத மூன்றாம் அலையைக் காரணம் காட்டி இனியும் நேரடிக் கல்வியை நிறுத்தி வைப்பது சரியாகாது.

ஃபரூக் அப்துல்லா, குழந்தைசாமி, சசித்ரா தாமோதரன்
ஃபரூக் அப்துல்லா, குழந்தைசாமி, சசித்ரா தாமோதரன்

அதேநேரம் அறிகுறிகள் தோன்றினால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுகி கொரோனாவுக்கான பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் போட்டுக் கொள்ளவேண்டும். இன்னும் சிலகாலம் நம்மளவில் இதே வழிகாட்டுதலைப் பின்பற்றி நடந்தால் நிச்சயம் கொரோனா வைரஸை வென்றுவிடலாம்...” என்கிறார், மருத்துவரும் எழுத்தாளருமான ஃபரூக் அப்துல்லா.

பாதிப்புகளில் நாம் பாதிக்கிணறு தாண்டியிருக்கிறோம். இன்னும் மீதிக்கிணறு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism