Published:Updated:

அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...

நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா

நான் உருவாக்கிய நவபாஷாண ஆதிலிங்கத்தின் தீர்த்தம்தான் கொரோனாவுக்கான மருந்து’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்

அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...

நான் உருவாக்கிய நவபாஷாண ஆதிலிங்கத்தின் தீர்த்தம்தான் கொரோனாவுக்கான மருந்து’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்

Published:Updated:
நித்யானந்தா
பிரீமியம் ஸ்டோரி
நித்யானந்தா
“கொரோனா பேரிடர் வரும் என்பது எனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அதற்காகவே நவபாஷாணத்தினால் ஆன ஆதிலிங்கத்தை நான் இந்தியாவில் பிரதிஷ்டை செய்தேன். அந்த லிங்கத்தை தரிசித்து, அந்தத் தீர்த்தத்தை அருந்தும் மக்களுக்கு கொரோனா வரவே வராது. இந்திய நாட்டுக்காக அந்த லிங்கத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்கிறேன்” என்று சமீபத்தில் பலே ஸ்டேட்மென்ட் கொடுத்து, தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் நித்யானந்தா. கொரோனா பரவல் உச்சத்தை நெருங்கிவரும் சூழலில், நித்தி இதுபோல பல தவறான நம்பிக்கைகளை பக்தர்களிடம் விதைத்துவருகிறார். இப்படியான நித்தியின் ‘போதனையால்’ ஓர் உயிர்ப்பலியும் நிகழ்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கும் நித்தியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் கொரோனா ரகம்!
அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...

மீண்டும் நித்தி

இந்தியாவில் பல்வேறு வழக்குகள் காலைச் சுற்றியதால், இங்கிருந்து வெளியேறிய நித்யானந்தா, தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவு ஒன்றில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்தபடியே தினமும் யூடியூப், ஃபேஸ்புக் வாயிலாகத் தன் பக்தர்களுக்கு ‘அருள்பாலிப்பதை’ வழக்கமாக்கியிருக்கிறார். கைலாசா, தனி கரன்சி, தனி பாஸ்போர்ட் என ‘பகீர்’ அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வந்தார். கடந்த இரண்டாண்டுக் காலமாக, இணைய வழியாகவே ஒரு நாட்டின் அதிபராகத் தன்னைக் கூறிக்கொண்டு வீடியோ வெளியிட்டுவரும் நித்தியைப் பிடிக்க மத்திய அரசும் ஏனோ பெரிதாக ஆர்வம்காட்டவில்லை.

ஆன்மிகச் சொற்பொழிவுகளை மட்டும் வெளியிட்டுவந்த நித்தி, சமீபத்தில் ‘வெளிநாட்டினர் கைலாசா வருகை தர தற்காலிகத் தடை’ எனத் தன் இணையதளத்தில் அறிவிப்பு வெளியிட்டது பரபரப்பானது. இப்போது, ‘நான் உருவாக்கிய நவபாஷாண ஆதிலிங்கத்தின் தீர்த்தம்தான் கொரோனாவுக்கான மருந்து’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார். சரி, இவர் சொல்லும் ஆதிலிங்கம் எங்கிருக்கிறது என அறிந்துகொள்ள, முன்பு நித்யானந்தாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரித்தோம்...

“நித்தியானந்தா ஆசிரமத்தின் தலைமையிடமாக இருந்த கர்நாடகா மாநிலம் ‘பிடதி’ ஆசிரமத்தில்தான் அந்த ஆதிலிங்கம் அமைக்கப்பட்டது. ஆனால், அவர் சொல்வதுபோல அது நவபாஷாணத்தால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. தன்னைப் பற்றி மக்கள் பேச வேண்டும், தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார் நித்யானந்தா. எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு அதில் விளம்பரம் தேடிவிடுவார். இப்போது, கொரோனா பெரும் பிரச்னையாக இருப்பதால், மக்களெல்லாம் தன்னை நோக்கி வர வேண்டும் என்பதற்காக கொரோனாவுக்கு மருந்து அந்த லிங்கத்தின் தீர்த்தத்தில் இருக்கிறது என்ற தவறான கருத்தைச் சொல்கிறார். பலரும் அந்த லிங்கத்தை தரிசனம் செய்ய ஆசிரமத்துக்கு வருவார்கள், மீண்டும் இதைவைத்து ஒரு ரவுண்டு வரலாம் என்பதே அவர் திட்டம்” என்கிறார்கள் அவர்கள்.

அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...

கொரோனா லிங்கம்... நித்தியின் பக்தர் மரணம்!

கொரோனாவுக்குத் தீர்வு என பிடதியில் தங்கியிருக்கும் பக்தர்கள் அனைவரையும் ஸ்படிக லிங்கத்தைவைத்து முதலில் பூஜை செய்யச் சொல்லியிருக்கிறார் நித்தி. அதோடு, தினமும் நவபாஷாண ஆதிலிங்கத்தின் தீர்த்தத்தைக் குடித்துவந்தால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் எனவும் கூறியிருக்கிறார். நித்திக்கு ஆல் இன் ஆளாக இருந்துவரும் ஞானாத்மா என்ற பெண்மணியின் தந்தை கைலாஷ், சென்னையில் வசித்துவந்தார். வீட்டிலேயே நித்தியின் சிலையை வைத்து வழிபடும் அளவுக்குத் தீவிர பக்தர் அவர். பிடதியிலிருந்து நித்தியால் அவருக்கு வழங்கப்பட்ட லிங்கம் ஒன்றைவைத்து தினமும் பூஜை செய்துவந்திருக்கிறார். ‘இந்த பூஜையால் கொரோனாவை விரட்டலாம்’ என்ற நித்தியின் பேச்சை நம்பி, கொரோனா தொற்று ஏற்பட்டும், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், லிங்க பூஜை மட்டும் செய்துவந்திருக்கிறார். ஒருகட்டத்தில், தொற்று தீவிரமாகி மரணமடைந்திருக்கிறார்.

கைலாஷ் மரணத்துக்கு அஞ்சலியாக, ‘அவர் என்னுடன் கைலாசாவில் இருக்க ஆசைப்பட்டார். அவருக்கு மோட்சத்தை வழங்கி என் பக்கத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று பக்தர்களுடனான வீடியோ சந்திப்பில் நித்தி சொல்ல, ‘நித்யானந்தம்... நித்யானந்தம்...’ என்று எல்லோரும் பரவசமாகியிருக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், நித்தி சிஷ்யர்களின் குடும்பத்தினர் பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். பிடதி ஆசிரமத்தில் தற்போது வசித்துவரும் பிராணாசாமி என்பவரின் தாய், கொரோனா தொற்றால் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். தன் ஒரே மகனைக் காண வேண்டும் என்று அந்தக் குடும்பமே பிடதி ஆசிரம நிர்வாகிகளிடம் மன்றாடியுள்ளது. ஆனால், பிராணாசாமியைத் தொடர்புகொள்ள முடியாது என்று பிடதியிலிருந்து பதில் வந்ததால், நொறுங்கிப்போயிருக்கிறது அந்தக் குடும்பம்.

பிடதியில் நீடிக்கும் மர்மம்

நித்யானந்தா பிடதி ஆசிரமத்தைவிட்டு வெளியேறி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்போது, அந்த ஆசிரமத்தில் நித்தியின் சிஷ்யர்கள் சிலர் இருந்துவருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான நிதி உதவிகளை அங்குள்ள பக்தர்கள் சிலர் செய்து தருகின்றனர். இந்தச் சூழலில், அங்குள்ள சிலர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமலும், உறவினர்களிடம் ஒப்படைக்காமலும் மௌனம் காக்கிறதாம் பிடதி நிர்வாகம். அங்கிருந்து யார் வெளியே செல்ல வேண்டுமானாலும், கைலாசாவிலுள்ள நித்தியின் அனுமதி அவசியமாம். நீண்ட முயற்சிக்குப் பிறகு நம்மிடம் பேசிய பிடதி சிஷ்யர்கள் சிலர், “சமீபத்தில் ஒரு பெண் பக்தர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். அதனால், வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவர் கேட்கவும், ‘சுவாமிஜி அனுமதியில்லாமல் எங்கேயும் அனுப்ப முடியாது’ என்று நிர்வாகத்தினர் கூறிவிட்டனர். அதையும் மீறி வெளியே செல்வதற்கு அந்தப் பெண் பக்தர் முயன்றார். உடனே, அவரைத் தனி அறையில் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்தினார்கள். இதுவரை கர்நாடக அரசு, பிடதிக்குள் என்ன நடக்கிறது... கொரோனா தொற்று பாதிப்புள்ளதா போன்ற எந்த விசாரணையும் நடத்தவில்லை. நாங்கள் இறந்துபோனால்கூட வெளியே எவருக்கும் தெரியாது. ஆன்மிகம் என்கிற பெயரில் நித்யானந்தா செய்யும் மாய்மாலங்களை உண்மையென நம்பிவந்து மாட்டிக்கொண்டோம்” என்கிறார்கள் பரிதாபமாக.

அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...

ஹார்மோன் மாத்திரைகள்... இச்சைக்கு ருத்ர கன்னியாஸ்

பிடதி மர்மம் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் மீண்டும் நித்தியைச் சுற்றிய பாலியல் புகார்களும் வரிசைகட்டுகின்றன. அதற்குக் காரணம், கடந்த வாரத்தில் ‘எஸ்கேப் நித்தியானந்தா’ என்கிற பெயரில் வெளியான ட்விட்டர் தகவல்களே. நித்தியிடமிருந்து சமீபத்தில் வெளியேறிய பெண் பக்தை ஒருவர், ட்விட்டரில் இந்தப் பக்கத்தைத் தொடங்கி நித்தியின் பாலியல் அத்துமீறல், ஆசிரமத்தில் நடக்கும் கொடுமைகள் எனப் பல தகவல்களையும் அதில் பகிர்ந்துள்ளார். அந்த தகவல்கள் திகில் கிளப்புகின்றன. “நித்தியின் பழைய சிஷ்யை நான். என்னைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியிட முடியாது. ஆனால், நித்தியின் குற்றங்களை அம்பலப்படுத்தவே இப்போது வெளியே வந்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டு, வரிசையாகப் பல விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார் அந்தப் பெண். அவர் வெளியிட்ட தகவல்களை நித்தியின் பழைய சீடரான அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் என்பவர் உறுதிசெய்துள்ளார். “நித்தியின் லீலைகளை இப்போதாவது தைரியமாகச் சொல்ல முன்வந்துள்ளார்கள். இதற்கு முன்பாக நித்தியைப் பற்றிப் புகார் தெரிவித்த வெளிநாட்டு பக்தையான சாரா லாண்ட்ரிக்கு நடந்த தொல்லைகள் யாருக்கும் தெரியாது” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டீவன்.

