அரசியல்
அலசல்
Published:Updated:

தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!

மழை வெள்ளம்
பிரீமியம் ஸ்டோரி
News
மழை வெள்ளம்

“எந்த ஆட்சி வந்தாலும் எங்க நிலைமை மாறப்போவதில்லை” என்கிற வருத்தத்தோடுதான் பேசுகிறார்கள் மதுரைவாசிகள். “நகரைக் கடந்து செல்லும் சாத்தையாறு, கிருதுமால் நதி கால்வாய்கள் புதர்மண்டி அடைபட்டுக் கிடக்கின்றன

சென்னையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் பணிகளின் உண்மை நிலவரம் குறித்து, 19.10.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் விரிவாக எழுதியிருந்தோம். கட்டுரைக்கு வரவேற்பு தெரிவித்து அலுவலகத்துக்கு வந்த கடிதங்களில், ‘மற்ற மாவட்டங்களையும் கொஞ்சம் கவனிங்க... பருவமழை வரப்போகுது. அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மெத்தனமா இருக்காங்க’ எனக் குறிப்பிட்டிருந்தார்கள் சில வாசகர்கள்.

இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்னென்ன, மழைநீர் வடிகால் பணிகளின் நிலவரம் என்ன என்பதையறிய, களமிறங்கியது நமது நிருபர் பட்டாளம். ‘தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பே கிடையாது’ என்பதுதான் நம் கள ஆய்வில் கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்!

தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!
தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!

தூர்வாராத ஏரிகள்... பலி வாங்கும் பள்ளங்கள்!

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் மாநகராட்சியிலேயே அடிப்படைக் கட்டமைப்புகள் அந்தரத்தில் இருக்கின்றன. முறையான சாலை வசதி, பாதாளச் சாக்கடை வசதி இல்லை. வரட்டாறு ஓடையிலிருந்து வெளியேறக்கூடிய நீர், அருகிலுள்ள குப்தா நகர் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகிறது. வெள்ளநீரை வெளியேற்ற வடிகால் அமைத்து, வாய்க்கால்களைத் தூர்வார அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சிக் கட்டுப்பாட்டில் வரக்கூடிய 13 ஏரிகளும் முறைப்படி தூர்வாரப்படாமல் இருப்பதால் மீண்டும் மழை பெய்தால், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

“எந்த ஆட்சி வந்தாலும் எங்க நிலைமை மாறப்போவதில்லை” என்கிற வருத்தத்தோடுதான் பேசுகிறார்கள் மதுரைவாசிகள். “நகரைக் கடந்து செல்லும் சாத்தையாறு, கிருதுமால் நதி கால்வாய்கள் புதர்மண்டி அடைபட்டுக் கிடக்கின்றன. தற்போது இருக்கும் மழைநீர் வடிகால்களில் எந்தப் பராமரிப்பும் இல்லை. இதனால், பெருமழைக் காலங்களில் மழைநீர், குடியிருப்புப் பகுதிக்குள் வந்துவிடுகிறது. கடந்த 20-ம் தேதி கூடல்நகர் சொக்கலிங்கநகரில், வேணுகோபால் என்பவர் மாநகராட்சியால் தோண்டப்பட்டிருந்த பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் விழுந்து மரணமடைந்தார். அவரை மீட்க வந்த ஆம்புலன்ஸும் வழியில் சகதியில் சிக்கி, வருவதற்கு தாமதமானதால் உரிய நேரத்தில் அவருக்குச் சிகிச்சையும் அளிக்க முடியவில்லை. மதுரையின் பல பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மக்களைத் தடுமாற வைத்திருக்கின்றன. பெருமழையை எதிர்கொள்வதற்கான எந்த முன்னேற்பாடும் இல்லை. வழக்கம்போல மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது” என்கிறார்கள்.

தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!
தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!

வீட்டுக்குள் விஷப்பூச்சி!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் பெருமழை பெய்யும்போதெல்லாம், நகருக்கு அருகேயுள்ள கோவிந்தாபுரம் ஏரி நிரம்பிவிடுகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் துரைசாமி வீதி, ஜார்ஜ்பேட்டை, திருவள்ளுவர் நகர், சர்ச் தெரு உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்துவிடுகிறது. மழைநீர் வடியாமலிருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. பெரிய கால்வாய்கள்கூட இதுவரை தூர்வாரப்படவில்லை.

ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் தற்போது கான்கிரீட் தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் பெரும்பள்ளம் ஓடையையொட்டி பெரியார் நகர்ப் பகுதியிலும், ஸ்டோனி பிரிட்ஜ் பகுதியின் ஒரு கரையிலும் மட்டுமே தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருக்கிறது.

தடுப்புச்சுவர் இல்லாத மற்றொரு கரையில் சின்ன மழை பெய்தால்கூட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். குமலன் குட்டைக்கும், பழைய பாளையத்துக்கும் மத்தியில் மழைக்காலத்தில் தண்ணீர் குளம்போலத் தேங்குவது வழக்கமாகிவிட்டது.

திருப்பூர் மாநகராட்சி தெற்கில் சங்கிலிப்பள்ளம் பகுதி, ஜம்மனை ஓடை, நொய்யல் ஆற்றங்கரையோரப் பகுதிகள், தெற்கு தோட்டம், தனலட்சுமி நகர் எனப் பல்வேறு பகுதிகளில் சிறிய மழைக்கே மழைநீர் தேங்கும் நிலை நீடிக்கிறது. மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் 1,134 கி.மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், மழைக்காலத்தில் மழைநீர் வெளியேறாததால், மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றுகிறார்கள் அதிகாரிகள். மழைநீர் வடிகால் கட்டமைப்பு சரியாக இல்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!
தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!

நீச்சல்குளமாகும் பஸ் ஸ்டாண்ட்

கோவை மாநகராட்சி எல்லைக்குள், லங்கா கார்னர், அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ்ப் பகுதி, கிக்கானி பள்ளி அருகேயுள்ள ரயில்வே பாலம், வடகோவை மேம்பாலம் பகுதிகளில் 2-4 அடிக்கு மழைநீர் தேங்குவது வழக்கமாகிவிட்டது. கடந்த ஆண்டு பெய்த மழையில், அவிநாசி சாலை பாலத்தின் கீழ் ஒரு கார் மழைநீரில் மிதந்து சென்றது. தற்போது ஆங்காங்கே சில பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. ஆனால், நிலைமை முற்றிலுமாகச் சீராகவில்லை. சமீபத்தில் பெய்த சிறு மழைக்கே, மழைநீர் தேங்கிய இடங்களில் போக்குவரத்தைத் தடை செய்து, நீரை மோட்டார் பம்ப்புகளில் வெளியேற்றினர்.

திருச்சியில் நிலைமை இன்னும் மோசம். மாநகரின் பிரதான இடமான மத்திய பேருந்து நிலையமே, அரை மணி நேர மழைக்கு நீச்சல் குளம்போல் ஆகிவிடுகிறது. சத்திரம் பேருந்து நிலையம், பெரியசாமி டவர்ஸ் பகுதி, தில்லைநகர் சாலைகள், காந்தி மார்க்கெட், பரபரப்பான என்.எஸ்.பி சாலை, உறையூர் கடைவீதிப் பகுதிகள், சீனிவாச நகர் விஸ்தரிப்பு பகுதிகள் என மாநகரின் முக்கியப் பகுதிகள் அனைத்தும் சில செ.மீ மழைக்கே பல்லிளிக்கின்றன. இதைச் சரிசெய்ய இதுவரை எந்த நடவடிக்கையையும் மாநகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை. சமீபத்திய மாநகராட்சி பட்ஜெட்டில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிக்காக, 10 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பணிகளெல்லாம் மழைக்காலத்துக்குப் பிறகுதான் தொடங்கவிருப்பதாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!
தொடங்கியது பருவமழை... தாங்குமா தமிழ்நாடு!

ஆய்வுசெய்த முதல்வர்... அந்தரத்தில் பணிகள்!

கடந்த ஆண்டு தூத்துக்குடியில் பெய்த கனமழையில், பிரையண்ட் நகர், சிதம்பரநகர் அம்பேத்கர்நகர், ரஹ்மத்நகர் உள்ளிட்ட பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் அப்போது ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால், இப்போது வரை 40% பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. மீதி அந்தரத்தில் நிற்கின்றன.

வழக்கமாக மழைநீர் தேங்கி நிற்கும், நகரின் முக்கியமான ஆறு இடங்களில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

‘எவ்வளவு மழை பெய்தாலும் சரி, ராட்சத மோட்டார்களை வைத்து மழைநீரை பக்கிள் ஓடையில் திருப்பிவிடலாம்’ என நினைக்கிறார்கள் அதிகாரிகள். மாநகராட்சியின் 60 வார்டுகளில் 55 வார்டுகளின் கழிவுநீர், பக்கிள் ஓடை வழியாகத்தான் கடலில் கலக்கிறது. ஆனால், அதை ஆக்கிரமித் திருக்கும் வெங்காயத் தாமரைச்செடிகளை அப்புறப்படுத்தக்கூட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பருவமழைக்குத் தாங்குமா தமிழகம்?

மழை பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ளும் மலை மாவட்டமான நீலகிரியில், 281 இடங்கள் பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள பகுதிகள் மழைநீர் தேங்கும் ஆபத்து நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்றளவும் முறையான மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படவில்லை.

நாம் நேரில் விசாரித்து, பார்த்தவரை, பல மாவட்டங்களிலுள்ள கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களாகவே இருக்கின்றன. அதிலும், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டம்’ என்ற பெயரில் ஏற்கெனவே இருந்த கட்டமைப்புகளை உடைத்துவிட்டு, புதிதாகக் கால்வாய்ப் பணிகள் செய்திருக்கிறார்கள். ஆனால், இணைப்பு வழங்கப்படாததால் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து சாலைக்கு வருகிறது. குடிநீர், கழிவுநீர், மழைநீர் வடிகால் எனப் பல பகுதிகளிலும் சகட்டுமேனிக்குப் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளங்களைச் சுற்றி எந்தப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யவில்லை.

சமீபத்தில், தனியார் தொலைக்காட்சி நிருபரான முத்துகிருஷ்ணன் என்ற இளைஞர், மழைநீர் வடிகாலுக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இறந்தார். அதற்குப் பிறகும்கூட, அரசு ஆக்கபூர்வமாகத் தமிழகமெங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது. வடகிழக்குப் பருவமழையே தொடங்கிவிட்டது. ஆனால் அதை எதிர்கொள்வதற்கு, தமிழகம் தயாராக இல்லை என்பதையே கள நிலவரம் உணர்த்துகிறது.