Published:Updated:

உருக்குலையும் நீலகிரி... காற்றில் பறக்கும் கட்டுமான தடைச் சட்டம்!

நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

இங்கு வணிக நோக்கத்திலான குடியிருப்புகளைக் கட்டுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பல துறைகளிலும்‌ அனுமதி வாங்க வேண்டும்.

உருக்குலையும் நீலகிரி... காற்றில் பறக்கும் கட்டுமான தடைச் சட்டம்!

இங்கு வணிக நோக்கத்திலான குடியிருப்புகளைக் கட்டுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பல துறைகளிலும்‌ அனுமதி வாங்க வேண்டும்.

Published:Updated:
நீலகிரி
பிரீமியம் ஸ்டோரி
நீலகிரி

ஒருபுறம் முதல்வர், துணைக் குடியரசுத் தலைவர் என்று வி.வி.ஐ.பி-க்களை ஈர்க்கிற அதே நீலகிரி மாவட்டம், இன்னொருபுறம் ஆட்சியதிகாரத்தின் பார்வை படாததால் தனது சிறப்புமிக்க காட்டை இழந்துவருகிறது.

முதுமலை புலிகள் காப்பகம், தேசியப் பூங்கா, வனக்கோட்டங்கள், வகை வகையான உயிரினங்கள், முக்கிய ஆறுகளின் ஊற்றுக்கண் எனச் செழித்துக்கிடக்கும் நீலகிரியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்க பல்வேறு வகையான கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் நடைமுறையில் இருக்கின்றன. நீதிமன்றங்களும் அவ்வப்போது தாமாகவே முன்வந்து இயற்கையைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன. ஆனால், அதிகரித்துவரும் விதிமீறல் கட்டுமானங்கள் ஒட்டுமொத்தக் காட்டையுமே அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன.

உருக்குலையும் நீலகிரி... காற்றில் பறக்கும் கட்டுமான தடைச் சட்டம்!

குறிப்பாக, கடந்த ஓராண்டாக நீலகிரியில் ஏராளமான காட்டேஜ் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதோடு, பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த விதிமீறல் காட்டேஜ் கட்டுமானத் திட்டங்களுக்கும் இப்போது சுலபமாக அனுமதி கிடைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய நேர்மையான வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், “இங்கு வணிக நோக்கத்திலான குடியிருப்புகளைக் கட்டுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பல துறைகளிலும்‌ அனுமதி வாங்க வேண்டும். ஆனால், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பணத்தை வாங்கிக்கொண்டு அனுமதிக் கையெழுத்து போட்டுவிடுகிறார்கள். இப்படிக் கட்டுமான அனுமதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் புழங்குவதைக் கண்ட முந்தைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப முறையைக் கொண்டுவந்தார். இதன்படி கட்டுமானப் பணிக்கு அனுமதி கேட்டுவரும் விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகமே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கும். 7 மீட்டர் உயரத்துக்கு உட்பட்டும் 1,500 சதுர அடி பரப்புக்குள்ளும் இருக்கும் கட்டடங்களுக்கு மட்டுமே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்க முடியும். இதனால், கடந்த பல ஆண்டுகளாக காட்டேஜ் கும்பல்களின் லாபி பலிக்கவில்லை. ஆனால், கடந்த ஓராண்டாக எல்லாக் கட்டுப்பாடுகளும் தகர்ந்துவிட்டன. பெரும் பணம் படைத்த காட்டேஜ் கும்பல்கள் உள்ளாட்சி அமைப்பையும் உள்ளூர் அரசியல்வாதிகளையும் விலைக்கு வாங்கிவிடுகின்றனர். அளவீடு வரைபடங்களில் முறைகேடு செய்து, பிரமாண்ட கட்டுமானங்களை எழுப்பிவருகின்றனர்” என்றார் ஆதங்கத்துடன்.

உருக்குலையும் நீலகிரி... காற்றில் பறக்கும் கட்டுமான தடைச் சட்டம்!
உருக்குலையும் நீலகிரி... காற்றில் பறக்கும் கட்டுமான தடைச் சட்டம்!

விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலரும், சுயேச்சை கவுன்சிலருமான மனோகரன், “நீலகிரியில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளாக 283 இடங்கள் அரசால் கண்டறியப்பட்டு, வளர்ச்சிப் பணிகள் செய்யக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. ஆனால், இப்படி அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் தற்போது காட்டேஜ் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்கு உடந்தையாக அரசியல்வாதிகள், உள்ளாட்சி மன்றங்களின் தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். இதனால், நீலகிரியின் இயற்கை வளம் அழிக்கப்பட்டுவருகிறது. கடுமையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்காவிட்டால், அழிவை யாராலும் தடுக்க முடியாது” என்றார் குமுறலாக.

தேயிலைத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு, ஆடம்பர தங்கும் விடுதிகளாக மாறிவரும் கொடுமையை நம்மிடம் பகிர்ந்த படுக தேச கட்சியின் நிறுவனத் தலைவர் மஞ்சை மோகன், “கடந்த ஓராண்டில் மட்டும் 4,000 ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் தனியார் காட்டேஜ் வசம் போயிருக்கின்றன. இதனால் சுமார் 15,000 குடும்பங்கள் தோட்டத்தை விற்றுவிட்டு சமவெளிப் பகுதிக்கு பிழைப்பு தேடிப் போய்விட்டன. அரை ஏக்கர், ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டம் வைத்திருக்கும் அப்பாவி விவசாயிகளிடம் பணத்தாசை காட்டி, பூர்வீகச் சொத்தை காட்டேஜ்காரர்கள் வாங்கிக்கொள்கிறார்கள். சுற்றிலும் வேலிகளையும் தடுப்புச்சுவர்களையும் எழுப்பி, பக்கத்துத் தோட்டத்துக்கு விவசாயிகள் செல்ல முடியாதபடி மறிக்கிறார்கள். வேறு வழியின்றி இருக்கும் மிச்சம் மீதி நிலத்தையும் விற்றுவிட்டு, நீலகிரி மக்கள் வெளியேறுகிறார்கள். ஒரு கட்டுமானத்தைக் கட்ட மூன்று துறைகளிடம் முறையான அனுமதி வாங்க வேண்டும். எனவே, அப்பாவி மக்கள் வீட்டுக் கூரையை மாற்றக்கூட அனுமதி கிடைக்காமல் போராடுகிறார்கள். ஆனால், வசதி படைத்த காட்டேஜ் உரிமையாளர்கள் எல்லோரையும் எளிதாக விலை கொடுத்து வாங்கிவிடுகிறார்கள். கட்டுமானத் தடைச் சட்டங்கள் காற்றில் பறக்கின்றன” என்றார் வேதனையுடன்.

இந்தப் புகார்களை நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் போஸ்லேயின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். “இது போன்ற அனுமதிகளை நாங்கள் வழங்கவேயில்லை. சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

மனோகரன், மஞ்சை மோகன், சச்சின் துக்காராம் போஸ்லே, அம்ரித்
மனோகரன், மஞ்சை மோகன், சச்சின் துக்காராம் போஸ்லே, அம்ரித்

இந்த விதிமீறல்கள் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஐ.ஏ.எஸ்., “குடியிருப்புகளைக் கட்டுவதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறோம். வணிக நோக்கில் கட்டப்படும் காட்டேஜ்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. அதிகரட்டி, ஜெகதளா போன்ற பேரூராட்சிகளிலிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முடித்துக்கொண்டார்.

கடமையைச் செய்யாத அதிகாரிகளை தண்டித்தாலே, பாதிக் காட்டைக் காப்பாற்றிவிட முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism