Published:Updated:

கவுன்சிலர் தேர்தலில் நித்தியானந்தா? - ஆப்பிரிக்கா டு ஐரோப்பா ‘சடுகுடு’

நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

“சிறுநீரகப் பிரச்னையில் இருக்கும் நித்தியானந்தாவுக்கு மொரீஷியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால், உடலில் பெரிய முன்னேற்றமில்லை.

கவுன்சிலர் தேர்தலில் நித்தியானந்தா? - ஆப்பிரிக்கா டு ஐரோப்பா ‘சடுகுடு’

“சிறுநீரகப் பிரச்னையில் இருக்கும் நித்தியானந்தாவுக்கு மொரீஷியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால், உடலில் பெரிய முன்னேற்றமில்லை.

Published:Updated:
நித்தியானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்தியானந்தா

பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக மாயமாகிவரும் நிலையில், ‘நித்தியானந்தா ஆசிரமத்தில் காணாமல்போன என் மகளைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்...’ என்று திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் நாகேஷ் என்பவர் கொடுத்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்தப் பரபரப்புகளையெல்லாம் தூக்கித் தூர எறிந்துவிட்டு, ஐரோப்பிய - ஆப்பிரிக்க நாடுகளுடன் நித்தியானந்தா புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுவருவதுதான் ‘ஷாக்’ ரகம்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த நாகேஷ், 2017-ம் ஆண்டு தன் குடும்பத்துடன் பிடதி நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்ந்திருக்கிறார். அடுத்த இரண்டு வருடங்களிலேயே, சில மனக்கசப்புகளால் பிடதியிலிருந்து நாகேஷ் குடும்பத்தினர் வெளியேறியபோது, நாகேஷின் இளைய மகள் வர்ஷினி மட்டும் ஆசிரமத்திலேயே தங்கியிருந்திருக்கிறார். அவ்வப்போது மகளை நேரில் சென்று பார்த்துவந்த நாகேஷுக்கு, சமீப மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ‘வர்ஷினியுடன் வீடியோ காலில் பேசுங்கள். அவர் எங்கே இருக்கிறார் என்பதைச் சொல்ல முடியாது’ என பிடதி ஆசிரம நிர்வாகிகள் நாகேஷிடம் கெடுபிடி காட்டியிருக்கிறார்கள். வீடியோ காலில் மகளுடன் பேசிய நாகேஷ், ஆசிரமத்திலிருந்து வெளியேறும்படி கூறியதை, மகள் வர்ஷினி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சியடைந்த நாகேஷ், தன் மகளை மீட்டுத் தரும்படி கர்நாடகா காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். இந்தச் சூழலில்தான், பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தங்கியிருப்பவர்களுக்குச் சரியாக உணவு, மருத்துவம் அளிக்க முடியாமல் ஆசிரம நிர்வாகிகள் திண்டாடியிருக்கிறார்கள்.

கடந்த மே மாதம், பிடதியிலிருந்து திருவண்ணாமலை ஆசிரமத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இடம் மாற்றப்பட்டனர். இந்தத் தகவல் தெரிந்ததும் திருவண்ணாமலைக்குக் குடும்பத்துடன் வந்த நாகேஷ், தமிழ்நாடு காவல்துறை உதவியுடன் ஆசிரமத்தில் சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தும், மகள் வர்ஷினியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது, ‘வர்ஷினி இந்தியாவில்தான் இருக்கிறாரா அல்லது வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டாரா?’ என்கிற கேள்வியை அவரது உறவினர்கள் எழுப்புகின்றனர். வர்ஷினி தொடர்பாக மட்டுமே, போலீஸில் இரண்டு புகார்கள் பதிவாகியிருப்பதால், நித்தியானந்தாவுக்குச் சிக்கல் இறுகியிருக்கிறது. தன் உடல்நிலையைக் காரணம் காட்டி இந்தியாவுக்குத் திரும்ப முயன்ற நித்தியானந்தாவின் முயற்சியில் தடைக்கற்கள் விழுந்திருக்கின்றன. ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதில் தீவிரமாக இருக்கிறாராம் நித்தியானந்தா.

கவுன்சிலர் தேர்தலில் நித்தியானந்தா? - ஆப்பிரிக்கா டு ஐரோப்பா ‘சடுகுடு’

இது குறித்து நம்மிடம் பேசிய நித்தியானந்தாவின் தீவிர ஆதரவாளர்கள் சிலர், “சிறுநீரகப் பிரச்னையில் இருக்கும் நித்தியானந்தாவுக்கு மொரீஷியஸ் டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால், உடலில் பெரிய முன்னேற்றமில்லை. தவிர, தோல் சம்பந்தமான வியாதியும் அவரைத் தொற்றிக்கொண்டது. எனவே, கோவைக்கு அழைத்து வந்து மருத்துவம் பார்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ‘சரண்டர் பெயில்’ பெற்று அவரை இந்தியா கொண்டுவரவும் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தோம். ஆனால், தமிழ்நாடு, கர்நாடகாவிலுள்ள சாமியார்கள் சிலர் அதற்குத் தடையாக இருக்கின்றனர். இந்தச் சூழலில்தான், ஆப்பிரிக்க நாடான கானாவுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் நித்தியானந்தா. முதற்கட்டமாக, அந்த நாட்டின் எஃபுட்டு (Effutu) நகராட்சியுடன் கைலாசா நாடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. கலாசாரம், மொழி, கல்வி, மருத்துவம் சார்ந்த துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில், ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. பல துறைகளில் அறிவுசார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஸ்லோவேனியாவிலுள்ள பிரான் (Piran) நகராட்சியுடனும் ஒப்பந்தம் போட்டிருக்கிறது கைலாசா. ஐரோப்பிய யூனியனிலும், நேட்டோ அமைப்பிலும் உறுப்பினராக இருக்கும் ஸ்லோவேனியாவுடன் போடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இவ்விரு நாடுகளுமே ‘இரட்டைக் குடியுரிமை’யை அங்கீகரிக்கக்கூடியவை. இதைப் பயன்படுத்தி, கைலாசா நாட்டின் பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு, கானா, ஸ்லோவேனியா நாட்டின் குடியுரிமையை வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் குடியுரிமையை வாங்கிவிட்டால், அந்தந்த நாடுகளின் தேர்தல்களில்கூட கைலாசாவாசிகள் போட்டியிட முடியும். தவிர, ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியனில் அங்கம்பெற்றுள்ள நாடுகளிலும் சுதந்திரமாக வலம்வர முடியும். சர்வதேச அளவில் கைலாசாவை அங்கீகரிப்பதற்கு ஆட்சி அதிகாரம் முக்கியமென்பதை உணர்ந்திருக்கும் நித்தியானந்தா, முதற்கட்டமாக கானாவின் எஃபுட்டு, ஸ்லோவேனியாவின் பிரான் நகராட்சி சபைகளுக்கான கவுன்சிலர் தேர்தலில், தன் ஆதரவாளர்களைக் களமிறக்க முடிவுசெய்திருக்கிறார். அதற்கான முதற்படிதான் இந்த ஒப்பந்தம்” என்றனர் விரிவாக.

ஒருபக்கம், நித்தியானந்தாவின் மீது ஆள் கடத்தல் புகார் பதிவாகிறது. மற்றொருபுறம், தன் நாட்டைச் சர்வதேச அளவில் அங்கீகரிப்பதற்கான வேலைகளில் சடுகுடு ஆடுகிறார் நித்தியானந்தா. கண்காணாத இடத்தில் ஒளிந்துகொண்டு, இந்திய காவல்துறைக்கே சவால்விடுகிறார் நித்தியானந்தா. நாட்டின் அரசியலையே உருட்டிக் கலக்கும் பா.ஜ.க., நித்தியானந்தா விவகாரத்தில் அடக்கிவாசிக்கும் ரகசியம்தான் யாருக்கும் புரியவில்லை. ரகசியம் விரைவில் உடையுமா?