நித்யானந்தாவின் ஆசிரமத்தில், பருவம் அடைந்த பல பெண் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள். `ருத்ர கன்னியாஸ்’ என்கிற பெயரில் இளம் பெண் சந்தியாசிகளுக்காகத் தனிக்குழுவை வைத்திருந்தார் நித்தி. இதிலுள்ள பெண்களை வைத்துத்தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனத் தனது ஆசிரமத்தில் பொழுதைக் கழித்தார் நித்தி. அந்த இளம்பெண்களையே தனது இச்சைக்கும் தொடர்ந்து பயன்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ருத்ர கன்னியாஸ் பெண்கள்தான் இப்போது நித்தியுடன் தீவிலும் வசித்துவருகிறார்களாம். இந்தப் பெண்களை நித்தி வசப்படுத்துவதற்கு முன்பாக, பெண்களுக்குப் பாலியல் உணர்ச்சியைத் தூண்டும் மாத்திரைகளை தினமும் வழங்கிவந்திருக்கிறார் என்கிறார்கள். அதோடு, சில க்ரீம்களை வழங்கி, ’இதை தினமும் பயன்படுத்தினால், உடல் அழகு கூடும்’ என்கிற போதனையும் நித்தியால் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களைத் தன்வசப்படுத்த பணத்தையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நித்தியுடன் முன்பு நெருங்கிப் பழகிய பெண் பக்தர் ஒருவர் நம்மிடம் பேசினார். “பெண்களுக்கு நகைகள், ஹார்மோன் மாத்திரைகள் எனச் சகலத்தையும் ஏற்பாடு செய்வதற்கான ஆட்கள் அவரிடம் இருந்தார்கள். தனது ஆசிரமத்தில், தான் நினைத்ததுபோல ஒரு கற்பனை உலகத்தையே கட்டமைத்தார். குருகுலத்தில் வளர்ந்தால் குழந்தைகள் ஆன்மிகத்தை அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் எனப் பல பக்தர்கள் தங்களது குழந்தைகளை இவரை நம்பி ஒப்படைத்தனர். ஆனால், நித்தி தனது இச்சைக்காகப் பலரையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நித்தி எவ்வளவு பெரிய புத்திசாலி என்றால், எதிர்காலத்தில் தன்மீது எந்தப் பாலியல் புகார்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள, 2012-ம் ஆண்டே தனக்கு ஆண்மை இல்லை என்கிற சான்றிதழை பெங்களூரிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் பெற்றார். நித்திக்கு டெஸ்ட்டோஸ்டீரான்அளவு குறைவாக இருக்கிறது என்று மருத்துவமனை சான்றிதழ் வழங்கியது. ஆனால், அந்த ஹார்மோன் மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு மீசையோ, தாடியோ வளராது. இந்தப் பரிசோதனையை நித்யானந்தா மேற்கொள்வதற்கு முன்பாக ஈஸ்ட்ரோஜன் ஊசியைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தார். அந்த ஊசியை நித்திக்குச் செலுத்தியவர் ஆத்ம பிரபா என்கிற சந்நியாசி” என்றார்.

அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...

“என்னை நினைத்துக்கொள்ளுங்கள்...” - `கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்

“நித்யானந்தா இந்து மதத்தைக் காப்பாற்ற உதித்தவர் போன்ற ஒரு பிம்பம் அவரது ஆசிரமத்தில் இருந்த ஒரு சிலரால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், தனது பாலியல் அத்துமீறலுக்கும், ஆஸ்தியைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு கேடய மாகவுமே மதத்தைப் பயன்படுத்திவந்திருக்கிறார் நித்தி. ஆசிரமத்திலுள்ள இளம் பெண் சந்நியாசிகள், நித்திக்கு ஒத்துவராமல் போனால் அவர்களை அடித்து மிரட்டி வழிக்குக் கொண்டுவர ஒரு டீமையே வைத்திருந்தார் நித்தி. அதோடு, தான் விரும்பும் பெண் சிஷ்யர்களை அருகில் வைத்துக்கொண்டே பாலியல் படங்களையும் நித்யானந்தா பார்த்திருக்கிறார். அதோடு ‘சுய இன்பம் செய்வது தவறில்லை’ என்கிற அறிவுரையும் இளம் சந்நியாசிகளுக்குக் கொடுக்கப்பட்டது. அதிலும், ‘நீங்கள் யாரை நினைத்துக்கொண்டு சுய இன்பம் செய்கிறீர்களோ, அவர்களது உயிரணு உங்கள் உடம்பிலும் சேரும். என்னை நினைத்துக்கொண்டு செய்தால், இறைவனோடு உறவுகொண்ட நிலையை அடைவீர்கள். இது யாருக்கும் கிடைக்காத ஒரு அற்புதமான நிகழ்வாக அமையும்’ என்று மூளைச்சலவை செய்திருக்கிறார். அதேபோல் பலரிடமும் அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பச் சொல்லியும் டார்ச்சர் கொடுத்திருக்கிறார்” என்கிறார்கள்.

“ `உலகத்திலேயே மிகப்பெரிய குற்றம் ஆபாசம்’ என்று தனது போதனைகளில் நித்தி சொல்வது வெறும் ஒப்புக்குத்தான். ஆபாசத்தின் உச்சமே நித்தியானந்தாதான்” என்கிற புகாரை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் நித்தியின் முன்னாள் பக்தையான சாரா லாண்ட்ரி.

குறிப்பாக, `` ‘ஆண் பெண் என இரண்டு பேருடனும் உறவு வைத்துக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை’ என்பது நித்தியின் கோட்பாடு. அதை அவருமே மேற்கொண்டுள்ளார். நித்திக்கு ஜிம் பயிற்சியாளராக இருந்த ஒருவருக்கு, நித்தி அனுப்பிய ஆபாச மெசெஜ்கள் ஏற்கெனவே வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். இருபால் உறவைப் பூர்த்தி செய்யாமலிருப்பது, பிறந்த பலனை முழுமை செய்யாமல் போவதற்குச் சமம் என்கிற கருத்து நித்தியுடையது” என்று பெண் சிஷ்யைகள் சொல்லும் புகார்கள் குறித்து விசாரித்தால், அனைத்தும் உண்மைதான் என்கிறார்கள் நித்தியிடம் ஏற்கெனவே பணியாற்றிவர்கள்.

“ஹிப்னாட்டிசம் செய்வதில் நித்தி வல்லவர். யாரிடம் என்ன தேவையோ அதை அவர்களாகவே நித்தியிடம் கொடுக்கும் அளவுக்கு நித்தியின் பேச்சும் செயலும் இருக்கும். வாய்ஜாலத்தால் நித்தி செய்கிற ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசத்தில் நித்தியிடம் சொத்துகளைப் பறிகொடுத்துவிட்டு, இப்போதும் நித்தியே சரணம் என்று கிடப்பவர்கள் அதிகம். நித்தியால் பாதிக்கப்பட்டவர்களெல்லாம் விரைவில் ஒரு சமூக வலைதளக் கணக்கைத் தொடங்கவிருக்கிறார்கள். அதில் நித்தியின் அந்தரங்கங்களை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள் நித்திக்கு நெருக்கமானவர்கள்.

கொரோனா தொற்று ஏற்பட்டால் உடனே தனிமைப்படுத்திக்கொள்ளவும், உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. குறிப்பாக, தவறான சிகிச்சைகளைக் கூறி மக்களை யாரும் ஏமாற்றக் கூடாது என்று கண்டிப்புடன் எச்சரித்திருக்கிறது. ஆனால், `ஆதிலிங்கத்தின் தீர்த்தம் கொரோனாவை விரட்டும்’ என்று கூறி, மக்களை ஏமாற்றும் நித்தியைக் கண்டிக்கத்தான் ஆளில்லை. நியாயப்படி பார்த்தால், நித்தி மீது தமிழ்நாடு பொதுச் சுகாதாரச் சட்டம் மற்றும் மத்திய அரசின் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் கீழ் வழக்கு பதிந்திருக்க வேண்டும். ஊர் உலகமே முடங்கிக்கிடக்கும் இந்த நாள்களில், தினம் ஒரு பொய்யைக் கட்டவிழ்த்துவிட்டு, தனக்கிருக்கும் சிறு ஆதரவுக் கூட்டத்தையும் ‘ஜாம்பிகளாக’ மாற்றிவரும் அடங்காத நித்தியானந்தா கைதுசெய்யப்பட்டால் மட்டுமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

*****

கைலாசா நாட்டுக் கதை!

நித்தியானந்தா இந்தியாவில் இருக்கும்போதே, தனக்கு எதிர்காலத்தில் சிக்கல் வரும் என வெளிநாட்டிலுள்ள பக்தர்கள் மூலம் தனியாகச் சிறிய ரக விமானத்தை வாங்கிவைத்திருந்தார். அந்த விமானம் மூலமே இப்போது தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியிலுள்ள தீவுகளில் வலம்வருகிறார். உண்மையில், கைலாசா என்கிற நாட்டை அவர் கட்டமைக்கவில்லை. தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள ‘வனா டூ’ என்கிற நாட்டில்தான் இருக்கிறார். அவர் தங்குவதற்காகத் தேர்ந்தெடுத்த நாடுகள் எல்லாமே இந்திய அரசுடன் குற்றவாளிகள் பறிமாற்றம் ஒப்பந்தம் செய்யாத நாடுகள். அதோடு மாஃபியாக்கள் ஆதிக்கம் நிறைந்த நாடுகளில்தான் நித்தியின் அடைக்கலம் உள்ளது. இப்போது வானா டூ-வை நித்தி தேர்வு செய்ததும்கூட அந்த அடிப்படையில்தான்!